உயிரோசை - 17.11.2008
 
அரசியல் சதிராட்டத்தில் இடம் மாறும் காவல் பகடைகள்
- ஆர்.அபிலாஷ்
தேச பக்தி என்ன விலை?
- இந்திரா பார்த்தசாரதி
ஒபாமாவுக்குச் செவ்வாய்க்கிரகத்தில் கடலோரமாகச் சிலை வைப்போம்
- இந்திரஜித்
தமிழ் உணர்ச்சி பாசிச உணர்ச்சியா?
- தமிழவன்
அந்தியின் நிழல்கள்
- வாஸந்தி
பெண் அணங்கு என்னும் பேதமை
- அ.ராமசாமி
நான் மதிக்கும் கலைஞர்கள் செய்த பிழைகள்!
- சுதேசமித்திரன்
காளைச் சண்டை அல்லது அபே சாதா என அழைக்கப்பெறும் ஒரு பெண்
- யமுனா ராஜேந்திரன்
கெட்ட பயல்
- வா.மணிகண்டன்
ஆடும் மாடும் எங்கள் கூட்டம் - I
- ந. முருகேசபாண்டியன்
ஒரு குரூரமான மோதலில் மறைந்திருக்கும் ஜாதீயம்
- மாயா
சட்டம் ஒரு ஜாதி அறை
- மனோஜ்
கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம்
- ஸ்ரீபதி பத்மநாபா
மதமாற்றமும் சித்திரவதையும்
- மாயா
பேதமையும் பிரியமும்
- பாவண்ணன்
அவளும் நாய்க்குட்டியும்
- பிரேம்குமார் சண்முகமணி
முதல் முத்தம்
- வே. பிச்சுமணி
விழைதல்
- நிஷாந்தன்
கடற்கரையில் ஓர் காலை
- அனுஜன்யா
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்
- கோகுலன்
கே.பாலமுருகன் கவிதைகள்
- கே.பாலமுருகன்
பொய் சொல்வதற்கெனப் பிறந்தவர்கள்
- எஸ்.செந்தில்குமார்
தருமி முதல் தசாவதாரம் வரை
- தமிழ்மகன்
நிறை செம்பு நீரில் விழும் பூக்கள்
- கழனியூரன்
எதிர்கால இந்தியா
- பாபுஜி
ஜுரம்
- பாபுஜி
ஜேக் கெரவேக் கவிதைகள்
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
லா.ச.ரா.வுக்கு - தீப. நடராஜன் எழுதியது
- தீப. நடராஜன்
அழுதழுது பெற்றாலும், பிள்ளையை அவள்தான் பெற வேண்டும்
- கழனியூரன்
தமுக்கு
- சிவன்
அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்
- ஹரன் பிரசன்னா
உங்கள் கருத்துகள்
- -
click here
ஒரு குரூரமான மோதலில் மறைந்திருக்கும் ஜாதீயம்
மாயா

 

சாவுக்குக் காத்திருக்கும் வெட்டியான் போல காத்திருந்த ஊடகங்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் தவம் பலித்துவிட்டது. திரும்பத் திரும்ப காட்டி டி.ஆர்.பி ரேட்டிங்கை ஏற்றிக்கொள்ள, பரபரப்பாக எழுதி விற்பனையை அதிகமாக்கிக்கொள்ள மீடியாவுக்கு ஒரு லைவ் வன்முறைக் காட்சி கிடைத்துவிட்டது. சட்டசபை கூட்டத் தொடரில் சண்டையையும் பரபரப்பையும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கழுகுகளுக்கு சட்டசபையின் ஆளெடுப்பு மையங்களாக இருக்கும் சட்டக் கல்லூரி ஒன்றில் செம வேட்டை கிடைத்தது. தமிழ் சமூகத்தின் ஜாதிரீதியான பிளவுகளின் பூதக் கண்ணாடியாக இருக்கும் நமது கல்லூரிகளில் பல காலமாக நடந்து வரும் ஜாதி மோதல், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர்களுக்கே உரிய மூர்க்கத்தனத்துடன் நடந்தது.

 

உலகம் தெரியாத பழங்குடியினர் மத்தியில் நடக்கும் காளை அல்லது குதிரை சண்டை போல சட்டம் படிக்கும் மாணவர்கள் மோதிக்கொண்டார்கள். அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போலீஸ், பொது மக்கள், செய்தியாளர்கள் சேவல் சண்டையை பார்த்தது போலத்தான் ஆரம்பத்தில் இந்தச் சண்டையை பார்த்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. மிருகத்தனமான மோதல் என்று பலரும் இதை வர்ணிக்கிறார்கள். ஆனால் மிருகங்களுக்கிடையிலான சண்டையில்கூட இதைவிட சிறப்பான நாகரீகத்தைக் காண முடியும். தோல்வியை ஒப்புக்கொள்ளும் விதத்தில் தரையில் புரளும் நாயை எதிரியான சக நாய் கடித்துக் குதறுவதில்லை. ஆனால் எதிரியான சக மனிதன் ஒருவன் சுய நினைவிழந்து வீழ்ந்த பிறகும் மனிதனின் ஆத்திரம் தீர்வதில்லை. எதிர்ப்பற்று பூமியில் கிடக்கும் சதைக் கூளத்தின் மீது இரும்புத் தடிகளும் உருட்டுக் கட்டைகளும் கைகள் ஓயும் வரை பிரயோகிக்கப்படும் அந்தச் சண்டையின் கடைசி கட்ட காட்சிகள்தான் மனதைப் பிசைகிறது. அறிவு, சிந்தனை என பலவற்றில் விலங்குகளைவிட ஒரு படி முன்னேறிய மனிதன் வன்முறையிலும் எப்போதோ அவர்களை மிஞ்சிவிட்டான்.

பொதுவாகவே எந்த ஒரு சண்டையிலும் அடி வாங்கியவர்கள் நல்லவர்கள், அடித்தவர்கள் கெட்டவர்கள் என்ற எளிய புரிதலே பலருக்கும் உண்டு. ஜாதிரீதியான மோதல்களின் அத்தகைய எளிதான புரிதல்கள் ஆபத்தானவை. சட்டக் கல்லூரி மோதலில்கூட புதிய ஆதிக்க சாதிகளாக உருவெடுத்திருக்கும் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை இறுதிக் கட்டத்தில் மூர்க்கமாக தாக்கும் தலித்துகளுக்கு எதிராகவே உணர்ச்சிகரமான எதிர்வினை செல்கிறது. இந்திய பாரம்பரியத்தின் மாபெரும் கண்டுபிடிப்பான ஜாதியும் அதன் அடிப்படையிலான பேதங்களும் நமது சமூகத்திலும் கல்லூரிகளும் எவ்வாறு எதிரொலிக்கின்றன என்பதை அறிந்துகொள்ளாமல் கண்ணால் கண்டதை மட்டும் வைத்து இந்த விஷயத்தில் நாம் ஒரு முடிவுக்கு வர முடியாது. மிருகங்களிடம்கூட இனம் மட்டும்தான். மனிதர்களிடையே இனம் சார்ந்த பிரிவுகளோடு ஒவ்வொரு இனக் குழுக்களின் உள்ளேயும் எக்கச்சக்கமான ஜாதிப் பிரிவினைகள் உள்ளன. தமிழகத்தில் முந்தைய சமூக எழுச்சி அலையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உயர் சாதி ஒடுக்குமுறையைத் தாண்டி வந்தார்கள். இப்போது தலித்துகளின் முறை. முன்பு ஒடுக்குதலுக்குள்ளான அதே பிற்படுத்தப்பட்டோர் இன்று அரசியல் எழுச்சி காணும் தலித்துகளுக்குத் தடையாக இருக்கிறார்கள்.

கிருஷ்ணசாமி மீதான கொலை முயற்சிகள் பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்களால் நியாயப்படுத்தப்படும், அரசால் கண்டும் காணாமல் விடப்படும் சமூகம் இது. ஒரு தலித் இயக்கத் தலைவருக்கே அந்த கதி என்றால் சாதாரண தலித்தின் நிலையை நினைத்துப் பாருங்கள். டீக்கடைகள் முதல் சட்டக் கல்லூரி வரை இந்தப் போராட்டம் வெளிப்படுகிறது. எங்கெல்லாம் தலித்துகள் எழுச்சி காண்கிறார்களோ அங்கெல்லாம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் எதிர்வினையை காண முடிகிறது. ஒரு கொடியன்குளத்தில் அவர்கள் கண்ணில் புகைவது தலித்துகளின் பொருளாதார பலம். ஒரு சட்டக் கல்லூரியில் அவர்கள் கண்ணை உறுத்துவது அவர்களின் எண்ணிக்கை பலம். தமிழகத்தின் ஜனத்தொகையில் சுமார் 24 சதவீதம் இருக்கும் தலித்துகள் ஒரு கொத்தாக அல்லாமல் தமிழகம் முழுவதும் சிதறியிருக்கிறார்கள். அதனால் அவர்களின் அரசியல் எழுச்சி பிற சமூகத்தினரை சார்ந்திருக்கும் அவலத்தைக் காண முடிகிறது. பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள பல்வேறு எதிரும் புதிருமான ஜாதிகள் தலித்துகளின் எழுச்சியை கூட்டாகத் தடுக்கின்றன. அந்த வகையில் இது போன்ற கல்வி நிலையங்களில்தான் தலித்துகளின் எண்ணிக்கை அவர்களுக்கு திருப்பி அடிக்கும் பலத்தைக் கொடுக்கிறது. இந்தச் சட்டக் கல்லூரி வன்முறையில் நாம் கண்டது அதைத்தான்.

இலுப்பைப் பூ சர்க்கரை போல உருப்படியான தலைவர்கள் இல்லாத தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்த மாணவர்களுக்கு மாயாவதியின் கட்சியைச் சேர்ந்த ஒரு ஆர்ம்ஸ்ட்ராங் பின்புலமாக இருக்கிறார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் ஆதிக்க வெறி சட்டக் கல்லூரி வரை வரும் போது அங்கு அவர்களுக்கு ஒரு சவால் வருகிறது. பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் ஜெயந்திக்கு தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒட்டிய போஸ்டரில் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்று முழுதாக போடாமல் வெறுமனே சட்டக் கல்லூரி என்று போட்டது ஒரு சில்லறை விஷயம்தான். ஆனால் நெடுங்காலமாக அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் ஒரு சின்ன தூண்டுதலில்தான் வெடிக்கும். ஏன் அம்பேத்கர் பெயரை சேர்க்கவில்லை என்ற கேள்வியே ஆதிக்க உணர்வு கொண்ட ஒருவரால் தாங்கிக்கொள்ள முடியாத விஷயம். வகுப்புக்கு கத்தியுடன் வரும், பேராசிரியர்களையே மிரட்டும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவரிடம் ஒரு தலித் இவ்வாறு கேட்டால் என்ன நேர்ந்திருக்கும் என நினைத்துப் பாருங்கள். அதுதான் நேர்ந்தது. ஒரு தலித் மாணவர் வெட்டுக் காயம் பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலித்துகளுக்கு மட்டுமே தங்கும் வசதி கொண்ட சட்டக் கல்லூரியில் தலித்துகள் ஒன்று கூடி பதிலடி கொடுப்பது, தமிழகமெங்கும் பரவியிருக்கும் சாமானிய தலித்துகளைப் போல் அன்றி, சிரமமாக இருக்கவில்லை.

இந்தப் பிரச்சனையின் பின்விளைவாக தமிழகமெங்கும் தலித்துகள் சந்திக்கப் போகும் சவால்கள், வாங்கப் போகும் அடிகள் கேமராக்களின் முன்பு நடக்காது. தென் தமிழகத்தில் தலித்துகள் திருப்பி அடிப்பார்கள் என்று தெரிந்துவிட்டதாலும் ஜாதி மோதல்கள் இரு தரப்பிலும் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த புரிதலாலும் 1990களில் நடந்தது போன்ற கலவரங்கள் நடக்கும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் தலித்துகளின் அரசியல் எழுச்சிக்கு இந்த சம்பவம் பேரிடியாக இருக்கும். பிற்படுத்தப்பட்டோர் தலித்துகளுக்கு எதிராக மேலும் உறுதியாக கைகோர்ப்பதற்கான மையப் புள்ளி போல இந்த சம்பவம் தெரிகிறது. ஏற்கனவே எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை வைத்து பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளுக்கு வலை வீசுகின்றன. பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள் பறி போகுமோ என்ற பயத்தில் கருணாநிதி பதட்டமாக என்னென்னவோ செய்கிறார். பிற சமூகத்தின் வாக்குகளையும் பெறுவது மூலம் தனது வாக்கு வங்கியை விரிவுபடுத்த நினைக்கும் திருமாவளவன் இந்த விஷயத்தில் கவனமாக அறிக்கை விடுகிறார்.

மொத்தத்தில் பிற்படுத்தப்பட்டோர்-தலித்துகளின் இடையிலான அதிகாரப் போர் எப்படி இருக்கும் என்பதற்கான அடையாளம் போல தெரிகிறது இந்தச் சம்பவம். இப்படிப்பட்ட குரூரமான அடிதடிகள் தமிழகத்தின் வீதிகளெங்கும் நடந்தால் எவ்வளவு கொடுமையாக இருக்கும்? அத்தகைய ஒரு சூழல் உருவாகாமலிருக்க வேண்டும் என்றால் தலித்துகளின் எழுச்சியை எவ்வாறு பிற்படுத்தப்பட்டோரை அரவணைத்துச் செல்ல வைப்பது என்பதை யோசிக்க வேண்டும். உரியதைக் கொடுத்திருந்தால் பாண்டவர்கள் போருக்குச் சென்றிருக்கப் போவதில்லை.

 

 

 

click here

click here
click here