உயிரோசை - 17.11.2008
 
அரசியல் சதிராட்டத்தில் இடம் மாறும் காவல் பகடைகள்
- ஆர்.அபிலாஷ்
தேச பக்தி என்ன விலை?
- இந்திரா பார்த்தசாரதி
ஒபாமாவுக்குச் செவ்வாய்க்கிரகத்தில் கடலோரமாகச் சிலை வைப்போம்
- இந்திரஜித்
தமிழ் உணர்ச்சி பாசிச உணர்ச்சியா?
- தமிழவன்
அந்தியின் நிழல்கள்
- வாஸந்தி
பெண் அணங்கு என்னும் பேதமை
- அ.ராமசாமி
நான் மதிக்கும் கலைஞர்கள் செய்த பிழைகள்!
- சுதேசமித்திரன்
காளைச் சண்டை அல்லது அபே சாதா என அழைக்கப்பெறும் ஒரு பெண்
- யமுனா ராஜேந்திரன்
கெட்ட பயல்
- வா.மணிகண்டன்
ஆடும் மாடும் எங்கள் கூட்டம் - I
- ந. முருகேசபாண்டியன்
ஒரு குரூரமான மோதலில் மறைந்திருக்கும் ஜாதீயம்
- மாயா
சட்டம் ஒரு ஜாதி அறை
- மனோஜ்
கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம்
- ஸ்ரீபதி பத்மநாபா
மதமாற்றமும் சித்திரவதையும்
- மாயா
பேதமையும் பிரியமும்
- பாவண்ணன்
அவளும் நாய்க்குட்டியும்
- பிரேம்குமார் சண்முகமணி
முதல் முத்தம்
- வே. பிச்சுமணி
விழைதல்
- நிஷாந்தன்
கடற்கரையில் ஓர் காலை
- அனுஜன்யா
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்
- கோகுலன்
கே.பாலமுருகன் கவிதைகள்
- கே.பாலமுருகன்
பொய் சொல்வதற்கெனப் பிறந்தவர்கள்
- எஸ்.செந்தில்குமார்
தருமி முதல் தசாவதாரம் வரை
- தமிழ்மகன்
நிறை செம்பு நீரில் விழும் பூக்கள்
- கழனியூரன்
எதிர்கால இந்தியா
- பாபுஜி
ஜுரம்
- பாபுஜி
ஜேக் கெரவேக் கவிதைகள்
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
லா.ச.ரா.வுக்கு - தீப. நடராஜன் எழுதியது
- தீப. நடராஜன்
அழுதழுது பெற்றாலும், பிள்ளையை அவள்தான் பெற வேண்டும்
- கழனியூரன்
தமுக்கு
- சிவன்
அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்
- ஹரன் பிரசன்னா
உங்கள் கருத்துகள்
- -
click here
பெண் அணங்கு என்னும் பேதமை
அ.ராமசாமி


தற்கொலை எனத் தகவல் தரப்பட்டு முடித்து வைக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கதை வெற்றிக் கதையா?  தோல்விக் கதையா? என்று கணித்துச் சொல்ல இயலவில்லை. திருநெல்வேலியிலிருந்து அவசரமாகக் கிளம்பி வந்தும் மரணத்துக்குப் பிந்திய அவளது முகத்தைப் பார்க்க முடியவில்லை. புன்னகையோடு மட்டுமே பார்த்த அந்த முகம் இறுகிப் போயிருந்திருக்கக் கூடும். முகம் என்றில்லை; உடலும் மனமும் கூடப் புத்தம் புதுப் பொலிவாக இருந்துதான் நான் பார்த்திருக்கிறேன்.

திருமணத்திற்கு முன்னும் பின்னும்  அவளது வாழ்க்கையை நானறிவேன் என்பதால்,  அவள்  உன்னதமான மேடைக் கலைக் கோட்பாட்டைப் பயிற்சி செய்து கொண்டிருந்தாள் என்பதை மட்டும்  உறுதியாகச் சொல்ல முடியும். மேடைக்கலையின் அடிப்படைப் பயிற்சிகளைக் கற்றுத் தரும் திரட்டுகளைப் பயிற்சி செய்து உலகுக்கு வழங்கிய கலைஞர்களுள் உச்சபட்சமாக மதிக்கப்படும் ஒருவர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி. புகழ் பெற்ற ருஷ்ய நாடகாசிரியர் ஆண்டன் செகாவின் நாடகங்களை மேடை ஏற்றிய இயக்குநர். 

நடிப்புப் பயிற்சியை மேற்கொள்ளும் போது நினைவில் கொள்ள வேண்டிய மரபுத்தொடர் ஒன்றை அவர் வலியுறுத்திச் சொல்லியுள்ளார். ‘ இப்படி இருந்தால் ‘ என்பதுதான் அந்த மரபுத் தொடர். நடிப்பதற்காக மேடை ஏறும் நடிகன் தன்னை மறந்து பாத்திரமாக மாற வேண்டும் என வலியுறுத்தும் போது சொன்ன சொல் அது. ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் மேஜிக் இப் (Magic If)-என அரங்கவியலாளர்களால் அழைக்கப்படும் அக்கோட்பாடு, இந்தச் சூழலில் இருந்தால், இந்த இடத்தில் நான் இருந்தால், இப்படிப் பட்டவளாக நான் இருந்தால் என்று தொடர்ந்து நினைத்துக் கொள்வதன் மூலம்தான் அந்தக் கதாபாத்திரமாக நடிகன் மாற முடியும் என்று வலியுறுத்தும். இந்த இருந்தால் என்ற நடிப்புக் கோட்பாட்டுடன் நெருங்கிய உறவுடையதாக தமிழில் ஒரு மரபுத் தொடரை நான் நினைத்துக் கொள்வதுண்டு. ‘ நண்டு தின்னும் ஊரில் நடுப்பங்கு எனக்கு’  என்பது அந்த மரபுத் தொடர். இம்மரபுத் தொடர் வாழ்க்கையின் யதார்த்தப் போக்கை உணர்ந்து கொள்ளவும் பின் பற்றவும் வலியுறுத்தவும் சொல்லும் உருவகமும் கூட. 

நீங்கள் இருக்கும் இடம் எப்படிப் பட்டது என்பதை உணர்ந்து அதற்கேற்ப வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது இந்த மரபுத் தொடர், ஒருவனை, ஓர் ஊரின்  உணவுப் பழக்கம் நண்டுக் கறியைச் சாப்பிடுவதுதான் என்று இருந்தால், அங்கே தொடர்ந்து வாழவும், உன்னை நிலை நிறுத்துக் கொள்ளவும் வேண்டும் என்றால் நீ கேட்க வேண்டியது நண்டின் உடல் பகுதியில் உள்ள கறியாக இருக்கட்டும் என ஆலோசனை கூறுகிறது.  அத்தகையதொரு வாழ்முறையைப் பின் பற்றாமல் தனது உணவுப் பழக்கத்தைக்  கைவிட மாட்டேன் எனப் பிடிவாதம் செய்தால் பட்டினிதான் கிடக்க வேண்டும் என வேடிக்கையாகச் சுட்டிக் காட்டும் பின்பகுதி அந்த மரபுத் தொடரில் சொல்லப்படாமல் விடப்பட்டிருக்கிறது.

இந்த மரபுத் தொடரின் கருத்தியல் மேம்போக்காகப் பார்க்கும் போது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும் பின்பற்றத் தக்கதாகவும் தோன்றலாம். ஆனால் ஆழமாகவும் நிதானமாகவும் யோசித்தால் தனி மனிதனின் அடையாளத்தைக் காவு கேட்கும் ஒன்று என்பது புரிய வரலாம். முழுமையான  சமரசத்தை முன் மொழியும் இம்மரபுத் தொடரை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினால் இலட்சியங்கள் காணாமல் போகும் என்பதும் சொல்லாமலேயே புரிய வரலாம்.

இந்திய வாழ்க்கையில் திருமணங்களும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் குடும்ப வாழ்க்கையும் இம்மரபுத் தொடரைப் பயிற்சி செய்யும் களங்களாக இருக்கின்றன. அதுவரை தனியர்களாகவும், சொந்தமான விருப்பு வெறுப்புகளைக் கொண்டவர்களாகவும் இருக்கும் ஓர் ஆணையும் பெண்ணையும் புதிய வாழ்க்கை வெளிக்குள் நுழைத்துவிடும் திருமணங்கள்,  இருவரும் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால் நடப்பதென்னவோ ஒரு பக்கச் சார்பாகத்தான் இருக்கிறது.

நீ பாதி- நான் பாதி என்பதாக அமையும் குடும்ப வாழ்க்கையில் பெண்கள் சம பங்காளர்கள் எனச் சொல்லப் பட்டாலும் ,நடைமுறையில் அதிகம் விட்டுக் கொடுக்கும் நிலையில் இருப்பவளாகப் பெண்ணே இருக்கிறாள் என்பதை அன்றாட நிகழ்வுகள் காட்டிக் கொண்டே இருக்கின்றன. சின்னச் சின்ன விசயங்களுக்கும் விட்டுக் கொடுக்கத் தொடங்கும் பெண்ணின் அடையாளம் மெல்ல மெல்ல மறைந்து இன்னாரின்  மனைவி என்பதில் முழுமை அடைகிறது என நமது  பாரம்பரியம் வலியுறுத்துகிறது. இதனை ஏற்று வாழும் பெண்ணே நண்டு தின்னும் ஊரில் நடுப்பங்கு எனக் கேட்டு வாங்கித் தின்று தன்னை நிலை நிறுத்துக் கொண்ட குடும்பத் தலைவியாக இருக்கிறாள். அத்தகைய முழுமையான விட்டுக் கொடுத்தல் இங்கே ஏராளமான பெண்களுக்குச் சாத்தியமாக்கப் பட்டிருக்கிறது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் எல்லாப் பெண்களும் அப்படி அடையாளத்தை இழந்துவிடுவதும் இல்லை. தனது அடையாளத்தையும் தனித் தன்மையையும் தக்க வைக்கப் போராடி வெற்றி பெற்றவர்களும் தோல்வி கண்டவர்களும் இங்கு உண்டு.

தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்பட்ட அந்தத் தோழி நவீனக் கல்வியால் வழி நடத்தப்பட்டவள். அவளைக் கை நிறைய சம்பளம் என்று வாங்கும் நபருக்கு உதாரணமாகச் சொல்லலாம். வேலையில் சேர்வதற்காக எந்த அடையாள இழப்பையும் எதிர்கொண்டவள் அல்ல. பட்டம் பெற்ற பின் போட்டித் தேர்வுகள் எழுதி , நேர்காணலைச் சந்தித்து வேலைக்கு வந்தவள்.முதலில் கிடைத்த  வேலையில் அவள் காட்டிய புத்திசாலித்தனத்தால் விரைவில்  ஒரு பதவி உயர்வு  கிடைக்க, இனித் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.
எல்லா முடிவுகளையும் சரியாக எடுத்த அவள் , தனது கணவன் எப்படிப் பட்டவனாக இருக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க முடியாமல் திணறி இருக்கிறாள் என்பதைப் பின்னர் அறிய முடிந்தது. நமது கல்வி முறையில் அந்தப் பயிற்சி இடம் பெறவில்லை என்பது உண்மைதானே. விட்டுக் கொடுத்தலில்தான் இல்லற வாழ்வின் சுகமான தருணங்கள் கிடைக்கும் என அவள் படித்திருந்த  இலக்கியங்கள் அவளுக்குச் சொல்லியிருந்தன. எனவே அவள் விட்டுக் கொடுக்கத் தயாரானாள்.  ஓவியம் வரைவதும், கவிதை வாசிப்பதும் அவளது விருப்பங்களில் முதன்மையானது. 

அவள் கையோடு கொண்டு வரும் கவிதை நூல்களைப் பார்த்தே அவளது அலுவலத்தில் பலருக்குக் கவிதையின் வடிவம்  அறிமுகமானது. ஓவியங்களின் மீது சிலர் கொண்ட ஆசைக்கு அவளது ஈடுபாடுதான் காரணம். பலரைச் சூழல் மாற்றும். இவள் சூழலை மாற்றும் சிலரில் ஒருத்தி. மண வாழ்வின் இனிய தருணங்களைச் சந்திக்க, அவள் வசம் வைத்திருந்த இனிய தருணங்கள் சிலவற்றை விட்டுவிடத் தயாரானாள்.

இவற்றையெல்லாம் கணவனின் விருப்பத்திற்காக விட்டுக் கொடுக்கத் தயாரான அவள் அலுவலத்தில் தனக்கிருந்த ஆளுமையை மட்டும் விட்டுவிடத் தயாராக இல்லை. ஓவியம் வரைவதற்கு நேரம் கிடைக்கவில்லை என்பதற்காக அவள் கவலைப்படவில்லை. ஆனால்  தனது வேலையை முடிக்க முடியாமல் திணறும் நண்பர்களுக்கு  வலியச் சென்று உதவி செய்யும் அவளது இயல்பையும் மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கணவனின் எதிர்பார்ப்பு இருப்பதை அறிந்து அசூயை கொண்டாள். அலுவலக நண்பர்களோடு உற்சாகமான கருத்துப் பரிமாறல்கள் நடக்கும் போது தனது உலகம் விரிந்தது என்பதைக் கண் கூடாகக் கண்டவள்.  அதனால் கணவனின் உலகத்திற்குள் அந்தப் பறவை சிறகை மடித்துக் கொண்டு தூங்கிவிடத் தயாராயில்லை. என்றாலும் திருமணத்திற்குப் பின் அவளது பையில் கவிதைப் புத்தகங்கள்  காணப்படுவதில்லை. தனியாகச் சென்று திரைப் படம் பார்த்து நிதானமாகக் கருத்துகளை உருவாக்கி வைத்திருந்த காலம் இனி வராது என்பதும் உறுதியானது. விட்டுக் கொடுத்தலில் வாழ்வின் கணங்கள் இருக்கிறது என்பதில் அவளுக்கு இருந்த நம்பிக்கையை அவளது கணவனிடமும் எதிர்பார்த்தாள். எதிர்பார்ப்புப் பொய்த்துப் போன போது அவளது வேடம் வேறொன்றாக மாறியது.

அலுவலகத்தில் நிதானமாகவும் பழைய புத்திசாலித்தனத்தோடும் பணிகளைச் செய்த அவள் வீட்டில் நிதானம் அற்றவளாகவும், கோபக்காரியாகவும் வேடம் தரித்தாள். ஆத்திரம் வந்தால் வீட்டுச் சாமான்கள் பலவற்றை உடைத்துவிடவும் செய்தாள். தாம்பத்திய வாழ்க்கையின் தருணங்கள் தேவை இல்லை என்று முடிவு எடுத்துக் கணவன் நெருங்கி வந்த போது குரூரமான வடிவம் காட்டினாள். விட்டுத் தருவது ஆணின் வேலை இல்லை என ஆர்ப்பரித்த கணவனின் கையாலாகாத் தனத்தைக் கண்டு உள்ளூரப் பரிகசித்தாள். ஆனால் இவை எதையும் பணியிடத்தில் அவள் வெளிப்படுத்தவில்லை. தன்னை அவன்  விலக்கி வைக்காதபடி நிர்ப்பந்திக்க வேண்டும் எனக் கருதி, மாதம் தோறும் அவள் வாங்கி வரும் சம்பளத்தை மட்டும் குடும்பச் செலவுக்குக் கொடுக்கவும் செய்தாள். தன்னைக்  காரைக்காலம்மையின் அவதாரம் என்று சிரித்துக் கொண்டே சொல்வாள்.

அப்படிச் சொன்ன போது, இல்லை; நீங்கள் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் மாதிரி நடிகை என்றேன் நான். அதையும் சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொண்டாள். ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் ‘’ இப்படி இருந்தால்’’  என்பதும் தமிழ் மரபுத் தொடரான நண்டு தின்னும் ஊரில் நடுப்பங்கு எனக்கு, என்பதும் ஒன்று போல் இருந்தாலும் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் கோட்பாடு பயிற்சி செய்து விரும்பத்தோடு ஒருவர் நுழைவது. இரண்டாவது விரும்பாமலேயே ஏற்றுக் கொண்டு நுழையும்படி வலியுறுத்துவது.

நமது பாரம்பரியமும் மரபும் நிர்ப்பந்தங்களின் மூலம்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறது. தோழியின் முகத்தைப் பார்க்காது திரும்பிய கொத்தளிப்பான அந்தப் பயணம் நீண்ட பயணம் போல் தோன்றியது. கடந்து செல்லும் மரங்களையோ மனிதர்களையோ பார்க்கும் மனநிலை உண்டாகவில்லை. மதுரையிலிருந்து திருநெல்வேலிக்குச் சென்று கொண்டிருந்த பேருந்தில் நடுப்பகுதியில் இடதுபக்க ஓரத்தில் நான் அமர்ந்திருந்தேன். பாதித்தூரத்தைத்தான் கடந்திருந்தேன். மதுரையில் ஏறிய பயணிகளில் பாதிப்பேர் பெருங்கூட்டமாக ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை இருக்கும் நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டனர். இறங்கியவர்களில் பெரும்பாலோரின் முகத்தில் சோகம் கப்பியிருந்தது. ஏதாவது துக்கத்திற்குப் போகக் கூடும் என மனம் சொல்லியது. நமது மனம் துக்கத்திலிருந்தால் உலகமே துக்கத்திலிருப்பதாக நம்பத் தொடங்கிவிடுவோம் போலும்.

பேருந்தில் நிறைய இருக்கைகள் காலியாக இருந்தன. அடுத்து நின்ற சாத்தூரில் ஏறியவர்களுக்குத் தேர்வு செய்து இருக்கைகளைப் பிடிக்க வாய்ப்பு இருந்தது. ஏறிய பயணிகளில் அந்தக் குடும்பமும் ஒன்று. அரை டிக்கெட் வாங்க வேண்டிய சிறுமி, சிறுவன் உள்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் அது. வேகமாக ஏறிய சிறுமி ஓடி வந்து எனது இருக்கைக்கு முன்னால் இருந்த வலது பக்க ஓரத்தைப் பிடித்துக் கொண்டாள். எனது மனக் கொந்தளிப்பு திசை மாறி அந்தச் சிறுமியோடு இணைந்து கொண்டது.

அவளை அடுத்து ஏறியவர்கள் அவளது பெற்றோர். அடுத்து ஏறியது அந்தச் சிறுவன். கடைசியில் ஏறினாலும் சிறுமி உட்கார்ந்திருந்த அந்த ஓரத்து இருக்கைதான் எனக்கு வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான்.முதலில் ஏறி இடம் பிடித்தது நான்தான் ; எனக்குத் தான் அந்த இடம் என்று சிறுமி அடம் பிடித்தாள். ஆனால் வென்றது என்னவோ சிறுவன்தான். பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதில் பெற்றோர்களுக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது போலும். விட்டுக் கொடுத்துவிட்டுக் கோபமாகவும் அழுகையை அடக்கியவளாகவும் எழுந்து வந்தவள் நேராக ஓட்டுநரின் இடது பக்கத்தில் இருக்கும் தனியிருக்கையில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

பேருந்து நகரத் தொடங்கியது. மழை பெய்து முடித்த நாட்கள் என்பதால் காற்று மென்மையாகவும் குளிரூட்டப்பட்டதாகவும் வீசியது. கூந்தல் விசிறியடித்துக் கன்னங்கள் வழியே இறங்கின. காற்றில் மிதக்கும் ஒரு தேவதையைப் போல அவள் தன்னைக் கருதிக் கொண்டு தூரத்தில் விலகிச் செல்லும் மேகத்திரள்களையும், வேப்பமரங்களில் அமர்ந்திருக்கும் கொக்குகளையும் பார்த்துக் கொண்டே வந்தாள். அவ்வப்போது சிறகு விரித்துப் பறந்த மயில்கள் அவளது மகிழ்ச்சியை அதிகப்படுத்தின. மயில்களைப் பார்க்கும் போதெல்லாம் திரும்பி அந்தச் சிறுவனைப் பார்த்தாள்; திரும்பிப் பார்த்தவள் வளிப்புக் காட்டினாள். அந்த வளிப்பில் உன்னைவிடச் சிறந்த - தனித்த-இருக்கையில் அமர்ந்துள்ளேன் என்ற பெருமிதம் வெளிப்பட்டது.

அடிக்கடி எழுந்து பார்க்காமல் உட்காரும்படி கூறினார்கள் பெற்றோர்கள்; கையை வெளியே நீட்டாதே என்று எச்சரித்தார்கள். ஆனால் பெற்றோர்களைப் பார்க்கும்போது கோபத்தை வெளிப்படுத்தினாள். என்னைவிட உங்களுக்கு அவன் தானே முக்கியம் என்று சொல்லாமல் சொல்வது போல இருந்தது அந்தக் கோபம். பெற்றோர்களிடமும் அவள் தனியாக உட்கார்ந்துள்ளது குறித்துக் கவலையும் அச்சமும் வெளிப்பட்டது. மென்மையான காற்றைத் தொடர்ந்து பெய்த மழை அவளுக்கோ இன்னும் சந்தோசத்தைக் கூடுதலாக்கியது; ஆனால் பெற்றோருக்கோ பயத்தை அதிகப்படுத்தியது. கண்ணைப் பறிக்கும் மின்னலுடன் இடித்த இடி அவளிடம் பெருஞ்சத்தத்தை உண்டாக்கியபோது அந்தத் தாய் பதறிப் போய்விட்டாள். ஓடிவந்து சிறுமியை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்; சிறுமியும் அன்னையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுந்து வந்து அன்னையின் மடியில் தலை வைத்துக் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.

ஓரத்து இருக்கைப் பயணம் பலருக்கும் பிடித்தமான ஒன்றுதான்; எனக்கும்கூட அதுதான் பிடிக்கும். ஓரத்து இருக்கை கிடைக்காது என்பதற்காகப் பல  நேரங்களில் முதலில் வந்த வண்டிகளை விட்டு அடுத்துப் போகும் பேருந்துகளில் காத்திருந்து போனதெல்லாம் உண்டு. போய் முடிக்க வேண்டிய வேலைகள் எல்லாம் இருந்த போதும் ஒரு சமாதானம் சொல்லிக் கொள்வேன். வேலை என்ன வேலை? பயணம்தான் முக்கியம்; பயணம் தரும் அனுபவத்தை முதலில் பெற வேண்டும்; பிறகு வேலையை முடித்துக் கொள்ளலாம் என்பதாக அந்தச் சமாதானங்கள் இருக்கும். பேருந்துப் பயணத்தில் மட்டுமல்ல; ரயில் பயணங்களிலும்கூட ஓரத்து இருக்கைப்பயணம் சந்தோசம் அளிக்கக் கூடியனதான்.ஆனால் இப்பொழுதெல்லாம் அப்படிச் செய்வதில்லை.

இளைய சமுதாயம் பல நேரங்களில் தங்களின் மன விருப்பப்படி முடிவு எடுக்க விரும்புகிறது. குறிப்பாக ஓர் இளைஞன் தனக்கான இணையாக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க எப்பொழுதும் இன்னொருத்தரின் உதவியை நாடுவதே இல்லை என்று சொல்லலாம். காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் தனிமனித விருப்பம் சார்ந்தது எனவும்; ஓரத்து இருக்கைப் பயணம் தரும் மகிழ்ச்சியைப் போல இன்பம் தருவது எனக் கருதுகிறது. ஆனால் இந்திய சமுதாயத்தில் நிலவும் சாதி, மதம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் போன்றவை தரும் நெருக்கடிகளும் சிக்கல்களும் வேறானவை. அவை அம்மாவின் மடியில் தலைகவிழ்த்துப் பயம் போக்கும் சிறுமியின் மனநிலைக்கு அவர்களைத் தள்ளி விடக்கூடியனவாக இருக்கின்றன. 

காதலில் ஏற்படும் தோல்விகள், அவர்களே தீர்மானித்து ஏற்படுத்திக் கொண்ட திருமண ஒப்பந்தங்கள் போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்களைக் காரணமாக்கி மொத்தப் பொறுப்பையும் பெற்றோர்களிடம் விட்டுவிட்டுப் பொம்மையாகத் திருமண மேடையில் வந்து அமர்கிறார்கள். இதுவும்கூட இன்னொரு வகை ஓரத்து  இருக்கைப் பயணம்தான். இந்த ஓரத்து இருக்கைகள் உள்புறமான ஓரத்தில் இருப்பவை. வெளிக்காற்றை நேரடியாகச் சுவாசிக்க இயலாத இருக்கைகள். வெளியிலிருந்து வரும் காற்று, மழை, மின்னல், இடிபோன்ற ஆபத்துகள் இல்லாதவை; ஆனால் இரண்டு பக்கங்களிலும் உட்புறமாக இருக்கும் ஓரத்தில் அமர்பவர்கள் படக்கூடிய இடியையும் மோதல்களையும் பட வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று. பேருந்தை நடத்திச் செல்லும் கண்டக்டர் மட்டும் அல்ல; பல்வேறு பயணிகளும்கூட அவர்களின் தோளை இடித்துக் கொண்டும் தலையில் தட்டிக் கொண்டும் செல்லத்தான் செய்வார்கள். பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

மனித மனத்தின் விருப்பங்களும்  நடப்பு வாழ்க்கை தரும் நெருக்கடிகளும் சந்திக்கும் போது மனிதர்கள்  எடுக்க வேண்டிய முடிவுகள்  பற்றிச் சிந்திக்க இந்த ஓரத்து இருக்கைப் பயணம் ஓர் எடுத்துக் காட்டுதான். தனி மனிதர்களின் வாழ்க்கை சார்ந்து ஓரத்து இருக்கைகள் ஒரு புறம் சுதந்திர அடையாளத்தைத் தருவனவாக இருக்கின்றன; இன்னொருபுறம் ஆபத்துகளையும் அடையாளமிழப்பையும் தருகின்றன. இதற்கிடையில் இரண்டையும் தக்க வைப்பது எப்படி ? என்ற கேள்வி நம்முன்னால் இருக்கிறது. இந்தக் கேள்விக்கு இதுதான் சரியான விடை என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஆனால் அனைவரும் ஏற்கத்தக்க அல்லது சிந்திக்கத்தக்க ஒரு விடையை முன்வைக்கலாம். தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழும் உணர்வுகளின்  அடிப்படையில் முடிவுகளை எடுக்காமல், எல்லாவிதமான காரணிகளையும் தேவைகளையும் முன்னிறுத்தி முடிவு எடுக்கும் பயிற்சி உடையவர்களாக இருப்பதே அதற்குச் சரியான வழியாக  அமையும். அப்படியானதொரு முடிவு எடுக்கும் திறனை பெற்றோர்களோ அல்லது நமது கல்வி முறையோ தரவேண்டும்; ஆனால் தருவதாக இப்பொழுது இல்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் மேஜிக் இப் என்னும் நடிப்புக் கோட்பாட்டை ஆரம்பக் கல்வியிலிருந்து பாடங்களாக்கிட வேண்டும் எனச் சொல்லத் தோன்றுகிறது.

click here

click here
click here