உயிரோசை - 17.11.2008
 
அரசியல் சதிராட்டத்தில் இடம் மாறும் காவல் பகடைகள்
- ஆர்.அபிலாஷ்
தேச பக்தி என்ன விலை?
- இந்திரா பார்த்தசாரதி
ஒபாமாவுக்குச் செவ்வாய்க்கிரகத்தில் கடலோரமாகச் சிலை வைப்போம்
- இந்திரஜித்
தமிழ் உணர்ச்சி பாசிச உணர்ச்சியா?
- தமிழவன்
அந்தியின் நிழல்கள்
- வாஸந்தி
பெண் அணங்கு என்னும் பேதமை
- அ.ராமசாமி
நான் மதிக்கும் கலைஞர்கள் செய்த பிழைகள்!
- சுதேசமித்திரன்
காளைச் சண்டை அல்லது அபே சாதா என அழைக்கப்பெறும் ஒரு பெண்
- யமுனா ராஜேந்திரன்
கெட்ட பயல்
- வா.மணிகண்டன்
ஆடும் மாடும் எங்கள் கூட்டம் - I
- ந. முருகேசபாண்டியன்
ஒரு குரூரமான மோதலில் மறைந்திருக்கும் ஜாதீயம்
- மாயா
சட்டம் ஒரு ஜாதி அறை
- மனோஜ்
கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம்
- ஸ்ரீபதி பத்மநாபா
மதமாற்றமும் சித்திரவதையும்
- மாயா
பேதமையும் பிரியமும்
- பாவண்ணன்
அவளும் நாய்க்குட்டியும்
- பிரேம்குமார் சண்முகமணி
முதல் முத்தம்
- வே. பிச்சுமணி
விழைதல்
- நிஷாந்தன்
கடற்கரையில் ஓர் காலை
- அனுஜன்யா
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்
- கோகுலன்
கே.பாலமுருகன் கவிதைகள்
- கே.பாலமுருகன்
பொய் சொல்வதற்கெனப் பிறந்தவர்கள்
- எஸ்.செந்தில்குமார்
தருமி முதல் தசாவதாரம் வரை
- தமிழ்மகன்
நிறை செம்பு நீரில் விழும் பூக்கள்
- கழனியூரன்
எதிர்கால இந்தியா
- பாபுஜி
ஜுரம்
- பாபுஜி
ஜேக் கெரவேக் கவிதைகள்
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
லா.ச.ரா.வுக்கு - தீப. நடராஜன் எழுதியது
- தீப. நடராஜன்
அழுதழுது பெற்றாலும், பிள்ளையை அவள்தான் பெற வேண்டும்
- கழனியூரன்
தமுக்கு
- சிவன்
அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்
- ஹரன் பிரசன்னா
உங்கள் கருத்துகள்
- -
click here
ஆடும் மாடும் எங்கள் கூட்டம் - I
ந. முருகேசபாண்டியன்

தமிழில் மாடு என்றாலே செல்வம் என்று பொருள். ‘கன்று, காலி பெருக’ என வாழ்த்தும் வழக்கம் முன்பிருந்தது. நல்ல விவசாயி அல்லது சம்சாரிக்கு மரியாதை என்பது அவனுடைய வீட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருக்கும் மாடுகளின் எண்ணிக்கையை வைத்துத்தான். பசுக்கள் உள்ள வீட்டில் மங்களம் பொங்கிடும் என்பது நம்பிக்கை. ‘ஆநிரை கவர்தல்’ என்பது சங்க காலத்தில் இயல்பானது. எதிர் இனக் குழுவினர் அல்லது எதிராளியிடமிருந்து மாடுகளைத் திருடிக் கொணர்தல் வீரமாகக் கருதப்பட்டது. அது ‘வெட்சித் திணை’யானது. பசுமாட்டினைப் புனிதமாகக் கருதுவது வழக்கில்லை; ஆனால் வாழ்க்கைக்குத் தேவைப்படும் கௌரவமான உடைமையாக மாடுகள் கருதப்பட்டன.

பசுமாடு என்றாலே வெள்ளை வண்ணம்தான். அவை ‘நரைமாடு’ எனச் சிலரால் அழைக்கப்பட்டன. வீட்டுத் தொழுவம் என்பது சம்சாரிகளால் முறையாகப் பராமரிக்கப்பட்டது. தான் குடியிருக்கும் ஓலை வீட்டின் தரையைச் சாணியால் மெழுகியிருந்தாலும், சம்சாரிகள் தொழுவத்தின் தரையில் பட்டியக்கல் பாவியிருந்தார்கள். மாடுகள் மழையில் நனையாமல் இருக்கக் கிடுகுக் கொட்டகை மேய்ந்திருப்பார்கள். அறுபதுகளில் அடை மழை எனக் கார்த்திகை, ஐப்பசி மாதங்களில் பத்து நாட்கள் இரவு பகலாக மழை பொழியும். அந்த நேரத்தில் மாடுகளை நனையவிடாமல் காத்திட சம்சாரிகள் படாதபாடு படுவார்கள்.

பசுமாட்டினை யார் வேண்டுமானாலும் பிடித்துத் தொழுவத்தில் கட்டிவிடமுடியாது. பெரும்பாலான மாடுகள் அந்நியர்களைப் பார்த்தாலே தொழுவத்தில் கட்டிப் போடப்பட்ட நிலையிலே, சீறும்; பழக்கமானவர்களைத்தான் பால் கறக்க அனுமதிக்கும். நாட்டுப் பசு மாடுகள் ஒருவேளைக்கு ஒரு படி பால் கறந்தாலே பெரிசு. கலப்பினப் பசுக்கள் மேலைநாட்டிலிருந்து தமிழகத்திற்கு அறிமுகமான பின்னர்தான் சிவந்த வண்ணமானவற்றைப் பார்க்க முடிந்தது. அவை சாதுவானவை; நாட்டுப் பசுக்களுக்கு நேர் மாறானவை; ஒருவேளைக்கு இரண்டு படி பால் கொடுக்கும்.

கிராமத்து மாடுகள் மேய்ப்பதற்கென்று ‘ஊர்க்காலி’ என்ற அமைப்பு இருந்தது. எங்கள் ஊரில் பள்ளர் இனத்தைச் சார்ந்தவர்கள் ஊர்மாடுகளை மேய்க்கும் பொறுப்பை ஏற்றிருந்தனர். தினமும் காலை ஒன்பது மணியளவில் ‘அம்மா மாட்டை அவிழ்த்து விடுங்க’ என்ற சப்தம் தெருவில் கேட்கும். வீட்டிலுள்ளோர் மாடுகளைத் தொழுவத்திலிருந்து அவிழ்த்து விரட்டி விடுவார்கள். அவை ஊர் மந்தையில் ஒன்று திரட்டப்பெறும். எல்லா மாடுகளும் - சுமார் 300 மாடுகள் - வந்து சேர்ந்தவுடன் அவை ஊருக்குப் புறத்திலுள்ள மேய்ச்சல் நிலத்திற்கு ஓட்டிச் செல்லப்படும். மந்தையிலிருந்து தப்பி ஓடும் திருட்டு மாட்டினை ஏற்கனவே நன்கு பழக்கமான மாட்டின் கழுத்துக் கயிற்றுடன் சேர்த்துப் பிணைத்துவிடுவார்கள். மிகவும் அடங்காமல் ஓடப் பார்க்கும் மாட்டின் முன்னங்காலில் ஒன்றினை மடக்கிக் கயிற்றால் கட்டுவதன் மூலம், அது மூன்று கால்களில் தாவித்தாவி நடக்கும். மாலையில் நான்கு மணியளவில் ஊர்க்காலி மாடுகள் மீண்டும் மந்தைக்கு ஓட்டி வரப்படும். மாடுகள் தானாகவே தொழுவத்தில் போய், குழுதாடித் தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கும். மாட்டுக்கு ரூ.2/- கன்றுக்குட்டிக்கு ரூ 1/- என மாட்டுக்காரர்கள் மாதந்தோறும் பணம் தந்தனர். மேயச் சென்ற இடத்தில் பசுமாடுகள் கன்று ஈன்றால்,மாடுமேய்ப்பவர்கள், கன்றைத் தூக்கிக் கையில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வருவார்கள். பசுமாடு பின்னாலேயே வரும். மேய்ச்சலில் கன்று ஈன்றால், வேட்டி, துண்டினை மாட்டு உரிமையாளர்கள், மாடு மேய்ப்பவர்களுக்கு எடுத்துத் தரவேண்டும். ஊர்க்கோயில் காளைகள் நான்கைந்து பெரும்பாலும் மேய்ச்சல் மாடுகளுடன் போய்த்திரும்பும். எனவே முடையடித்திருக்கும் பசுக்களுடன் காளைகள் சேர்வது இயல்பாக நடைபெறும் பசுக்கள் ‘சினைப் பிடித்தல்’ குறித்து யாரும் பெரிதும் அக்கறை கொள்ளமாட்டார்கள்.

சினைப் பட்டிருக்கும் பசுமாட்டின் கண்களைச் சுற்றிக் கருமை படர்ந்திருக்கும். ஏழெட்டு மாதங்களாயின், மாட்டு வயிற்றுக்குள் கன்று துள்ளுவது வெளியே அசைவாகத் தெரியும். தேங்காய்ச் சிரட்டையை நடுவில் சிறிய துளையிட்டு, அதன் வழியாகக் கயிற்றை நுழைத்து, மாட்டின் கழுத்தில் கட்டினால், ‘‘அம்மாடு சினையாக உள்ளது, எனவே யாரும் அதனை அடிக்க வேண்டாம்’ என்பது அர்த்தம்.

பசுமாடு வீட்டில் கன்று ஈன்றால், அதுக்கு நல்ல கவனிப்புக் கிடைக்கும். கன்று ஈன்ற பசுவினைச் சுடுதண்ணீரால் குளிப்பாட்டி, அதன் உடம்பில் மஞ்சள் தூளினால் பூசுவார்கள். புட்டத்தில் மஞ்சளால் வட்டமிடப்படும். அந்த அடையாளத்தைப் பார்ப்பவர்கள் அண்மையில் கன்று ஈன்ற மாடு எனப் பதமாக அதை நடத்துவார்கள். கன்று வெளியேறியபிறகு, மாட்டிலிருந்து வெளியேறும் ‘இளங்கொடி’ குறித்துக் கிராமத்தினர் கவலைப்படுவார்கள். பல மாடுகள் ஓரிரு மணி நேரத்தில் இளங்கொடியை வெளியே தள்ளிவிடும். கால தாமதமானால் இளங்கொடியில் பிரண்டைச் செடியை வைத்துக் கட்டுவதனால், அது சீக்கிரம் வெளியே வந்துவிடும் என்று நம்பினர். இளங்கொடியை நாய் தின்றுவிட்டால் பால் வற்றிவிடும், கன்று இறந்துபோகும் என்ற நம்பிக்கை நிலவியது. எனவே இளங்கொயைப் பத்திரமாக ஓலைப் பெட்டி அல்லது கித்தான் சாக்குப் பையில் வைத்துக் கட்டி ஊருக்கு வெளியில் நிற்கும் ஆலமர விழுதில் கட்டித் தொங்க விடுவார்கள். பால் மரமான ஆலமரத்தில் கட்டுவதன் மூலம் மாட்டில் நன்கு பால் ஊறும் என்ற நம்பிக்கை இருந்தது.

பசுமாடு கன்று ஈன்ற முதல் ஐந்தாறு நாட்களுக்குச் ‘சீம்பால்’ என்ற கெட்டியான பாலைச் சுரக்கும். அந்தப் பாலைக் கறந்து, கருப்பட்டியைச் சேர்த்துக் காய்ச்சினால் திரள்திரளான பாலாக மாறும். அந்தச் சீம்பாலைத் தித்திப்புக் காரணமாகக் குழந்தைகள் விரும்பிக் குடிப்பார்கள். சீம்பாலைப் பிறருக்கு விற்பனை செய்ய மாட்டார்கள். பெரும்பாலும் மாட்டின் உரிமையாளர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டும்தான் சீம்பாலைக் குடிப்பார்கள்., பிறருக்குச் சீம்பால் தரும் வழக்கமில்லை.

முதன் முதலாக மாட்டின் காம்பிலிருந்து கறக்கும் பாலைச் சிறிய கிண்ணத்தில் எடுத்துச் சென்று, எப்பொழுதும் நீர் நிறைந்திருக்கும் கிணற்றில் ஊற்றுவார்கள். அந்தக் கிணற்றில் தொடர்ந்து நீர்சுரப்பதுபோல மாட்டு மடியிலும் பால் சுரக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுவார்கள்.

அறுபதுகளில் ஒரு குடும்பத்தில் ஏழெட்டுப்பிள்ளைகள் சர்வ சாதாரணம். அப்புறம் தாத்தா, பாட்டி எனப் பெரிய கூட்டுக் குடும்பங்கள். எனவே ஒரு மாட்டின் பால் குடும்பத்தினருக்குப் போதாது. பெரும்பாலும் குழந்தைகள் தாய்ப் பால் குடிக்கும்; தாய்ப்பால் போதாத நிலையில் பசுவின் பால்தான் பெரும்பாலான குழந்தைகளுக்கு உணவாகப் பயன்பட்டது. மோர், தயிர், வெண்ணெய், நெய் என்பவை ஆடம்பரமான பொருட்கள். ஓரளவு வசதியானவர்கள் வீட்டில்தான் சாப்பாட்டில் மோர் இடம் பெறும். நெய் ஊற்றிச் சுடுசோறு சாப்பிடுவது என்பது செல்வச் செழிப்பைக் காட்டும். வீட்டில் மாடு வைத்து பால் கறந்து நான்கு வீடுகளுக்கு ஊற்றி வாழும் குடும்பங்கள் இருந்தன. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து, நெய் உருக்கி விற்பனை செய்யும் பெண்களினால் நடந்த குடும்பங்கள் எங்கள் ஊரில் இருந்தன. நெய்யை விற்றபிறகு சட்டியில் கறிவேப்பிலை அல்லது முருங்கை இலையுடன் மீந்திருக்கும் வண்டலுடன் சுடு சோற்றினைப் போட்டுப் புரட்டி எடுத்துச் சாப்பிட எப்பொழுதும் குழந்தைகள் காத்திருந்தன. வீட்டில் நெய் உருக்கப்பட்டாலும், அதைச் சாப்பிட இயலாதது வறுமையினால்தான்.

பசுவின் பாலை விற்கக் கூடாது; பாலை விற்பது குலதெய்வத்திற்கு ஆகாது; பாலை விற்கும் குடும்பம் விளங்காது என்ற நம்பிக்கை என் தந்தையாருக்கு இருந்தது. பாலை விற்றால் சத்தான உணவு குழந்தைகளுக்குக் கிடைக்காது என்பதனால் இதுபோன்ற நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு.

பசுவின் வெண்ணெய், ‘மிதப்பு’ என்று சிலரால் அழைக்கப்பட்டது. காய்ச்சப்பட்ட பாலில் சிறிதளவு தயிர் அல்லது மோர் ஊற்றுவதற்காக அடுத்த வீட்டிற்குச் சென்று ஓசியாக வாங்குவது ‘உறைமோர்’ எனப்பட்டது. மாலையில் விளக்கேற்றியவுடன் யாரும் பிறர் வீட்டில் சென்று உறைமோர் கேட்பதில்லை. யாராவது கேட்டு வந்தால், இப்பத்தான் ‘உறை’ ஊற்றப்பட்டுள்ளது என்று நைச்சியமாக மறுத்துவிடுவார்கள்.

பசுவின் மூத்திரத்தைப் புனிதமாகக் கருதுவது கிராமத்தில் வழக்கிலிருந்தது. ‘கோமியம்’ எனப்பட்ட பசுவின் மூத்திரத்தைப் பாத்திரத்தில் பிடித்து வைத்து, புனித காரியங்கள், சாமி கும்பிடுதல் போன்றவற்றில் பயன்படுத்தினர். பொதுவாகத் தெருவில் பசு நின்று கொண்டிருந்தால், அதனுடைய பிட்டத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்வார்கள். பசுமாடு மூத்திரமிருந்து கொண்டிருந்தால், சிலர் அதைக் கையால் பிடித்துத் தலைக்கு மேல் தெளித்துக் கொண்டு, முகத்திலும் தடவிக் கொள்வார்கள். ஆனால் பெரும்பாலான சம்சாரிகள் பசுவை விலங்காகத்தான் பார்த்தனர்.

பசுவின் சாணியைச் சேகரிக்கக் கிராமத்தில் எப்பொழுதும் போட்டியிருந்தது. தெருவில் போகும் மாடு சாணி போட்டால், அதை இரு கைகளிலும் அள்ளி ஏந்திக் கொண்டு வரும் பெண்கள் எங்கள் ஊரில் நிரம்ப உண்டு. சாணி குப்பைகளில் சேர்க்கப்பட்டு வயலுக்கு உரமாவது ஒரு புறம் நடைபெற்றது. இன்னொருபுறம் சாணிக் குவியலை நன்கு பிசைந்து, இருகைகளாலும் உருண்டைகளாக உருட்டி, உமித்தூளின் மீது வைத்து வட்டமாகத் தட்டிக் காயவைத்து ‘எருவாட்டி’ ஆக்குதல் வியாபாரமாக நடைபெற்றது; வீட்டில் அடுப்பெரிக்கவும் பயன்பட்டது.

குட்டிச் சுவர், ஓலைக் கூரை, வீட்டு ஓடுகள்மேல் காய வைக்கப் பெற்றுச் சேமிக்கப்பட்ட எருவாட்டிகள் ‘அணாவுக்கு ஆறு கைகள்’ விற்கப்பட்டன. அதாவது ஆறு காசுக்குப் பன்னிரண்டு எருவாட்டிகள் என்பது கணக்கு. பெண்கள் ‘சிறுவாடு’ என்ற பெயரில் பணம் சேர்க்க எருவாட்டிகள் பெரிதும் பயன்பட்டன. இன்னொருபுறம் இயற்கை எரிபொருளாக எருவாட்டிகள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் உதவின. அடுப்பில் எரிந்து தீய்ந்த எருவாட்டியின் சாம்பல், காலைவேளையில் பல் துலக்கப் பயன்பட்டது; சமையலறைப் பாத்திரங்கள் தேய்த்துக் கழுவப் பயன்பட்டது; அவரை, பூசணி விளையும் பயிர்க்குழியில் அசுவினி போன்ற சிறிய பூச்சிகள் சேதமேற்படுத்தும்போது கிருமி ஒழிப்பானாகவும் பயன்பட்டது.

மாட்டின் இறைச்சியை உண்ணுவது வேண்டாம், கூடாது என்பது இன்றளவும் கிராமங்களில் நிலவிவருகிறது. வாயில்லாத உயிர்களான மாடுகள், கிராமத்து மக்களின் வாழ்க்கையில் பல்வேறு வழிகளில் உதவி வரும்போது, அவற்றைக் கொல்லுவது பாவம் என்று நம்பினர். எனவேதான் மாடுகளுக்கு நோய் வந்தால், அல்லது காயமேற்பட்டால், அவற்றுக்கு வைத்தியம் பார்க்கப் பெரும்பாலான கிராமங்களில் பரம்பரைமாட்டு வைத்தியர் இருந்தனர். மாட்டை நோயிலிருந்து காப்பாற்றிட பல்வேறு கை வைத்திய முறைகள் பற்றிக் கிராமத்தினர் நன்கு அறிந்திருந்தனர். வயலில் தொடர்ந்து உழப் பயன்படும் மாடுகளின் கால்களில்- சேற்றினில் கிடப்பதன் காரணமாக -புண்கள் ஏற்பட்டுவிடும். மாட்டின் காது மடல்களில் ‘உண்ணி’ எனப்படும் சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிகள் இருந்தால், அவற்றைத் தோலிலிருந்து பிய்த்தெடுத்து, அருகிலுள்ள எரியும் கங்கில் போடுவார்கள். மாட்டின் உடல்நலம் குறித்த சம்சாரிகளின் பார்வை, சக உயிர் மீதான அன்பு குறித்தது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓரளவு வசதியானவர்கள் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் இரவு வேளையில் மாட்டுத் தொழுவத்தில் சாம்பிராணிப் புகையிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

கிராமத்தினரின் மாடுகள் மீதான பிரியம் பொங்கல் நாளில் வெளிப்படும். மாட்டுப் பொங்கல் அன்று ஊரிலுள்ள மாடுகள் முழுவதும் ஆற்றில் அல்லது கண்மாயில் குளிப்பாட்டப்படும். பல வண்ணச் செந்தூரப் பொடிகளால் மாடுகளின் உடல் முழுக்கப் பொட்டுகள் வைத்து, வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள். வண்ணக் காகித மாலை, துண்டு போன்றவற்றை மாட்டின் கழுத்தில் கட்டி, கொம்புகளில் வண்ணப் பெயிண்டு தடவி அழைத்து வருவது பார்க்க அற்புதமான காட்சியாக இருக்கும்.

மாட்டுத் தொழுவத்தில் வைக்கப் பெறும் பொங்கல் பானையில் பால் பொங்கும்போது பெண்கள் குலவையிடுவார்கள். ‘பால் பொங்க, பட்டி பெருக, களம் பொலிக’ என்று தொழுவத்தின் முன்னர் நின்று கூறுவதுடன், சர்க்கரைப் பொங்கலை இலையில் வைத்து மாடுகள் உண்ணத் தருவார்கள். மாட்டுப் பொங்கல் நாளில் மாடுகளை முன்வைத்துக் கிராமத்தினர் கட்டமைக்கும் புனைவும் உற்சாகமும் அளவற்றவை.

அறுபதுகளின் இறுதியில் எங்கள் ஊரில் இருந்த மாட்டாஸ்பத்திரி என அழைக்கப்பெற்ற கால்நடை மருத்துவனைக்கு ‘டில்லி எருமை’ வந்துள்ளது என ஊர் முழுக்கத் தகவல் பரவியது. ஊரே திரண்டுபோய்ப் பார்த்தது. பெரிய உருவமுடைய எருமை, ஓட்டுத் தாழ்வாரத்தில் கட்டப்பட்டிருந்தது. அந்த எருமை யாரைப் பற்றியும் கவலைப்படாமல் நின்று கொண்டிருந்தது. துணிச்சலான இளவட்டங்கள் மெல்லச் சென்று தொட்டுப் பார்த்தனர். அது ‘மண்’ மாதிரி இருந்தது. குச்சியினால் மெல்ல அடித்தால்கூட உடம்பை லேசாக வளைத்துக் கொடுக்கும். அப்புறம் ஊர் முழுக்க ‘டில்லி எருமை’ என்ற பெயர் பிரபலமானது. ‘அசமந்தம்’ பிடித்த ஆணையோ, பெண்ணையோ திட்டுவதற்கு ‘டில்லி எருமை’ என்ற சொல் மிகவும் பயன்பட்டது. அந்த எருமை வந்தபிறகு எங்கள் ஊரிலுள்ள பெண் எருமைகளைச் சினைப்படுத்த மருத்துவனைக்குக் கொண்டு வந்தனர். காலை வேளையில் கம்பவுண்டர் மாதிரி ஒருத்தர் டில்லிஎருமையைப் பிடித்துக் கொண்டு அழைத்து வருவர். அது தன்னுடைய பெரிய உடலை அசைத்தவாறு நடக்கமுடியாமல் நடக்கும். ஏற்கனவே முடை அடித்துக் கத்திக் கொண்டிருக்கும் பெண் எருமையை புளிய மரத்தில கட்டிப் போட்டிருப்பார்கள். டில்லி எருமை, பெண் மாட்டின் சிறுநீர்ப் புழையை முகர்ந்து பார்த்துவிட்டு, மிகவும் சிரமப்பட்டு, அதன்மேல் காலைத் தூக்கி வைத்து முயற்சி பண்ணும். அந்தக் காட்சியை தொடக்கப் பள்ளிக் கூடச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். டில்லி எருமையினால் தனது குறியை நுழைக்க இயலாதபோது, கம்பவுண்டர் அதைக் கையில் பிடித்து பெண் எருமையின் புழைக்குள் திணிப்பார். மாட்டின் உரிமையாளர் ஒருவாறு ஆசுவாசப் படுத்திக் கொள்வார். இந்தக் காட்சியைத் தினசரி வேடிக்கை பார்க்கும் ஆட்கள் ஊரில் இருந்தனர்.

அப்புறம் திடீரென அந்தப் பொலி எருமையைக் காணவில்லை. வேறு ஊருக்கு இடமாறுதலாகிப் போய் விட்டது. அதனுடைய சேவை தமிழகமெங்கும் பயன்படப் போவதாகப் பெரிசுகள் கிண்டல் பண்ணுவார்கள்.

அப்புறம் செயற்கை முறையில் கருவூட்டல் ஊசிமூலம் வந்தவுடன், பசுமாடுகள் தங்கள் வாழ்க்கையில் காளை மாடுகளின் சிநேகத்தை இழந்துவிட்டன. ஊரைச் சுற்றி வரும் கோயில்மாடு, பசுவைத் தேடித் தொழுவத்திற்குள் நுழையாதவாறு அடித்து விரட்டப்பட்டது.

திடீரென, ஊருக்குள் வந்த ‘கூட்டுறவுப் பால் விநியோகச் சங்கம்’ மூலம் ஆவின் பாலுக்குப் பால் அளிப்பதற்காகக் கறவை மாடுகள் கடனாக வழங்கப் பெற்றன. பசுமாடு என்ற சொல் போய் ‘கறவை மாடு’ என்ற சொல் அறிமுகமானது. ஊர்க்காலி மாடுகளைக் கொண்டுபோய் மேய்க்கும் கண்மாய் மேட்டுப் பகுதி, புறம்போக்கு நிலப்பரப்பு யாவும் ஊரிலுள்ள ஆதிக்கச்சக்திகளால் கையகப் படுத்தப்பட்டன. மேய்ச்சல் நிலம் காணாமல் போன கிராமத்தில், மாடுகள் தொழுவத்திற்குள்ளேயே முடங்கின. முப்பதடி நீளமான வைக்கோல் போரிலிருந்து உருவப் பெற்ற வைக்கோல் கட்டுகளும் மாடுகளின் தீவனத்திற்குப் போதாத நிலை. வசதியான சம்சாரிகளின் வீடுகளில் இருந்த மாடுகளைப் பராமரிக்க வருஷக் கூலிக்குப் பண்ணைக்காரர் முறை ஏற்பட்டது. தலித் சிறுவர்களின் கல்வியும் இளமையும் பண்ணைக்கிருத்தல் மூலம் நசுக்கப்பட்டது.

வீட்டில் இறந்துபோன மாட்டினுக்காகக் கண்ணீர் விட்டு அழுத பெண்கள் எங்கள் ஊரில் உண்டு. ‘பிள்ளைமாதிரி வளர்த்தேன். இப்பச் செத்துப் போச்சே’ என்று புலம்புவார்கள். செத்த மாட்டின் கால்களை ஒன்றாகக் கட்டி, அதனூடே நீளமான மூங்கிலைச் செலுத்தித் தூக்கிச் செல்வார்கள். பறையர் சாதியினர். அவர்கள் கூட்டமாகத் தங்கியிருக்கும் பகுதியில், மாட்டின் தோலை உரித்து, கறியை உறவினர்களுக்குள் பங்கிட்டுக் கொள்வார்கள். அதை வேடிக்கை பார்க்கும் வேறு சாதிச் சிறுவர்களை ‘அய்யா மகன் இங்கே ஏன் நிக்கறிங்க. . .வீட்டுக்குப்போங்க’ என்பார்கள் அன்புடன்.

பசுமாடு வளர்த்தல் என்பது கிராமத்தினரின் அன்றாட வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சூழல் இன்று மெல்ல நசிந்துவிட்டது. இன்றைய இளந்தலைமுறையினர் பாடப்புத்தகங்கள் மூலம் C. . .O. . . .W - Cow என அறிந்துள்ளனர். பசு மாட்டுடன் ஆன உறவின் இழப்பு எனக்கு உறுத்திக் கொண்டிருக்கிறது. அதைக் குறித்து என் குழந்தைகளுக்கு எவ்விதமான அக்கறையும் இல்லை என்பதுதான் உண்மை. அதுதான் யதார்த்தம்.

********


click here

click here
click here