சொல்வதற்கு ஏராளம் இருக்கும்போது எதையுமே சொல்ல முடியாமல் போகிறது. சென்னை புத்தகக் கண்காட்சியைப் பற்றியும் சொல்ல அப்படித்தான். இவ்வளவு வருடம் பதிப்பகம் நடத்தி, இவ்வளவு நூல்களைப் பதிப்பித்து, இத்தனை புத்தகக் கண்காட்சிகளைக் கண்ட ஆள் ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறான் என இதற்கெல்லாம் சம்பந்தமில்லாத ஒருவருக்குத் தோன்றலாம். இது ஒரு சவாலான வருடம். இந்தப் புத்தகக் கண்காட்சியை எதிர்கொள்ள என்னிடம் அக்டோபர் வரை எந்தத் தயாரிப்பும் இல்லை. இரண்டு முறை இட மாற்றங்கள், உடல்நலக் கேடுகள் தந்த மன அழுத்தம், இடையறாது கவிதைகளில் மூழ்கியிருந்தது, வழக்கமான பைத்தியக்காரத்தனங்கள், தனிப்பட்ட வாழ்க்கையின் குழப்பங்கள், சங்கிகள் தந்த நெருக்கடிகள் என சிதறிப்போயிருந்தேன். பிறகு உள்ளிருக்கும் சாத்தான் எழுந்து வந்தது. யார் இல்லாவிட்டாலும் உயிர்மை இருக்கிறது என்ற நினைவு வந்தது. வேகமாக இளம் படைப்பாளிகளின் படை ஒன்றை ஒருங்கிணைத்தோம். சு.தியடோர் பாஸ்கரனின் ‘கையிலிருக்கும் பூமி’ நூல்தான் முதல் வெளியீட்டுக்கூட்டம். தங்கம் தென்னரசு அவர்கள் நூலை வெளியிட்டுப் பேசினார். அது இந்த சீசனுக்கான உற்சாகமான துவக்கம். தொடர்ச்சியாக 16 நூல் வெளியீட்டு அரங்குகள். 60க்கும் மேற்பட்ட நூல்கள் குறித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் உரையாற்றிய அரிய நிகழ்வு. பொருளதாரப் பிரச்சினைகள், அரங்குகள் கிடைக்காத பிரச்சினை என என்னென்னவோ நெருக்கடிகள். அரங்குகளுக்கான அனுமதியைப் பெற்றுத் தருவதில் நண்பர் மனோஜ் பெரிதும் உதவினார்.

ஸ்டூடன்ட் ஜெராக்சும் மணி ஆஃப்செட்டும் பாவனா பிரின்டர்சும் எங்கள் பேய் வேகத்திற்கு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். மாலை வெளியீட்டு விழா என்றால் காலைதான் புத்தகம் அச்சுக்குப் போகும். புத்தகம் எப்படியோ வந்து சேர்ந்துவிடும். இது வெறும் பணத்திற்குச் செய்யும் வேலை அல்ல. உயிர்மையின்மீதான நன்மதிப்பு, நல்லுறவு. எல்லா நெருக்கடிக்கும் ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். கூட்டங்களுக்கு அழைக்கப்பட்ட எல்லா ஆளுமைகளும் சிறப்பான பங்களிப்பைச் செய்தார்கள். அவர்கள் இல்லாவிட்டால் இந்த மாபெரும் கவனம் சாத்தியமே இல்லை. பாரதி கிருஷ்ணகுமார், இமையம் இருவரும் பல உயிர்மை கூட்டங்களில் கலந்துகொண்டு களமாடினர்.

இரவு பகலாக வேலை செய்தோம். 10 பேரைக்கொண்ட ஒரு சிறிய டீம். 50 பேரின் வேலைகளைச் செய்தோம். இரண்டு மாதங்களாக உயிர்மைதான் ‘லைம் லைட்’டில் இருந்தது. நூல் வெளியீட்டு விழாவின்போதும் அதற்குப் பிறகும் புத்தகக் கண்காட்சியின்போதும் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் உயிர்மையே முன்னணியில் இருந்தது. இதற்குப் பலருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

முதலாவதாக உயிர்மை டிவி மற்றும் ஸ்ருதி டிவி அனைத்து நிகழ்வுகளையும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்த்தன. மேலும் நியூஸ் 7, சன் நியூஸ், புதிய தலைமுறை, நியூஸ் 18, கலைஞர் செய்திகள் உள்ளிட்ட சேனல்கள் உயிர்மை நிகழ்வுகளை கண்காட்சிக்கு முன்பும் கண்காட்சியின்போதும் பெரிதும் கவனப்படுத்தின. அதேபோல தமிழ் இந்து, தினமணி, தினமலர் ஆகிய இதழ்கள் உயிர்மை வெளியீடுகள் பலவற்றைத் தொடர்ந்து கவனப்படுத்தின. எல்லாவற்றையும் விட நூற்றுக்கணக்கில் உயிர்மை கூட்டங்களுக்கு வந்த வாசகர்களும் ஆயிரக்கணக்கில் கண்காட்சிக்கு வந்த வாசகர்களும் அந்த நிகழ்வுகளின்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியிட்டு நியூஸ் ஃபீட் முழுக்க உயிர்மையை இரண்டு மாதங்களாக முதன்மைப்படுத்தினார்கள்.

 

 

புத்தகங்களின்மீது பெரும் அலட்சியம் நிலவும் காலத்தில் சமூக வலைத்தளங்களில் அவற்றிற்குப் பெரும் கவனத்தை ஏற்படுத்துவது பெரும் கவலை. அதை ‘அஞ்ஞானச் சிறுகதைகள்’ நூலை முன்னிட்டு வெகு சிறப்பாகச் செய்தவர் சந்தோஷ் நாராயணன். அவரது ப்ரமோஷன் போஸ்டர்களைத் தனி புத்தகமாகவே போடலாம். அதே போல இந்த ஆண்டின் இன்னும் மூன்று  புத்தகப் போராளிகள் ஷாலின் மரிய லாரன்ஸும் சி.சரவணகார்த்திகேயனும், டான் அசோக்கும்.  இந்த மூவரும் தங்கள் புத்தகங்களை வெகு சிறப்பாக ட்ரெண்டிங் செய்தார்கள். இதற்கு முன் இதை உயிர்மையில் சாரு நிவேதிதா, அராத்து, அதிஷா, விநாயக முருகன்,  சரவண சந்திரன், பிரபு காளிதாஸ் ஆகியோர் செய்திருக்கிறார்கள்.  தங்கள் புத்தகங்களை மட்டுமல்ல, உயிர்மையையும் சேர்த்துக் கவனப்படுத்தினார்கள். இந்தக் கண்காட்சியில் எனக்குப் பெரிதும் உத்வேகம் தந்தவர் டாக்டர் சிவபாலன் இளங்கோவன். அருமையான நான்கு நூல்களுடன் எப்போதும் உடனிருந்தார்.  இந்த ஆண்டு மிக முக்கியமான நாவல் உயிர்மை வெளியிட்ட கரன் கார்க்கியின் ‘மரப்பாலம்’. ஐந்தாண்டு உழைப்பின் அடையாளம். அதேபோல மிக முக்கியமான கட்டுரைத் தொகுப்பு ராஜன் குறையின் ‘சினிமா கலையாவது எப்போது?’ இரண்டும் இன்னும் அதிக கவனம் பெறத் தகுதியானவை. வரும் நாட்களில் பெறும். ராஜேஷ்குமாரின் சிறந்த சிறுகதைகள் தொகுப்பு உயிர்மையின் பாப்புலர் வரிசையின் முதல் புத்தகம். இந்த ஆண்டு பல எழுத்தாளர்களின் பல புத்தகங்கள் இந்த வரிசையில் வர இருக்கின்றன.

இதுதவிர கண்காட்சியில் உயிர்மை அரங்கில் எடுக்கப்படும் புகைப்பட ஆல்பங்கள் மிகவும் பிரபலமானவை. ஆனால் அந்தப் பணியை வெளியீட்டுக் கூட்டங்களிலும் கண்காட்சியிலும் வெகு சிறப்பாக ஷமீர், ஜெனிக், கார்த்திக் ஆகிய மூன்று புகைப்படக்காரர்களும் நிறைவேற்றினார்கள். ஒரு புத்தகக் கண்காட்சி அரங்கு என்பது வெறும் விற்பனைக்கான இடமல்ல. மாறாக, எழுத்தாளர்கள்-வாசகர்கள்-ஆளுமைகளின் மாபெரும் அன்பின் சங்கமம் என்பதற்கு சாட்சியமே உயிர்மையின் இந்த ஆல்பங்கள்.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் உயிர்மை அரங்கில் எப்போதும்போல சூப்பர் ஸ்டார் சுஜாதாதான். அவரை வெல்ல ஒருவரும் இதுவரை வரவில்லை.

எனது கவிதைகளுக்கான ரகசியப் படைகளும் மர்ம வாசக வாசகிகளும் இந்த ஆண்டும் பெருமளவுக்கு வருகை தந்தார்கள். சங்கேத வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டு கடந்து சென்றார்கள். அவர்களில் பலர் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம், சாரு நிவேதிதா வாசகர் வட்டம் போன்றவற்றில் இருந்தாலும் அவர்கள் இருப்பது இங்குதான் என்பதைக் குறிப்புணர்த்தி சென்றார்கள்.