உயிரோசை - 17.11.2008
 
அரசியல் சதிராட்டத்தில் இடம் மாறும் காவல் பகடைகள்
- ஆர்.அபிலாஷ்
தேச பக்தி என்ன விலை?
- இந்திரா பார்த்தசாரதி
ஒபாமாவுக்குச் செவ்வாய்க்கிரகத்தில் கடலோரமாகச் சிலை வைப்போம்
- இந்திரஜித்
தமிழ் உணர்ச்சி பாசிச உணர்ச்சியா?
- தமிழவன்
அந்தியின் நிழல்கள்
- வாஸந்தி
பெண் அணங்கு என்னும் பேதமை
- அ.ராமசாமி
நான் மதிக்கும் கலைஞர்கள் செய்த பிழைகள்!
- சுதேசமித்திரன்
காளைச் சண்டை அல்லது அபே சாதா என அழைக்கப்பெறும் ஒரு பெண்
- யமுனா ராஜேந்திரன்
கெட்ட பயல்
- வா.மணிகண்டன்
ஆடும் மாடும் எங்கள் கூட்டம் - I
- ந. முருகேசபாண்டியன்
ஒரு குரூரமான மோதலில் மறைந்திருக்கும் ஜாதீயம்
- மாயா
சட்டம் ஒரு ஜாதி அறை
- மனோஜ்
கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம்
- ஸ்ரீபதி பத்மநாபா
மதமாற்றமும் சித்திரவதையும்
- மாயா
பேதமையும் பிரியமும்
- பாவண்ணன்
அவளும் நாய்க்குட்டியும்
- பிரேம்குமார் சண்முகமணி
முதல் முத்தம்
- வே. பிச்சுமணி
விழைதல்
- நிஷாந்தன்
கடற்கரையில் ஓர் காலை
- அனுஜன்யா
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்
- கோகுலன்
கே.பாலமுருகன் கவிதைகள்
- கே.பாலமுருகன்
பொய் சொல்வதற்கெனப் பிறந்தவர்கள்
- எஸ்.செந்தில்குமார்
தருமி முதல் தசாவதாரம் வரை
- தமிழ்மகன்
நிறை செம்பு நீரில் விழும் பூக்கள்
- கழனியூரன்
எதிர்கால இந்தியா
- பாபுஜி
ஜுரம்
- பாபுஜி
ஜேக் கெரவேக் கவிதைகள்
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
லா.ச.ரா.வுக்கு - தீப. நடராஜன் எழுதியது
- தீப. நடராஜன்
அழுதழுது பெற்றாலும், பிள்ளையை அவள்தான் பெற வேண்டும்
- கழனியூரன்
தமுக்கு
- சிவன்
அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்
- ஹரன் பிரசன்னா
உங்கள் கருத்துகள்
- -
click here
மதமாற்றமும் சித்திரவதையும்
மாயா

வதையின் கதை: கல்வாரி மலையிலிருந்து அபு கரைப் வரை

அத்தியாயம்-3

நாகரிக மனிதன் ஈவிரக்கமற்று, வேண்டுமென்றே இந்த மகா அவலத்தை உருவாக்கியிருக்கிறான். இந்த அவலத்தை மாற்றவும் அவனுக்கு விருப்பமில்லை. தங்களின் ’நலன்கள்’ அச்சுறுத்தலுக்குள்ளாகும் சமயங்களில் குண்டுகளை வீசி அப்பாவிக் குழந்தைகளைக் கொன்று குவிக்கத் தயங்குவதில்லை. ஒரு மனிதனை சித்திரவதை செய்து கொள்வதில் இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. மனித வாழ்வின் ’புனிதம்,’ நாகரிக மனிதனின் மனசாட்சி பற்றியெல்லாம் இவர்கள் சொல்லும் வியாக்கியானங்களை நாம் ஒரு பொருட்டாக மதிக்க வேண்டியதில்லை.

- ஜேம்ஸ் பால்ட்வின், டெவில் பைண்ட்ஸ் ஒர்க் என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து...

குற்றவாளி என்று கருதப்பட்ட ஒரு நபரை நான்கைந்து பேர் பிடித்துக்கொள்கிறார்கள். ஒருவர் ஆவேசத்துடன் குற்றவாளியை மரக் கட்டையால் அடிக்கிறார். குற்றவாளி எனக் கருதப்பட்ட நபர் சாகும் வரை அடிகள் ஓய்வதில்லை. ஒரு சில பழங்குடியினர் மத்தியில் நடைமுறையில் இருந்த தண்டனை முறை இது. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த மோதல் நம்மிடையே இன்னும் பழங்குடி மனோபாவம் முழுமையாக அகலவில்லை எனக் காட்டுகிறது. இங்கு மோதலின் மையமாக ஜாதி இருந்தது என்றால் மேற்கத்திய நாடுகளில் அன்று முதல் இன்று வரை பழங்குடி மனோபாவத்தின் மிச்ச சொச்சமாக இருக்கும் குரூரம் மதப் பிரச்சினைகளில்தான் அதிகம் வெடித்திருக்கிறது. வட இந்தியாவிலிருந்து உலகம் முழுவதும் சென்ற நாடோடி சமூகத்தினரைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பாவிற்குள் நுழைந்த போது பெரும் அழித்தொழிப்பிற்கு ஆளானார்கள். ரோமாக்கள் என்று அழைக்கப்பட்ட அவர்கள் இசையில் சிறந்து விளங்கியவர்கள். 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் நுழைந்த அவர்களை கிறிஸ்தவ சபையும் அரசும் ஊர் விலக்கம் செய்தனர், அவர்களின் குழந்தைகள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டனர், சுரங்கங்களிலும் கப்பல்களிலும் கொடுமையாக வேலை வாங்கினார்கள், பால்கன் பகுதிகளில் அடிமைகளாக விடப்பட்டார்கள். அதற்கெல்லாம் மேலாக இந்தியாவின் லம்பாடி சமூகத்துடன் தொடர்பு கொண்ட அவர்களை உயிருடன் தீயிட்டுக் கொன்றார்கள். 2-5 லட்சம் வரையிலான ரோமாக்கள் இவ்வாறு கொல்லப்பட்டார்கள். நாடோடிகளாக, எந்தப் பின்புலமும் இல்லாமல் பல்வேறு நாடுகளில் கொடுமைகளைச் சந்தித்த அவர்கள் உயிர் பிழைத்திருக்க தங்கள் நாடோடி குணத்தை மறந்துவிட்டு ஐரோப்பாவில் மக்களோடு மக்களாகக் கலக்க வேண்டியிருந்தது. கிறிஸ்தவ சபையின் பார்வையில் அவர்களைப் போலவே பெரும் சிக்கலுக்கு ஆளானவர்கள் இன்றைய தெற்கு பிரான்ஸில் உருவான வால்டன்ஸீஸ் என்று அழைக்கப்பட்ட பிரிவினர்.

 தங்கள் சொந்த நாட்டின் அழித்தொழிப்பிலிருந்து தப்புவதற்காக தற்போது இத்தாலியில் உள்ள பியட்மண்ட் பள்ளத்தாக்கில் வந்து தங்கிய வால்டன்ஸீஸ் என்ற சமூகத்தினருக்கு சவாய் பகுதியின் இளவரசர் ட்யூக் ஆன்ட்ரூ கஸ்டால்டோவிடமிருந்து உத்தரவு வந்தது: "ஒவ்வொரு குடும்பத் தலைவரும் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களும் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்ட மூன்றே நாட்களில் இந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும்... அல்லது அதே மூன்றே நாட்களுக்குள் ரோமன் கத்தோலிக்கர்களாக மாற வேண்டும். தவறினால் உயிர், பொருள், வீடுகள் பறிக்கப்படும்." கத்தோலிக்கர்களால் அந்தச் சமயத்தில் நடத்தப்பட்ட மதப் பிரச்சாரத்தின் சிறு அடையாளம்தான் இது. மதத்துக்கும் மன்னனுக்குமான தொடர்பு உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கிறது. கத்தோலிக்கர்களுக்கு ஆதரவாக அந்நாட்டுப் படைகளும் மதப் பிரச்சார வேட்டைகளை நடத்தின. வால்டன்ஸீசில் கெடு முடிந்த மூன்று நாட்களில் அதுதான் நடந்தது.

மன்னனின் உத்தரவையடுத்து ஆயுதம் தாங்கிய பெரும் கும்பல் ஆக்ரோஷத்துடன் களத்தில் இறங்கியது. எதிர்த் தரப்பில் ஆயுதம் தாங்கிய ஒரு சிலர் அவர்களுடன் மோதினார்கள். பலர் தங்கள் குடும்பத்துடன் மலைக்குத் தப்பியோடினார்கள். எல்லாம் முடிந்த பிறகு வீடுகளின் தரைகள் ரத்தத்தால் மெழுகப்பட்டிருந்தன. பிணங்கள் வீதியெங்கும் சிதறிக் கிடந்தன. முனகல்களும் அழுகுரலும் எங்கும் ஒலித்தன. ஒரு கிராமத்தில் அந்தக் கொடுமையின் மோசமான உதாரணத்தைக் காண முடிந்தது. ஆண்கள் அனைவரும் ஊரை விட்டு ஓடிவிட்டிருந்ததால் பெண்களும் குழந்தைகளும் மட்டும்தான் அந்தக் கிராமத்தில் இருந்தார்கள். பெண்களின் தலைகளைக் கொய்த ஆயுதம் தாங்கிய கத்தோலிக்க மதப் போராளிகள், குழந்தைகளின் மூளையை வாளால் சிதைத்தார்கள். வில்லாரோ, பாபியோ ஆகிய இரண்டு ஊர்களில் தேவாலய வழிபாட்டிற்குச் செல்ல மறுத்த 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டார்கள்.

கடவுளின் பெயரால் வேட்டைக்குச் சென்ற வீரர்கள் குரூரத்தில் திளைத்தார்கள். அவர்கள் விதவிதமான ஊனங்களை ஏற்படுத்தினார்கள். ஒரு சிலரின் கைகளைக் கொய்தார்கள், ஒரு சிலருக்குக் கால்களை. கை, கால்கள் வெட்டப்பட்டு ரத்தப் போக்கினாலும் பட்டினியாலும் சாக அப்படியே விட்டுச் சென்றார்கள் அந்த வீரர்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்த கொடுமை முறைகளில் இதுவும் ஒன்று: வாயில் வெடி மருந்தைக் கொட்டிவிட்டு, தீயைக் கொளுத்தி உள்ளே போடுவது. ஒவ்வொரு நாளும் கையிலும் காலிலும் ஒவ்வொரு விரலாக வெட்டி, கத்தோலிக்க மதத்தில் சேர நெருக்கடி கொடுப்பார்கள். இப்படிப்பட்ட தொடர்ச்சியான தண்டனைகள், கொடுமைகளால் வால்டன்ஸீஸ் பகுதி ஆள் இல்லாத வனாந்திரம் போல மாறியது. மலைக்குத் தப்பிச் சென்றவர்களும் பட்டினியால், நோயால் சாக நேர்ந்தது.

1646ல் ஜார்ஜ் பாக்ஸ் என்பவர் அமைத்த சொஸைட்டி ஆப் பிரண்ட்ஸ் என்ற மதப் பிரிவுக்கு அதே கதிதான் நேர்ந்தது. மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்ததால் சிறிது காலத்திலேயே கிறிஸ்தவ சபைக்கு பெரும் சவாலாக அது உருவானது. க்வேகர்ஸ் என்று பட்டம் வைத்து அழைக்கப்பட்ட இந்த மதப் பிரிவில் சேர்வதைத் தடுக்க இரண்டாம் சார்லஸின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு கொடுமைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அந்த இயக்கத்தில் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் சார்ந்த தண்டனைகளில் உயிருடன் எரிப்பது, தண்ணீரில் மூழ்க வைத்து உயிரைப் பறிப்பது, மூச்சுத் திணற வைத்து சாகடிப்பது ஆகியவை அதிகம் பயன்படுத்தப்பட்டன. தமிழகத்தில் மத மாற்றத்தோடு தொடர்புடைய கருவி கழு மரம். ஆசனவாயில் நுழைக்கப்படும் கூரிய கழு மரம் உடலைக் கிழித்துக்கொண்டு உச்சி வரை வருவதை இன்று நினைத்தே பார்க்க முடியவில்லை. ஆனால் ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கானோர் இந்த முறையில் செத்திருக்கிறார்கள்.

 கி.பி 7ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கத்தை மையமாகக் கொண்டு சமண, பெளத்த மதங்களை வேரறுக்க முயற்சிகள் நடந்தன. அதன் ஒரு அங்கமாக நடந்த சித்திரவதை குறித்து தமிழாய்வாளரான மயிலை சீனி வேங்கடசாமி இவ்வாறு கூறுகிறார்: "சமண சமயம் பல விதங்களில் தாக்கப்பட்டது. கொடுமைப்படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம்." சமணத்திலிருந்து பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் சைவத்திற்கு மாறினான். தான் மாறியதோடு சமணத் துறவிகளை, அதைப் பின்பற்றிவர்களை அந்த மன்னன் என்ன செய்திருப்பான்? தத்துவ மோதலில் தோற்று அவர்கள் தாங்களாகவே கழுவேறினார்கள் என்பது ஒரு பிரிவினரின் வாதம். ஆனால் அவ்வாறு கழு ஏறாதவர்களைக் கட்டாயப்படுத்தி ஏற்றினார்கள் என்பதற்கான குறிப்புகள் பல நூல்களில் கிடைக்கின்றன. நவீன வரலாற்றுப் பதிவு முறைகள் இல்லாததால் கழுவேற்றுதல் குறித்த தெளிவான காட்சியை இன்று நாம் காண முடியவில்லை. ஆனால் ஐரோப்பாவில் கடவுளின் பெயரால் நடந்த சித்திரவதைகள் குறித்த ஆவணங்கள் அன்று நடந்த காட்சியை இன்றும் கண் முன்னால் நிகழ்ந்ததைப் போல முன்வைக்கின்றன. அதில் மறக்கப்பட முடியாதது ஜோன் ஆப் ஆர்க்கின் மரண தண்டனை.

இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்த பிரான்சின் மறு எழுச்சியை முன்னின்று நடத்திய ஜோன் ஆப் ஆர்க்கைக் கைது செய்த இங்கிலாந்து ராணுவம் அவர் மீது தொடுத்தது ராஜ துரோக குற்றச்சாட்டு அல்ல, கடவுள் துரோக குற்றச்சாட்டு. சாத்தானை வழிபடுவதாகக் கூறி அவருக்கு எதிராக heresy குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. புனித விசாரணை (Holy Inquisition) என்ற பெயரில் கிறிஸ்தவ மத குருமார்களின் உதவியுடன் அவர் சாத்தனின் கட்டுப்பாட்டில் உள்ளவர் என ’நிரூபிக்கப்பட்டது.’ ஒரு மரத்தில் கட்டப்பட்டு, சுற்றிலும் விறகுகள் போடப்பட்டு பல நூறு பேர் வேடிக்கை பார்க்க எரித்துக் கொல்லப்பட்டார் ஜோன் ஆப் ஆர்க். அன்று சாத்தானின் வடிவம் என்று எரித்தார்கள், இன்று இயேசுவின் வடிவம் என புனிதராக மதிக்கிறார்கள். 21ஆம் நூற்றாண்டில் சாத்தானின் வடிவங்களை ’தேடிப் பிடித்து’ உயிருடன் எரிக்கும் பழக்கத்தை கிறிஸ்தவம் கைவிட்டுவிட்டாலும் இயேசுவின் வடிவங்களுக்கு சாட்சியங்களை ’தேடிப் பிடித்து’ புனிதர் பட்டத்தைக் கொடுக்கும் பழக்கம் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. அதே போல கழுவேற்றிக்கொண்டிருந்தவர்கள் இன்று குண்டு வைக்கும் நிலை வரை வந்திருக்கிறார்கள். ’சாத்வீக புனித தேவதைகள்’ இரு சக்கர வாகனத்தில் வெடிகுண்டுகளை ஏற்றிச் செல்லும் யுகம் இது.

இன்னொரு பக்கம் வலது சாரி கிறிஸ்தவத்தைத் தனது வழிகாட்டும் சக்தியாகக் கொண்ட தற்போது பதவியிழந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷும் அமெரிக்காவின் சி.ஐ.ஏவும் சித்திரவதையின் சிந்தனை மரபுக்கு 21ஆம் நூற்றாண்டில் புது ரத்தம் பாய்ச்சியிருக்கிறார்கள். அதில் ஒரு சில அம்சங்கள் நம்மூரின் புஷ் என வர்ணிக்கப்படக்கூடிய ஜெயலலிதாவுடன் தொடர்புடையவை. சி.ஐ.ஏவுக்கும் ஜெயலலிதாவின் ஆட்சியில் நடந்த கொடுமை முறைக்கும் என்ன தொடர்பு?

அடுத்த வாரம்.

click here

click here
click here