உயிரோசை - 17.11.2008
 
அரசியல் சதிராட்டத்தில் இடம் மாறும் காவல் பகடைகள்
- ஆர்.அபிலாஷ்
தேச பக்தி என்ன விலை?
- இந்திரா பார்த்தசாரதி
ஒபாமாவுக்குச் செவ்வாய்க்கிரகத்தில் கடலோரமாகச் சிலை வைப்போம்
- இந்திரஜித்
தமிழ் உணர்ச்சி பாசிச உணர்ச்சியா?
- தமிழவன்
அந்தியின் நிழல்கள்
- வாஸந்தி
பெண் அணங்கு என்னும் பேதமை
- அ.ராமசாமி
நான் மதிக்கும் கலைஞர்கள் செய்த பிழைகள்!
- சுதேசமித்திரன்
காளைச் சண்டை அல்லது அபே சாதா என அழைக்கப்பெறும் ஒரு பெண்
- யமுனா ராஜேந்திரன்
கெட்ட பயல்
- வா.மணிகண்டன்
ஆடும் மாடும் எங்கள் கூட்டம் - I
- ந. முருகேசபாண்டியன்
ஒரு குரூரமான மோதலில் மறைந்திருக்கும் ஜாதீயம்
- மாயா
சட்டம் ஒரு ஜாதி அறை
- மனோஜ்
கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம்
- ஸ்ரீபதி பத்மநாபா
மதமாற்றமும் சித்திரவதையும்
- மாயா
பேதமையும் பிரியமும்
- பாவண்ணன்
அவளும் நாய்க்குட்டியும்
- பிரேம்குமார் சண்முகமணி
முதல் முத்தம்
- வே. பிச்சுமணி
விழைதல்
- நிஷாந்தன்
கடற்கரையில் ஓர் காலை
- அனுஜன்யா
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்
- கோகுலன்
கே.பாலமுருகன் கவிதைகள்
- கே.பாலமுருகன்
பொய் சொல்வதற்கெனப் பிறந்தவர்கள்
- எஸ்.செந்தில்குமார்
தருமி முதல் தசாவதாரம் வரை
- தமிழ்மகன்
நிறை செம்பு நீரில் விழும் பூக்கள்
- கழனியூரன்
எதிர்கால இந்தியா
- பாபுஜி
ஜுரம்
- பாபுஜி
ஜேக் கெரவேக் கவிதைகள்
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
லா.ச.ரா.வுக்கு - தீப. நடராஜன் எழுதியது
- தீப. நடராஜன்
அழுதழுது பெற்றாலும், பிள்ளையை அவள்தான் பெற வேண்டும்
- கழனியூரன்
தமுக்கு
- சிவன்
அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்
- ஹரன் பிரசன்னா
உங்கள் கருத்துகள்
- -
click here
தேச பக்தி என்ன விலை?
இந்திரா பார்த்தசாரதி

அண்மையில், ஒரு தனியார் தொலைக்காட்சிச் சானலில், இந்தியாவின் இன்றைய தலையாய பிரச்சினை பாரதத் திருநாட்டு மக்களில் முற்போக்குக் கருத்து உடையவர்களாகத் தம்மை அடையாளம் காட்டிக் கொள்பவர்களில் பெரும்பான்மையோருக்கு ‘patriotism' (‘தேச பக்தி') என்பது அறவே கிடையாது என்று ஒருவர் ஆங்கிலத்தில் ஆவேசத்துடன் ஒரு விவாதத்தில் கூறினார்.'முற்போக்கு', ‘பிற்போக்கு' என்ற சொற்கள் எப்படி வழக்காற்றில் வந்தன என்பதே எனக்குப் புரியவில்லை.'பழையன கழிதலும், புதியன புகுதலும் கால வழுவலான' என்ற நன்னூல் சூத்திரம் புரிகிறது. இலக்கணத்தில் மாற்றம் தவிர்க்க முடியாது என்று அவர் கூறியிருப்பது, சமூக மதிப்பீடுகளுக்கும் பொருந்தும். ‘மாற்றம் என்பது வாழ்க்கையின் நியதி' என்கிறார் ஆங்கிலக் கவிஞர் ஆல்ஃப்ரெட் டென்னிஸன்.

மனிதாபிமானம் என்ற அடிநிலைக் கருத்துக்கு உட்பட்டு, அவ்வக் காலத்து வாழ்க்கை மதிப்பீடுகளுக்கேற்ப, சமூகம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவதைத்தான், மாற்றம் வேண்டாதவர்கள், ‘முற்போக்கு' என்று வசைச் சொல்லாகப் பயன்படுத்துகிறார்கள் என்று நான் நினைக்கின்றேன்.

சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ஒபாமாவின் தாரக மந்திரம் ‘மாற்றம்'. அவரை எதிர்த்த ரிபப்ளிகன் கட்சியைச் சார்ந்த வெள்ளையின வெறியர்கள், ஒபாமாவுக்கு ‘தேச பக்தி' உண்டா என்று கேட்டார்கள். காரணம், அவர் நிறம் பெரும்பான்மையோருடைய நிறத்தினின்றும் வித்தியாசமாக இருந்தது  என்பதால்.

நான் தொடக்கத்தில் குறிப்பிட்ட ஹிந்தித் தொலைக்காட்சிச் சானலில் தேச பக்தி பற்றிய வினாவை எழுப்பியவர் ஒரு தீவிர ஹிந்து என்று தம்மை அடையாளப் படுத்திக் காட்டிக் கொள்கிறவர். (ஒருவர் உண்மையான ஹிந்துவாக இருந்தால், அவர் காந்தி அடிகள் இருந்தது போல், சமயக் காழ்ப்புணர்வு அறவே இல்லாமல் இருத்தல் வேண்டும் என்பதெல்லாம் இந்தத் ‘தீவிர ஹிந்து'க்களுக்குப் புரியாத விஷயம்).

‘தேசபக்தி' என்ற அரசியல் சார்புடைய சொல்லாட்சி, காலனி ஆட்சியின் போது நம் நாட்டுக்கு இறக்குமதியான சொல். ஆங்கிலத்தில் ‘patriotism' என்பதே தமிழில், ‘தேச பக்தி'. கிரேக்க ‘patria' (தந்தை) என்ற வேரின் அடியாக வருவது ‘patriotism'. வால்டர் ஸ்கீட், தம் வேர்ச் சொல் அகராதியில், ‘patriotism' என்பதற்கு, ‘தந்தை நாட்டின்மீதுள்ள பாசம்' என்றே பொருள் காண்கின்றார். ‘பாரத மாதா' என்று நாட்டை அன்னையாகக் காணும் தீவிர ஹிந்து வாதிகள், இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ‘பாரத் மாதா', ‘தமிழ் அன்னை' போன்றவை அனைத்துமே, அந்நியர் ஆட்சியின் போது, நம் ஆழ்மனச் சமய உணர்வில் விளைந்த சமயச் சார்புடைய  அரசியல்  கோஷங்கள்.

அக்காலத்தில், குழுவினப் போராட்டங்களில், குழுத் தலைவனுடைய வெற்றிக்காக அவன் எதிரிகளுடன் போராடுவதைத் தங்களுடைய புனிதக் கடமையாக அவனைச் சார்ந்த மக்கள் கருதினார்கள். இது ராஜ பக்தியாகப் போற்றப்பட்டது. சோழன் கரிகாலன் பகைவர்கள் மீது வெற்றி பெற்று வாகை சூட வேண்டுமென்பதற்காகச் சோழ இளைஞர்கள், பலிபீடத்தில் தங்கள் தலைகளைக் கொய்து காணிக்கையாகச் செலுத்தினார்கள் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.( நாம் இன்னும் அக்காலத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டதாகத் தெரியவில்லை). மத்திய நூற்றாண்டுகளில், ஐரோப்பாவில் அரசனுக்கு அரசனாக இருப்பதில் தெய்வீக உரிமை இருப்பதாகவும், அதை ஏற்றுக் கொள்வது மக்கள் கடமை என்றும் தீவிரமாக நம்பினார்கள். இரண்டாம் ரிச்சர்ட், கிங் லியர் போன்ற ஷேக்ஸ்பியர் நாடகங்களில் இக்கருத்துப் பற்றிய விமர்சனங்களை அதிகமாகக் காணமுடியும். தொல்காப்பியத்தில், அரசனிடம் தெய்வாம்ஸம் இருப்பதைப்' பூவை நிலை' என்று குறிப்பிடப் படுகிறது. ‘திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே' என்கிறார் நம்மாழ்வார். ஆகவே சமய அஸ்திவாரத்தில் அக்காலத்தில் ராஜ பக்தி வற்புறுத்தப் பட்டது.

‘தேசம்' என்பது ஒரு முக்கியமான கருத்தாக ஏற்றம் கொள்ளத் தொடங்கியவுடன், ‘ராஜ பக்தி' ‘தேச பக்தி'யாயிற்று. ராஜ விசுவாசம் உள்ளவர்களுக்கு ‘ராஜ பக்தி' எவ்வளவு லாபகரமாயிருந்ததோ அது போல், ‘தேச பக்தி' யும், அவ்வுணர்வு தமக்கு இருப்பதாக அறை கூவி அறிவித்தவர்களுக்குப் பயன் அளித்தது.

‘ தேச பக்தி' என்பது, ‘ அயோக்கியனின் இறுதிப் புகலிடம்' ( ‘Patriotism is the last refuge of a scoundrel') என்றார் சாம்யுவல் ஜான்ஸன். அவரால் அவ்வாறு கூற முடிந்ததற்குக் காரணம், நாட்டுப் பணியையும், மொழிப் பணியையும் அவர் எந்தவிதப் பயனையும் எதிர் நோக்காமல் செய்ததினால். ஆங்கில மொழிக்கு முதல் அகராதியைத் தயாரித்தவர் என்பதினால், அரசாங்கம் பலருடைய தொடர்ந்த பரிந்துரைகளுக்குப் பிறகு நிதி உதவி செய்ய முன் வந்த போது, அவர் அதை வாங்க மறுத்துவிட்டார். ஆனால், அதே கால கட்டத்தில், ‘தேச பக்தி'யைப் பற்றி கவிதை இயற்றிய வால்டர் ஸ்காட் உடனே பலன் அடைந்தார். அவருக்கு ‘ஸர்' பட்டம் கிடைத்தது!

9/11 க்குப் பிறகு அமெரிக்காவில் யார் யாருக்கு தேச பக்தி இருக்கிறது, யார் யாருக்கு இல்லை என்று, கணக்கெடுப்பு எடுக்காத குறையாக, ஊடகங்களில் விவாதம் நிகழத் தொடங்கியது.  ஊர்தோறும், வீடுகள்தோறும், ஒவ்வொரு காரிலும்,‘I love America' என்ற வாசகம், அமெரிக்க மக்களின் ‘தேச பக்தி'யைக் கொட்டை எழுத்துகளில் அறிவித்தது. அமெரிக்காவுக்குப் புதிதாகக் குடியேறினவர்கள் இதை மிகப் பெரிய கொட்டை எழுத்துகளில் அறிவிப்பதைத் தம் கடமையாகக் கருதினார்கள்.தமிழ் நாட்டில், கட்சித் தலைவர்களின் பிறந்த நாட்களில்,
நகரச் சுவர்கள்தோறும் நாம் காணும் கட்சித் தொண்டர்களின் பிரமாண்டமான விளம்பரங்களுக்கும் இதற்கும் எந்த வித்தியாசமுமில்லை. புஷ் அரசாங்கம், மக்களுடைய தேச பக்தியைப் பரிசோதிப்பது போல், ‘American Patriotic Act' என்ற ஒரு சட்டம் பிறப்பித்தது. அப்பொழுது, ‘மாக்கார்த்தியஸம் திரும்பி வருகிறது' என்றார் காலம் சென்ற எட்வர்ட் செய்த். நல்ல வேளை, அமெரிக்க நீதி மன்றம், அமெரிக்க அரசியல் சட்டத்துக்கு இது விரோதமானது என்று புஷ்ஷின் இந்தப் புதிய சட்டத்தைத் தடை செய்துவிட்டது.

பூகோள அரசியல் வரைபடம் அடிக்கடி மாறிக் கொண்டு வரும்போது, தேச பக்தி என்பதற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?யுகோஸ்லேவியா என்ற நாடு இப்பொழுது எங்கே இருக்கிறது? போலந்து மக்கள், மிட்ச்கேவிச் என்ற கவிஞரைத் தங்கள் தேசியக் கவிஞராகக் கொண்டாடுவது வழக்கம். மிட்ச்கேவிச் பிறந்த லிதுவேனியா இப்பொழுது தனி நாடாகிவிட்டது. இப்பொழுது அவர் எந்த நாட்டுத் தேசியப் புலவர்?

கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் தாங்கள் தங்களுடைய நாட்டுக்காக விளையாடுவதே அவர்களுக்குப் பெருமை தருகின்றது என்பார்கள். போன உலகக் கோப்பையின் போது, அவர்கள் தங்களுடைய சன்மானத்தை நிர்ணயம்செய்த பிறகுதான் விளையாடமுடியுமென்று விளையாட மறுத்தது நினைவிருக்கின்றதா? தேச பக்திக்கும் விலை உண்டு.

click here

click here
click here