உயிரோசை - 17.11.2008
 
அரசியல் சதிராட்டத்தில் இடம் மாறும் காவல் பகடைகள்
- ஆர்.அபிலாஷ்
தேச பக்தி என்ன விலை?
- இந்திரா பார்த்தசாரதி
ஒபாமாவுக்குச் செவ்வாய்க்கிரகத்தில் கடலோரமாகச் சிலை வைப்போம்
- இந்திரஜித்
தமிழ் உணர்ச்சி பாசிச உணர்ச்சியா?
- தமிழவன்
அந்தியின் நிழல்கள்
- வாஸந்தி
பெண் அணங்கு என்னும் பேதமை
- அ.ராமசாமி
நான் மதிக்கும் கலைஞர்கள் செய்த பிழைகள்!
- சுதேசமித்திரன்
காளைச் சண்டை அல்லது அபே சாதா என அழைக்கப்பெறும் ஒரு பெண்
- யமுனா ராஜேந்திரன்
கெட்ட பயல்
- வா.மணிகண்டன்
ஆடும் மாடும் எங்கள் கூட்டம் - I
- ந. முருகேசபாண்டியன்
ஒரு குரூரமான மோதலில் மறைந்திருக்கும் ஜாதீயம்
- மாயா
சட்டம் ஒரு ஜாதி அறை
- மனோஜ்
கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம்
- ஸ்ரீபதி பத்மநாபா
மதமாற்றமும் சித்திரவதையும்
- மாயா
பேதமையும் பிரியமும்
- பாவண்ணன்
அவளும் நாய்க்குட்டியும்
- பிரேம்குமார் சண்முகமணி
முதல் முத்தம்
- வே. பிச்சுமணி
விழைதல்
- நிஷாந்தன்
கடற்கரையில் ஓர் காலை
- அனுஜன்யா
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்
- கோகுலன்
கே.பாலமுருகன் கவிதைகள்
- கே.பாலமுருகன்
பொய் சொல்வதற்கெனப் பிறந்தவர்கள்
- எஸ்.செந்தில்குமார்
தருமி முதல் தசாவதாரம் வரை
- தமிழ்மகன்
நிறை செம்பு நீரில் விழும் பூக்கள்
- கழனியூரன்
எதிர்கால இந்தியா
- பாபுஜி
ஜுரம்
- பாபுஜி
ஜேக் கெரவேக் கவிதைகள்
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
லா.ச.ரா.வுக்கு - தீப. நடராஜன் எழுதியது
- தீப. நடராஜன்
அழுதழுது பெற்றாலும், பிள்ளையை அவள்தான் பெற வேண்டும்
- கழனியூரன்
தமுக்கு
- சிவன்
அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்
- ஹரன் பிரசன்னா
உங்கள் கருத்துகள்
- -
click here
நான் மதிக்கும் கலைஞர்கள் செய்த பிழைகள்!
சுதேசமித்திரன்

நாகார்ஜுன் நடித்த இரண்டு தெலுங்குப் படங்கள் தமிழில் தறிகெட்டு ஓடின. ஒன்று மணிரத்னம் இயக்கிய கீதாஞ்சலி. மற்றது ராம்கோபால் வர்மா இயக்கிய சிவா! தமிழில் டப் செய்யப்பட்டபோது இவற்றின் பெயர்கள் இதயத்தைத் திருடாதே, உதயம்!

இதயத்தைத் திருடாதேயில் நாகார்ஜுன் ஒரு நோயாளி. தன் நோயை அறிந்துகொள்ளும் வரைக்கும் கல்லூரி கான்வகேஷனில் காம்பௌன்ட் சுவரைத் தாண்டி தாமதமாக நுழையும் அளவுக்குத்தான் இவரது மாணவ சேஷ்டை இருக்கும். ஆனால் உதயத்தில் அப்படியே தலைகீழ். ஆரம்பத்தில் மிக அமைதியான மாணவனாகத் தோற்றமளிக்கிற இவர், ஒரு பாய்லிங் பாய்ண்ட்டில் வெடித்து தன் சைக்கிளின் செயினை அறுத்தெடுக்கும்போது படம் வேறு தாளகதிக்குள் நுழைந்துவிடும். கல்லூரிக்குள் மாணவர்கள் மோதல் என்பது ரொம்பவும் அழுத்தமாக வெளிவந்தது அந்தப்படம் முதலாகத்தான் என்பதாகவே நினைக்கிறேன். மாணவர்கள் தங்களுக்குள் ஆயுதங்களால் தாக்கிக்கொள்வது, தாதாக்கள் கல்லூரிகளுக்குள் ஊடுருவுவது, அதற்குக் காரணமாக இருக்கும் மாணவர்கள் பிற்பாடு தாதாக்களாகவும் அரசியல்வாதிகளாகவும் மாறுவது என்பதாக ஒரு பேரமைப்பை எடுத்துக்காட்டிய படம் உதயம்.

ஒரு காட்சியில் ஹீரோ டீக்கடையில் உட்கார்ந்திருக்கும்போது தாதாக்கள் அவனைத் தாக்க உள்ளே வருகிறார்கள். ஹீரோ மெதுவாக எழுந்து வாசலை நோக்கி நகர்கிறான். அவன் பயந்துவிட்டான் என்று தாதாக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவன் உள்ளேயிருந்தபடியே ஷட்டரை இறக்குகிறான். அவர்களோடு பொருதுகிறான். வெற்றியோடு வெளியேறுகிறான். எனது கல்லூரிக் காலத்தில் இந்தக் காட்சி பெரும் சிலிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. என்ன ஷட்டரை இழுக்கட்டுமா என்று கேட்பது அப்போது சாதாரணமான கல்லூரி வளாக மிரட்டலாக இருந்தது.

மாணவ மனம் என்பது தான் பார்க்கும் விஷயங்களை அப்படியே பதிவு செய்துகொண்டு அதைத் தானும் முயன்று பார்க்கும் இயல்புடையது. Boys are always boys! ஆனால் அவர்களுக்குள் செலுத்தப்படுவது மூர்க்கமானால் இயல்பிலேயே அதிக ஆற்றலும் துணிச்சலும் உடைய அந்த வயதில் அவர்களை நம்மால் என்ன செய்தாலும் அடக்கவே முடியாது. வேண்டாம் என்று நீங்கள் சொன்னாலும் வேண்டும் என்று அவர்களுக்குக் கேட்கிற பருவம் அது!

இந்தக் காலத்து மாணவர்களின் பொழுதுபோக்கு சினிமா அல்ல என்றபோதும், சினிமா அரங்குகளுக்கு வேறு காரணங்களுக்காக அவர்கள் போகத் தயங்குவதில்லை. காரணம் யாதானாலும் சினிமாவும் அவர்களின் மூளைக்குள் நுழைவது தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது. அதிலும் இன்றைய சினிமா சிந்தனைகள் யாவும் மாணவர்களைக் குறி வைத்தே இயங்குகின்றன. டீவி மீடியாவின் படையெடுப்பின் பிறகு வீட்டுப் பெண்களை சினிமாக்காரர்கள் தியேட்டர்களில் எதிர்பார்க்க இயலாத நிலையே ஏற்பட்டுவிட்டது. அடுத்தது மாணவர்கள்தான்! இங்கே இளைஞர்கள் என்பதுகூடப் பொருந்தாது. படிப்பைத் தவிர வேறு பொறுப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால் மாணவர்கள்தான் அதில் பெரும்பட்சம்!

அப்படியானால் மாணவர்களைப் பற்றித்தான் படம் எடுக்க வேண்டும். மணிரத்னம் தன் ஆயுத எழுத்தில் மாணவர்களின் எழுச்சியொன்றை முன்வைக்க முயன்றிருப்பார். அதிலும் கல்லூரிக்குள் தாதாக்களின் ஊடுருவல், மாணவர்களின் அரசியல் பிரவேசம் என்கிற அம்சங்களை அவர் உட்புகுத்தியிருப்பார். முதல்வனில் ஷங்கர் மாணவர்களுக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் ஊடாக வெடிக்கும் மோதலைப் படமாக்கியிருப்பார். ஆயுத எழுத்தானாலும் சரி, முதல்வனானாலும் சரி, உதயமானாலும் சரி, மாணவர்களின் பலம் என்ன என்பதை மற்றவர்களுக்குக் காட்ட தன்னாலான மறைமுகமான சேவையைச் செய்யவே செய்கின்றன. இந்தக் காட்சிப்படுத்தல்களினால் மற்றவர்கள் அதை உணர்ந்துகொள்கிறார்களோ இல்லையோ அதை மாணவர்கள்தான் அளவுக்கு அதிகமாகவே உணர்ந்துகொள்கிறார்கள்.

கல்லூரி என்பது ஒரு குட்டி மாநிலம் போன்றது என்பதாக மாணவர்கள் நினைக்கிறார்கள். கல்லூரித் தேர்தல் என்பது முதலமைச்சருக்கான தேர்தலல்ல என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். கல்லூரிக்குள் கட்சி பேதமோ ஜாதி மத பேதமோ கிடையாது என்பதையும் அவர்கள் உதறித் தள்ளிவிட்டார்கள். கல்லூரித் தேர்தல்களிலோ விழாக்களிலோ ஜாதி, அரசியல் கட்சி ஆகியவற்றின் தாக்கம் வேரூன்றி வெகுகாலமாகிறது. இதை இதுவரை ஆண்ட எந்த அரசாங்கமும் களைய நினைக்கவேயில்லை. ஏனென்றால் அரசு என்கிற பேரமைப்புக்கு மாணவர்கள், தொழிற்சங்கங்கள், அதிகாரிகள் என்று அனைத்துத் தரப்பிலிருந்தும் கட்சிக்காரர்கள் வேண்டும்.

வெறும் அரசியல் காரணங்களுக்காக மாணவர்கள் தாக்கப்படுவது, தாதாக்கள் போல மாணவர்கள் செயல்படுவதற்கு அடிகோலுவதில்லை. சினிமா எனும் பேரூடகம் அதைக் காட்சிப்படுத்திக் காட்டும்போதுதான் அது மாணவனின் மனத்துள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சினிமாவில் ஒருவன் பத்துப்பேரை அடிப்பது கிட்டத்தட்ட எல்லாப் படங்களிலும் காட்டப்படுகிறது. பத்துப்பேர் ஒருவனை அடித்தால் என்ன ஆகும் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நம் ஏகன், குருவி, ஏன் கமல், ரஜினி வரைக்கும் ஒவ்வொருத்தராக உண்மையான கல்லூரி வளாகமொன்றிற்குள் அனுப்பிப் பார்க்க வேண்டும். அப்போது தெரியும் சங்கதி!

பத்து மாணவர்கள், கையில் பைப், கட்டை, கத்தி என்று ஏந்தி ஒரு மாணவனை இழுத்துப்போட்டு அடிக்கிறார்கள். இந்தக் காட்சி நமது தொலைக்காட்சிகளில் கடந்த வாரம் நமக்குக் காணக் கிடைக்கிறது. போலீஸ் பெரும்படை இதற்கு சாட்சியாக நிற்கிறது. ஊடகக் கண்கள் வெளிச்சம்போட்டுக்கொண்டு நிற்கின்றன. இந்த pre planned terrorism எதற்காக நிகழ்த்தப்பட்டது என்பதை அரசியல் கட்டுரையாளர்கள் ஆராயட்டும். ஆனால் மாணவர்கள் எப்படி தேர்ந்த தாதாக்கள் போல ஆயுதங்களோடு நடந்துகொண்டிருந்தார்கள், எப்படி சமயம் பார்த்துத் தாக்குதலைத் துவக்கினார்கள், போலீஸும் மீடியாக்களும் பார்வையிட்டுக்கொண்டிருக்கும்போதே தங்கள் காம்பௌண்ட் எல்லைக்குள் தங்கள் வெறியாட்டத்தை எந்த தைரியத்தில் நிகழ்த்தினார்கள் என்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடினால் இதற்கு சினிமாவும் ஒரு முக்கிய காரணம் என்று குற்றஞ்சாட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை!

கல்லூரி வளாகத்திற்குள் போலீஸ் நுழைய முடியாது என்கிற வசனம் காலா காலமாய் சினிமாக்களின் வாயிலாக அவர்களின் மூளையில் திணிக்கப்பட்டு வந்திருக்கிற வகையில் சாதாரண மாணவர்களுக்கே தங்கள் சட்டங்கள் குறித்த அறிவு அமோகமாக இருக்கையில், சட்டக்கல்லூரி மாணவர்களைக் கேட்கவும் வேண்டுமா? கல்லூரிக்கு வெளியே ஓடிவர முயன்ற மாணவனை இழுத்துப்போட்டு வாசலிலேயே தாக்குகிறார்கள். அங்கே மட்டும் ஒருவேளை போலீஸ் இல்லாதிருந்தால் ஆட்டோக்காரர்களும் பொதுமக்களுமே சேர்ந்து இந்த அவலத்தைத் தடுத்து நிறுத்தியிருப்பார்கள். இதனால்தான் இதை pre planned terrorism என்று குற்றஞ்சாட்டவேண்டி வருகிறது.

ஒருவர் மற்றவரை அடிக்க முடியுமா? எனக்கு இது புரியவேயில்லை. அது எப்படி ஒருத்தன் மற்றவனை அடிக்க முடியும்? அது போலீசாக இருந்தால் என்ன, மாணவனாக இருந்தால் என்ன?

இப்படியொரு எண்ணம் எங்கிருந்து ஒருவர் மனத்தில் எழுகிறது? இந்தக் காட்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போலீஸ்காரர்களுக்கு வேண்டுமானால் இது சாதாரண வாழ்க்கைச் சம்பவமாக இருக்கலாம், ஆனால் போலீஸ்காரர்கள்கூட not licenced to attack என்று நியாயம் கோருகிற காலம் இப்போது. அவர்களை சாட்சி வைத்துக்கொண்டே மாணவர்கள் ரத்தவெறியில் ஈடுபடுகிறார்கள். திடீரென்று நிகழ்ந்த கலவரம் அல்ல. நிதானமாகக் காத்திருந்து செயல்படுத்தப்பட்ட கோரம்! முப்பது அடிகள் வாங்கி மயங்கிவிட்ட ஒருவனை உங்களால் இரும்புக் கம்பியால் தலையில் தாக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள், அதுவும் திரும்பத் திரும்ப! உடம்பே பதறுகிறதல்லவா ஆனால் இந்தக் காட்சியை சினிமாவில் நீங்கள் பார்த்ததேயில்லையா? சினிமாவல்ல; நிஜம் என்று தெரிவதனால்தானே மனம் பதறுகிறது. சினிமாவின் மூளைச் சலவைதான் இந்த வன்முறையைச் சாதித்தது என்பதாக உணர நேர்ந்தாலும் அடுத்த வாரமே ரிலீசாகப்போகிற ஒரு படத்தில் இதைவிடக் கொடுமையான ஒரு காட்சியை கண்கள் விரிய வியக்காதிருக்கப்போவதில்லையே நீங்கள்!

நண்பர் சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படத்தில் வேலையில்லாத இளைஞர்கள் கொலைகாரர்களாக மாற்றப்படுகிறார்கள். படம் பார்க்க எவ்வளவு நன்றாக இருந்தது, ஆனால் உங்கள் மூளையில் அந்தப் படத்தின் தரம் தென்படுகிறது என்றால் ஓர் இளைஞனின் மூளையில் வன்முறை அல்லவா தென்பட்டிருக்கிறது! ஆட்டோவில் வைத்து வில்லனின் தலையை அறுக்கும் காட்சி அந்தப் படத்தில் அழுத்தமாக வருகிறது. அதைப் பார்த்து மனம் பதறவேண்டும் என்கிற நியாயமான நோக்கம் இயக்குனருக்கு இருக்கலாம்! ஆனால் பார்வையாளனின் மனத்தில் அதன் வக்கிரம்தான் பதிந்து தொலைந்தால் என்ன நடக்கும்? இன்றைக்கு சட்டக்கல்லூரியில் நடந்ததுதான் நடக்கும்!

ராம்கோபால் வர்மாவின் சத்யா உள்ளிட்ட பல தாதாக்கதைப் படங்களை அடியொற்றி செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டையில் நாயகன் இதேவிதமாகத் தாக்கப்படுகிறான். கிட்டத்தட்ட செத்துப்போயிருக்க வேண்டியவன் தப்பிப் பிழைத்து என்னவாகிறான் என்பதைக் கதை நமக்குச் சொல்கிறது. இதைப் பார்க்கும் ஓர் இளைஞன் இப்படி நினைக்கலாம், அடி கொடுக்க வாய்ப்புக் கிடைத்தாலும் சரி, அடி வாங்க வேண்டி வந்தாலும் சரி, அதன் வாயிலாகப் பெரும் செல்வந்தனாக ஆக முடியுமானால் தாராளமாக அதில் ஈடுபடலாம்!

எந்தத் தலைமுறையிலும் ஓர் இளைஞனின் மனம், கலாச்சாரக் கோட்பாடுகள், பொதுநீதிகள் ஆகியவற்றுக்கு எதிராகவே சிந்திக்கிறது. அது நாளுக்கு நாள் முற்றிக்கொண்டே போகையில் சம்பவங்கள் மேலும் சிவந்துகொண்டே போகின்றன. பொதுவாகவே மனிதர்களின் மனக்குகைக்குள் யார் மீதாவது பகை இருக்கவே செய்கிறது. சந்தர்ப்பம் கிடைத்தால் அவரை உதைக்கவே மனம் விரும்புகிறது. நான்கூட எனது நண்பர்களிடம் சொல்வதுண்டு. எனக்குப் பிடிக்காத அல்லது துரோகம் செய்த ஒருவரை என்னால் அடிக்கவோ தாக்கவோ முடியாது. ஆனால் அவர் எங்காவது வீதியில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்தால் யாரோ போல் ஒதுங்கி வந்துவிடவாவது எனக்கு முடியவேண்டும் என்று. இது தாக்குவதைவிட எவ்வளவு ஆபத்தானது என்பதைக் கவனியுங்கள்! மனித நேயம் என்பது நம் மனத்திற்குள் இவ்வளவுதான் மிச்சமிருக்கிறது! ரத்தம் தினம்தோறும் நமக்குக் காணக் கிடைப்பதில்லை. அதற்கு நாம் ரத்த வங்கிகளில் வேலை பார்க்க வேண்டும், அல்லது சினிமாக்களைப் பார்க்க வேண்டும்!

ஒருமுறை ஒரு வணிகப் பத்திரிகையிலோ தொலைக்காட்சியிலோ சினிமாக்காரர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, உங்களிடம் ஒரு துப்பாக்கியைக் கொடுத்து ஒரே ஒருவரை மட்டும் சுடலாம் என்று சட்டப்பூர்வமாக அனுமதித்தால் நீங்கள் யாரைக் கொல்வீர்கள்? இந்தக் கேள்விக்கு சத்தியராஜ் உள்ளிட்ட பலரும் பலவிதமான பதில்களைச் சொன்னார்கள். இதற்கு உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்? பெரும்பாலும் ஒரு குண்டு போதாது என்பதுதான் பலருடைய பதிலாக இருக்க முடியும், ஆனால் ஒரே ஒருவர் மட்டும் மிக அற்புதமான பதிலைச் சொன்னார். அவர் பிரதாப் போத்தன்.

அவர் சொன்னார், மேலே சுடுவேன்!

எல்லோரும் ஏன் மேலேயே சுடக்கூடாது!


click here

click here
click here