தமிழக-கர்நாடக எல்லைப் பகுதிகளில் விஷச் சாராயம் அருந்தி சமீபத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோனது மனம் கசியச் செய்யும் ஒரு துயரம். சில ஆண்டுகளாக நிகழாமல் இருந்த விஷச் சாராயச் சாவுகள் மீண்டும் தலை தூக்கி இருக்கின்றன. விஷச் சாராயம் அருந்தி துடித்துச் சாகிறவர்கள், கண் பார்வை இழப்பவர்கள் எப்போதும் சமூகத்தின் கடைக்கோடி மனிதர்கள், கூலித் தொழிலாளிகள். விஷச் சாராய பலிகளுக்கு பின்னே இருக்கும் சமூகத் துயரத்தைப் புரிந்துகொள்வது முக்கியமானது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது மது விலக்கை அமுல் படுத்துவதைப் பற்றியும் சட்டங்களைக் கடுமையாக்குவது பற்றியும் ஒழுக்கவாதிகளும் மத்தியதர அறிவுஜீவிகளும் குரல் எழுப்புகிறார்கள். தீர்வுகளை அளிப்பது சுலபம். நியாயங்களையும் எதார்த்தையும் புரிந்துகொள்வது கடினமானது.
தமிழக அரசு மதுபானக் கடைகளில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மது பான விற்பனையின் அளவு அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. அன்றாட வாழ்க்கை தேவைக்குப் போராடுபவர்களே இந்த பிரமாண்டமான சந்தையின் வாடிக்கையா ளர்கள். ஆண்களின் அபரிமிதமான குடிப்பழக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுபவர் கள் பெண்களும் குழந்தைகளுமே. ஏற்கனவே வாழ்வை அரித்துத் தின்னும் வறு மையும் நோய்மையும் பெருகும் குடிப் பழக்கத்தால் இன்னும் அதிகரிக்கிறது. அரசு வழங்கும் இந்த சாராயத்தையும் வாங்கிக் குடிக்க இயலாதவர்கள் மலிவான விஷச் சாராயம் குடித்து சாகிறார்கள். இவை குடியினால் விளையும் தீமைகள் என்றால் குடிப் பழக்கத்திற்கான காரணங்கள் இன்னொரு புறம். கடும் உடல் உழைப்பும், கலாச்சார வறுமையும் அறியாமையும் கோலோச்சும் ஒரு சமூகத்தில் குடி ஒரு கொண்டாட்டமாக அல்ல, தற்காலிகமான புகலிடமாக, தப்பித்தலாக மாறிவிட்டது. குடிக்கு அடிமையாகிறவர்களில் பெரும்பாலானோர் மனமுவந்து தன்னைத்தானே அழித்துக்கொள்பவர்களாக இருப்பது வெறுமனே மதுபானம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை மட்டும்தானா?
மது ஒரு உணவுப் பழக்கம் என்ற வகையில் அதை சட்டப்பூர்வமாக தடுப்பது தனி மனிதர்களின் உரிமையில் தலையிடுவதாகும். சைவ உணவு பழக்கக்காரர் களுக்கும் அசைவ உணவு பழக்கக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசம் போன்றதே குடிப்பவர்களுக்கும் குடிக்காதவர்களுக்கும் இடையிலான வித்தியாசம். மேலும் மது அருந்துவது பல்வேறு சமூகங்களின் கலாச்சார செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறது. குடிப்பதை ஒரு சமூக விரோத செயல்பாடாக சித்தரிப்பதை விட்டு விட்டு அதை நெறிப்படுத்தும் சில ஏற்பாடுகளை செய்யலாம்.
1. பெரும் மதுபான நிறுவனங்களின் நலன்களையும் அரசின் வருவாயையும் முன்னிட்டு கள்ளுக்கடைகளை மூடியது மாபெரும் தவறாகும். கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்காத இயற்கையான மது அடித் தட்டு மக்களுக்கு கிடைப்பதுடன் ஏராளமான விவசாயிகள் இத்தொழில் மூலம் பயன் பெறுவர்.
2. பூரண மது விலக்கு என்பது போன்ற நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டங்களுக்கு பதில் அரசு மதுபான விற்பனைக்கு ரேஷன் முறையை கொண்டு வரலாம். இப்போது உள்ள டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு பொது விநியோக முறையின் மூலம் குறிப்பிட்ட வருமான வரம்பிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசே தயாரித்த தரமான மதுவை குறைந்த விலைக்கு வழங்கலாம். இதற்கான தனிப்பட்ட ரேஷன் கூப்பன்களை வழங்குவதுடன் அதைப் பயன்படுத்தி மனிதர்கள் கௌரவமாக குடிப்பதற்கான தரமான 'பார்'களை அரசே அமைக்கலாம். இதன் மூலம் குடி ஏற்படுத்தும் பொருளாதாரச் சீரழிவுகளை ஓரளவு தடுக்கலாம். பண்டிகை காலங்களில் இந்த ரேஷன் அளவை சற்றே கூட்டலாம். (தேர்தல் காலங்களில் வாக்காளர்களுக்கு அரசியல்வாதிகள் கள்ளச் சாராயம் வாங்கிக் கொடுப்பதற்கு பதில் சிறப்பு மதுபான ரேஷன் கூப்பன்கள் வழங்குவதை தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கலாம்-பின்புறம் தேர்தல் சின்னங்களோடு.)
3. தமிழகத்தில் விற்கப்படும் பெரும்பாலான இந்திய மதுபான வகைகள் தரத்தில் கிட்டத்தட்ட கள்ளச் சாராயத்திற்கு நிகரானவை. இவற்றை வேறு வழியின்றி தமிழக மக்கள் அருந்த நிர்பந்திக்கப்படுகிறார்கள். உயர்தர அயல்நாட்டு மது வகைகளுக்கு இப்போது விதிக்கப்படும் வரிகளை பெருமளவு குறைத்து தரமான மது வகைகள் நியாமான விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யலாம்.
4. குடி குடியை கெடுக்கும் என்பது போன்ற வாசகங்களை எழுதி பொறுப்புகளை தட்டிக் கழிப்பதற்கு பதில் குடி தொடர்பான தீவிர விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் குடிக்கும் முறையை தமிழர்களுக்கு போதிக்கலாம். (செக்ஸ் கல்வி மாதிரி.)
குடியை ஒழிப்பது அல்ல, அதை ஒழுங்குபடுத்துவதும் மேம்படுத்துவதுமே நம் முன் இருக்கும் சவால்.