உயிரோசை - 17.11.2008
 
அரசியல் சதிராட்டத்தில் இடம் மாறும் காவல் பகடைகள்
- ஆர்.அபிலாஷ்
தேச பக்தி என்ன விலை?
- இந்திரா பார்த்தசாரதி
ஒபாமாவுக்குச் செவ்வாய்க்கிரகத்தில் கடலோரமாகச் சிலை வைப்போம்
- இந்திரஜித்
தமிழ் உணர்ச்சி பாசிச உணர்ச்சியா?
- தமிழவன்
அந்தியின் நிழல்கள்
- வாஸந்தி
பெண் அணங்கு என்னும் பேதமை
- அ.ராமசாமி
நான் மதிக்கும் கலைஞர்கள் செய்த பிழைகள்!
- சுதேசமித்திரன்
காளைச் சண்டை அல்லது அபே சாதா என அழைக்கப்பெறும் ஒரு பெண்
- யமுனா ராஜேந்திரன்
கெட்ட பயல்
- வா.மணிகண்டன்
ஆடும் மாடும் எங்கள் கூட்டம் - I
- ந. முருகேசபாண்டியன்
ஒரு குரூரமான மோதலில் மறைந்திருக்கும் ஜாதீயம்
- மாயா
சட்டம் ஒரு ஜாதி அறை
- மனோஜ்
கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம்
- ஸ்ரீபதி பத்மநாபா
மதமாற்றமும் சித்திரவதையும்
- மாயா
பேதமையும் பிரியமும்
- பாவண்ணன்
அவளும் நாய்க்குட்டியும்
- பிரேம்குமார் சண்முகமணி
முதல் முத்தம்
- வே. பிச்சுமணி
விழைதல்
- நிஷாந்தன்
கடற்கரையில் ஓர் காலை
- அனுஜன்யா
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்
- கோகுலன்
கே.பாலமுருகன் கவிதைகள்
- கே.பாலமுருகன்
பொய் சொல்வதற்கெனப் பிறந்தவர்கள்
- எஸ்.செந்தில்குமார்
தருமி முதல் தசாவதாரம் வரை
- தமிழ்மகன்
நிறை செம்பு நீரில் விழும் பூக்கள்
- கழனியூரன்
எதிர்கால இந்தியா
- பாபுஜி
ஜுரம்
- பாபுஜி
ஜேக் கெரவேக் கவிதைகள்
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
லா.ச.ரா.வுக்கு - தீப. நடராஜன் எழுதியது
- தீப. நடராஜன்
அழுதழுது பெற்றாலும், பிள்ளையை அவள்தான் பெற வேண்டும்
- கழனியூரன்
தமுக்கு
- சிவன்
அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்
- ஹரன் பிரசன்னா
உங்கள் கருத்துகள்
- -
click here
பொய் சொல்வதற்கெனப் பிறந்தவர்கள்
எஸ்.செந்தில்குமார்

 

மிகவும் இளவயதிலேயே விதவையான சரோஜினி தான் படித்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலேயே தன் மகளைச் சேர்க்க வேண்டுமென, தலைமையாசிரியர் அறையில், அவரது வருகைக்காகக் காத்திருந்தாள். பள்ளி இறுதியாண்டில், கூடைப் பந்தாட்டப் போட்டியில் தான் பெற்றுத் தந்த கோப்பை, தமிழ் தாத்தா உ.வே.சா நினைவுப் பேச்சுப் போட்டியில் வாங்கித் தந்த பதக்கம், பள்ளியின் புதிய கட்டிடத்தைத் திறக்க வந்த அமைச்சரை வரவேற்க கண்ணகி வேடமணிந்து, கையில் சிலம்புடன் தலை விரித்த கோலத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்று வரிசையாகக் கண்ணாடி அலமாரியில் வாங்கியிருந்ததைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

சரோஜினிக்குப் பாடுவதற்கு வராது. பாட்டுப் போட்டி தவிர்த்து பிற போட்டிகளில் எல்லாம் முதல் பரிசும், சிறப்புப் பரிசும் வாங்கினாள். எல்லாப் போட்டிகளிலும் வென்றிருந்தாலும், பாட்டுப் போட்டியில் தனது பள்ளிக்கூட முதல் எதிரியான ’லோட்டஸ்’ அனிதா, பாட்டுப் போட்டியிலும், பரதத்திலும் தன்னை வென்று ஒவ்வொரு முறையும், வண்ணப் புகைப்படத்துடன் கண்ணாடி அலமாரியில், இடம்பிடித்துக் கொள்வது அவளுக்கு இப்போதும் கோபத்தை உண்டாக்கியது. சரோஜினியின் புகைப்படங்கள் முழுவதும் கறுப்பு - வெள்ளைதான். லோட்டஸ் அனிதா இருக்கும் ஊரில் தான் இனிக் கல்லூரிப் படிப்புப் படிக்கக்கூடாது, திருமணம்கூட செய்து கொள்ளக்கூடாது என்று தன் அப்பாவிடம் சொல்லி வெளியூருக்குச் சென்று படித்தாள். தான் பிறந்து வளர்ந்த ஊரிலும், படித்த பள்ளியிலும் பிள்ளைகளுடன் விதவையாக தான் வந்திருப்பதும், தன் பள்ளியில் பிள்ளைகளின் சேர்க்கைக்காகக் காத்திருப்பதும் எவ்வளவு துரதிருஷ்டமானது என வருந்தியவளாக அமர்ந்திருந்தாள்.

சரோஜினி தன் மகள் கலைவாணியைப் பாட்டுப் போட்டியிலும், பரதப் போட்டியிலும் முதல் பரிசு பெறச் செய்திட வேண்டுமென நினைத்தாள். தான் படித்தபோது தலைமையாசிரியையாக இருந்த ஆவுடையம்மாள் காலமாகிவிட்டதாக, சரோஜினியின் அப்பா அவரிடம் சொல்லியிருந்தார். இப்போது யார் தலைமையாசிரியையாக இருக்கிறார்களென அவளுக்குத் தெரியவில்லை. முத்துத் தங்கம் டீச்சர் அறையின் மடக்குக் கதவைத் திறந்துவிட்டு, உள்ளே நுழைந்தார்கள். முத்துத்தங்கம் டீச்சர்தான் மேல்நிலை முதலாம் ஆண்டு கணித ஆசிரியை. டீச்சரைப் பார்த்ததும் சரோஜினி மேஜையில் முழங்கால் இடிபட எழுந்து கொண்டாள். ”குட்மார்னிங் டீச்சர்” சரோஜினியின் குரலைக் கேட்டதும், டீச்சர் ”நீ சரோஜினிதானே. பொய் சரோஜினி” நாற்காலியை இழுத்துவிட்டு உட்கார்ந்தபடியே கேட்டார்கள். ”உட்காரு. உட்காரு” என்று சொன்னதும் சரோஜினி முழங்காலைத் தேய்த்தபடி உட்கார்ந்து கொண்டாள்.

சரோஜினி தன்னை டீச்சர் இன்னமும் ஞாபகம் வைத்திருப்பதை ஆச்சரியமாகக் கேட்டாள். ”உன்னையும், லோட்டஸ் அனிதாவையும் மறக்கமுடியுமாடா” என்றதும், சரோஜினி கண்கள் கசிந்தவளாக அதே முத்துத்தங்கம் டீச்சர்தான். வாடா, போடா, என்னடா, சாப்பிடுறா, விட்டுத்தள்ளுடா, அடுத்த பரீட்சையில் பார்த்துக்கிடலாம்டா என்று சொல்லும் முத்துத்தங்கம் டீச்சர் என்று, சந்தோஷப்பட்டுக் கொண்டாள். முத்துத்தங்கம் டீச்சர்தான் இப்போது பள்ளிக்குத் தலைமையாசிரியை என்று என்ன உதவி செய்ய வேண்டுமெனக் கேட்டாள்.

சரோஜினி தன் கணவன் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதையும், அதனால் பிள்ளைகளோடு தனது அம்மா வீட்டிற்கே வந்துவிட்டதைப் பற்றியும் சொன்னாள். அப்பா இல்லாத பிள்ளை என்று தெரிந்து கொண்ட தலைமையாசிரியை அவளுக்கு வேண்டிய உதவிகள் செய்வதாக வாக்குறுதி தந்தாள். ”கவலைப்படாதடா. நம்ம பள்ளிக்கூடம்டா, நானிருக்கேன்டா” தலைமையாசிரியை முத்துத்தங்கம் பேசியது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.

சரோஜினி தன் பிள்ளைக்குப் படிப்புக் கட்டணத்தை அலுவலகத்தில் கட்டிவிட்டு, தான் படித்த வகுப்பறைகளையும், விளையாடிய மைதானத்தையும் பார்த்தபடி தன்னை மறந்து நின்றாள்.

****

பொய்யின் நிறம் என்னவாக இருக்குமென்று யாரேனும் யோசித்திருக்கிறோமா, சரோஜினியிடம் கேட்டால் அவள் சட்டென்று பதில் சொல்லிவிடுவாள் பச்சை என்று. பொய்யின் நிறம் பச்சையா எப்படி என்று கேட்டால், அதற்கு அவளிடம் பதில் இருக்கும். பள்ளி இறுதியாண்டில் படித்துக் கொண்டிருக்கும் போது அவளிடம் பொய்யைப் பற்றிய செய்திகளையும், உலகின் தலைசிறந்த பொய்களைக் கேட்பதற்கும், எப்போதும் ஒரு கூட்டமே கூடியிருக்கும். இறந்துபோன முன்னாள் தலைமையாசிரியை ஆவுடையம்மாள்கூட, சரோஜினி விசிறிதான். தனது பி.வி. அறைக்கு வரவழைத்து பொய்களைப் பற்றிய செய்திகளைக் கேட்டு வியப்புற்றிருக்கிறார்.

உலகத்திலேயே தலைசிறந்த பொய், பொய் சொல்பவர்களுக்கு ஆண்டுதோறும் தரப்படும் முதல் பரிசு பற்றிய செய்திகளை அவள் எல்லோரிடமும் சொல்லிய போது, சரோஜினியின் முதல் எதிரி லோட்டஸ் அனிதா, தான் நேராக எதுவும் கேட்காமல், தனது தோழிகள் சிலர் மூலம் நம்ப முடியாதபடி இருக்கிறது. ஆதாரம் வேண்டும் என்று சொல்ல ஏற்பாடு செய்தாள். சரோஜினி மறுநாளே, தனக்கு வெளிநாட்டு ஸ்டாம்பு ஒட்டி வந்த ஆங்கிலப் பத்திரிகையைக் கொண்டு வந்து காட்டினாள். அந்தப் புத்தகத்தை யார் சரோஜினிக்கு அனுப்புகிறார்கள் என்று அவளுக்கே தெரியாது. அந்த இதழில் சென்ற ஆண்டு சிறந்த பரிசை ஆஸ்திரிய நாட்டு ரீட்டா மைக்கேல் என்பவர் வாங்கியிருந்த செய்தி வெளியாகியிருப்பதைக் காட்டினாள்.

செய்தி வந்த இதழை இதற்குமுன் மாணவிகள் யாரும் பார்த்தது இல்லை. அதன் அட்டையின் பளபளப்பும், விதவிதமான வர்ணப் புகைப்படங்களும், அனைவரையும் கவர்ந்துவிட்டது. பள்ளிக்கூடம் முழுக்க ரகசியமாகவும், பகிரங்கமாகவும் மாணவிகளிடம் உலவியது. தலைமையாசிரியை ஆவுடையம்மாளுக்குக் கோபம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் சந்தோசம். தனது பள்ளியில் மாணவிகள் வெளிநாட்டு இதழ்களையெல்லாம் ஆர்வமாகப் படித்து அறிவை வளர்த்துக் கொள்கிறார்களே என்று கண்டுங் காணாமல் விட்டுவிட்டார்.

ஆஸ்திரிய நாட்டுப் பெண் ரீட்டா மைக்கேல் (வயது 41) தனது பேட்டியில் பொய்யின் நிறம் என்ன என்பது பற்றி கீழ்வருமாறு சொல்கிறாள். பொய்யின் நிறம் ஓர் பச்சையான இலையினைக் கசக்கினால் வரும் வாசனை போன்றது. அதனை நீங்கள் முகர்ந்தால், உணரும் வாசனையே பொய்யின் வாசனை. நிறமும் அதே போன்றதுதான். பொய் தன்னை எதன் மேல் ஏற்றிக் கொண்டுள்ளதோ, அந்த வடிவத்தினையும், அதன் நிறத்தையும் பிரதிபலிக்கிறது.

****

சரோஜினி தான் நின்றிருந்த மரத்தின் இலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்தப் புளியமரத்தின் கீழ் எத்தனை நாட்கள் தனது தோழிகளுடன் அமர்ந்து பேசியிருப்போம். எத்தனை நாட்கள் புளியம் பூக்களைப் பிய்த்துத் தின்றிருப்போம். தான் படித்த காலத்தில் இருந்ததைப் போலத்தான் இப்போதும் மாணவிகள் அலைந்து திரிகிறார்கள் என அவள் நினைத்துக் கொண்டாள். மசால் வடை விற்கும் பாட்டியும், அவளது கூடையும் அவள் உட்கார்ந்திருந்த இடமும் இப்போது மாறிவிட்டது. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கேன்டீன் வந்துவிட்டது.

லேப் கட்டிடத்தினருகே நடந்து சென்றாள். லேப் டெக்னிஷியன் சுடலை அண்ணன் அதே நாற்காலியில் உட்கார்ந்து தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தார். லேப்புக்குள் உட்கார்ந்து கொண்டு பீரியட் டைம் வயிற்று வலியில் நாப்கின்னுக்காகக் காத்துக் கொண்டிருந்த நாட்கள் எத்தனை. எத்தனை மாணவிகள் லேப் அறையில் பூப்பெய்தி, ஆட்டோ ஏறி வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். தன் மகளும் ஒருநாள் ஆட்டோ ஏறி அவளது தோழிகளுடன் வீட்டிற்கு வரத்தான் செய்வார்கள் என்று நினைக்கும் போது, சந்தோஷமாகவும், வேதனையாகவுமிருந்தது.

இரண்டு ஆசிரியைகள் அவளை அடையாளம் கண்டு பேசினார்கள். அவர்கள், கடந்த மாதம் தான் லோட்டஸ் அனிதாவும் தன் மகளைச் சேர்த்துவிட்டுச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். சரோஜினி ஆச்சரியமானவளாக எந்த வகுப்பு என்று கேட்டாள். தங்களுக்கு சரியாக ஞாபகம் இல்லை என்று அவர்கள் சொல்லிவிட்டார்கள்.

பிறகு அவள் சுடலை அண்ணனுடன் கொஞ்ச நேரம் பேசி இருந்துவிட்டு, வீட்டிற்குச் சென்றுவிட்டாள். லோட்டஸ் அனிதாவின் பிள்ளையும், பள்ளியில் படிப்பதைத் தெரிந்து கொண்டதும், அவளுக்கு தூக்கமே வரவில்லை. அவளின் பிள்ளையைவிட தன் மகள், எல்லாப் போட்டிகளிலும், பாடத்திலும் முன் வந்துவிடவேண்டுமென்று நினைத்தாள். பள்ளிக்கூடக் காலத்தின் ஆறு வருடங்களில் தனக்கு எதிரியாகவும், தனது படிப்புக்குப் போட்டியாகவுமிருந்ததுபோல, தன் மகள் கலைவாணிக்கும் ஒருத்தி இருக்கிறாள் என்ற கவலை வந்துவிட்டது அவளுக்கு. இருந்தபோதிலும் லோட்டஸைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டானது. லோட்டஸ் நல்லவள்தான். சரோஜினிக்கு பரதம் வரவில்லை என்பதை தெரிந்து கொண்டதும், டான்ஸ் டீச்சர் ஆண்டுவிழாவில் பெயரை எடுத்துவிட்டார்கள். சரோஜினிக்கு இது தெரியாது. தானும் ஆண்டுவிழாவில் ஸ்டேஜ்ஜில் டான்ஸ் ஆடப்போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

லோட்டஸ் அனிதா அவளிடம் நேரிடையாக இதைச் சொல்லாமல், தனது தோழிகள் மூலம் விஷயத்தைச் சொல்லி, பரதப் பாட்டிற்கு வேண்டாம், சினிமா பாட்டிற்கு டான்ஸ் ஆட பெயரைத் தரச் சொன்னாள். சரோஜினி தனது தோழிகளைத் திரட்டிக் கொண்டு, டான்ஸ் டீச்சர் இருந்த ஓய்வு அறைக்குச் சென்றுவிட்டாள். தனது பெயரை எப்படி எடுக்கலாம் என்று கேட்டாள். அவளது பெயரை நீக்கியது எப்படி வெளியே சென்றது எனத் தெரியாத டீச்சர், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று சமாளித்துப் பார்த்தார்கள். சரோஜினி பரதப்பாட்டுக்கு இல்லையென்றால், சினிமா பாட்டுக்கு ஆடுவேன் என்று லிஸ்டில் பெயரை எழுதச் சொன்னாள். டீச்சரும் எழுதிக் கொண்டார்கள். அவர்கள் சென்ற பிறகு டான்ஸ் டீச்சர், பரத நாட்டியத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளிடம், டான்ஸ் ரூம்மில் பேசுவதையெல்லாம் யாரோ வெளியே போய்ச் சொல்லுகிறார்கள். கண்டுபிடித்தால் T.c தந்துவிடுவேன் என்று எச்சரித்துவிட்டு, அறையைவிட்டு வெளியேறினார்.

டான்ஸ் டீச்சர் சென்றதும், மாணவிகள் அனைவரும் கட்டிடம் அதிர சத்தம் போட்டுக் குதித்தார்கள். மாணவி ஒருத்தி குதித்த குதியில் கட்டியிருந்த பாவாடையே அவிழ்ந்து விட்டது. டான்ஸ் டீச்சர் திரும்பி வந்து, "ஏன்டீ கழுதைகளா, மூடிக்கிட்டு இருக்க முடியலையா, கொழுப்பெடுத்த முண்டைகளா" என்று திட்டிவிட்டு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.

****

இரண்டு தினங்களுக்குப் பிறகு கலைவாணி தன்னுடன் படிக்கும் வினோதினியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள். சரோஜினியிடம் அறிமுகம் செய்து வைத்தாள். வினோதினியைப் பார்த்ததும், அவளுக்கு லோட்டஸ் அனிதாவின் ஞாபகம் வந்தது. அந்தப் பிள்ளையிடம் உன்னுடைய அம்மாவின் பெயர் என்ன என்று கேட்டாள். தன்னுடைய அம்மாவின் பெயர் விசாலாட்சி என்றும், அப்பாவின் பெயர் கல்யாண ராமன் என்றும் சொன்னாள். அதற்குப்பிறகு தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

வினோதினியும், கலைவாணியும் ஒன்றாகப் பள்ளிக்குச் செல்லவும், பள்ளியிலிருந்து திரும்புவதுமாக இருந்தார்கள். விசாலாட்சிகூட இரண்டுமுறை கலைவாணியின் வீட்டிற்கு வந்து சென்றாள். வினோதினி கலையுடன் பழகத் தொடங்கியதிலிருந்து தனக்குப் பாதி வேலைகள் குறைந்துவிட்டதாகச் சொன்னாள். சரோஜினி. விசாலாட்சி தன் மகளை அவளது வீட்டில் விட்டுவிட்டுச் செல்லும்போது "சண்டை போடக்கூடாது,பொய் பேசக்கூடாது" என்று கட்டளையிட்டு விட்டுச் சென்றாள்.

சரோஜினி அவளிடம், "நீ ரொம்ப பொய் பேசுவியா" என்று கேட்டாள். அவள் வெட்கப்பட்டு, "இல்லே அத்தை பொய்யே பேசமாட்டேன்" என்று கோணலாக நின்று கொண்டு நெளிந்தாள். சரோஜினி திரும்பவும் "என்ன மாதிரி பொய் பேசுவே, ஒருதடவை எனக்குச் சொல்லிக் காட்டேன்" என்றாள். அவள் சொல்லமாட்டேன் என்பதுபோல வெட்கத்துடன் கலையை அழைத்துக் கொண்டு வீட்டின் பின்பாகச் சென்றுவிட்டாள். அவர்கள் இருவரும் 7வது வகுப்பு ‘சி’ பிரிவில் காஞ்சனமாலா தேவி டீச்சரிடம் படித்துக் கொண்டிருந்தார்கள். காஞ்சனா டீச்சர் சரோஜினி படிக்கும் போதெல்லாம் பள்ளிக்கூடத்தில் சேர்ந்திருக்கவில்லை. இப்போதுதான் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

பிள்ளைகள் இருவரும் என்ன விளையாட்டு விளையாடுகிறார்களென அவர்களுக்குத் தெரியாமல் பார்க்க விரும்பினாள் சரோஜினி. அவர்கள் இருவரும் பாட்டுப் பாடிக் கொண்டு, நடனமாடிக் கொண்டிருந்தனர். சினிமாப் பாடல்களை மனப்பாடம் செய்து அப்படியே ஒப்பிப்பது போல விநோதினி சொல்லிக் கொண்டிருந்தாள். கலைக்கு கொஞ்சம் நடனம் தெரிந்திருக்கிறது. நல்ல மாதிரியாகத்தான் அசைந்து கொண்டிருந்தாள்.

பிள்ளைகளுக்கு எப்படித்தான் தங்களைப் பார்ப்பது தெரிந்ததோ, உடனே நடனத்தையும், பாட்டையும் நிறுத்திவிட்டு ஏதோ பேசிக் கொண்டிருப்பது போன்ற பாவனையில், உட்கார்ந்து கொண்டனர்.

*****


சரோஜினியின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த வினோதினியை அழைப்பதற்கென அன்று வெகு முன்பாகவே வந்திருந்தாள் விசாலாட்சி. தினமும் 8 மணிக்கு மேல்தான் தன் மகளை அழைக்க வருவாள். வீட்டின் வாசலில் தெருப் பிள்ளைகளோடு கலையும், வினோதினியும் விளையாடிக் கொண்டிருந்தனர். தன் அம்மாவைப் பார்த்ததும் அவளது விளையாட்டு சுவாரஸ்யமற்று நின்றது. ஆனால் விசாலம் தன் மகளை அழைத்துக் கொண்டு உடனே செல்லவில்லை. சரோஜினியுடன் வாசல்படியில் அமர்ந்து கொண்டாள். சரோஜினி வீட்டுக்குள் பலமுறை அழைத்தும் அவள் வீட்டுக்குள் செல்லவில்லை.

இந்தவருடம் பள்ளிக்கூட ஆண்டு விழாவில் விநோதினி நடனமாடப் பெயர் தந்திருக்கிறாள் என்று விசாலம் அவளிடம் சொன்னாள். பதிலுக்கு சரோஜினியும் தன் மகளும் பரதநாட்டியத்திற்குப் பெயர் தந்திருக்கிறாள். தினமும் ரிகர்ஸல் தர்றாங்க என்றாள். விசாலம் ஆச்சரியமானவளாக எந்தப் பாட்டிற்கு பரதநாட்டியம் ஆடப் போகுது கலை என்று கேட்டாள். சரோஜினியும், கலைவாணியும் ஒரே நேரத்தில் அந்தப் பாட்டின் முதல் வார்த்தையைச் சொன்னார்கள்.

விசாலம் அந்தப் பாட்டிற்கு டான்ஸ் ஆடுறவங்க இரண்டு, மூணு மாசத்திலேயே சடங்காகி விடுவாங்க. இந்த விசயம் உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டாள். சரோஜினி தனக்கு எதுவும் தெரியாது என்றதும், அவள் போன வருடம் இந்தப் பாட்டிற்கு ஆடியவர்கள், அதற்கு முன் வருடத்தில் நடனமாடியவர்கள் என அனைவரின் பெயர்களையும் சொல்லி வரிசையாக மாதம் வாரியாக பூப்பெய்தி உட்கார்ந்ததைச் சொன்னாள். சரோஜினிக்கு ஆச்சரியமாக இருந்ததைப் போல, பிள்ளைகள் இருவரும் வெட்கப்பட்டவர்களாக நின்றிருந்தனர்.

எல்லாப் பாட்டிற்கும் டான்ஸ் ஆடுற பிள்ளைகள் பெரிய மனுஷியாக மாட்டாங்க. நீங்க சொன்ன பாட்டுக்குத்தான் அப்படியொரு ராசி. டீச்சரே அந்தப் பாட்டை செலக்ட் பண்ண யோசிப்பாங்க. போன வருசம் விநோதினி கேட்டா, நான் மாட்டேன்னு சொல்லிட்டேன். மேடையில் அந்தப் பாட்டுத்தான் முதல்ல வரும். எப்படியும் பொம்பளப் பிள்ளைங்க பெரிய மனுஷியாகமணுமில்ல. கவலைப்படாதீங்க என்றவள், இன்று மதியம் வைத்த குழம்பு, கறி, காய் என பேசிக் கொண்டு போனாள்.

சரோஜினி "இன்னிக்குப் பள்ளிக்கூடத்தில விநோதினிக்கும், இன்னொரு பிள்ளைக்கும் சண்டையாமே" என்று கேட்டாள்.

விநோதினி "இல்லை அத்தை. உலகத்தில் பொய் பேசுறதில் முதல் பரிசு வாங்கினது, பிரான்ஸ் நாட்டு பெட்ரிக் ஹாரிவன்தான், அப்படின்னு என்னோட ஃபிரண்ட்ஸ்கிட்டே சொல்லிக்கிட்டு இருந்தேன். அப்போது இன்னொருத்தி இல்லே, ஹாரிவனுக்கு இரண்டாம் பரிசுதான் தந்திருக்காங்க. முதல் பரிசு வில்லியம் ஒயிட் மூன்னுக்குத் தந்திருக்காங்க அப்படின்னு சொன்னா. நான் இல்லவே இல்லைன்னு சொன்னேன். அப்படியே சண்டை வந்துருச்சு. அப்புறம் மத்தவங்க வந்து விலக்கி விட்டாங்க. நான் நாளைக்குக் காலைல என்கிட்டே இருக்கிற புத்தகத்தைக் காட்டி முதல் பரிசு வாங்கின ஆள் ஹாரிவன் தான் அப்படின்னு காட்டணும். அப்பத்தான் அந்தக் கழுதை என்னைய நம்புவாளாம்." என்றாள்.

சரோஜினி நம்ப முடியாதவளாக உண்மையில் தான் கேட்டது நிஜம்தானா என ஒரு நிமிடம் மௌனமாக இருந்தாள். பிறகு விநோதினியிடம் அந்தப் புத்தகம் உன்னுடைய வீட்டில்தான் இருக்கிறதா? எனக்குக் காட்டு என வீட்டைப் பூட்டிக் கொண்டு விசாலத்தின் வீட்டிற்குக் கிளம்பினாள்.

"உனக்கு அந்தப் புத்தகத்தை யார் வாங்கித் தந்தா" சரோஜினி கேட்டாள். விநோதினி, "எனக்கு தபாலில் வருது அத்தை. யார் அனுப்புறாங்கன்னேத் தெரியலே" என்றாள். சரோஜினிக்கும் நம்ப முடியவில்லை. தனக்கும் தபாலில்தானே அந்தப் புத்தகம் வந்தது. யார் அனுப்பியது என்று இதுவரை தன்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லையே என நினைத்தபடி நடந்தாள்.

"சரி. உன்னோட சண்டை போட்ட பிள்ளைக்கும் புக் இருக்கா."

"ஆமாம் அத்தை. என்கிட்டே காட்டிருக்கா. அவளுக்கு என்னை மாதிரியே வெளிநாட்டு ஸ்டாம்பு ஒட்டி யாரோ அனுப்புறாங்க. ஆனால் யாருன்னு அவளுக்கும் தெரியலையாம். அவங்க அம்மா லோட்டஸ் அனிதாகூட எங்க வீட்டுக்கு வந்து என்னோட புக்கைப் பார்த்துவிட்டுப் போனாங்க" என்றாள்.

"லோட்டஸ் அனிதாவை உனக்குத் தெரியுமா, அவள் மகள் உன்னோடதான் படிக்கிறாளா" என்று சரோஜினி கேட்டாள்.

"ஆமாம் அத்தை. நிரோஷாவை உங்களுக்குத் தெரியாதா. நான் ஒருமுறை உங்க வீட்டுக்குக் கூப்பிட்டு வந்திருக்கேன்னில்லை. ஞாபகமில்லையா. நீங்க அன்று தேங்காய் போளி செய்து தந்தீங்க. சாப்பிட்டுவிட்டு, நிரோஷா எங்க அம்மாவுக்கும் தேங்காய் போளின்னா ரொம்பப் பிடிக்கும்னு சொன்னாளில்லே அவள்தான். அதுக்குப்பிறகுதான் எங்களுக்கு சண்டை வந்தது." என்றாள்.

நடந்து கொண்டிருந்தவள் தன் மகளைப் பிடித்துக் கொண்டு நின்றாள். நாங்கள் எங்கள் வீட்டிற்குப் போகிறோம் என்று சொல்லிவிட்டு நடந்தாள். விசாலம் அழைக்க, அழைக்க, மறுத்தவளாக வீட்டிற்கு வந்துவிட்டாள். தன்னையும் மீறி அழுது கொண்டிருப்பதை வீட்டிற்கு வந்தபிறகுதான் உணர்ந்தாள் சரோஜினி.

கலைவாணியை அழைத்து அருகாமையில் அமரச் செய்து நிரோஷாவை உனக்குப் பிடிக்குமா என்று கேட்டாள். அவள், "எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. அவள்தான் எனக்குப் பள்ளிக்கூடத்திலேயே முதல் எதிரி" என்றாள்.

**

click here

click here
click here