ஸாரஸ் கொக்கு உத்தரப் பிரதேசத்தின் மாநிலப் பறவை. சாம்பல் நிறத்தில் கருத்த அலகும் சிவப்புநிறத் தலையும் மேல் கழுத்தும் வெளுத்த உச்சந்தலையும் கொண்ட ஒயிலான பறவை. பறக்கக்கூடிய பறவைகளில் மிக உயரமானது. தன் துணையை அழைக்க உரக்கக் கூவி, தாவிக் குதித்து நடனமாடும். மற்ற கொக்குகளைப்போல் இவை நெடுந் தொலைவு வலசை போவதில்லை.

ஸாரஸ் பற்றிய தகவல்களிலிருந்து…..

காதல் குறித்துப் பல ஐயங்கள் எழுந்துவிட்டன சுதாவுக்கு. கடந்த வாரம் ஒரு பெண் அவள் துப்பறியும் நிறுவனத்தை அணுகினாள். ஆழமான காதலாம். அவன் இல்லாவிட்டால் வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடுமாம். இருந்தாலும் அவனைப் பற்றிய ஒரு ரகசிய அறிக்கை வேண்டுமாம். விஷயம் என்னவென்றால் இரண்டு நாட்கள் கழித்து சுதாவைத் தன் காதலி அணுகியிருப்பது தெரியாமல் அவள் காதலன் சுதாவுடன் தொடர்புகொண்டு காதல் புகழ் பாடிவிட்டு, காதலியை வேவு பார்த்து அறிக்கை வேண்டும் என்றான்.

ஸ்டெல்லா சொன்னாள்: ”சுதாம்மா, ஒண்ணு செய்யலாம். அவளைப் பற்றி அவன் கேட்ட அறிக்கையை அவளுக்கும் அவனைப் பற்றி அவள் கேட்ட அறிக்கையை அவனுக்கும் மாத்தி அனுப்பிடலாம். என்ன ஆகும்னு பார்க்கலாம்.”

“போகட்டும். நமக்கெதுக்கு அந்த வம்பெல்லாம்? விடு” என்றாள்.

வியாபாரக் கூட்டாளிகளும் இப்படி அவளை அணுகுவதுண்டு. பெரிய ஒப்பந்தம் செய்யும் முன் மற்ற கூட்டாளிகளைப் பற்றிய ரகசிய அறிக்கை தயாரிக்கச் சிலர் சொல்வதுண்டு. கணவன் மனைவியைப் பற்றி, மனைவி கணவனைப் பற்றி என்று எல்லோருக்கும் வேவு பார்ப்பதுதான் சுயேச்சையாகச் செயல்படும் துப்பறியும் நிறுவனங்களிடம் வரும் வேலைகள். திருமணம் ஆகும் முன்பும் அதன் பின்னும் குழந்தை ஆனந்தி பிறந்த பிறகுகூட அவளுடன் உற்சாகமாக வேலை செய்யும் ஸ்டெல்லாவால் மனம் சோர்வடையாதிருக்கிறது. கணவன் விஞ்ஞானி நரேந்திர குப்தாவும் முதுகலைப் படிப்பு படிக்கும் மகள் அருணாவும் அவளை உற்சாகமூட்டும் குடும்பம். மிகச் சிறந்த துப்பறிவாளர் என்று அறியப்பட்ட வித்யாசாகர் ராவ்தே அவள் குரு. கிழவர். ஆனால் கழுகுக் கண். பாம்புச் செவி. தனிப்பட்ட முறையில் வேலை செய்யும் துப்பறிவாளர்களுடன் போலீஸ் இணைந்து வேலை செய்யாவிட்டாலும் பல சிக்கலான வழக்குகளில் அவளை இணைத்துக்கொள்பவர் கோவிந்த் ஷெல்கே. இன்ஸ்பெக்டரிலிருந்து ஏ.ஸி.பி. ஆனபின்னும் அவளை மறக்கவில்லை. தற்செயலாக ஆரம்பித்துப் பின் தொழிலாகி ஒரே மாதிரி போய்க்கொண்டிருக்கும் துப்பறியும் வேலையிலிருந்து அவளை மீட்பது இவர்கள்தாம் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வாள்.

வேலு ஸ்டெல்லாவைக் கூட்டிப்போயாயிற்று. அன்று வேலைக்கு வந்தபோது ஆனந்தி பாப்பாவையும் கூட்டிவந்திருந்தாள் ஸ்டெல்லா வேறுவழியில்லாமல். அவள் அப்பாவும் அம்மாவும் வெளியூர் போயிருந்தார்கள். வேலுவின் அம்மா மலர்விழி ஸ்கூல் வேலை முடிந்து மாலையில்தான் வருவாள். வேலுவின் தங்கை ஸுநயனா கல்லூரி முடிந்ததும் ஒரு பகுதி நேர வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாள். இரவாகும் வீடு வர. ஆனந்தி பாப்பாவின் உதவியால் படுக்கைக்குக் கீழே இருந்த கைக்குட்டை, வரவில்லை என்று நினைத்த மின்சார பில் எல்லாம் கிடைத்தன.

ஆனந்திப் பாப்பாவைக் கொஞ்சியவாறே சமைத்த செல்லம்மாளின் மூக்கில் ஒரு குத்து விழுந்தது. “ஸ்டெல்லா, இது மேரி கோம் ஆகப்போவுது. ஜாக்கிரதையா இரு” என்றாள் செல்லம்மா மூக்கைத் தடவியபடி. ஆனந்தி பாப்பா ஏதோ புரிந்ததுபோல கக்கக்கென்று சிரித்தது.

காதல் பறவைகளின் இரு வேறு அறிக்கைகள் தயார். இருவரும் வெகு பொருத்தமான ஜோடி. பெயரிலிருந்து எந்தத் தகவலும் உண்மையில்லை இருவர் விஷயத்திலும். அறிக்கைகளைப் படித்தபின் என்னவாகும் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவளுக்குத்தான் அது தெரிய வாய்ப்பில்லை.

அறிக்கைகளைப் படிக்கும் முன் ஒரு கோப்பை அவளுடைய வழக்கமான லவங்கப்பட்டைத் தேநீர் குடித்தால் தேவலை என்று தோன்றியது. மின்சாரக் கெட்டிலின் சிவப்புப் பொத்தானை அழுத்திவிட்டுக் கோப்பையில் லவங்கப்பட்டைத் தேநீர்ப் பையைப் போட்டாள். தண்ணீர் கொதித்ததும் பித்தான் வெளியே வரும் ஓசை கேட்டது. வெந்நீரைக் கோப்பையில் ஊற்றி தேநீர்ப் பையை முக்கி முக்கி எடுத்தாள். பிறகு வெளியே எடுத்து வைத்துவிட்டுக் கோப்பையுடன் நாற்காலியில் அமர்ந்துகொண்டாள்.

வாயிற்கதவு திறக்கும் ஓசை கேட்டது. அது யாரும் வரும் நேரமில்லை.

“கோன்?” என்று குரல் கொடுத்தாள்.

“நான்தான் சுதா” என்று நரேனின் பதில் வந்தது.

கையில் கோப்பையுடன் எழுந்துபோனாள்.

“என்ன நரேன்? உடம்பு சரியில்லையா?” என்றாள்.

“இல்லை, இல்லை, உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்ல. ஒரு கப் சாய் கிடைக்குமா?” என்றான்.

“இதோ” என்றுவிட்டுத் தன் கோப்பையிலிருந்த தேநீரைக் குடித்தபடி எரிவாயு அடுப்பை மூட்டினாள். தேநீர் போடும் வால் பத்திரத்தில் தண்ணீரை நிரப்பிப் பக்கத்திலேயே இஞ்சியைச் சிதைத்து ஒரு சிறு தட்டில் வைத்திருந்தாள் செல்லம்மாள். நரேனுக்கு இஞ்சி சாய்தான் பிடிக்கும் என்று தயாராக வைத்துவிட்டுப் போவாள். சாதாரணமாக அவனே தயாரிப்பான். அவனுடைய விஞ்ஞானக் கூடம்போல் சமையலறையும் என்பான். ஏதாவது பாடலை விசிலடித்தபடி சமையலறை வேலையைச் செய்வான். இன்றுதான் ஏதோ மனத்தில் ஓடியபடி இருக்கிறதோ என்னவோ?

தேநீர் தயாரித்துக் கோப்பையில் ஊற்றி, தேநீர்க்கான மேசையில் வைத்தாள். அதற்குள் நரேன் கைகால் கழுவிக்கொண்டு குளியலறைலிருந்து வெளியே வந்து ஹாலில் அமர்ந்தான்.

பிஸ்கோத்து டப்பாவை அவன் முன் வைத்தாள்.

“என்ன விஷயம் நரேன்? ஒரு மாதிரி இருக்கியே?”

மௌனமாகப் பிஸ்கேட்டைத் தேநீரில் முக்கிச் சாப்பிட்டபடி தேநீரைக் குடித்தான் சிறிது நேரம். பிறகு கூறினான்.

“என்னோட வேலை செய்கிறான் ஒருத்தன். என் சிநேகிதன். ரொம்ப நேர்மையான நல்ல மனுஷன். நல்ல குடும்பம். அவன் மனைவியைக் கொலைக் கேஸ்ல பிடிச்சிருக்காங்க.”

“யாரைக் கொலை பண்ணினாங்களாம்?”

“அவங்க வீட்டு வேலைக்காரப் பெண்ணை. பதினொண்ணு வயசாம்.”

“ஐயோ!”

“நம்ப ஷெல்கே போலீஸ் ஸ்டேஷன்தான். நீ விசாரிக்க முடியுமா? என் சிநேகிதன் ரொம்ப இடிஞ்சுபோயிட்டான். அவங்களுக்கும் பத்து வயசுலயும் எட்டு வயசுலயும் ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கு. மனைவி கொஞ்சம் கோபக்காரியாம். ஆனால் இப்படிக் கட்டாயம் செய்ய மாட்டாள் என்கிறார். அந்த வேலைக்காரப் பொண்ணு தூக்குப் போட்டுட்டு இறந்திருக்கா. ஆனால் போலீஸ் கொலைன்னு சொல்றாங்க. இவனுக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. அழுதுட்டான் பாவம்.”

வாயில் மணி அடித்தது.

“அவனை வரச்சொல்லியிருந்தேன். அவனாத்தான் இருக்கும்” என்று நரேன் கதவைத் திறக்க எழுந்தான்.

கதவைத் திறந்ததும் எதிரே நரேனைவிடச் சிறியவராய் ஒருவர் நின்றிருந்தார்.

“வா கிஷன். உள்ளே வா.”

அவர் உள்ளே வந்ததும் சுதாவை அறிமுகப்படுத்தினான்.

“இது சுதா. ஒரு டிடெக்டிவ். உனக்குச் சொல்லியிருக்கேனே? சுதா, இது கிஷன் கோபால்.”

வந்தவரைச் சோபாவில் உட்கார வைத்துவிட்டு, “சுதா” என்று சொல்லும் முன் குளிர்பதனப் பெட்டியிலிருந்து குளிர்ந்த நீரை எடுத்து ஒரு கிளாசில் ஊற்றித் தட்டில் வைத்து கிஷன் முன் வைத்தாள்.

“தாங்க்யூ பாபிஜி” என்றபடி குளிர்ந்த நீரை ஒரே மூச்சில் பருகினார்.

“டீ சாப்பிடலாமே கிஷன்?” என்றான் நரேன்.

கிஷன் மௌனமாக இருந்தான்.

சுதா இன்னொரு கோப்பை தேநீர் தயாரிக்க ஆரம்பித்தாள். நரேனும் இன்னொரு கோப்பை குடிப்பான். தேநீரைத் தேநீர்க் கெண்டியில் ஊற்றி எடுத்துவந்தாள்.

 

 

தேநீர் மேசையில் வைத்துத் தொப்பியால் மூடிவிட்டு, இரு மண் கோப்பைகளை எடுத்துவந்தாள். அதில் தேநீர் சூடாக இருக்கும். குல்லர் என்பார்கள். குல்லரில் ஊற்றிவிட்டு, சர்க்கரை போட்டுப் பால் விட்டாள். அது ஒரு ஜப்பானியத் தேநீர்ச் சடங்குபோல் நடக்கும் அவர்கள் வீட்டில். பதற்றத்தில் இருப்பவர்களைச் சாந்தப்படுத்தும்.

தேநீர் தயாரித்து முடிப்பதற்குள் கிஷன் ஓரளவு சாந்தமடைந்திருந்தான்.

குல்லரை எடுத்துகொண்டு தேநீரைப் பருக ஆரம்பித்தான். இரண்டொரு வாய் பருகிவிட்டுச் சற்றுத் தணிந்த குரலில், “பாபிஜி, நீங்கள் உதவ முடியுமா?” என்றான்.

“கிஷன், எந்த வகையில் உதவ முடியும்னு தெரியலையே? சொல்லுங்க. என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.”

“என் குழந்தைகள் அரண்டுபோயிருக்காங்க. இப்பவும் வீட்டுல தனியா விட முடியலை. கார்ல உட்கார்த்திட்டு வந்தேன்”

அவர் முடிக்கும் முன் சுதா எழுந்தாள். “என்ன பைத்தியக்காரத்தனம் இது கிஷன்? கீழே கார்லயா இருக்காங்க?”

“ஆமாம்.”

“கார் சாவியத் தாங்க” என்று அவர் பாக்கெட்டிலிருந்து கையில் எடுத்துத் தருவதற்குள் கிட்டத்தட்ட அவர் கையிலிருந்து பிடுங்கினாள். “நரேன், போய்க் கூட்டிட்டு வா குழந்தைகளை” என்றாள் நரேனிடம்.

“ஸாரி பாபிஜி, என்ன செய்வதுன்னு தெரியாம.’’

நரேன் இரண்டு பெண் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வந்தான்.

“பூர்ணிமா, ஸ்வர்ணிமா” என்று அறிமுகம் செய்துவைத்தார் கிஷன். பூர்ணிமாவுக்குப் பத்து வயது இருக்கும். ஸ்வர்ணிமா அவளைவிடச் சிறியவள் போலும்.

அவர்களை அணைத்துக்கொண்டு அருணாவின் அறைக்குக் கூட்டிப்போனாள். டி.வி.யைப் போட்டுவிட்டு வெளியே வந்து இரண்டு பெரிய கண்ணாடி கிளாஸ்களில் டாங்க் ஆரஞ்சுப் பொடியைப் போட்டுப் பழரசம் தயாரித்தாள். பிஸ்கோத்து பொட்டலம் ஒன்றை ஒரு தட்டில் வைத்து, கிளாஸ்களையும் வைத்து உள்ளே எடுத்துப்போனாள். அவர்களுடன் சிறிது நேரம் அமர்ந்து அவர்கள் இயல்பு நிலைக்கு வந்ததும் வெளியே வந்தாள்.

“சொல்லுங்க கிஷன்.”

“என் மனைவியை அரெஸ்ட் பண்ணிட்டாங்க பாபிஜி, கொலைக் குற்றம்னு சொல்லி.”

“எப்போ?”

“இன்னிக்கு மத்தியானம் நான் இல்லாதபோது செய்திருக்காங்க. நான் பாய் ஸாஹேப் கிட்ட சொல்லிட்டுக் குழந்தைகள் ஸ்கூல்லயிருந்து அப்பத்தான் வந்திருப்பாங்கன்னு வீட்டுக்குப் போய்க் கூட்டிட்டு வந்தேன். அவங்களுக்கு எதுவும் தெரியாது.”

“இன்னும் போலீஸ் ஸ்டேஷன் போகலியா?”

“வீட்டுக்குப் போறதுக்கு முன்னால போனேன். பெயில் கிடைக்காதுன்னுட்டுச் சொல்றாங்க.”

“இது… இந்தச் சம்பவம் நடந்தது எப்போ?”

“மூணு நாள் முன்னால. இன்னிக்கு அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. சத்தியமா பாபிஜி, மாதவி அப்படிச் செய்திருக்கவே முடியாது.”

“ஒரு நிமிஷம்” என்றுவிட்டுக் கோவிந்த் ஷெல்கேயைத் தொடர்புகொண்டாள்.

“நமஷ்கார் தீதி” என்றார்.

“கோவிந்த், ஒரு கொலைக் குற்றத்துக்காக மாதவி கிஷன் கோபால்னு ஒருத்தரை அரெஸ்ட் பண்ணியிருக்கீங்களா?”

“ஆமாம் தீதி. அது வந்து…”

“இன்ஸ்பெக்டர் ரஞ்சன் முலேயா அரெஸ்ட் செய்தது?”

“ஆமாம் தீதி. அவர்….”

“வாரண்டோடத்தானே போய் அரெஸ்ட் பண்ணினீங்க?”

“தீதி, இப்போ எங்களுக்குச் சட்ட நுணுக்கம் எல்லாம் கத்துத்தரப் போறீங்களா?”

“இல்லை கோவிந்த். சரியான முறையிலதான் கைது செய்யப்பட்டிருக்காங்களான்னு…”

 

 

“எங்க போலீஸ் ஸ்டேஷனைப் பொறுத்தவரை எல்லாம் ரூல்ஸ் பிரகாரம் சரியாத்தான் நடக்கும் தீதி. அரெஸ்ட் வாரண்டோடத்தான் போயிருக்காங்க. ஒரு பெண் போலீஸ் ஆபீஸரும் கூடப் போயிருக்காங்க. பெண்களைச் சாயங்காலம் 6 மணிக்கு அப்புறமும் காலையில ஆறு மணிக்கு முன்னாலயும் கைது பண்ணக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு. அதைச் சரியா கடைப்பிடிச்சிருக்கோம். வாரண்ட்டோட போனோம். விலங்கு எதுவும் போடலை. அரெஸ்ட் மெமோவுல சாட்சிக் கையெழுத்து-அவங்க பில்டிங் செகரட்டரி கிட்ட-வாங்கியிருக்கோம். அவர் கணவரைக் கூப்பிட அனுமதிச்சோம்.வக்கீலையும் கூப்பிடலாம்னு அவங்க சட்ட உரிமைகளைச் சொன்னோம். நாளைக்கு மாஜிஸ்ட்ரேட் முன்னால கூட்டிட்டுப் போவோம். இப்ப தனி லாக்கப்புலதான் இருக்காங்க. இன்னும் ஏதாவது தெரியணுமா?” குரலில் சற்றுக் கோபம் தொனித்தது.

“ஸாரி கோவிந்த். இப்பத் அவங்க கணவர் வந்தபோது பெயில் கிடைக்காதுன்னு சொன்னீங்களாம்.”

“ஆமாம் தீதி. இது போலீஸ் ஸ்டேஷன்ல பெயில் கொடுக்க முடியாத குற்றம். வக்கீலோட கோர்ட்டுக்கு வந்து பெயில் அப்ளிகேஷன் கொடுத்தா ஒரு நீதிபதிதான் பெயில் தரமுடியும் இந்த வழக்குல. அதைத்தான் அவர்கிட்ட சொன்னேன். அவருக்குச் சரியா புரியலைன்னு நினைக்கிறேன்.”

“தாங்க்ஸ் கோவிந்த். அப்புறமா பேசறேன். மிஸ்டர் கிஷன் கோபால் நரேனோட வேலை செய்யும் விஞ்ஞானி. அதனாலதான்.”

“பரவாயில்லை தீதி. இது பெரிய இடத்து விஷயம். நாங்களும் ஜாக்கிரதையாதான் வேலை செய்வோம். நீங்க டைம்ஸ் ஆஃப் இந்தியா பேப்பர்ல ரெண்டு நாள் முன்னால ஆறாம் பக்கத்துல வந்த சின்னச் செய்தியப் பாருங்க. மேல் விவரம் நான் தரேன் உங்களுக்கு.”

கோவிந்த் பேச்சை முடித்துவிட்டார்.

அவள் கிஷன் கோபாலுக்கு ஜாமீன் விதிகளை விளக்கினாள். வக்கீலை அணுகுவது எவ்வளவு அவசியம் என்று கூறினாள். ஆராய்ச்சிக் கூடத்தில் அமர்ந்து அதிலேயே மூழ்கிப்போயிருந்த அவருக்கு நடைமுறை விஷயங்களை அணுகுவது மலைப்பாக இருந்தது. எல்லாவற்றையும் மனைவிதான் பார்த்துக்கொள்வார் போலும். முதலாவது, இது சில மாதங்களாவது அலைய வேண்டிய ஒன்று. இரண்டாவது, ஜாமீன் கிடைத்துவிட்டாலும் அந்த வீட்டில் இரு பெண் குழந்தைகள் எப்படி இருக்கப்போகிறார்கள்?

”எந்த ஸ்கூல்ல படிக்கிறாங்க?”

”போதார் ஸ்கூல்.”

 

 

கொஞ்சம் யோசித்துவிட்டு மதுவைக் கூப்பிட்டாள். போதாரில் ஆசிரியையாக இருப்பவள். தனியாள். கூட இருந்த அம்மா இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான் போனாள்.

மதுவின் குரல் உற்சாகமாய் இருந்தது.

“என்ன சுதா? என் நினைவு எப்படி வந்தது?”

சுதா விஷயத்தை விளக்கி, போதாரில் விடுதி கிடையாது, என்ன செய்வது என்று அவள் அபிப்பிராயத்தைக் கேட்டாள்.

“சுதா, பெண்கள் படிப்பு கெடக்கூடாதுன்னா அவங்க ஒரு குடும்பத்தோட இருக்கறதுதான் சரி. அவங்களுக்குச் சொந்தக்காரங்க யாரும் இல்லையா?”

“இங்க மும்பைல இல்லை போல.”

சிறிது மௌனத்துக்குப் பின் மது தயங்கியபடி கூறினாள். “நான் தனியாத்தான் இருக்கேன். பெரிய வீடு. அவங்க என்னோட இருக்கலாம். ஆனால் அவங்களுக்கான ஆயா யாராவது இருந்தால் நல்லது. என்னால் எல்லாம் செய்ய முடியாது.”

“கேட்டுச் சொல்றேன் மது” என்றுவிட்டுக் கைபேசியை மூடினாள்.

கிஷனிடம் கூறியபோது இந்த ஏற்பாடு அவருக்குச் சரியாகப் பட்டது. சின்ன வயதில் குழந்தைகளைப் பார்த்துக்கொண்ட ஆயா ஒருவர் உண்டென்றும் அவர் கூப்பிட்டால் வருவார் என்றும் கூறினார்.

அவர் இரவு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு மறுநாள் சனிக்கிழமை காலை மது வீட்டில் குழந்தைகளை விடுவது என்று தீர்மானமாகியது.

அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே அருணாவும் வர, குழந்தைகளும் அவளுடன் ஒட்டிக்கொண்டன.

இதுவரை மௌனமாக இருந்த நரேன், ஓல்ட் மங்க் ரம் பாட்டிலைத் திறந்து மூன்று கிளாஸ்களில் ஊற்றி, குளிர்ந்த நீரைவிட்டு ஐஸ் கட்டிகளைப் போட்டான்.

“நான் காரோட்டணும் நரேன் பாய் ஸாஹேப்” என்றான் கிஷன்.

“ஒரே ஒரு ’பெக்’. ஒன்றும் செய்யாது” என்றார் நரேன்.

நொறுக்குத் தீனிகளை எடுத்துவைத்தாள் சுதா.

மூவரும் மெல்ல அருந்த ஆரம்பித்தனர்.

அருணா உள்ளேயிருந்து வந்து அவளுக்கும் குழந்தைகளுக்கும் பழரசம் தயாரித்தாள். குழந்தைகளோடு அவளும் அவர்களுடன் வந்து உட்கார்ந்துகொண்டாள்.

* * *

 

 

கம்பளங்கள் நெய்யும் பகுதியில் உள்ள குழந்தைகளுக்குக் கல்வியூட்டும் திட்டம் மாலா திட்டம். மிர்ஸாபூர் மற்றும் வாரணாசியில் உள்ள கம்பளங்கள் நெய்யும் பகுதிகளில் ஆறு மாலா திட்டங்கள் செயல்படுகின்றன. ஏழ்மை, குறைந்த மேம்பாடு, கல்வியின்மை இவற்றால் பீடிக்கப்பட்ட பகுதிகளில் குழந்தைகள் அனைவரும் ஒரு கட்டத்தில் தொழிலாளிகள் ஆனார்கள். இதிலிருந்து அவர்களை விடுவிக்க இத்திட்டத்தைச் செயல்படுத்தியவர் இங்குள்ள கம்பளங்களை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய கம்பனியான ஈ. ஹில் அண்ட் கம்பனியின் உயரதிகாரியான ராபின் கார்லண்ட். 1986இல் குழந்தைத் தொழிலாளிகளை வேலை செய்ய வைப்பது தடை செய்யப்பட்டது. வேலையும் இல்லாமல் வேறு வழியுமில்லாக் குழந்தைகளுக்குக் கல்வியூட்ட உருவாக்கப்பட்ட திட்டம் மாலா திட்டம். மாணவர்களுக்குக் கற்பிப்பது எளிதாக இல்லை. முதல் தலைமுறை மாணவர்கள் வீட்டில் செய்ய வேண்டிய பாடங்களையும்   பள்ளியிலேயே செய்ய வேண்டியுள்ளது. வீட்டிலும் வயலிலும் வேலை செய்தபின் களைத்துப்போய்தான் பள்ளிக்கு வருகிறார்கள் மாணவர்கள். ஜூலை முதல் அக்டோபர் வரை கரீப் பயிர்கள் அல்லது மானாவாரி சாகுபடி செய்யப்பட்டு அக்டோபரில் இலையுதிர்காலத்தில் அறுவடைக் காலம் ஆரம்பிக்கும்போது அறுவடை வேலை செய்துவிட்டுத்தான் பரீட்சை எழுத வருவார்கள் மாணவர்கள். அதேபோல அக்டோபரிலிருந்து மார்ச் வரை ரபி பயிர்கள் எனப்படும் குறுவைப் பயிர்கள் சாகுபடிக் காலம். மார்ச் மாதம் அறுவடை வேலை செய்துவிட்டுத்தான் பரீட்சை எழுத வரமுடியும். 2003இல் கூட ஐந்தாம் வகுப்பிலேயே மூன்று திருமணமான பெண் குழந்தைகள் இருந்தார்கள். அதில் ஒருத்தி இரண்டு குழந்தைகளின் அம்மாவான ஒரு விதவை. ஆனால் இன்று திருமணமான ஒரு பெண் குழந்தை கூட பள்ளியில் இல்லை.

மாலா திட்டத்தின் ஆரம்பத்திலேயே உருவான பள்ளி குரியா கிராமத்தில் இருப்பதுதான்.

தினசரிச் செய்திக் குறிப்பிலிருந்து…

ரம் அருந்தியபடி கிஷன் கூறிய தகவல்கள் ஒரு லட்சியக் குடும்பத்தின் வாழ்க்கைச் சித்திரம்போல் இருந்தது. கிஷன் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர். விஞ்ஞானியாக உருவாகக் கடினமாக உழைத்தவர். திருமண மையம் ஒன்றின் மூலம் அவர் மாதவியைச் சந்தித்தார். படித்தவள்; பெற்றோர் இறந்துவிட்டனர். பணக்காரி. உடன்பிறந்தோர் இல்லை. வேறு மாதிரி அனாதை அவள். இதைவிடப் பெரிய பொருத்தம் எப்படி இருக்க முடியும்? இரண்டு பெண் குழந்தைகள். அவர்களிடம் சற்றுக் கண்டிப்பாக இருப்பாள். கொஞ்சம் கோபக்காரி. ஆனால் அவளைப்போல் திறமையாக வீட்டை நிர்வாகம் செய்பவர் யாரும் இருக்க முடியாது. அதது அதனதன் இடத்தில் இருக்கும். கச்சிதமாக இருக்கும் வீடு.

கிஷனின் குரல் தழுதழுத்தது.

அருணா குழந்தைகளை உள்ளே கூட்டிப்போனாள்.

அந்த வேலைக்காரப் பெண் எப்போது வந்தாள் அவர்கள் வீட்டில் வேலை செய்ய?

ஆறு மாதம் முன்னால்தான். சுறுசுறுப்பான பெண். கொஞ்சம் விளையாட்டுக் குணம் என்றாள் மாதவி. அவருக்கு அந்தப் பெண்ணுடன் அதிகம் பழக்கமில்லை. மாதவி அவரை இதிலிருந்து எல்லாம் விலக்கி எல்லாப் பொறுப்புகளையும் தானே ஏற்றிருந்தாள். எப்படி அந்த வேலைக்காரப் பெண் வேலைக்குச் சேர்ந்தாள் என்றெல்லாம் தெரியாது.

சின்னஞ்சிறு பெண் ஒருத்தியை வேலைக்கு வைத்திருப்பது அவருக்குச் சம்மதம்தானா? பள்ளியில் இருக்கவேண்டியவள். அவர் பெண்களைவிடக் கொஞ்சம்தான் பெரியவள்.

ஏழைப் பெண்ணாக இருக்கும். மாதவி உ.பி.யிலிருந்து வந்து மும்பையில் இருக்கும் ஒரு பெண்மணி மூலம் இவள் வேலைக்கு வந்தாள் என்று சொன்ன ஞாபகம்.

ஆனாலும் குழந்தைப் பெண். இது குறித்து மாதவியுடன் ஏதாவது பேசினாரா?

அவர் அதிலெல்லாம் தலையிடுவதில்லை. தவறுதான். குழந்தை அவள். ஆனால் மாதவி தவறு செய்ய மாட்டாள். ஏதாவது பள்ளியில் சேர்க்கலாம் என்றிருந்திருப்பாள். வீட்டு வேலை செய்துகொண்டே படிப்பவர்கள் உண்டு மும்பையில். ஒரு நாள் அந்தப் பெண் இவர் அறையிலிருந்த பூகோள உருண்டையைச் சுழற்றிப் பார்த்தபடி இருந்தது. என்ன பார்க்கிறாய் என்று கேட்டதும் தனக்கு உலகம் முழுவதும் சுற்ற ஆசை என்றது.  தலையில் தட்டிக்கொடுத்தார். சற்று நின்று அவர் நாஸா போயிருக்கிறாரா என்று கேட்டதும் அவருக்கு ஆச்சரியம் தாளவில்லை. நாஸா பற்றி எப்படித் தெரியும் என்று கேட்டதும் தான் விஞ்ஞானியாக விரும்புவதாகக் கூறிவிட்டு ஓடிப்போய் தன் பள்ளிப் புத்தகப் பையைத் தூக்கிவந்து காட்டியது குழந்தை.

அவள் பெயர் என்ன என்றதும் சற்று யோசித்தார். ஒரு பறவையின் பெயர். ஆமாம், உத்தரப் பிரதேசத்து மாநிலப் பறவை. ஸாரஸ் கொக்கு. ஸாரஸ் அவள் பெயர்.

அதன் பிறகு ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த மேடம் க்யூரி பற்றிய புத்தகத்தை வாங்கித் தந்தார் அவளுக்கு. மாதவியிடம் கூறவில்லை. அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது. இது அவள் துறை என்பாள்.

இவ்வளவு புத்திசாலிக் குழந்தை எதற்காகத் தூக்குப்போட்டுக் கொள்ளவேண்டும்? பதினோரு வயசுக் குழந்தைக்குத் தூக்குப்போட்டுக் கொள்ளத் தெரியுமா?

ஒன்றும் தெரியவில்லை கிஷன் கோபாலுக்கு. பெரிய பெரிய பல்கலைக்கழகங்களில்  உயர்மட்ட அறிவியல் குறித்து உரையாற்றுபவருக்கு இதெல்லாம் ஏதோ பிரம்ம சூத்திரம்போல் இருந்தது.

வித்யாசாகர் ராவ்தேயை அழைத்து விளக்கினாள்.

“குருஜி, வக்கீல் தேவை அவருக்கு. நீங்க யாரைச் சிபாரிசு செய்வீங்க?” என்று விசாரித்தாள்.

“ஆனந்த் அலுவாலியா இல்லை, ரோஹித் லுல்லா சொல்லலாம். அந்த ஸ்ரீதர் ராமனாதனும் நல்ல வக்கீல்தான். நாளைக்கா பெயில் அப்ளிகேஷன் தரணும்?”

“ஆமாம்” என்றதும் “சரி, நான் கூப்பிடறேன்” என்றார்.

சிறிது நேரம் போனதும் ஸ்ரீதர் ராமனாதன் ஒப்புக்கொண்டதாகவும் அவருடன் பேசும்படியும் கூறினார்.

கிஷன் கோபாலை அவருடன் பேசவைத்து சம்பிரதாய உரையாடல் முடிவதற்குள் மணி பத்தாகிவிட்டது. அருணாவின் அறையில் டி.வி. பார்த்தபடி இருந்த குழந்தைகளின் கண்கள் தூக்கத்தில் கிறங்கிக்கொண்டிருந்தன.

நரேனும் சுதாவும் சில முடிவுகளை எடுத்தனர். ஆயாவை ஏற்பாடு செய்து, வக்கீலுடன் பேசி, ஜாமீன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் குழந்தைகளை மது வீட்டில் கொண்டுவிடுவதற்கான ஏற்பாடுகளை கிஷன் செய்யட்டும் மறுநாள். அன்றிரவு குழந்தைகள் இங்கேயே இருக்கட்டும்.

கிஷன் ஒப்புக்கொண்டார்.

சாப்பாடு முடிந்ததும் குழந்தைகளிடம் “இன்னிக்கு இங்கே இருக்கீங்களா? பப்பாவுக்கு நிறைய வேலை இருக்கு” என்றதும் அரைத் தூக்கத்தில் சம்மதித்தார்கள் குழந்தைகள். சின்னவள் மாத்திரம் “மம்மி எங்கே பப்பா?” என்றாள். திடீரென்று ஒரு வேலை வந்ததால் வெளியூர் போயிருப்பதாகச் சொன்னதும் சற்றுக் குழப்பத்தோடு பார்த்தாள். பிறகு தன் அக்காவை ஒட்டி நின்றுகொண்டாள்.

நரேன் கிஷனுடன் அவன் வீடுவரை போய்விட்டு வருவதாகக் கூறிவிட்டுக் கிளம்பினான். கிஷனைப் பயந்துபோன சின்னப் பையன் போல் அவன் பாதுகாப்பதுபோல் அவளுக்குப் பட்டது. கூறவில்லை அவனிடம்.

அவர்கள் கிளம்பியதும் இரண்டு நாள் முந்தைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவைத் தேடி எடுத்தாள். ஆறாம் பக்கத்தில் வலது பக்க ‘மெட்ரோ டைஜஸ்ட்’ என்று வரும் நகர சம்பவத் தொகுப்புப் பத்தியில் ஒரு செய்தியாக வந்திருந்தது. “சாப்பாட்டுக்கான ‘பில்’லைத் தந்த சர்வரைக் கத்தியால் குத்தினார் ஹோட்டலில் சாப்பிட்டவர்” போன்ற செய்திகளுக்கு இடையே இருந்தது. “அந்தேரி மேற்கில் மிகவும் பணக்காரப் பகுதியில் இருக்கும் பதினாறு மாடிக் குடியிருப்பில் வேலை செய்யும் பதினோரு வயதுப் பெண் தற்கொலை. விஞ்ஞானி டாக்டர் கிஷன் கோபால் மற்றும் மனைவி மாதவியின் வீட்டில் வேலை செய்துவந்த உத்தரப் பிரதேசத்தின் குரியா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி நேற்று தூக்குப்போட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டாள்.”

 

 

 

மேற்கு அந்தேரியின் அந்தப் பகுதி கோவிந்த் ஷெல்கேயின் போலீஸ் ஸ்டேஷனின் கீழ் வருவதுதான். அவள் யோசித்துக் கொண்டிருந்தபோதே கைபேசி ஒலித்தது. கோவிந்த ஷெல்கே என்றது திரை. சாதாரணமாக இவ்வளவு நேரம் கழித்துக் கூப்பிட மாட்டார்.

“என்ன கோவிந்த்?”

“தீதி, அந்த டாக்டர் கிஷன் கோபால் நம்ம பாய் ஸாஹேபின் நண்பரா?”

“ஆமாம் கோவிந்த். இப்பத்தான் நரேன் அவரோட போனான் அவரைக் கொண்டுவிட” என்றுவிட்டு அன்று மாலையிலிருந்து நடந்ததை விவரித்தாள்.

“தற்கொலைன்னு அவர் நம்பறாரா தீதி?”

“பதினோரு வயசுப் பொண்ணு தற்கொலை பண்ணிக்க முடியுமான்னு எனக்கே சந்தேகமா இருக்கு கோவிந்த்.”

 

“அதுக்காகத்தான் கூப்பிட்டேன் தீதி. தீதி, உடம்புல சூட்டுக் காயம். ப்ளேடால கீறின காயம் உள் தொடைல. அந்தப் பொண்ணோட அம்மா பாவ்னா அப்படிக் கதர்றாங்க. அவங்க கிராமத்தைச் சேர்ந்த யாரோ இங்க இருக்காங்களாம். அவங்க சொல்லி அனுப்பியிருக்காங்க. வீட்டுல கொஞ்சம் உதவியா வேலை செய்யட்டும்; ஸ்கூல்ல சேர்ப்போம், படிக்கவைப்போம்னு சொன்னதை நம்பி அனுப்பியிருக்காங்க பொண்ணை”

“அந்தம்மா என்ன சொல்றாங்க?”

“அவங்க வெளியே போயிட்டு வந்து பார்த்தா இந்தப் பொண்ணு தொங்கிட்டு இருந்துதாம். கூச்சல் போட்டுப் பக்கத்து வீட்டுல இருந்தவங்க வந்து பார்த்தாங்களாம்… போலீசுக்குச் சொன்னாங்களாம். தொங்கிட்டிருந்த குழந்தையோட கால் தரைக்கு ரெண்டு இஞ்ச் மேல இருந்துது தீதி. தற்கொலைன்னா ஏதாவது முக்காலி கிக்காலி ஏதாவது இருக்கவேண்டாமா?”

“ம்ம்ம்ம்…”

“அந்தக் காயம் எல்லாம் கிராமத்துல இருந்து வந்தப்பவே இருந்துதுங்கறாங்க அந்தம்மா.”

“தற்கொலை இல்லைன்னா அவங்க இல்லாதபோது யாராவது வந்து ஏதாவது பண்ணியிருக்கலாம். இல்லையா கோவிந்த்?”

“வேற யார் வந்த தடயமும் இல்லை தீதி. குழந்தை உடம்புலயோ கயிறுலயோ அறையிலயோ வேற வெளியாள் யாரோட கைவிரல் ரேகையும் இல்லை. பில்டிங்ல ஸி.ஸி.டி.வி இருக்கு. எதுவும் அதுல பதிவாகல.”

“அவங்க வீட்டுலயும் அங்குள்ள சாமான்கள்லயும் இவங்க கைரேகைதானே இருக்கும் கோவிந்த்? தவிர, குழந்தை வேலை செய்யறபோது எத்தனையோ தடவை தொட்டிருக்கலாம் அவளை. சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்றேன். வெளியாள் வேலையா தோணுது கோவிந்த்.”

“இன்னொரு விஷயம் தீதி. அவங்க பாய் ஸாஹேபுக்குத் தெரிஞ்சவங்க என்கிறதால சொல்றேன் உங்ககிட்ட….”

கோவிந்த் நீண்ட மூச்சு விடுவது கேட்டது.

“உங்ககிட்ட சொல்லக்கூட முடியலை. நான் ஒரு போலீஸ்காரன். எனக்கே தாங்கலை, போஸ்ட்மார்ட்டம் ரிபோர்ட்டைப் பார்த்ததும். உடம்புல காயம்னு சொன்னேன் இல்லையா? அப்புறம்…. அப்புறம்…. தீதி, அந்தக் குழந்தையோட பிறப்புறுப்புல குச்சி வெச்சுக் குத்தியிருக்காங்க….”

“ஐயோ!”

“சின்னக் குச்சி ரெண்டு மூணு இருந்துது உள்ள. வெளியிலிருந்து வர ஆளு குச்சியோட எல்லாம் வர முடியுமா?”

“ரொம்ப அதிர்ச்சியா இருக்கு கோவிந்த்.”

“என்ன மாதிரி மனுஷங்க இவங்க தீதி? பாய் ஸாஹேப் கிட்ட பேசுங்க நீங்க.”

“இப்ப வந்ததும் பேசறேன் கோவிந்த். வாட்ஸ்அப்புல உங்களுக்குச் சொல்றேன்.”

உரையாடலை முடித்தாள். நரேன் உள்ளே வந்தான்.

“ராத்திரி தனியா இருப்பாரா நரேன்? அவரையும் இருக்கச் சொல்லியிருக்கலாமோ?”

அவள் குரலில் சற்றுக் கிண்டல் தொனித்ததோ என்னவோ நரேன் அவளை உன்னித்துப் பார்த்துவிட்டு, “இல்லை. கொஞ்சம் பதற்றமா இருக்கான். மற்றபடி ஓ.கே. நாளைக்கு நான் லீவு போடவேண்டிவரும். வக்கீலைச் சந்திக்கணும். மாஜிஸ்ட்ரேட் கிட்ட பெயில் அப்ளிகேஷன் தரணும். நீ கூட வருவியா சுதா?”

“கட்டாயம் வருவேன்” என்றுவிட்டு கோவிந்துடன் நடந்த உரையாடலைச் சொன்னாள். நரேன் மௌனமாகக் கேட்டான்.

“இவ்வளவு அப்பாவியா இவர் இருக்கறதே கொஞ்சம் சந்தேகமா இருக்கு நரேன்.”

சற்று உரக்கக் கோபமாகச் சொன்னான். “சுதா, ப்ளீஸ் உன் துப்பறியும் கண்ணால எல்லாத்தையும் பார்க்காதே. அவன் என் சிநேகிதன்.”

“ஓ.கே. இதுக்காக நமக்குள்ள எதுக்குச் சண்டை? எவ்வளவு வருஷமா உனக்கு அவரைத் தெரியும்?”

“ஒரு பத்து வருஷமா நெருங்கின நண்பர்களா இருக்கோம். யார் வீட்டுக்கும் வர மாட்டான். சங்கோஜப் பேர்வழி. அனாதை, பாவம். அந்தம்மா பணக்கார அனாதை. இவன் அனாதை ஆசிரமத்துல இருந்து படிச்சு முன்னுக்கு வந்த அனாதை. ஏதோ சந்தர்ப்பவசமா ரெண்டு பேரும் இணைஞ்சிருக்காங்க. அவமேல அவ்வளவு மதிப்பும் அன்பும் அவனுக்கு.”

“அவ்வளவு பெரிய பணக்காரி அப்படி யாருமே இல்லாத அனாதையா இருக்க முடியுமா நரேன்?”

நரேன் கோபத்தில் முறைத்தான் அவளை.

“சுதா, வர வர நீ யாரையுமே நம்பறதில்லை. எல்லாரையுமே சந்தேகத்தோடத்தான் பார்க்கறே. போதைப் பொருளைக் கண்டுபிடிக்கிற நாய்க்கு அதைத் தவிர  வேற எதுவும் தெரியாதும்பாங்க, அது மாதிரி.”

“நீ நேரடியாவே என்னை நாய், ஒரு ‘பிட்ச்’னு சொல்லலாம் நரேன்.” அவளும் கோபமாகவே பேசினாள்.

நரேன் சட்டென்று தணிந்துபோனான்.

“ஏய் சுதா, கமான், ஸாரி. நான் அப்படிச் சொல்லலை” என்றபடி அணைத்துக்கொண்டான்.

“அவன் ஒரே பயத்துல இருக்கானா, எனக்கும் ஒரே டென்ஷன்” என்றான்.

“டென்ஷன்னா என்ன வேணுமானாலும் பேசலாமா?” என்று முணுமுணுத்தாள் சுதா.

நரேன் அவளுக்குப் பிடித்த பழங்கள், பூக்கள், சிலவகைச் செடிகள் இவை சேர்க்கப்பட்டு வடிகட்டப்படும், உணவுக்குப்பின்  அருந்தும் லிக்யூர் எனப்படும் மதுவில் ஆரஞ்சு சேர்க்கப்பட்ட மதுவான கான்த்ரூவை அதற்கான சின்னஞ்சிறு கண்ணாடிக் குவளையில் ஊற்றி எடுத்து வந்தான். அவள் கையில் கொடுத்துத் தன் குவளையை உயர்த்தி, “அமைதி” என்றான்.

அவள் சிரித்தபடி பருக ஆரம்பித்தாள்.

அருணா எட்டிப் பார்த்தாள். “இங்கே ஏதாவது காதல் காட்சியா? நான் வரலாமா?” என்றாள்.

“ஏய், வா, உனக்கும் தரவா?” என்றான் நரேன்.

“வேண்டாம் பப்பா. அம்மா, அந்த ரெண்டு குழந்தைகளும் ஏகத்துக்குப் பயந்திருக்காங்க போல. தூக்கத்துலகூட உடம்பு தூக்கி தூக்கிப் போடுது அவங்களுக்கு.”

“பாவம், பழகாத இடம் இல்லையா? ஒண்ணும் புரியவும் இல்லை அவங்களுக்கு” என்றான் நரேன்.

கான்த்ரூ பருகி முடித்ததும் எல்லாவற்றையும் ஒழித்துவைத்துவிட்டுப் படுக்கச் சென்றனர். கோவிந்துக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பினாள்:

‘நரேனிடம் பேசினேன். அதிக தகவல் ஏதும் கிடைக்கவில்லை. வக்கீல் ஏற்பாடாகிவிட்டது. பெயிலுக்கு முயல்வோம். அந்தேரி மெட்ரோபாலிடன் கோர்ட்தானே?’

கோவிந்த் பதில் தந்தார்:

‘பாய் ஸாஹேப் மூலம் வக்கீல் என்னைத் தொடர்புகொண்டார். திந்தோஷி ஸெஷன்ஸ் கோர்ட்டுக்கே போகப்போகிறார்கள். போலீஸ் ரிப்போர்ட் போன்ற தரவுகளை அவரிடம் தருவேன்.’

* * *

கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் யாரும் அறியா மூலையில் ஜி.டி. தெருவிலிருந்து விலகி, வாரணாசிக்கும் அலஹாபாத்துக்கும் நடுவே புழுதி வீசும் சிறு கிராமம் குரியா. விவசாயமும் நூற்பதும்தான் தொழில். கையால் முடிச்சிட்டு நெய்யப்படும் கம்பளங்கள் நூற்கும் இங்குள்ள தொழிலிலிருந்து குழந்தைத் தொழிலாளிகளை நீக்கி அவர்களுக்குக் கல்வி, மதிய உணவு, சுகாதார வசதி இவற்றைச் செய்யும் மாலா திட்டம் செயல்படுவது இங்குதான்.

ஆரம்பப் பள்ளியில் செருப்பணிந்து வர வேண்டிய அவசியமில்லை. எந்தக் குழந்தையும் அதன் குடும்பப் பெயரால் அழைக்கப்படுவதில்லை.  இதனால் சாதி, சமூகம், வர்க்கம், உடை போன்ற விஷயங்களின் அழுத்தங்கள் பள்ளியில் இருப்பதில்லை.

கிராமத்தினர் இங்கு குழந்தைகளுக்குக் கல்விக்கான வாய்ப்பு கிடைப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். பள்ளியில் பத்து இடங்களுக்கு ஐந்நூறு விண்ணப்பங்கள் வருகின்றன. ஆனால் சிறுமிகளைவிட சிறுவர்களிடமிருந்து அதிக விண்ணப்பங்கள் வருவது சகஜம்.

சில ஆண்டுகளுக்கு முன் சிறு குழந்தைகளுக்காக ஒரு பாலர் பள்ளி துவங்கத் தீர்மானமாகியது. அறிவிக்கப்பட்ட உடனேயே முன்னூறு சிறுவர்கள் வெளியே வரிசையில் நின்றனர். ஒரு சிறுமிகூட வரிசையில் இல்லை. அப்போதுதான் சிறுமிகளுக்கு என்று பிரத்யேகமாக வகுப்பொன்றை அமைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

எட்டாம் வகுப்புக்குப் பிறகு அனைத்து மாணவர்களுக்கும் சைக்கிள் தரப்படுகிறது பள்ளிப் படிப்பை விட்டுவிடாமல் இருக்க. சிறுமிகளுக்கென்று விடுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. மெல்ல மெல்ல குடும்பங்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணரத் தலைப்பட்டிருக்கின்றன.

ஆனால் பெண்களைப் பள்ளிக்குத் தொடர்ந்து வரச்செய்வது வெகு சிரமமானதொன்று. வயதுக்கு வந்தபின் பெற்றோர் மகளின் பாதுகாப்பு குறித்து அஞ்சுகின்றனர். நடுநிலைப் பள்ளிக்குப்பின் பெண்களுக்குத் திருமணம் செய்துவிட முனைகின்றனர் பெற்றோர்.

மாலா திட்டம் ஆசிரியர்களையும் மாணவர்களின் தேவைகளைக் குறித்துப் புரிந்துகொண்டு செயல்படப் பயிற்சி அளிக்கிறது. இங்குள்ள சிறுமிகள்  டீச்சராகவும்  டாக்டராகவும் விரும்புகின்றனர். சிறுவர்கள் பொறியாளர்களாக விரும்புகின்றனர்.

-தினசரியில் வரும் தகவல்களிலிருந்து….

அமர்வுகள் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்துவிடும் என்று பலத்த நம்பிக்கையுடனிருந்தார் ஸ்ரீதர்  ராமனாதன். மிகச் சிறந்த வக்கீல் என்று கோவிந்த்கூடக் கூறியிருந்தார். கோவிந்தின் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ் அறிக்கையை இறுக்கமாகக் கட்டியிருந்தது. ஜாமீன் வழங்கினால் குற்றவாளி ஏழைப் பெண்ணின் தாயாரை விலைக்கு வாங்க முயற்சிக்கலாம். தடயங்களை அழிக்க முற்படலாம். ஓர் ஏழைப் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டிய நீதி இதனால் மறுக்கப்படலாம். குற்றவாளியிடம் இன்னும் விவரமாக விசாரணை செய்ய அவர் சிறையில் இருப்பது அவசியம் போன்ற காரணங்களைப் போலீஸ் தரப்பு கூறியது.

ஆனால் ஸ்ரீதர் ராமனாதன் வெகு சுலபமாகத் தன் தரப்பு நியாயத்தை முன்வைத்தார். சமீபத்தில் பிப்ரவரி 2018இல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிக் குழுவின் இரு நீதிபதிகளான மதன் பி. லோகூரும் ஜே. தீபக் குப்தாவும் ஒரு வழக்கில் ஜாமீன் குறித்துக் கூறியதை வலியுறுத்தினார். குற்றம் நிரூபிக்கப்படாதவரை குற்றம்சாட்டப்பட்ட நபர் குற்றவாளி இல்லை என்பதையே நீதிபதிகள் கூறியிருந்தனர். ஜாமீன் மறுக்கப்படுவது இந்திய அரசியலமைப்பின் 21ஆவது சரத்து எல்லாப் பிரஜைகளுக்கும் அளிக்கும் கௌரவமாக வாழும் உரிமையை மீறுவதாகும் என்று விளக்கினார். ஜாமீன்தான் பொதுவிதி; சிறை விதிவிலக்குதான் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதை எடுத்துக்காட்டி ஏற்கனவே நிறைந்திருக்கும் சிறைகளை மேலும் நிறைக்கக் கூடாது என்றார். மேலும், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் பெண். இதுவரை எந்தக் குற்றத்துக்கும் சிறை செல்லாதவர். சமூகத்தில் கௌரவமாக வாழும் ஒருவர். எங்கும் ஓடிப்போக மாட்டார். ஒரு குடும்பப் பெண். எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு உட்படத் தயாராக இருப்பவர்.

பிணையில் மாதவி விடுவிக்கப்பட்டாள். பிணைக்கான அபராதத் தொகையை நீதிபதி ஐம்பதாயிரமாக வைத்ததுதான் போலீஸ் தரப்பின் சிறிய வெற்றி எனலாம். ஆனால் அந்தத் தொகை கிஷனுக்கும் மாதவிக்கும் பெரிய தொகையாகத் தெரியவில்லை. ஜாமீன் கிடைத்திருந்தாலும் குழந்தைகளை மதுவிடம் விடுவது என்று தீர்மானித்தார்கள்.

அமர்வுகள் நீதிமன்றத்திலிருந்து சுதா தன் வேலையைக் கவனிக்க வீடு திரும்பிவிட்டாள். சனிக்கிழமையானாலும் சில அறிக்கைகளைச் சரிபார்க்கும் வேலை இருந்தது.

வீட்டுக்கு வந்ததும், சமைத்துக்கொண்டிருந்த செல்லம்மாள் அவளிடம் எதுவும் கேட்காமல், லவங்கப்பட்டைத் தேநீரைக் கையில் தந்தாள். “என்ன சுதாம்மா? குழந்தைகள் யாரு? நானீ நானீன்னுட்டு வந்து கட்டிக்கிச்சு ரெண்டும்” என்றாள்.

சுதா சுருக்கமாக விவரங்களைக் கூறியதும் செல்லம்மாள் சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு “எங்க வீட்டுப் பால்காரர் உ.பி.காரர்தான். அவர் வீட்டுக்கு ஏதோ தூரத்து உறவு வந்திருக்கிறதா ஏதோ பேச்சுல சொன்னாரு. அந்தம்மா பொண்ணு இங்க வேலை பாத்திட்டிருந்ததாம் ஒரு வீட்டுல. செத்துடிச்சாம். இதுவா இருக்குமா சுதாம்மா? பதினோரு வயசுப் பொண்ணு தூக்குப்போட்டுக்குமா என்ன?”

“என்னவோ போங்க செல்லம்மா. கேட்டதுலிருந்து மனசே சரியில்லை. நரேனோட நெருங்கின சிநேகிதரு அவரு. இப்பத்தான் ஜாமீன் கோர்ட்டுக்குப் போயிட்டு வந்தேன்.”

“மும்பாய்ல இப்படி வீட்டு வேலைக்குக் குழந்தைகளை வெச்சுக்கறது ரொம்பத் தப்பு சுதாம்மா. படிக்க வேண்டிய பிள்ளைங்க.”

செல்லம்மாள் சமையலறை வேலையைக் கவனிக்கச் சென்றாள்.

குளியலறையில் அந்தப் பெண்களைக் குளிக்கவைத்துத் தனக்கு இறுக்கமாகிவிட்ட உடைகளை அணிந்துகொள்ளத் தந்திருந்தாள் அருணா. அப்படியும் பொருந்தவில்லை. தொளதொளவென்றிருந்த உடைகளில் வந்தனர் இருவரும் வெளியே. அவள் கையை விரித்துக் கூப்பிட்டதும் வந்து அவளை அணைத்துக்கொண்டனர் வெட்கத்துடன்.

சிறிது நேரத்தில் நரேனுடன் அவர்கள் பெற்றோர் வந்தனர். சின்னப் பெண் ஓடிப்போய் அணைத்துக்கொண்டாள் அம்மாவை. பெரிய பெண் கொஞ்சம் தள்ளி நின்று பின் அணைத்துக்கொண்டாள். தனக்கு வேலையிருப்பதாகக் கூறி அருணாவையும் நரேனையும் அவர்களுடன் மது வீட்டுக்கு அனுப்பினள் சுதா.

மாதவி சற்றுக் களைத்ததுபோல் இருந்தாலும் தைரியமாகவே இருந்தாள். களையான முகம். பணக்காரக் கர்வம் சற்றுப் பேச்சில் தொனித்தாலும் அதைக் கட்டுப்படுத்திக்கொள்ள முயல்வது தெரிந்தது. அவள் கண்ணால் சொன்ன வேலைகளை கிஷன் உடனே செய்தார்.

‘‘உங்க ஊரே மும்பாய்தானா?” என்று சம்பிரதாயமாகக் கேட்டபோது, “நான் ஜெய்பூர்க்காரி. மும்பை வந்து ரொம்ப வருஷமாச்சு” என்று சுருக்கமாகக் கூறினாள்.

“எங்கப்பாவும் ஜெய்ப்பூர்ல ரெண்டு வருஷம் இருந்தார். நான் எம்.ஜி.டி.ல படிச்சேன்” என்றாள் சுதா.

“நானும் எம்.ஜி.டி.தான். பிறகு கனோரியா காலேஜ்ல படிச்சேன்” என்றாள் மாதவி.

“மும்பாய் வந்து எவ்வளவு வருஷம் ஆயிருக்கும்?” என்று சுதா கேட்டதும் நரேன் முகத்தைச் சுளித்தான்.

மாதவி புன்னகைத்தபடி, “பதினைஞ்சு இருபது வருஷம் ஆயிருக்கும்” என்றாள்.

“அப்புறம் 2006இல் மாதவி கோயல் மாதவி கிஷன் கோபால் ஆனாள்” என்றார் கிஷன் அவளை அன்பு பொங்கப் பார்த்தபடி.

அவள் வயது இப்போது நாற்பது இருக்கும் என்று தோன்றியது. இருபது வயதிலேயா அனாதை ஆகிவிட்டாள்? பாவம் என்று தோன்றியது.

எல்லோரும் கிளம்பியதும் செல்லம்மாள் கேட்டாள்:

“இதுதான் அந்தம்மாவா சுதாம்மா?”

“ஆமாம்.”

“துளிக்கூடக் கலங்கிப்போனதா தெரியலை பார்த்தீங்களா சுதாம்மா?”

“அவங்க தப்பு செய்யாதபோது ஏன் கலங்கணும்?”

“எத்தனை பெரிய தப்பு பண்ணினாலும் பணக்காரங்க கலங்கமாட்டாங்க” என்று மனோதத்துவம் பேசினாள் செல்லம்மாள்.

செல்லம்மாளைப் பேசவிட்டால் வழக்கையே அலசி தண்டனையும் தந்துவிடுவாள் என்று தெரியும். சுதா எழுந்து தன் அலுவலகப் பகுதிக்குச் சென்றாள்.

கோவிந்தின் அழைப்பு வந்தது.

“நமஷ்கார் தீதி. பெயில் கிடைச்சதுல சந்தோஷம்தானே?” என்றார்.

“எனக்கு என்ன சந்தோஷம் இதுல கோவிந்த்? ஜட்ஜ் பெயில் தந்திருக்காரு.”

“இன்னும் விசாரணை நிறைய பாக்கி இருக்கு தீதி. படம் இன்னும் முடியலை.”

“அது எனக்கும் தெரியும். பாவம் இந்தம்மாவும் அனாதை கோவிந்த். வேறு கோணத்திலேயும் பாருங்க விஷயத்தை.”

“பார்க்காமல் இருப்போமா தீதி? குற்றம் செய்யாத ஒருத்தருக்குத் தண்டனை வாங்கித் தரதுக்கு எங்களுக்கென்ன பைத்தியமா? மீனா அந்தப் பொண்ணோட அம்மாவைப் பார்த்துப் பேசி ஒரே கொதிநிலைல இருக்குறா. உங்களோட பேசப்போறதா சொல்லிட்டிருந்தா.”

மீனாபாய் அவர் மனைவி. ஆதிவாசிப் பெண். ஆதிவாசிப் பெண்களுக்காகத் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்துபவள்.

“என்கிட்ட ஏன் பேசணும்? நான் என்ன சமூக சேவகியா? வெறும் டிடெக்டிவ்.”

“மீனா உங்க தோழியாச்சே? கூப்பிடுவா உங்களை. நீங்களும் எங்களுக்கு உதவணும் தீதி.”

முந்தைய தினம் நரேனுடன் நடந்த வாக்குவாதம் பற்றிக் கூறி, “இந்த வழக்கு முடியறதுக்கு முன்னாலே அவன் என்னை டைவோர்ஸ் பண்ணற மாதிரி செய்துடாதீங்க” என்றாள்.

கோவிந்த் சிரித்தார். ”அப்படிச் செய்ய விடுவோமா பாய் ஸாஹேபை? இந்தத் தம்பி இருக்கறது எதுக்காக?” என்றார்.

* * *

எப்படியாவது மகளைப் படிக்கவைக்க வேண்டும் என்றுதான் அவ்வளவு கஷ்டப்பட்டுப் பள்ளியில் சேர்த்தாள். பெயர் எதுவும் வைத்திருக்கவில்லை. “ஏ முன்னீ, ஏ கோரி” என்றுதான் எல்லோரும் கூப்பிடுவார்கள். நல்ல சிவப்பு அவள். பள்ளி டீச்சர் அவள் சற்றே நீண்ட கழுத்தைப் பார்த்தோ என்னவோ ஸாரஸ் என்று மாநிலப் பறவையின் அவளுக்கு வைத்தார். பாவ்னாவுக்கு ஒரே பெருமை. ஸாரஸ் கொக்கின் படம் வகுப்பில் தொங்கியது வழவழவென்ற காகிதத்தில். அதைத் தொட்டுப் பார்த்தாள்.

மீனா அவளை அன்றே தொடர்பு கொள்வாள் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. சந்திக்க முடியுமா என்று விசாரித்தாள். தஹானுவரை வர முடியாது என்றதும், தஹானுவில் இல்லை, இங்கே அந்தேரியில்தான் என்றாள். அந்தேரி கிழக்குப் பகுதியில் இருந்த ஒற்றை அறை குடியிருப்புகள் ஒன்றின் முகவரியைத் தந்தாள். அங்குதான் சுதா முதன்முறையாகப் பாவ்னாவைச் சந்தித்தாள்.

உழைப்பாளி என்பதைக் கூறும் தோற்றம். கச்சலான தேகம். நிறைய அழுதிருப்பாள் போலும். கண்கள் சிவந்து உலர்ந்திருந்தன. முகத்தில் எந்த உணர்வையும் காட்டாத உறைந்த தன்மை இருந்தது.

மீனா அறிமுகப்படுத்தியதும் சுதா அவள் கரங்களைப் பற்றிக்கொண்டாள்.

பாவ்னா தங்கியிருந்த உறவினர் வீட்டுப் பெண்மணி ஒருத்தி சிறு குவளைகளில் தேநீர் கொண்டுவந்து தந்தாள். முந்தைய மாலையில்தான் ஸாரஸின் உடலைத் தகனம் செய்திருந்தனர். அதற்கு முன் உடலை வாங்க மறுத்திருந்தாள் அவள்.

கொஞ்சம் கொஞ்சமாக விவரங்கள் வெளிவந்தன. அதிகம் அழுதிருந்ததாலோ என்னவோ குரல் கரகரத்துப் போயிருந்தது அக்குடும்பத்தில் அனைவருக்கும்.

“நான் விதவை. எழை. ஆனால் என் பெண்ணைப் பூ மாதிரி வளர்த்தேன். மாலா திட்டத்து ஸ்கூல்ல என் பெண்ணைச் சேர்த்தேன்…” என்று மெல்லிய குரலில் கூற ஆரம்பித்தாள் பாவ்னா.

“அவளை என்னிக்கும் அடிச்சது கிடையாது ஆன்டிஜி. என்னோட வயல்லயும் வேலை செய்வா. ஸ்கூலுக்கும் போவா. வயசுக்கு வந்தா சுற்றி இருக்கறவங்க கல்யாணம் பண்ணிவைன்னு தொந்தரவு செய்வாங்கன்னு இங்க அனுப்பினேன். நல்ல படிப்பு படிக்க வைப்பாங்கன்னு சொன்னாங்க. வீட்டுல கொஞ்சம்தான் வேலை இருக்கும்னு சொன்னாங்க. இப்படி…” உடைந்து அழுதாள்.

“ஸாரஸ்னு பேர் வெச்சாங்களே அந்த டீச்சர்! அதைப் பிச்சு பிச்சுப் போட்டுட்டாங்களே! ஹே ராம்! ஹே மேரி மா! உன் உடம்புல…”

மும்பாயைச் சேர்ந்த ஒரு பெண்மணி அங்கு வந்திருந்தபோது பாவ்னாவிடம் நல்லபடி பேசி ஸாரஸை இங்கு கூட்டிவந்தாளாம். ஆறு மாசச் சம்பளப் பணத்தை அட்வான்ஸாகத் தந்தார்களாம். ஆறாயிரம் ரூபாய். ஆறு மாதத்தில் பாவ்னாவை இரண்டு முறைதான் கூப்பிட்டாளாம் ஸாரஸ்.  இரண்டு முறையும் சரியாகவே பேசினாள்; ஆனால் முடிவில் “நான் அங்கேயே வந்து படிக்கிறேனே மம்மி” என்றாளாம். முன்பணம் வாங்கிவிட்டதால் ஆறு மாதம் முடிந்ததும் மும்பாய் வருவதாகக் கூறினாளாம் பாவ்னா. மும்பாய் வருவது சுலபமா? ரயிலுக்கு டிக்கெட் எடுக்கப் பணம் வேண்டாமா என்று கூறினாளாம். தன் பள்ளி உடையைப் பத்திரமாக வைத்திருக்கும்படி கூறினாளாம் ஸாரஸ்.

ஸாரஸைக் கூட்டிவந்த பெண்மணி அதே பகுதியில்தான் இருந்தாள். அவளும் நிலைகுலைந்து போயிருந்தாள். மாதவியும் கிஷனும் குடியிருந்த அடுக்கு வீடுகள் இருந்த குடியிருப்பில் இருக்கும் சௌகிதார்தான் அங்கு வேலை செய்யும் ஒரு பெண்மணியிடம் கூறியிருந்தாராம் வீட்டு வேலை செய்ய சின்னப் பெண் வேண்டும் என்று. அவள் இவளிடம் சொல்ல, இவள் ஊருக்குப் போனபோது பாவ்னாவிடம் பேசியிருக்கிறாள். அவளும் அழுதாள். ‘‘இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா கூட்டிட்டு வந்திருக்க மாட்டேனே!”

ஸாரஸின் உடலில் இருந்த காயங்களைச் சொல்லிச் சொல்லி அழுதாள் பாவ்னா. “ஐயோ, என் செல்லம் எப்படித் தாங்கிக்கிட்டா? கீழ குச்சியால குத்தியிருக்காங்களே. ஹாய்… ஹாய்…” என்று நெஞ்சில் அடித்துக்கொண்டாள்.

‘‘பாவ்னா, இதை யார் செய்தது, வெளியாளா இல்லை அந்த அம்மாவா எதுவும் இன்னும் சரியா தெரியலை. போலீஸ் எல்லாத்தையும் கண்டுபிடிக்கும். அந்த அம்மாவும் அனாதைப் பொண்ணு” என்றாள் சுதா.

“என் தங்கத்தைப் பொட்டலம் கட்டித் தந்தாங்களே ஆன்டிஜி. ‘ஸாரஸுக்கு உடம்பு மோசமா இருக்கு. உடனே வா’ன்னுதான் இங்க இருக்கறவங்க சொன்னாங்க. ஸ்கூல் யூனிஃபார்மை எடுத்திட்டு வந்தேன், அதைப் பார்த்தா தேறிடுவான்னு. இங்க வந்த பிறகுதான் அவ இல்லாம போயிட்டான்னு தெரியும். ஸ்கூல் யூனிஃபார்மையும் அவ மேல போட்டு எரிச்சேன் இந்தப் பாவி. ‘விஞ்ஞானியா வருவேன் மம்மி’ என்றாளே என் ராணி! யார் இதைச் செய்தாங்களோ அவங்க துடிக்க துடிக்கச் சாகணும்! என் சாபம் அவங்களை விடாது…” என்று  அரற்றினாள் பாவ்னா.

தனக்குக் கிராமத்தில் ஒரு குடிசையைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்றாள் பாவ்னா. வழக்கு முடியும்வரை அவள் உறவினர் வீட்டில் இருப்பதென்றும் அதன்பின் மீனாவின் தொண்டு நிறுவனத்தில் அவளுக்கு ஒரு வேலை தரலாமென்றும் ஆதிவாசிச் சிறுமிகளைப் பார்த்தால் அவள் மனம் ஆறும் என்றும் எல்லோரும் கூடித் தீர்மானித்தனர். மீனாவுக்கும் கோவிந்துக்கும் பத்து வயதில் பெண் இருந்தாள். சாந்தினி. அவளும் பாவ்னா மீண்டுவர மருந்தாக இருப்பாள் என்றாள் மீனா.

வீடு திரும்பியபோது மனம் மூட்டம் போட்டிருந்தது. பாவ்னாவின் கதறல் இன்னும் காதில் ஒலித்தபடி இருந்தது. நரேனும் அருணாவும் திரும்பிய பின்னர் மௌனமாகவே உணவு உட்கொண்டனர். எதுவும் பேசவில்லை. நரேன் மீண்டும் கிளம்பிப் போனான் கிஷனுக்கும் மாதவிக்கும் சற்று நேரம் துணையாக இருக்க.

அருணா சுதாவிடம் கூறினாள்: “அம்மு, மாதவி ஆன்ட்டி ரொம்ப நல்லவங்களா தெரியறாங்க. அவங்க தைரியமா இருக்காங்க. கிஷன் அங்கிள்தான் கலங்கிப் போயிருக்காரு.”

“ஹும்.”

கணினியைத் திறந்து மாதவி கிஷன் கோபால் (கோயல்) என்று ஒரு கோப்பை உருவாக்கினாள்.

மாதவி: இப்போது 40 வயது இருக்கும் என்றால் பிறந்த ஆண்டு 1978 என்று எழுதினாள்.

பள்ளிப் படிப்பு: எம். ஜி.டி. (மஹாராணி காயத்ரி தேவி) பள்ளி.

பள்ளிப் படிப்பு முடிந்திருக்கக்கூடிய ஆண்டு: 1994.

கல்லூரி: கனோரியா கல்லூரி.

கல்லூரிப் படிப்பு முடிந்திருக்கக்கூடிய ஆண்டு: 1998.

திருமண ஆண்டு: 2006.

1998—2006 இடையிலிருந்த ஆண்டுகளில் அவள் மும்பாயில் என்ன வேலை செய்துகொண்டிருந்தாள் அல்லது சொத்திருந்ததால் வேலை செய்யும் அவசியம் இல்லை என்றால் வாழ்க்கையை எப்படி நடத்திக்கொண்டு போனாள்?

வலை வெளி அகழ்வாராய்ச்சியில் அவள் ஜுஹுதாரா வீதியிலிருந்த இன்னர்வீல் க்ளப்பின் செயற்குழு உறுப்பினராகவும் பின்னர் அதன் உபதலைவராகவும் பிறகு தலைவராகவும் இருந்தாள் என்று தெரிந்தது. இன்னர்வீல் க்ளப்பில் உறுப்பினராவதும் அதில் பதவி வகிப்பதும் ஓர் அனாதைப் பெண்ணுக்குச் சாத்தியமா? பெரிய வக்கீல்கள், டாக்டர்கள், வியாபார உலகின் முக்கிய புள்ளிகள்,  இவர்களின் மனைவிகள் ஆக்கிரமிக்கும் உலகம் அது. சமூக சேவை, கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் அதிலுள்ள பெண்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் சற்று முனைந்து தேடியபோது ஒரு வைர வியாபாரியின் பெயர் கிடைத்தது. பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளைக் கூறும் ஒரு பத்திரிகையின் மூன்றாம் பக்கத்தில் அவர் குடும்பத் திருமணம் ஒன்றில் அவள் புகைப்படம் இருந்தது.  அவள் தந்த ஒரு பேட்டியில் அவர் குடும்ப நண்பர் என்றும் தந்தைபோன்றவர் என்றும் தன் பெற்றோர் இறந்த பிறகு தன் குடும்பத்தில் ஒருத்தியாய்த் தன்னை நினைத்த அன்புள்ளம் கொண்டவர் என்றும் கூறியிருந்தாள்.

ஆரம்பத்தில் அவர்கள் வீட்டில்தான் இருந்தாள் போலும். வலை வெளியின் மூலைகளில் சிதறிக்கிடந்த சில குறிப்புகளில் அவள் முகவரி வேறாக இருந்தது. 2004இல் தான் இப்போது இருக்கும் வீட்டை வாங்கியிருக்க முடியும் என்று தெரிந்தது, சில விஷயங்களை முடிச்சுப்போட்டபோது. நவ்ரத்தன் அபார்ட்மென்ட்ஸ் என்ற இந்தச் செல்வந்தர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது 2004இல்தான். அதற்குமுன் அங்கு சிதிலமடைந்த பழைய பங்களா ஒன்று இருந்தது. ஹிந்திப் படங்களின் சில திகிலூட்டும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டிருந்தன.

அந்தத் தந்தையைப் போன்ற வைர வியாபாரி என்ன ஆனார்? இது நடந்ததும் அவர் ஏன் ஓடி வரவில்லை, தன் மகள் போன்றவளைக் காப்பாற்ற?

தகவல்களையும் மனத்தில் எழும் கேள்விகளையும் குறித்துக்கொண்டே போனாள்.

ஒரு கட்டத்தில் களைப்பு ஏற்பட்டது. அத்தனைத் தகவல்களும் புதிர்ப்பாதைகள்போல் வெளியேற முடியாதவையாகத் தோன்றின வழக்கம்போல். கோவிந்தும் இந்தத் தேடலைச் செய்திருப்பார். அவரிடம் ஒரு துறையே இருந்தது இந்த வேலையைச் செய்ய.

எழுந்து மின்சாரக் கெட்டிலின் பொத்தானை அவள் அமுக்குவதற்கும் செல்லம்மாள் வருவதற்கும் சரியாக இருந்தது. இவள் லவங்கப்பட்டைத் தேநீரைக் குடிக்க உட்கார்ந்ததும் செல்லம்மாள் இரவு உணவு பற்றி விசாரித்தாள். அன்று சனிக்கிழமை. தேப்லா செய்யும் தினம். வீட்டு வேலைகளைச் செய்ய வரும் மாலு வழக்கமாக அன்றன்றைய இரவு உணவுக்கான சப்பாத்தி மாவைப் பிசைந்து வைத்துவிடுவாள். அவள் மாவு பிசைந்தால்தான் அடுப்பில் போட்டதும் சப்பாத்தி உப்பிவரும். கோதுமை மாவுடன் வெந்தயக் கீரை, கடலை மாவு, ஓமம் இவற்றைக் கலந்து செய்யப்படும் தேப்லா, சப்பாத்தி செய்யும் கல்லிலேயே அமுக்கி அமுக்கிச் செய்வது. மாலு மாவு பிசைந்து வைத்தால் பட்டுப்போல் இருக்கும். குஜராத்திகள் மாதிரி வேறு யார் விதம்விதமாகச் சப்பாத்தி செய்ய முடியும் என்பாள். அன்றும் தேப்லாவுக்கு மாவு பிசைந்து வைத்திருந்தாள் மாலு. ‘‘விருந்தாளிகள் யாராவது வருவார்களா, சோறு கொஞ்சம் வடிக்க வேண்டுமா?’’ என்று விசாரித்தாள் செல்லம்மாள்.

“தெரியலை செல்லம்மா. ஏதாவது பண்ணனும்னா நானே செய்துக்கறேன்” என்றாள்.

தேநீர் தயாரித்துத் தேநீர்க் கெண்டியில் ஊற்றி, தனக்கென ஒரு குவளையில் எடுத்துக்கொண்டு, கெண்டியைத் தொப்பியால் மூடி வைத்துவிட்டு, சுதாவின் அலுவலகப் பகுதியில் இருந்த சிறு முக்காலியில் வந்து அமர்ந்துகொண்டாள் செல்லம்மாள்.

‘‘சுதாம்மா, என்ன ஆச்சு அந்தச் சின்னப் பொண்ணு செத்த கேசு?”

“இன்னும் கேசு நடக்குமே செல்லம்மா? போகப் போகத்தான் தெரியும்.”

“அந்தம்மா கொஞ்சம் சள்ளுசள்ளுன்னு விழுமாம் எல்லார்கிட்டயும்.”

“யார் சொன்னாங்க உங்களுக்கு?”

“அவங்க வீட்டுல முந்தி சமைச்சுக்கிட்டிருந்த அம்மா தமிழ்ப் பொம்பளதான். சரஸ்வதின்னு பேரு. அவங்க சொன்னாங்க.”

“வம்பெல்லாம் நம்பக்கூடாது செல்லம்மா.”

“போங்க சுதாம்மா. பேப்பர்ல வரதெல்லாம் வம்பில்லையா? ஒரு சின்னப்பொண்ணு இப்படிக் கொடுமையா செத்திருக்கு. நீங்கன்னா அந்தம்மா பக்கம் பேசறீங்க.”

“இல்லை செல்லம்மா. அந்தப் பொண்ணோட அம்மாவைப் பார்த்தேன். மனசு கலங்கிடுச்சு.”

“பதினொண்ணு வயசுக் குருத்து பாவம். அந்தக் கோவிந்த் கிட்ட சொல்லுங்க சுதாம்மா. இந்தம்மா இல்லாட்டா வேற யாருன்னு தெரியணும்” என்று கோபமாகச் சொல்லிவிட்டு எழுந்துபோனாள் செல்லம்மா.

“அந்த சரஸ்வதி வேற என்ன சொன்னாங்க செல்லம்மா?” என்று சமையலறையிலிருந்த அவளிடம் கேட்டாள்.

“அதுதான் வம்புன்னீங்களே?”

“இல்லை, சொல்லுங்க.”

“அதுதான் சொன்னனே? எரிஞ்சு விழுமாம் எல்லாத்துக்கும். வீட்டுச் சாமானத்த எல்லாம் பார்த்துட்டே இருக்குமாம். இதைத் திருடினியா அதைத் திருடினியான்னு கேட்டுட்டே இருக்குமாம். ‘மூணு கிலோ சர்க்கரை வாங்கினேன். குறைஞ்ச மாதிரி இருக்கே? திருடினியா?’ன்னு நேரடியா கேக்குமாம். கொண்டு வந்த பையைச் சோதனை போடுமாம். அந்த வீட்டு ஐயாகிட்ட ஒரு வார்த்தை ஏதாவது பேசிட்டா, ‘ஏன் பேசினே?’ன்னு பாயுமாம். அவர் முன்னாடி அப்படியே தேவதை மாதிரி இருக்குமாம். அவரும் அப்படி மாதவி மாதவின்னுட்டுக் குழைவாராம் போல. எந்தப் புத்துல எந்தப் பாம்பு…”

அருணா உள்ளறையிலிருந்து வருவதைப் பார்த்து நிறுத்தினாள் செல்லம்மாள்.

“தன் கோப்பையில் தேநீரை ஊற்றிக்கொண்ட அருணா, “என்ன சொல்லிட்டிருந்தீங்க செல்லம்மா?” என்றாள் ஹிந்தியில்.

“உனக்கு ஒண்ணுமில்ல. உனக்கு என்ன வேணும் ராத்திரி? பனீர் பண்ணட்டுமா இல்ல ஸிம்லா மிர்சி மசாலா அடைச்சி செய்யவா?”

“செல்லம்மா நான் என்ன குழந்தையா? பேச்சை மாத்தறீங்களே? தமிழ்ல என்ன பேசிட்டிருந்தீங்க?”

செல்லம்மாள் சிரித்தாள். ”நீ எனக்குக் குழந்தைதான். என்னோடு லாட்லி பேட்டீ (செல்லப் பொண்ணு). டீ குடி போ. இந்தா பிஸ்கெட் டப்பா.”

அருணா டி.வி.யைப் போட்டுவிட்டு ஸோபாவில் அமர்ந்துகொண்டாள். அவள் கைபேசி ஒலித்தது. எடுத்து, “ஹலோ அஜோபா” என்றதும் வித்யாசாகர் ராவ்தேயின் அழைப்பு என்று தெரிந்தது. நாடக நிகழ்ச்சியொன்று பற்றிப் பேசினார்கள் போலும். மராட்டி நாடகங்களுக்கு அருணாவுடன் போக அவருக்குப் பிடிக்கும்.

“ப்ருத்வியில எத்தனை மணிக்கு அஜோபா?” என்று கேட்டாள் அருணா.

அருணா ராவ்தேயிடம் பேசுவதைக் கேட்டு, அவள் பேசி முடித்ததும் தனக்குத் தரும்படி சைகையில் கேட்டாள் சுதா.

அருணா அவளிடம் தந்ததும், “என்ன குருஜி, மராட்டி நாடகமா?” என்றாள்.

“ஆமாம்” என்றுவிட்டு “என்ன வேலை நடந்துட்டிருக்கு?” என்றார்.

“வழக்கமான வேலைதான்” என்றுவிட்டு முந்தைய இரவு பேசிய சிறுமியின் தற்கொலை வழக்குக் குறித்துக் கூறி தான் மாதவி பற்றி வலையிலிருந்து பெற்ற தகவல்களைக் கூறினாள். “குருஜி, அப்படி அப்பாமாதிரி  இருந்த அந்த வைர வியாபாரி இப்ப ஏன் வரலை?” என்று கேட்டாள்

“அவர் பெயர் சுசீல் அகர்வாலா?”

“ஆமாம்.”

“எப்படி வருவார்? 2004ல வரி ஏய்ப்பு கேசுல தப்பிச்சுப் போய் அவர் ஹாங்காங்ல இல்ல இருக்கார்?”

“ஓ.”

“கோவிந்த் ரொம்பத் திறமையான போலீஸ்காரர்தான். ஆனால் இந்தக் கேஸ்ல ஒண்ணும் செய்யமுடியாது.”

“ஏன்?”

“நிரூபிக்கிறது ரொம்பக் கஷ்டம். ரொம்பப் புத்திசாலிக் குழந்தைக்கு தூக்குப்போட்டுக்கவும் தெரியலாம். தாழ இருந்த உள் சன்னல் கம்பிலதானே அந்தப் பொண்ணு தூக்குப்போட்டுக் கொண்டது?  அவளுக்கு எட்டற உயரம்தானே? முக்காலி தேவையில்லையே? வெளி ஆளு வரபோது ஸி.ஸி.டி.வி. வேலை செய்யாம இருந்திருக்கலாம். அதனால வெளியால் வரவே இல்லைனு சொல்ல முடியாது. எந்தவிதத் தப்பும் செய்யாதவங்களக் கொலைகாரின்னு நிரூபிக்க எப்படி முடியும்? கோவிந்த் அவசரப்பட்டுட்டார்.”

“குழந்தை உடம்புல இருந்த காயம் எல்லாம்?”

“பாரு சுதா, மன அழுத்தத்துல இருக்கற குழந்தை தன்னையே தாக்கிக்கும், கீறிக்கும் அப்படின்னு இன்னிக்குப் பேப்பர்ல வந்திருக்கு. இன்னொரு விஷயமும் இருக்கு.”

“அதையும் சொல்லிடுங்க, இவ்வளவு சொன்ன பிறகு.”

“ஒரு ஏழைக் குழந்தையோட சாவு மும்பாய்ல யாருக்கும் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. குடிச்சிட்டுக் காரோட்டி நடைபாதையில படுத்திருக்கறவங்க மேலே ஏத்திக் கொன்னவங்களுக்கெல்லாம் ஒண்ணும் ஆகலை இங்க. இந்த மாதிரி ஏழைக் குடும்பங்களை விலை குடுத்து வாங்கிடுவாங்க. பெரிய இடத்துப் பரபரப்பான கேஸ்தான் பத்திரிகைக்குத் தீனி போடற கேஸ்.”

மௌனமாயிருந்தாள்.

“என்ன? உடனே எதிர்மறையா பேசறேன்னு கோவமா? இத பாரு. நான் அந்தம்மாவோட வக்கீலா இருந்தா இப்படித்தான் யோசிப்பேன்” என்றுவிட்டுச் சிரித்தார்.

கோவிந்த் ஷெல்கே எப்படி இதை எதிர்கொள்ளப்போகிறார் என்று மலைப்பாக இருந்தது. நாஸா போக விரும்பிய அந்தச் சின்னஞ்சிறு பெண்ணின் சாவு மூடப்பட்ட கோப்பாகிவிடுமா?

* * *

முதலில் அது பயமுறுத்தச் செய்யப்பட்ட மிரட்டல் என்றுதான் நினைத்தாள். சப்பாத்தி டப்பா கையிலிருந்து விழுந்து, செய்த எல்லாச் சப்பாத்திகளும் தரையில் சிதறியபோதுதான் அது வெறும் பயமுறுத்தல் இல்லை என்று தெரிந்தது. இரும்புக் கரண்டியை அடுப்பில் போட்ட போதுதான் பயம் வந்தது. அதை உடலில் இழுத்தபோது வலி உயிர் போயிற்று. அப்பா இல்லாத பெண் அவள். அம்மாவை வாய்விட்டுக் கூப்பிட்டுக் கத்தினாள். ‘‘மா ஆ ஆ….” அம்மாவிடம் போனில் பேசியபோது எதுவும் சொல்ல முடியவில்லை. அம்மா திரும்பத் திரும்பச் சொன்னாள்: “உன் ஆசையெல்லாம் நிறைவேறும். இந்த அம்மாவால என்ன செய்ய முடியும்? எதிர்த்துப் பேசாதே.”

“மா, இங்க…”

“புது இடத்துல அப்படி இப்படித்தான் இருக்கும். நீ குழந்தையா? பொறுமையா இரு. நாம ஏழைங்க. பொறுத்துத்தான் போகணும்….”

மாலை வெகு நேரம் கழித்துத்தான் நரேன் திரும்பி வந்தான். களைத்திருந்தான். மறு நாள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தாள் மாதவி. ‘இன்னர்வீல் க்ளப்பில் எல்லாம் இருந்தவளுக்குத் தோழிகள் இல்லையா என்ன? ஒருவர் கூட வந்து விசாரிக்கவில்லையே? சுசீல் அகர்வாலின் பெயர் கெட்டுப்போனதும் இவளையும் ஒதுக்கிவிட்டார்களா என்ன’ என்று நினைத்துக்கொண்டாள். நரேனிடம் அவளுக்குத் தெரிந்தவர்கள் வேறு யாரும் இல்லையா, யாருமே வரவில்லையே என்று கேட்டபோது அப்படியில்லை என்றான் நரேன். இரண்டொரு பெரிய இடத்துப் பெண்கள் வந்திருந்தார்களாம் அவளுக்கு ஆறுதல் கூற. கோவிந்த் இப்படியே நடந்துகொண்டால் அவரை வேறு எங்காவது மாற்றிவிடுவார்கள் என்றார். இந்தப் பெண்களுக்கு உயர் மட்டத்தில் பலரைத் தெரியும். அந்தச் சிறுமியுடைய அம்மாவைப் போய்ப் பார்க்கப்போகிறார்களாம். அவள் தங்கும் இடம் தெரிந்துவிட்டதாம்.

சாப்பாடு எல்லாம் முடிந்து இரவு வெகு நேரம் சென்றபின்தான் மதுவிடமிருந்து அழைப்பு வந்தது.

“என்ன மது? ஸாரி, பெரிய பொறுப்பைக் குடுத்திட்டேன் உனக்கு. கொஞ்சம் இக்கட்டான நிலைமை. அதனாலதான். மாதவிக்கும் அவங்களைப் பிரிஞ்சிருக்கிறது கஷ்டம்தான். அவங்களுக்கும் வேற நிறைய சிநேகிதிங்க உண்டு. நீ அதே ஸ்கூல்ல இருக்கறதுனாலதான் உன் பேரைச் சொன்னேன். ஏதாவது பிரச்சினையா?”

“நீயே பேசிட்டுப் போனா எப்படி?” என்றுவிட்டுச் சிரித்தாள். ‘‘ஒரு பிரச்சினையும் இல்ல. சமத்துக் குழந்தைங்க. சின்னது கொஞ்சம் அம்மா செல்லம்போல. கொஞ்சம் ஏக்கம் தெரியுது. தூங்கிட்டாங்க ரெண்டு பேரும். பெரியவ பூர்ணிமா ரொம்பத் தொட்டாச்சுருங்கி ரகம் போல. எதைச் சொன்னாலும் முகம் வாடிப் போயிடுது. அப்புறம் வந்து, ‘டீச்சர், மம்மி கிட்ட சொல்லாதீங்க’ன்னு சொல்றா. அவங்கம்மா ரொம்பக் கண்டிப்பு போல. ரொம்பப் பயம் இருக்கு. ‘மம்மி உன்னைத் திட்டுவாங்களா?’ன்னு கேட்டேன். ‘இல்ல இல்ல, மம்மி திட்டமாட்டாங்க’ன்னு சொன்னா உடனே. சில சமயம் இந்த மாதிரி ஸென்ஸிடிவ் ஆன குழந்தைகள் ஒரு அடி அடிச்சாகூட பயந்துடுவாங்க. அவங்கம்மா எப்பவாவது அடிச்சிருப்பாங்களோ என்னவோ? தூக்கத்துலகூடத் தூக்கி தூக்கிப் போடுது குழந்தைக்கு. அந்த ஆயா நல்லா பார்த்துக்கறாங்க.”

“நாளைக்கு ஞாயிற்றுக்கிழமையானாலும் மாதவியை விசாரணைக்கு வரச் சொல்லியிருக்காங்க. ஒரு வேளை உனக்கு ஏதாவது வேலைன்னா சொல்லு. நான் அங்கே வரேன்.”

“சரி சொல்றேன். அவசியம் இருக்காது. அந்த ஆயா இருக்காங்களே? சும்மா எல்லாம் சரியா போயிட்டிருக்குன்னு சொல்லத்தான் கூப்பிட்டேன். குட் நைட்.”

தூக்கம் வராமல் அமர்ந்துகொண்டிருந்தாள் சுதா. அவளால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று மனத்தில் புழுபோல் நெளிந்துகொண்டெ இருந்தது.

மணியைப் பார்த்தாள். பதினொன்று. ஜெய்ப்பூரில் பூஜா இன்னும் தூங்கியிருக்கமாட்டாள். ஏதோ ஓர் எண்ணத்தால் உந்தப்பட்டு அவளை அழைத்தாள். “என்ன சுதா, என் ஞாபகம் எப்படி வந்தது? என் பிறந்தநாள் அடுத்த மாசம்தானே?” என்று கேட்டுச் சிரித்தாள்.

“பூஜா, இல்லை. வேற விஷயமா கூப்பிடறேன். தொந்தரவு இல்லையே?”

“இல்லவே இல்லை.”

“பூஜா, உன் தங்கை தமயந்தி 1994ல் எம்.ஜி.டி.லருந்து பாஸ் பண்ணினா இல்லையா?”

“ஆமாம்.”

“இப்போ தமயந்தி எங்க இருக்கா?”

“ஜோத்பூர்ல. ஏன்?”

“மாதவி கோயல்னு ஒரு பொண்ணு அவகூடப் படிச்சாளான்னுட்டுக் கேட்கப் போறேன்.”

“அவ வாட்ஸ்அப்ல இருக்கா. நீயே கேளேன்” என்றுவிட்டு அவள் எண்ணை அனுப்பினாள்.

தமயந்தியை எப்போதோ பார்த்தது அவள் திருமணத்தின்போது. நினைவிருக்குமா?

‘‘நான் சுதா குப்தா. நினைவிருக்கிறதா? இப்போது பேசலாமா?” என்று ஆங்கிலத்தில் செய்தி அனுப்பினாள்.

உடனே பதில் வந்தது.

‘‘டிடெக்டிவ் தீதிதானே? என்ன விஷயம்?’’

‘‘நீ எம்.ஜி.டி.யில் படித்தபோது உன்னுடன் படித்த அல்லது ஒரு வகுப்பு மேலேயோ கீழேயோ இருந்தவர்களை நினைவிருக்குமா உனக்கு?’’

‘‘கட்டாயம் தீதி. எம்.ஜி.டி.யில் நிறைய வகையில் நாங்கள் மற்ற வகுப்புப் பெண்களுடன் நிறைய விஷயங்களைச் செய்தோம்.’’

‘‘மாதவி கோயல் என்ற பெண்ணைத் தெரியுமா?’’

‘‘மாதவி கோயலா? நினைவுக்கு வரவில்லை. இன்னொரு கோயல் இருந்தாள்.’’

உடன் ஒரு பள்ளிப் புகைப்படத்தை அனுப்பினாள் விளக்கத்துடன்.

‘‘முதல் வரிசையில் இடது பக்கம் முதல் பெண்தான் எனக்குத் தெரிந்த கோயல் பெண். நளினி கோயல்.’’

நளினி கோயல் சிறு வயது மாதவிபோல் இருந்தாள். அதே மென்மையான மலர்ந்த முகம்.

‘‘தமயந்தி, இவள்தான் என்று நினைக்கிறேன். இவளைப் பற்றி வேறு விவரம் தெரியுமா?’’

‘‘இவள் அப்புறம் என்னோடுதான் கனோரியா காலேஜில் படித்தாள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. காரணம், பெரிய பணக்காரி. காரில்தான் வருவாள் காலேஜுக்கு. தவிர எல்லோரையும் திடுக்கிடவைத்த அந்த 1998 வரதட்சிணை வழக்கில் இவள் குடும்பமே ஜெயிலுக்குப் போனது மறக்கவில்லை.’’

‘‘என்ன வழக்கு அது?’’

தமயந்தி விவரமாகக் கூற ஆரம்பித்தாள்.

* * *

யாருக்கும் காண்பிக்க முடியவில்லை காயங்களை. சூடுகள், கத்தி அல்லது ப்ளேடு கீறல்கள். முதலில் தண்டனை பிறகு மருந்துபசாரம். அக்கம் பக்கத்திலிருந்து யாராவது வந்தால் ‘பாருங்கள், வேலை செய்யத் தெரியவில்லை’ என்ற விளக்கம்.

தூங்கும்போது  யோனியில் ஏதோ இறங்கியது மகாவலியுடன்.

கழுத்தை ஏதோ நெருடியது. கயிறு. இரு பக்கங்களிலிருந்தும் யாரோ இழுப்பது போலிருந்தது. மூச்சை ஏன் அடைக்கிறது? ஒரு கரும் நிழல் கனத்த மெத்தையாய் அழுத்தியது. பொறுமை… அம்மா முகம் தெரிந்தது…

இவ்வளவு வருடங்களுக்குப் பிறகும் விவரங்கள் துல்லியமாக நினைவில் இருந்தன தமயந்திக்கு. கடகடவென்று எழுதிக்கொண்டு போனாள்.

அவளுடைய அப்பா ஒரு வைர வியாபாரி. பெரிய பணக்காரர்கள். ரவிசந்த் கோயல். அவளுடைய அம்மா வீணா கோயல். இங்கு ஜெய்ப்பூரில் நல்ல பெயர் அவர்களுக்கு அப்போது.

அண்ணன் ஒருவர் இருந்தார். அவர் இந்த வியாபாரத்தில் இல்லாமல் கல்வித் துறையில் இருந்தார். பேராசிரியர். இங்கே ஜெய்ப்பூரில் ஒரு காலேஜில்தான்.

அங்கேயே விரிவுரையாளராக இருந்த மஞ்சுளா என்ற பெண்ணைக் காதலித்து ரிஜிஸ்டர் கல்யாணம் நடந்த பிறகுதான் அவர்களிடம் சொல்லியிருக்கிறார். அவர்களுக்குச் சமூகத்தில் மூக்கு உடைபட்டதுபோல் ஆகிவிட்டது.

ஒரே பிள்ளையை ஒரேயடியாக எதிர்க்கவும் முடியவில்லை. அவர் ஏதோ கருத்தரங்குக்கு வெளிநாடு போனபோது மூன்றுபேரும் சேர்ந்து அவளைக் கொன்றுவிட்டார்கள். அப்படித்தான் பேப்பரில் வந்தது.

ரொம்பத் துரிதமா நடந்த வழக்கு அது. ரவிசந்த், வீணா இரண்டுபேருக்கும் ஆயுள் தண்டனை. அவர்கள் சிறைக்குப் போகும் முன்னாலேயே மோதிரத்தில் இருந்த வைரத்தை விழுங்கிச் செத்துவிட்டார்கள். இவளை வழக்கில் இருந்து விடுவித்தார்கள்.

அப்புறம் குடும்ப நண்பர் ஒருவர்தான் இவளுக்குக் கார்டியனாக இருந்தார் என்று சொல்கிறார்கள். அப்புறம் இவள் ஜெய்ப்பூரில் இல்லவே இல்லை. இங்கே இருந்த சொத்தையெல்லாம் விற்றுவிட்டாள் என்கிறார்கள்.

‘‘அது பெரிய கதை தீதி.’’

‘‘அண்ணா என்ன ஆனார்?’’

‘‘அவர் வெளிநாடு போய்விட்டார் என்கிறார்கள்.’’

‘‘அந்த மஞ்சுளா எப்படி இறந்தாள்?’’

‘‘அவளைத் தினம் துன்புறுத்தியிருக்காங்க அம்மாவும் பெண்ணுமாய். அவள் கணவரிடம் சொல்லாமல் இருந்திருக்கிறாள்.’’

‘‘கம்பளிச் சட்டை பின்னும் ஊசியால் குத்தியிருக்காங்க அவள் வயிற்றில் பிள்ளை இருக்கிறது என்று தெரிந்ததும்.’’

‘‘கழுத்தில் கயிற்றை இறுக்கிக் கொன்றிருக்கிறார்கள். அப்புறம் தொங்கவிட்டுத் தற்கொலை என்று சாதித்தார்களாம்.’’

‘‘தீதி, ஏழை மருமகள் என்றால் இப்படியா கொடூரமா இருப்பாங்க? எனக்கு மறக்கவே இல்லை.’’

‘‘தேங்க் யூ தமயந்தி. இரவு வேளையில தொந்தரவு செய்துவிட்டேன்.’’

‘‘நாட் எட் ஆல் தீதி. எனி டைம்.’’

உடனே கணினியைத் திறந்து 1998 வழக்கு விவரங்களைத் தேடினாள். கிடைத்தன. மஞ்சுளாவின் கணவன் & மாதவியின் அண்ணன் & ராஜஸ்தான் பத்ரிகாவில் தன் மனைவி பற்றிக் கூறியிருந்தது மனத்தை உருக்கியது:

“அவள் கனவில் கூட நினைக்கவில்லை, தான் கல்லூரியில் விரிவுரையாளராக இருப்பது அவர்களுக்குப் பிடிக்காமல் போகும் என்று. அப்பா இல்லாத பெண் அவள். மாமாவால் வளர்க்கப்பட்டவள். அவர் ஹெட்மாஸ்டர். எப்போதும் கையில் பிரம்பு இருப்பதுபோல்தான் நடந்துகொள்வார் என்று சொல்லியிருக்கிறாள். சிரித்தால் முறைப்பார். ஏதாவது ஒரு பாடத்தில் மதிப்பெண் குறைந்துவிட்டால் கையில் விளக்குமாற்றைத் தருவார். ‘இனிமேல் நீ வீட்டைக் கூட்டு. அதுதான் உனக்கு ஏற்ற வேலை’ என்பார். அவள் அழாமல் தூங்கிய இரவுகள் குறைவு.   நான் அவளைக் காதலிப்பதாகக் கூறியதும் அவள் முகத்தில் ஒரு வெட்கப் புன்னகை தோன்றியது. மெல்ல மெல்ல ஒளி கூடும் விளக்கைப்போல முகம் விகசிக்கத் தொடங்கியது. எப்படி நான் அவளைக் கொன்றவர்களை என் பெற்றோர் என்பேன்? அதில் பங்கேற்ற தங்கையை எப்படி மன்னிக்க முடியும்? என் தேவதையைக் கொன்ற அரக்கர்கள் இவர்கள்…”

தமயந்தியுடன் தன் உரையாடலையும் வலைத்தளத் தகவல்கள் அடங்கிய கோப்பையும் வழக்கு குறித்த தினசரிச் செய்திகளுக்கான இணைப்புகளையும் கோவிந்துக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பினாள்.

ஐந்தே நிமிடங்களில் பதில் வந்தது.

‘‘நன்றி. மிக்க நன்றி. மாதவியின் மும்பாய் பின்னணி பற்றி நானும் தகவல்கள் சேகரித்திருந்தேன். நான் இந்தத் திசையில் திரும்ப யோசித்திருந்தேன். நீங்கள் முந்திக்கொண்டுவிட்டீர்கள்.’’

‘‘நீங்கள் ஷெர்லாக் ஹோம்ஸ் என்று கிண்டல் செய்யும் வித்யாசாகர் ராவ்தேயின் மாணவி நான். கோவிந்த் ஷெல்கேயின் தீதி கூட’.’

என்று பதிலளித்ததும் பெரிய இதயக்குறி ஒன்று பதிலாக வந்தது.

* * *

‘மேரி ப்யாரி மம்மி.

நான் நல்லா இருக்கேன். உன் ஞாபகம் வருது. ராத்திரி உன்னை நினைக்கறப்போ அழுகை வருது. மம்மி. இங்க சாப்பாடு நல்லா இல்லை. சூடா சமைக்கறதை எனக்குத் தரமாட்டாங்க. மம்மி, நான் பால் கொட்டிட்டேன். சூடு போட்டாங்க. ஆன்டிஜி திட்டறாங்க. அங்கிள் எனக்குப் புஸ்தகம் வாங்கித் தந்தார். அதுக்கு ப்ளேடால கீறினாங்க. வலிச்சுது. ராத்திரி எச்சிலைத் தொட்டு அது மேல தடவினேன்.

மம்மி, நான் அங்க வரவா? நான் நிறைய வேலை செய்வேன் மம்மி. உனக்குத் தொந்தரவே தர மாட்டேன். ஸ்கூல் போகணும் மம்மி. படிக்கணும். நான் கல்பனா சாவ்லா மாதிரி ஆஸ்ட்ரோநாட் ஆவேன் மம்மி. ஆஸ்ட்ரோநாட்னா ராக்கெட்ல போறவங்க. நான் ராக்கெட்ல போறபோது அவங்க அனுமதி வாங்கி உன்னையும் கூட்டிட்டுப் போவேன். ராக்கெட் ரொம்ப ரொம்ப மேலே பறக்கும் மம்மி.

மம்மி, உன் மடியில படுத்துக்க ஆசையா இருக்கு. நான் அங்க வந்த பிறகு வாசல்ல உன் மடியில படுத்துட்டு நட்சத்திரங்களைப் பார்க்கணும் மம்மி. அந்த நன்ஹி கலி ஸோனே சலி பாட்டு பாடுவியா மம்மி? அப்போ நான் நல்லாத் தூங்குவேன் மம்மி. இங்கே தூக்கம் வரமாட்டேங்குது.

உன் ப்யாரி பேட்டீ ஸாரஸ்’

மறு நாள் நரேன் கிஷனுடனும் மாதவியுடனும் சென்றான் மாதவிக்குப் பக்கபலமாக இருக்க. நரேனிடம் எதையும் சொல்ல முடியவில்லை. சொல்லியிருந்தாலும் அவன் நம்பியிருப்பானா என்று தெரியவில்லை.

ஞாயிற்றுக்கிழமையின் மற்ற வேலைகளைக் கவனிக்க உட்கார்ந்தபோதுதான் மதுவின் அழைப்பு வந்தது. ஆயா லீவு எடுத்திருப்பதாகவும் ஓர் இரண்டு மணி நேரம் வர முடியுமா என்றும் கேட்டாள். அருணாவிடம் கூறிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

வில்லெபார்லே போனதும் மது கிளம்பத் தயாராக இருந்தாள். அவளை அனுப்பிவிட்டு, குழந்தைகளுடன் கதை பேசினாள். பிறகு லூடோ விளையாட உட்கார்ந்தாள்.  அது அலுத்ததும் பாடச் சொல்லிப் பதிவு செய்தாள். ஸ்வர்ணிமாவின் கண்கள் சொக்க ஆரம்பித்தன. அவளுக்கு அவசரமாக உணவளித்துவிட்டுப் படுக்கையில் மெல்லப் படுக்கவைத்தாள்.

பூர்ணிமா, அவளைச் சுற்றி சுற்றி வந்தாள். அவள் டீச்சர் பற்றி, பள்ளி பற்றி எல்லாம் பேசியதும் சகஜமாகப் பேச ஆரம்பித்தாள். திடீரென்று அவள்மேல் சாய்ந்துகொண்டு, “ஆன்ட்டி, நாங்க இங்கியே மது டீச்சர் கூடவே இருக்கலாமா?” என்றாள்.

“பூர்ணிமா ஸ்வர்ணிமா இல்லாமல் மம்மி பப்பா எப்படி இருப்பாங்க?” என்றாள்.

பூர்ணிமாவின் வாய் சற்றுக் கோணியது.

அடுத்து அவள் திக்கிக்கொண்டு கூறியதைக் கேட்டதும் சுதாவின் முதுகுத்தண்டு ஜில்லிட்டுப்போயிற்று. சொன்னபின் குழந்தை ஏதோ சுமையை இறக்கி வைத்ததுபோல் சுதாவின் மடியில் தலைவைத்துப் படுத்தாள்.

அன்று பூர்ணிமாவும் ஸ்வர்ணிமாவும் சற்றுச் சீக்கிரம் வந்துவிட்டனர். மம்மி மதியம் கொஞ்சம் தூங்குவாள். மம்மிக்குத் தலைவலி வரும். அது பேர் மைக்ரேன். அதனால் வாயில் மணியை அணைத்துவிடுவாள் சத்தம் வரக் கூடாதென்று. கதவு உட்பக்கம் பூட்டியிருக்காது. வந்தவுடன் சத்தம் போடாமல் உள்ளே போகவேண்டும் என்பது அம்மாவின் உத்தரவு. ஸ்வர்ணிமா உள்ளறைக்கு ஓடிவிட்டாள். வேறு அறையிலிருந்து மம்மியின் குரல் கேட்க, பூர்ணிமா வெளியே நின்று எட்டிப் பார்த்தாள் உள்ளே. ‘‘லிப்ஸ்டிக் கேக்குதா உனக்கு?” என்று மம்மி ஸாரஸை அடித்துக்கொண்டிருந்தாள். அடித்தபடியே அவளைக் கீழே தள்ளி அவள் ஸ்கர்ட்டைத் தூக்கிக் குத்தினாள். ஸாரஸ் “இனிமேல் மாட்டேன் ஆன்ட்டிஜி” என்று கத்திக்கொண்டு இருந்தாள். திடீரென்று பல் குத்தும் குச்சி இருந்த டப்பாவைத் திறந்து ஸாரஸின் ஜட்டியைக்  கீழே இழுத்து குச்சியால் குத்த ஆரம்பித்தாள். எங்கு குத்துகிறாள் என்று பூர்ணிமாவுக்குப் புரியவில்லை. ஸாரஸ் ‘‘மம்மீ…” என்று ஒரு முறை கூவினாள். அதன்பின் கத்தவில்லை. மம்மி அவளைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள் பெரிய மூச்சு விட்டுக்கொண்டு. பிறகு ஸாரஸின் ஜட்டியை மேலே இழுத்துவிட்டு அவளை அசக்கினாள்.  அப்படியும் ஸாரஸ் பேசவில்லை. மம்மி டிராயரைத் திறந்து நைலான் கயிறு எடுத்து, சன்னலில் போட்டு ஸாரஸை இழுத்துக்கொண்டுபோய் அவள் கழுத்தில் அதை மாட்டிவிட்டுத் தொங்கவிட்டாள். ஸாரஸ் பேசவேயில்லை.

பூர்ணிமாவுக்கு மூத்திரம் முட்டியது. தங்கள் அறைக்கு ஓடினாள். அவளுக்குப் பயமாக இருந்தது. ரொம்பப் பயமாக இருந்தது. ஸாரஸ் மதியம் மொனாபலி விளையாடலாம் என்று சொல்லியிருந்தாள். பூர்ணிமா தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். அவளுக்கு ரொம்ப அழுகை அழுகையாய் வந்தது.

சுதாவின் மனம் அலைபாய்ந்தது. உட்கார்ந்திருக்க முடியவில்லை. கைபேசியை எடுத்தாள். கைபேசியை எடுத்தபோதுதான் பதிவு செய்யும் அமைப்பை மூடவில்லை என்று தெரிந்தது. பதிவு செய்ததைச் சேமிக்கவேண்டுமா என்று அது கேட்டதும் நடுங்கும் விரலால் சேமிக்கச்சொல்லி அழுத்தினாள்.  பூர்ணிமா அயர்ந்ததும் எழுந்து குழந்தைகளின் பொருட்களை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தாள் எதையாவது செய்ய. மனத்தினுள் ஒரு குரல் மரங்கொத்தி குத்துவதைப்போல் கேட்டுக்கொண்டிருந்தது “நான் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யவேண்டும்?” அவள் கைகள் நடுங்கியபடி இருந்தன. பூர்ணிமாவின் புத்தகங்களை அவள் பையிலிருந்து எடுத்து அங்கிருந்த அலமாரியில் அடுக்கியபோது மேடம் க்யூரி புத்தகத்திலிருந்து ஒரு பழைய நீள நோட்டுப் புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்ட அந்தக் காகிதம் விழுந்தது. புத்தகத்தில் ‘‘ஸாரஸுக்கு, ஒரு பெரிய விஞ்ஞானியாக. பப்பா கிஷன்” என்று எழுதியிருந்தது. காகிதத்தில் ஹிந்தியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. படித்தபோது அது ஒரு கடிதம். ஸாரஸ் அவள் மம்மிக்கு எழுதித் தபாலில் போடாத கடிதம். ‘என் அன்பு மம்மி’ என்று தொடங்கி ‘உன் அன்பு மகள்’ என்று முடிந்திருந்த கடிதம். தொண்டையை அடைத்தது. தொண்டையில் முள்குத்துவதுபோல் வலித்தது.

விசாரணை முடிந்திருக்குமா  என்று தெரியவில்லை. கோவிந்தை அழைத்தாள். அழைத்ததும் வழக்கம்போல் உரக்கப் பேசாமல் மென் குரலில் பேச ஆரம்பித்த அவர் முழுவதும் பேசும் முன் “கோவிந்த்” என்று திணறியபடி அழைத்தாள். ‘‘என்ன தீதி?” என்று அவர் சற்றுக் கவலையுடன் கேட்டதும், குளியலறைக்குப் போய் டாய்லெட்டை மூடிவிட்டு அதன்மேல் அமர்ந்துகொண்டு பூர்ணிமா சொன்னதைக் கூறினாள். கோவிந்திடமிருந்து பதில் வரவில்லை.

அவர் பேசுவதற்கு வெளியே வந்தார் போலும்.

“கோவிந்த்” என்றாள் மெல்ல.

“தீதி, இங்கே இவங்கள நான் இன்னும் கொஞ்ச நேரம் காக்க வைக்கிறேன். மது தீதி வந்த பிறகு நீங்க வர முடியுமா?”

“நான் கட்டாயம் பூர்ணிமாவோட வர முடியாது, அதுதான் நீங்க சொல்லப்போறீங்கன்னா. அந்தக் குழந்தை அரண்டுபோயிருக்குது. திரும்ப அதை இப்போ சொல்லச்சொன்னால் அவளை அது பாதிக்கும். இருங்க கோவிந்த்… ஆனால் அவங்க பாடினதை ரெக்கார்ட் பண்ணிட்டு ரெக்கார்டரை அணைக்க மறந்திருக்கேன். அவள் பேசி முடித்த பிறகுதான் தெரிஞ்சுது அவள் பேசினதும் ரெக்கார்ட் ஆயிட்டதுன்னு. அதை வேணா கொண்டுவர முடியும். ஆரம்பத்துல குழந்தைகள் பாட்டு எல்லாம் இருக்கும். மத்த ஒலியும் இருக்கும். கடைசியில இது இருக்கும்.”

“சரி தீதி. நான் நிச்சயமா உங்களைப் பூர்ணிமாவைக் கூட்டிவரச் சொல்லியிருக்க மாட்டேன் தீதி. நான் போலீஸ்காரன்தான். ஆனால் ஒரு அப்பாவும் இல்லையா? உங்களுக்கு என் மேல நம்பிக்கையே கிடையாது.”

மது பதினைந்து நிடங்களில் வந்ததும் கிளம்பினாள். நரேனும் கிஷனும் சற்று  வெளியே போயிருக்கிறார்கள் என்றார்கள்.  விசாரணை அறைக்குள் அவள் போகவில்லை. சன்னலிலிருந்து பார்த்தபோது மாதவியின் முகம் தெரிந்தது. இன்ஸ்பெக்டர் ரஞ்சன் முலே வந்து கைபேசியை வாங்கிக்கொண்டு போனார்.

கோவிந்த் ஒலிப்பதிவைத் தன் செவியில் பொருத்தியிருந்த ஒலிவாங்கி மூலம் கொஞ்சம் கேட்டுவிட்டுப் பிறகு கைபேசியை மேசை மேல் வைத்தார். ‘‘மிஸஸ் கிஷன் கோபால், இதைக் கொஞ்சம் கேளுங்கள்” என்றார். பூர்ணிமாவின் குரல் ஒலித்ததும் அவள் முகம் சுருங்கியது. முக்கியப் பகுதியை எட்டியதும் அவள் நீண்ட மூச்சு விட ஆரம்பித்தாள். பிறகு அது ஒலியுடன் வர ஆரம்பித்தது. முடியும்போது அவள் முகம் கருத்திருந்தது. பல்லைக் கடித்தபடி, “அவள் என் லிப்ஸ்டிக்கைத் திறந்து பார்த்திட்டிருந்தா. என் லிப்ஸ்டிக், என் லிப்ஸ்டிக்” என்று அலறினாள் எழுந்து நின்று. உள்ளே நின்றுகொண்டிருந்த பெண் போலீஸ் அதிகாரி அவளை ஆசுவாசப்படுத்தினார்.

ஆரவாரம் அடங்கியதும் மாதவியை வேறு அறைக்குக் கூட்டிப்போனார்கள். இன்ஸ்பெக்டர் ரஞ்சன் முலே அவளிடம், “டீ குடியுங்க மிஸஸ் கிஷன் கோபால்” என்று சொல்வது கேட்டது. ஸாரஸின் கடிதத்தைக் கோவிந்திடம் தந்தாள். அதை அவர் சான்று ஆவணமாக உபயோகிக்கலாம். ஆனால் அவளிடம் திருப்பித் தர முடியுமா, அந்தக் கடிதத்தை அது எழுதப்பட்ட நபரிடம் சேர்க்கவேண்டும் என்று கூறினாள். மேடம் க்யூரி புத்தகம் பூர்ணிமாவின் புத்தகங்களோடு எப்படி வந்தது, ஸாரஸின் புத்தகப் பையில் அது எப்படி இல்லாமல் போனது; மாதவி அந்தப் புத்தகத்தைப் பார்த்திருக்கிறாள். அதைத் தன் பெண்கள் புத்தகங்களுடன் வைத்திருக்கலாம். குழந்தைகள் புத்தகங்களை இப்போது எடுத்துப் பையில் போட்டபோது இது பூர்ணிமாவின் பைக்குள் வந்திருக்கலாம். வாழ்க்கையில்தான் எவ்வளவு தற்செயல் நிகழ்வுகள் என்றபடி கடிதத்தை வாங்கினார் கோவிந்த்.

அதைப் படித்த கோவிந்த் வெகு நேரம் தலை நிமிரவில்லை. மெல்ல பேன்ட் ஜேபியில் கைவிட்டுக் கைக்குட்டையை வெளியே எடுத்தார்.

***

நன்ஹி கலி ஸோனே சலி ஹவா தீரே ஆனா….

 

காற்றே மெல்ல வீசு

உறக்கம் நிறைந்த சிறகில்

அவளை ஊஞ்சலாட்டிவிட்டுப் போ

சின்னஞ்சிறு பூ தூங்கப்போகிறாள்

காற்றே மெல்ல வா

உறக்கம் நிறைந்த சிறகில்

அவளை ஊஞ்சலாட்டிவிட்டுப் போ

போலீஸ் தரப்பிலிருந்து வழக்கு சம்பந்தப்பட்ட எல்லாத் தகவல்களையும் கச்சிதமாக அமைத்திருந்தார் கோவிந்த் ஷெல்கே, தன் போலீஸ் நிலையத்தின் மற்ற போலீஸ்காரர்களின் உதவியுடன். தகவல்களும் விவரங்களும் விவரணையுமாக அது ஒரு மனத்தின் இயல்புகளையும் சிதைவுகளையும் ஆதாரமாக்கி எழுதப்பட்ட திரைக்கதைபோல் இருந்தது:

மஞ்சுளாவின் மரணத்தில் அவளுக்குப் பெரும் பங்கு இருந்தும்  அவள் விடுவிக்கப்பட்டாள் பெரிய மனிதர்களின் உதவியுடன். அண்ணனாலும் ஒதுக்கப்பட்டு, பெற்றோரையும் இழந்தபின் அத்தனை பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்குக்குப் பிறகு ஜெய்ப்பூரில் இருப்பது சாத்தியமில்லை என்று தெரிந்ததும் பெயர் மாற்றுவதற்கான எல்லா விதிகளையும் கடைப்பிடித்து அரசிதழில் பெயர் மாற்றம் அறிவிக்கப்பட்டது. சுசீல் அகர்வாலின் உதவியுடன் மும்பாய் வந்தாள் மாதவி கோயலாக.

அவளை இயல்பிலேயே அரக்கியாக இருக்கும் ஒருத்தியாக உருவாக்குவது போலீஸின் நோக்கம் அல்ல. ஆனால் அவள் இயல்பின் அடித்தளத்தில் அவளாலேயே கட்டுப்படுத்த முடியாத அரக்கத்தனம் தொடர்ந்து உறக்க நிலையில் இருந்தது உண்மை. தன் பெற்றோரிடமும் அண்ணனிடனும் மிகவும் அதிகமான அன்பை எதிர்பார்த்தவள். அன்பைத் தந்தவள். உள்ளே இருப்பது வெளியே தெரியாமல் அமைந்த  அழகான சிறு கூடாக இருந்தது அவள் குடும்பம். ஒருவரையொருவர் அதிகமாகச் சார்ந்திருந்த பாதுகாப்பான தனிக் கூடு. அதில் மஞ்சுளா வெளியாளாகவே வந்தாள். தன் அண்ணனை “மயக்கியவள்” என்றே அவளைப் பார்த்தாள். மகனுக்கு வேர்த்தால்கூடத் தாங்க முடியாது அந்தக் குடும்பத்துக்கு. அவன் அந்தக் குடும்பத்தின் முதுகுத்தண்டு. அவள் அதில் சாய்ந்து நிற்பவள். அவன் குடும்ப வியாபாரத்தில் ஈடுபடாததே அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. அதில் அவன் யாருக்கும் சொல்லாமல் ஏழை மஞ்சுளாவை மணந்தது கூட்டைக் கலைத்துப் போட்டதைப்போல் பட்டது. அவள் வேறுவகைப் பட்சி. இந்தக் கூட்டைச் சேர்ந்தவள் இல்லை. அம்மாவும் அப்பாவும் தொடர்ந்து அதைச் சொல்லிவந்தார்கள். அண்ணனுடன் இரவைக் கழித்துவிட்டு அவள் அவர்கள் படுக்கையறையிலிருந்து காலையில் வெளியே வரும்போது அடக்கமுடியாத கோபம் எழுந்தது. அதுவும் அவள் வயிற்றில் அவளும் அவனும் உருவாக்கிய கரு வளர்கிறது என்பது மிகப் பெரிய துரோகமாகப் பட்டது.

2004ல் தன் வாழ்க்கையை அமைக்க முற்பட்டபோது திருமண ஏற்பாடு அமைத்துத் தரும் நிறுவனத்திடம் அவள் விதித்த நிபந்தனைகளில் ஒன்று நல்ல வேலையில் இருக்கும் நபர், அனாதையாக இருக்கவேண்டும் என்பதுதான். தன்னை மணப்பவன் தனக்கே தனக்காக மட்டுமே இருக்க வேண்டும். அவள் அமைக்கும் சிறு கூட்டில் வேறு யாருக்கும் எட்டிப்பார்க்கக்கூட இடமிருக்கக் கூடாது. அவள் கணவன். அவள் குழந்தைகள். அவள் வீடு. அவள் பொருட்கள். எல்லாம் அவளுக்கே ஆனவை. அபரிமிதமான அன்பைப் பொழிந்தாள். கிஷனுக்கு அது தேவையாக இருந்தது. அதில் அவன் முங்கி முங்கி எழுந்தான். அமிழ்ந்தான்.

ஸாரஸ் அந்தக் கூட்டுக்கு வெளியே நிற்காமல் உள்ளே வர முயற்சித்தாள். கிஷன் அவளுக்குப் புத்தகம் பரிசளித்தான். அவன் வாங்கிவந்திருந்த மேடம் க்யூரி புத்தகத்தைப் பார்த்துவிட்டாள். அதில் அவன் “பப்பா கிஷன்” என்று எழுதியிருந்தான். சூடு போட்டு, ப்ளேடால் கீறியும் அடங்கவில்லை கோபம்.  ஒரு முறை அவனை ‘‘பப்பா” என்றே கூப்பிட்டுவிட்டாள் ஸாரஸ். அவனும் அதைப் பொருட்படுத்தவில்லை. அவளை எப்போது பள்ளியில் சேர்க்கப்போகிறாள், அவள் மிகவும் புத்திசாலிப் பெண் என்று அவளிடம் விசாரித்தான்.

அவள் உடல் எரிய ஆரம்பித்தது. அன்று ஸாரஸ் செய்தது பெருங்குற்றம் அவளைப் பொறுத்தவரை. அவள் மாதவியின் லிப்ஸ்டிக்கை எடுத்துப் பார்த்தபடி இருந்தாள். கையும் களவுமாகப் பிடிபட்டபோது, ஒப்பனை மேசையைத் துடைத்தபோது எடுத்துப் பார்த்தேன் என்றாள். எப்படி அவள் அதைச் செய்யலாம்? அடித்த பின்னும் மனம் அடங்கவில்லை. ஆவேசம் அடங்கவில்லை. பல்குத்தி டப்பா கண்ணில் பட்டது. ஒரு பெண்ணுக்கு மிகவும் வலிக்கும் இடம் அதுதான். குச்சியை ஒவ்வொன்றாக எடுத்து உள்ளே குத்தினாள். “எடுப்பியா லிப்ஸ்டிக்கை? சொல்லு. எடுப்பியா லிப்ஸ்டிக்கை?” “மாட்டேன்” என்று அலறினாள் ஸாரஸ். ‘‘மம்மீ” என்று கூவினாள். பிறகு பேசவில்லை. சன்னல் கம்பியில் கயிற்றைப் போட்டு அவளைத் தொங்கவிட்டாள். வேகமாக வந்த மூச்சு மட்டுப்பட்டது. பக்கத்து வீட்டுக்காரரை அழைத்தாள், வேலைக்காரப் பெண் தூக்குப்போட்டுக்கொண்டாள் என்று கூறி.

அரசுத் தரப்பு வக்கீல் கோவிந்த் உதவியுடன் எங்கோ வெளிநாட்டில் இருந்த அவள் அண்ணன் கோவர்தன் கோயலைக் கொண்டுவந்து நிறுத்தியதுதான் வழக்கின் உச்சகட்டமாய் அமைந்தது. முதன் முறையாகக் கிஷனையும் தன் தங்கையின் பெண் குழந்தைகளையும் அவர் சந்தித்தார். அவர் மீண்டும் திருமணம் செய்துகொள்ளாத தனியாளாகவே இருந்தார். தன் தங்கையிடம் அவருக்கிருந்த வெறுப்பு இத்தனை ஆண்டுகளிலும் தணியாமலேயே இருந்தது.

அதிக மன அழுத்தத்தில் ஏற்படும் தற்காலிகக் கோப வெறி, திட்டமிட்ட கொலை இல்லை, மின்னலாய் வந்துபோகும் மனப்பேதலிப்பு என்று பலவாறு வாதாடினார் ஸ்ரீதர் ராமனாதன். ஒரு கட்டத்தில் அவர் குரலே அவருக்கு நம்பிக்கையில்லாத் தொனியுடன் கேட்க ஆரம்பித்தது. அவரால் சாதிக்க முடிந்தது அவளுக்கு ஐந்தாண்டுத் தண்டனை வாங்கித் தந்ததுதான்.

எரவாடா சிறைக்குக் கூட்டிப்போக நீதிமன்றத்தின் வெளியே இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகளுடன் அழைத்துவரப்பட்டபோது தன் பெற்றோர் செய்ததை மாதவியும் செய்தாள். மறைத்து வைத்திருந்த ஸயனைட் குப்பியை வாயில் போட்டுக் கடித்தாள்.

ஸயனைட் குப்பி எப்படி அவளிடம் வந்தது என்பதற்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. விஞ்ஞானியான கிஷன் தந்ததா? தன் தங்கைக்காக அண்ணன் செய்த இறுதி உதவியா? அவள் தோழிகள் காட்டிய கருணையா? எதுவும் நிரூபணம் ஆகவில்லை.

வழக்கு மன்றத்தின் வெளியே பாவ்னா உறவினர்களோடு நின்றுகொண்டிருந்தாள், மாதவி நுரைத்த வாயோடு சாய்வதைப் பார்த்தபடி.

* * *

நிலவொளிபோன்ற  பொம்மை இவள்

மென்மையாக வளர்க்கப்பட்டவள்

இன்று நிலவே என் தெருவுக்கு வருவாயென்றால்

முணுமுணுத்தபடி ஒரு பாடலை மெல்ல மெல்லப் பாடு

உறக்கம் நிறைந்த சிறகில்

அவளை ஊஞ்சலாட்டிவிட்டுப் போ

 

பட்டு நூல் காலில் சிக்கிக்கொண்டால்

கொலுசு மணி ஒன்றின் ஓசை எழுந்தால்

என் ராணி விழித்துவிட்டால்

உறக்கமே, நீ வந்து சாந்தப்படுத்து

உறக்கம் நிரம்பிய சிறகில்

ஊஞ்சலாட்டிவிட்டுப் போ

சின்னஞ்சிறு பூ தூங்கப் போகிறாள்

காற்றே மெல்ல வீசு

கிஷனும் மாதவியின் அண்ணனும் பூர்ணிமாவும் ஸ்வர்ணிமாவும் கோவிந்த், மீனா, நரேன் மற்றும் சுதாவுடன் சென்றனர் பாவ்னாவைப் பார்க்க.

மாதவியின் உடலுக்கு எரியூட்டியபோதும் அஸ்தியைக் கடலில் கரைத்தபோதும் கிஷன் உறைந்துபோயிருந்தான்.

பாவ்னாவின் முன் நின்று கை கூப்பினான். தன் இரு பெண்களையும் அவள் பக்கம் மெதுவாகத் தள்ளிவிட்டான்.

பிறகு கீழே விழுந்து அவள் கால்களைத் தொட்டு நமஸ்கரித்தான். அவள் பதறிப்போய் விலகினாள். எழாமல் அவன் கிடந்தான் குமுறி குமுறி அழுதபடி. மாதவி என்ற பெண்ணின் அளவிலாத அன்பை மட்டுமே உணர்ந்தவன் அவன். அனாதைக்குக் கிடைத்த அபரிமிதமான அன்பு. அவள் சிறையிலிருந்து வந்தபின்னும் அவளை ஏற்றிருப்பான் அவன். ஆனால் அவளால் அந்தக் கருணையைத் தாங்கியிருக்க முடியாது.

நரேனும் மாதவியின் அண்ணனும் அவனை மெல்ல எழுப்பினார்கள். “பப்பா” என்று அழுத இரண்டு மகள்களையும் அணைத்துக்கொண்டான், ‘‘பப்பா இருக்கேன், பப்பா இருக்கேன்” என்றபடி.

கோவிந்த் ஸாரஸின் புத்தகப் பையுடன் ஸாரஸின் கடிதத்தை பாவ்னாவின் கையில் வைத்தார். “உங்கள் பேட்டீ எழுதியது” என்றபடி. “எனக்குப் படிக்கத் தெரியாது. யாராவது படிச்சுக்காட்டுங்களேன்” என்றாள் பாவ்னா.

மீனா கடிதத்தை வாங்கிக்கொண்டாள்.

“மேரி ப்யாரி மம்மி” என்று குரல் நடுங்க மீனா படிக்க ஆரம்பித்ததும் பாவ்னா தன் புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டு ஓசையே எழுப்பாமல் அழுதாள்.