பத்தாவது  உலக தமிழாராய்ச்சி  மாநாட்டை அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலகத் தமிழாராய்ச்சி  மன்றத்துடன், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகிய தமிழ் அமைப்புகள்  இணைந்து வருகின்ற  ஜூன் 5,6 மற்றும் 7 ஆம் தேதிகளில்  நடத்த  இருக்கின்றன.

1964 ஆம் ஆண்டு சேவியர்  தனிநாயகம்  என்னும்  ஈழத் தமிழறிஞர், பேராசிரியர்  வ.ஐ.சுப்பிரமணியம்  மற்றும்  இருபத்தாறு  தமிழறிஞர்களுடன் இணைந்து  உலகத் தமிழாராய்ச்சி  மன்றத்தை  தொடங்கினார். இரண்டாண்டுக்கு  ஒருமுறை  உலகெங்கிலும்  இருக்கும்  தமிழ் ஆராய்ச்சியாளர்களை  ஒருங்கிணைக்கும்  மாநாடுகளை  நடத்தும் நோக்கில்  இந்த  மன்றம்  தொடங்கப்பட்டது.

கடைசியாக  2015 ஆம்  ஆண்டு  நடந்த  மாநாட்டை   அடுத்து  நான்கு ஆண்டுகள்  கழித்து  நடக்கவிருக்கும் இந்த  10 வது உலக தமிழாராய்ச்சி மாநாடு  தமிழாராய்ச்சியாளர்கள் இடையே  மகிழ்ச்சியை  ஏற்படுத்தி  உள்ளது .

“உலகத்  தமிழாராய்ச்சி  மன்றம்,  வட அமெரிக்கத்  தமிழ்ச் சங்கப் பேரவை, சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகிய தமிழ் அமைப்புகள் இணைந்து, பத்தாவது உலகத்  தமிழாராய்ச்சி  மாநாட்டை  சிகாகோ  நகரில்  நடத்தவிருக்கிறோம். சிகாகோ  நகரின்  தமிழ்ச்சங்கம்  ஆரம்பித்து  50 ஆண்டுகள்  நிறைவடைந்து விட்டன. இந்த  வருடம்  பொன்விழா ஆண்டு,  அதன் காரணமாகவே சிகாகோவில்  நடத்தத்  திட்டமிட்டோம்.

ஜூலை  6 மற்றும் 7 ஆகிய  இரண்டு  நாள்கள்  இந்த  மாநாடு  நடைபெற இருக்கிறது. அதற்கு  முன்பாக,  ஜூலை  4 மற்றும் 5 ஆகிய இரு நாட்களில் வட அமெரிக்கத்  தமிழ்ச்  சங்கத்தின்  32-வது  ஆண்டுவிழா,  சிகாகோ தமிழ்ச் சங்கத்தின்  பொன்விழா  ஆகியவை  நடத்தத்  திட்டமிட்டிருக்கிறோம்.  வட அமெரிக்க  தமிழ்ச்  சங்கப் பேரவைத்  தலைவர்  சுந்தர் குப்புசாமி, துணைத்தலைவர்  கால்டுவெல் வேல்நம்பி, ஆண்டுவிழாவுக்கான ஒருங்கிணைப்பாளர்  வேணுகோபால், சிகாகோ தமிழ்ச் சங்கத் தலைவர் மணி குணசேகரன் ஆகியோர்  இணைந்து  ஏற்பாடுகளைச்  செய்து வருகிறோம். எந்த அரசியல் தலையீடும்  இல்லாமல்  இந்த  மாநாட்டை நடத்துவது எனத்  தீர்மானித்துள்ளோம்.  உலகெங்கிலும்  136  நாடுகளில் இருந்து  தமிழ் மொழிக்கு மிகச் சிறப்பான  பங்களிப்பை  அளித்து  வரும் தமிழர்கள்  அனைவருக்கும்   அழைப்பு  விடுத்துள்ளோம். புலவர்  சவரிமுத்து, மருதநாயகம் ஆகியோரின்  ஒருங்கிணைப்பில்  பல அறிஞர்களை இணைத்து ஆராய்ச்சியாளர்கள்  குழு  அமைக்கப்பட்டுள்ளது.

சங்க இலக்கியம், தொல்காப்பியம்,  திருக்குறள்,  நவீன  இலக்கியம் போன்ற எட்டு  தலைப்புகளில்  உலகெங்கிலும்  இருந்து  1500 கட்டுரைச் சுருக்கங்கள் வந்திருக்கின்றன. அதிலிருந்து  மிகச்  சிறப்பான  150 கட்டுரைச் சுருக்கங்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். அதிலிருந்து  சிறந்த  கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகின் சிறந்த  ஆராய்ச்சியாளர்களை வைத்து மதிப்பீடு செய்து, மாநாட்டு  மலரில் வெளியிட  இருக்கிறோம். அதுதவிர உலகத் தமிழ் தொழில் முனைவோருக்கான  கூட்டத்தையும்  நடத்தி, அவர்களையும்  இணைக்கத்  திட்டமிட்டுள்ளோம்,” என  மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரான சோம.இளங்கோவன்  தெரிவித்துள்ளார்.

இதுவரை  நடந்த  9 மாநாடுகளில்  3 மாநாடுகள்  தமிழ்நாட்டில்  நடந்துள்ளன  என்பது  குறிப்பிடத்தக்கது.