உயிரோசை - 17.11.2008
 
அரசியல் சதிராட்டத்தில் இடம் மாறும் காவல் பகடைகள்
- ஆர்.அபிலாஷ்
தேச பக்தி என்ன விலை?
- இந்திரா பார்த்தசாரதி
ஒபாமாவுக்குச் செவ்வாய்க்கிரகத்தில் கடலோரமாகச் சிலை வைப்போம்
- இந்திரஜித்
தமிழ் உணர்ச்சி பாசிச உணர்ச்சியா?
- தமிழவன்
அந்தியின் நிழல்கள்
- வாஸந்தி
பெண் அணங்கு என்னும் பேதமை
- அ.ராமசாமி
நான் மதிக்கும் கலைஞர்கள் செய்த பிழைகள்!
- சுதேசமித்திரன்
காளைச் சண்டை அல்லது அபே சாதா என அழைக்கப்பெறும் ஒரு பெண்
- யமுனா ராஜேந்திரன்
கெட்ட பயல்
- வா.மணிகண்டன்
ஆடும் மாடும் எங்கள் கூட்டம் - I
- ந. முருகேசபாண்டியன்
ஒரு குரூரமான மோதலில் மறைந்திருக்கும் ஜாதீயம்
- மாயா
சட்டம் ஒரு ஜாதி அறை
- மனோஜ்
கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம்
- ஸ்ரீபதி பத்மநாபா
மதமாற்றமும் சித்திரவதையும்
- மாயா
பேதமையும் பிரியமும்
- பாவண்ணன்
அவளும் நாய்க்குட்டியும்
- பிரேம்குமார் சண்முகமணி
முதல் முத்தம்
- வே. பிச்சுமணி
விழைதல்
- நிஷாந்தன்
கடற்கரையில் ஓர் காலை
- அனுஜன்யா
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்
- கோகுலன்
கே.பாலமுருகன் கவிதைகள்
- கே.பாலமுருகன்
பொய் சொல்வதற்கெனப் பிறந்தவர்கள்
- எஸ்.செந்தில்குமார்
தருமி முதல் தசாவதாரம் வரை
- தமிழ்மகன்
நிறை செம்பு நீரில் விழும் பூக்கள்
- கழனியூரன்
எதிர்கால இந்தியா
- பாபுஜி
ஜுரம்
- பாபுஜி
ஜேக் கெரவேக் கவிதைகள்
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
லா.ச.ரா.வுக்கு - தீப. நடராஜன் எழுதியது
- தீப. நடராஜன்
அழுதழுது பெற்றாலும், பிள்ளையை அவள்தான் பெற வேண்டும்
- கழனியூரன்
தமுக்கு
- சிவன்
அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்
- ஹரன் பிரசன்னா
உங்கள் கருத்துகள்
- -
click here
அந்தியின் நிழல்கள்
வாஸந்தி

"மஹாராஜனே வாருங்கள். தீ நம்மிடம் வருவதற்கு முன் நாமே அதனிடம் செல்வோம்" என்கிறாள் காந்தாரி. " நீ சொல்வது சரிதான்." என்கிறான் குருட்டு திருதிராட்டினன். அவளுடைய கையைப் பற்றிக்கொண்டு அவன் நடக்க, விதுரனும் குந்தியும் பின்தொடர்ந்து செல்கிறார்கள். கிழக்கு திக்கை நோக்கி அமர்ந்து இருந்த அவர்களை அக்னி ஸ்வீகரித்துக்கொள்கிறது. " என் மனம் நிர்மலமாக இருக்கிறது" என்கிறாள் காந்தாரி. " எதிர்பார்ப்பு இல்லை. பயம் இல்லை".

மகாபாரதத்தின் இந்தக் காட்சி எனக்கு திடீரென்று நினைவுக்கு வருகிறது அந்த முதியோர் இல்லத்தின் தாழ்வாரங்களைக் கடக்கும்போது. நூறு பிள்ளைகளை மோசமான போரில் பலி கொடுத்துவிட்டபிறகு காந்தாரிக்கு வாழ்வில் என்ன எதிர்பார்ப்பு இருந்திருக்கமுடியும்? எழுபதைக் கடந்த பெண்கள், கூன் விழுந்த முதுகுடன் விந்தி விந்தி நடந்தபடி , குழி விழுந்த கண்களுடன் , என்னை வரவேற்க வருகிறார்கள். பல்லில்லாத பொக்கைவாய்ச் சிரிப்பில் 'வாங்கம்மா' என்று என் கரங்களைப் பிரியத்துடன் பிடித்து அழைக்கையில் அவர்களின் முதிர்ந்த கைகளில் ஓடும் நரம்புகளையும் சல்லாத்துணிபோல் இருக்கும் முகச் சருமத்தில் முன்னும் பின்னுமாக ஓடும் சுருக்கங்களையும் எண்ணிவிடலாம் என்று தோன்றுகிறது. காந்தாரிகள், குந்திகள், அம்மாக்கள், பாட்டிகள் , கொள்ளுப்பாட்டிகள் எல்லோரும் நிற்கிறார்கள். மஞ்சள் சுங்குடிச் சேலையில், அரக்கு சேலையில், கம்பீரம் போகவில்லை , தைரியமிழக்கவில்லை, நிம்மதியாக, மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்று காட்டவிரும்புகிறார்கள். என்னைக் கூர்ந்து பார்க்கும் அவர்களது பார்வையின் ஆழத்தில் நான் மூழ்கிவிடுவதுபோல தடுமாறுகிறது எனக்கு.

தாழ்வாரத்தை ஒட்டினார்போல் உள்ள அறைகளில் கட்டிலிலும் அங்கும் இங்குமாகவும் பல காந்தாரிகள் இருக்கிறார்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் . பயமும் இல்லையா ? அந்த அளவுக்கு ஞானம் இருக்குமா? பயம் இல்லாமையா? நிறைய இருந்துதுடியம்மா இங்க வர்ற வரைக்கும். நம்பளை மாதிரி நிறைய பேர் இருக்கிறாங்கன்னு தெரியறவரைக்கும். என்கிறது ஒரு பொக்கை வாய். எனக்கு அடி வயிறு துவண்டுபோகிறது இனம் புரியாத பயத்தில். "நிஜம்மாத்தான்" என்று தொடர்கிறார் இன்னொரு மூதாட்டி. "போக்கிடமில்லாம போச்சேன்னு பரிதவிப்பா இருந்துது." அந்தப் பரிதவிப்பின் நிழல் இன்னமும் கண்ணில் படர்ந்து இருந்தது. பெற்ற பிள்ளையும் உற்றமும் சுற்றமும் நிராகரித்துவிட்ட அதிர்வு தெரிந்தது. அவர்களது ரத்தத்தின் ரத்தம், மரபணுக்களை ஏந்தி வாழ்வைத் தொடரும் ஜீவன்களின் நினைவை உதறும் முயற்சியில் அவர்கள் நிற்பது தெரிகிறது. "இப்ப மனசிலே துக்கமில்லே; கோபமில்லே; வருத்தம்கூட இல்லே; இங்க இத்தனை பேரோட பட்டதெல்லாத்தையும் பகிர்ந்துக்கறபோது நம்ம துக்கம் ஒண்ணுமில்லேன்னு தோணுது. நிஜம்மா! சந்தோஷமா இருக்கோம்!" அவர்கள் வெள்ளையாகச் சிரிக்கிறார்கள். "இதோ பாருங்கம்மா, நாங்க எல்லாருமா பொம்மைக் கொலு வெச்சிருக்கோம் . அதோ அது கமலம் போட்ட ரங்கோலி. கை நடுங்காம போடறா. இதோ மகா போதி மரம் , புத்தர் தவம் பண்ணறாரு." நாங்களும் ஞானம் பெற்றவர்கள் என்று சொல்வதுபோல் இருக்கிறது. அன்புசெலுத்தியவர்களின் நிராகரிப்பு இலை உதிர் பருவத்தில் நிகழும் சகஜமான நிகழ்வு என்று இந்த போதி இல்லத்தில் பிறந்த ஞானம்.

காமாட்சி பாட்டி, மீனாட்சி பாட்டி, அம்மு குட்டி பாட்டி, கமலம் ஆச்சி, டாரத்தி பாட்டி என்ற பலதரப் பட்ட பெயர்கள். நிராகரிக்கப்பட்டவர்கள் என்ற துயரம் ஏற்படுத்திவிட்ட ஜாதி மத உணர்வைக் கடந்த சங்கமம். தாழ்வாரத்தை ஒட்டிய அறைகளில் பிரேதங்கள் போலப் பல உடல்கள், முகங்கள், நடக்க முடியாதவர்கள்; சாவுக்காகக் காத்திருப்பவர்கள்; அவர்களது ஆழம் தெரியாத குழிந்த பார்வை என்னைத் தொடர்வதுபோல எனக்கு பீதி ஏற்படுகிறது. காரணம் புரியாமல் குற்ற உணர்வும் துக்கமும் என்னை ஆட்கொள்கிறது. அங்கிருந்து ஓடிவிட வேண்டும் போல் இருக்கிறது. இது நிஜமில்லை என்று சொல்லிக்கொள்கிறேன். ஏதோ சர்ரியலிசப் படம் பார்ப்பதுபோல, இங்மார் பர்க்மனின் படத்தில் வளைய வருவதுபோலத் தோன்றுகிறது. ஒரு மஞ்சள் சுங்குடியில் நானும் நிற்பதுபோல், கைகளைக்கூப்பி வாங்கம்மா என்பதுபோல் உணர்கிறேன். அடுத்து கட்டிலில் படுத்து வெற்றுப் பார்வை பார்க்கிறேன்.

இந்த அடைக்கலம் அவர்களுக்குக் கிட்டியிருக்காவிட்டால் அவர்களது கதி என்ன என்று நினைத்துப் பார்க்கக் கூசுகிறது. சென்னையில் சில வருஷங்களுக்கு முன் தங்களைத் தமது மகன் புறக்கணித்துவிட்டதால் தங்களது வீட்டுக்கொல்லையில் ஒரு வயதான தம்பதிகள் தமக்கே தீயிட்டுப் பொசுங்கிய செய்தி நினைவுக்கு வருகிறது. மும்பையில் ஒரு தம்பதி , சொத்தை எழுதிவைக்கச் சொல்லித் துன்புறுத்திய மகனிடமிருந்து தப்பிக்க 12 -ஆம் மாடி குடியிருப்பிலிருந்து கீழே குதித்து வாழ்வை முடித்துக் கொண்ட செய்தி நினைவுக்கு வருகிறது. காந்தாரியின் முடிவுக்கும் அவர்களது முடிவுக்கும் அதிக வேறுபாடு இல்லை. 'நான் மறக்க விரும்புகிறேன்' என்று காந்தாரி சொல்லியிருப்பாள். ஆனால் அது கடினம். மிக ஆழமான துயரம் அது. நிராகரிப்பு என்பது மரணத்தைவிடக் கொடியது. காந்தாரியின் துக்கத்தைவிட இவர்களின் துயரம் கொடூரமானது. துரோகத்தின் கொடூரம். ஆனால் யாரையும் குறை சொல்லிப் பயனில்லை. ஆகையால் அக்னியே , வா, எம்மை ஆட்கொள். வலியிலிருந்து மீட்சியைக் கொடு.

மகாபாரத யுத்தம் ஒரு யுகத்தின் முடிவின் அடையாளம் என்று சொல்வார்கள். தார்மீக மதிப்பீடுகளின் முடிவின் அடையாளம். இந்த மூதாட்டிகளின் வெற்றுப் பார்வையைப் பார்க்கும் போது இன்னொரு யுகத்தின் முடிவில் இருப்பதுபோல் படுகிறது. விரலிடுக்கில் சரியும் ஆற்று மணலாய் அது அசுரத்தனத்துடன் கீழ்நோக்கிச் சரிவதுபோல. அதைத் தடுத்து நிறுத்த முடியாததுபோல. இந்தக் குரூரச் செய்தியைத்தான் அந்தப் பார்வை சொல்லிற்று. இருக்க நிழலும் உண்ண உணவும் நோய்வாய்ப்படும்போது கவனிப்பும் மூப்பில் இல்லாமல் போனால், அதை பெற்ற குழந்தைகள் அல்லது நெருங்கிய பந்துக்கள் கொடுக்கத் தவறினால் எங்களுக்கு எங்கள் முடிவைத் தேடிக்கொள்வதைத் தவிர வேறு வழியிருந்திருக்காது ... இந்தியர்களில் ஏழு பேரில் ஒருவர் மூப்படைந்தவர். உலகமயமாக்கலின் மெதப்பில் திளைக்கும் இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடும்கூட. உபயோகமற்ற பண்டங்களுக்கு மதிப்பில்லை என்று உதறும் தலைமுறை. நகரமயமாதல், நுகர்வோர் கலாச்சாரம் , சிறிய குடும்பம், உலகச் சந்தை என்கிற புதிய ,மாறிவரும் மதிப்பீடுகளைக்கண்டு மூத்த தலைமுறை மிரண்டு போகும். இந்தச் சூழலில் தான் ஒட்டாத ஒரு சுமை என்று அவர்கள் அங்கலாய்க்கும்முன் உணர்த்தப்படுவார்கள். இந்தியாவில் முதியோர் இல்லம் என்பது விரும்பத்தகாத சொல். சமூகம் தோற்றுப்போனதன் அடையாளம்.

மேற்கில் முதியோர் இல்லங்களை மிகக் கௌரவமான ஏற்பாடாக , சமூகத்தின் ஸ்தாபனங்களின் ஒன்றாக மாற்றியிருக்கிறார்கள். நமது முன்னோர்கள் வானப்ரஸ்தத்திற்குத் தயாரானதுபோல மேற்கில் முதியவர்கள் முதியோர் இல்லத்துக்குக் கிளம்ப மனரீதியில் தயாராகிறார்கள். இந்தியாவில் பணம் உள்ள முதியோர்களுக்கு மிக வசதியான விடுதிகள் கட்டப்படுகின்றன. வெளிநாட்டில் வாழும் அவர்களது குழந்தைகள் மிக நிம்மதியாக, குற்ற உணர்வில்லாமல் இருக்கலாம். பல தம்பதிகளுக்குத் தனியாக வாழ்வதே சௌகரியம்.

காசும் இல்லாமல் நாதியும் இல்லாமல் போனால்தான் சங்கடம். ராஜம் கிருஷ்ணன் போன்ற ஒரு மூத்த எழுத்தாளருக்கு அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டால் அதைவிடக் கொடுமை வேறு என்ன இருக்கமுடியும்? மனம் நொந்து நோய்வாய்ப்பட்ட நிலையில் கரங்கள் நீட்டி அன்புடன் அடைக்கலம் தந்திருக்கும் விஷ்ராந்தி செய்யும் பணி தெய்வீகச் செயல் என்று நினைத்து நினைத்து நெஞ்சம் நெகிழ்கிறது. விஷ்ராந்தியில் நான் சந்தித்த ஒரு 80 வயது மூதாட்டி சொன்னார்-

" கடவுள்தான் எங்களுக்கு வாழ சக்தி கொடுக்கிறார்."

அவருக்குக் கிடைத்திருப்பது அநுபூதி என்று அவருக்குத் தெரியாது.

click here

click here
click here