உயிர்மை - June 2014
 
என்ன செய்யப் போறீங்க மிஸ்டர். மோடி?
- ஆர்.அபிலாஷ்
உலகமயமாக்கலில் சமூகம் மற்றும் கலாசாரம் மேற்கும் கிழக்கும் ஓர் ஒப்பீடு
- எச்.பீர்முஹம்மது
ஈழம்: முள்ளிவாய்க்காலுக்குப் பின் ஐந்து ஆண்டுகள்
- தீபச்செல்வன்
வாசிப்பு அனுபவங்களும் புத்தக மதிப்புரைகளும்
- ந.முருகேசபாண்டியன்
ஒரு வாரம்
- அ.முத்துலிங்கம்
மதிப்பிடமுடியாத காதல்
- எஸ்.ராமகிருஷ்ணன்
சுவை இன்பத்தின் எட்டுப் பேருரைகள்
- ஷாநவாஸ்
தனிக்கல்
- நஞ்சுண்டன்
அசைவின் மொழி
- எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
தனி நாடாக தமிழீழம்
- தீபச்செல்வன்
வார்த்தைகளின் புதர்க் காட்டில் தப்பி ஓடும் காட்டு வாத்து
- இந்திரன்
மனுஷ்ய புத்திரன் கவிதைகள்
- மனுஷ்ய புத்திரன்
என்ன மாதிரியான யுகம் இது?
- மனுஷ்ய புத்திரன்
கல்தொட்டி
- பாவண்ணன்
நீலக்கை
- அதிஷா
கடிதங்கள்
- வாசகர்கள்
பெத்தவன்
- வெளிரங்கராஜன்
சுஜாதா விருதுகள் 2014
- சுஜாதா விருதுகள் 2014
சொல்லப்படாத கதை
- இமையம்
தொலைந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிய கதைகள்
- அ.ராமசாமி
வரலாறும், வெங்காய அடுக்குகளும்
- சகஸ்
click here
மதிப்பிடமுடியாத காதல்
எஸ்.ராமகிருஷ்ணன்

“Human emotions are like art. They can be forged.

- Virgil Oldman

குசாபே டொர்னாடோர் இத்தாலியின் புகழ்பெற்ற இயக்குனர். இவரது  இயக்கத்தில் வெளியான சினிமா பாரடிஷோ திரைப்படம் முப்பதுக்கும் மேற் பட்ட சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறது. மெலினா, ஸ்டார்மேக்கர் 1900 போன்ற படங்களை இயக்கிப் புகழ்பெற்ற இவரது சமீபத்திய திரைப்படம் THE BEST OFFER..

கலைப்பொருட்களை மதிப்பீடு செய்வதும், ஏலம்விடுவதுமாக வாழ்ந்துவரும் விர்ஜில் என்ற வயதான மனிதரின் காதலையும் அவரது கலைஈடுபாட்டினையும் படம் முன்வைக்கிறது. ஒருவகையில் விர்ஜில், 1900 படத் தில் வரும் வயலின் இசைக்கலைஞரின் மறுவடிவமே.  இருவரும் தங்களின் அகவுலகிற்குள், கனவுகளில் வாழ்பவர்கள்.

குசாபேயின் படங்களில் தொடர்ச்சியாகக் காணப் படும் ஒரு அம்சம் இழந்த காதலைப் பற்றிப் பேசுவது. ஒவ்வொரு படத்திலும் இது ஒரு மாதிரியாக அமையும். ஸ்டார் மேக்கரில் வரும் போலியான திரைப்படம் எடுப்பவனுக்கும் இது போன்ற அனுபவமே ஏற்படுகிறது. மெலினாவைக் காதலிக்கும் சிறுவனுக்கும் அதே நிலை தான். இப்படத்தில் விர்ஜில் காதலின் பெயரால் ஏமாற்றப்படுகிறார். அவர் கலையின் பெயரால் உலகை ஏமாற்றியதைப் போல காதலின் பெயரால் கொள்ளையடிக்கப்படுகிறார். 

நகல் என்பது கலையில் மட்டுமில்லை, காதலிலும் உண்டு என்பதே படத்தின் மையக்கதை.

புகழ் பெற்ற ஓவியர்களின் ஒரிஜினல் ஓவியங்களைப் போலியெனச் சொல்லி அற்பவிலைக்கு வாங்கி தனது சேமிப்பில் பதுக்கி வைத்துக் கொண்டு உலகை ஏமாற்றி வாழும்  ஏலவிற்பனையாளர் விர்ஜில், மிகவும் வசதியான வர். அவரை எப்படிக் காதலின் பெயரால் தந்திரமாக ஏமாற்றுகிறார்கள் என்ற துப்பறியும் கதையை தீவிரமான கலைப்படைப்பாக மாற்றியிருப்பது குசாபேயின் கலைத்திறன்.

படத்தின் வெற்றிக்குப் பெரிதும் துணை நிற்பவை ஒளிப்பதிவும் கலைஇயக்கமும் இசையுமே. இசைமேதை எனிமோ மோரிகோன் படத்திற்கு இசை அமைத்தி ருக்கிறார். மேதமையின் சுவடுகளைப் படம் முழுவதும் நாம் உணர முடிகிறது.  பழங்காலப்பொருட்களை, ஓவியங்களை மதிப்பீடு செய்வதில் வல்லவரான வர்ஜில் ஒல்ட்மேன் தனியாக வாழ்கிறார். எந்தக் கலைப் பொருளையும் கண்ணால் பார்த்தமாத்திரம் அது ஒரிஜினலா அல்லது நகலா என்று சொல்லிவிடக்கூடியவர். ஆகவே பழம்பொருள் விற்பனையகம் அவரது கருத்தை அறிந்தே பொருட்களை ஏலம்விடுகின்றன. அவரே ஏலம் நடத்துகிறார்.

தனக்குப் பிடித்தமான ஓவியம் என்றால் அதை ஆள் வைத்து மலிவான விலைக்கு வாங்கிவிடுவார் விர்ஜில். அப்படி அவர் சேகரிக்கின்ற ஓவியங்கள் அத்தனையும்  பெண்கள். வெவ்வேறு ஓவியர்களால் வரையப்பட்ட அழகான பெண் ஓவியங்களை தனது  அறைச்சுவர் முழுவதும் மாட்டி வைத்துக் கொண்டு கற்பனையான பெண்களுடன் வாழ்ந்துவருகிறார்.

வர்ஜில் ஆசைப்படுகிற ஓவியங்களை அவருக்காக ஏலத்தில் எடுத்துவந்து தருபவர் அவரது நண்பர் பில்லி. இவரும் ஒரு ஓவியரே. அவரைக் கொண்டு விர்ஜில் ஓவியங்களை ரகசியமாக வாங்குகிறார்.

இந்த வேலைக்கு ஈடாக பில்லிக்கு நிறைய பணம் தருகிறார். ஒருமுறை தான் ஆசைப்பட்ட ஓவியத்தை பில்லி ஏலம் கேட்பதற்கு முன்பு வேறு ஒரு பெண் விலைக்கு வாங்கிவிட்டதால் விர்ஜில் கோபம் அடைந்து கத்துகிறார். இதனால் மனவருத்தம் அடைந்த பில்லி அந்தப் பெண்ணிடம் பேரம்பேசி அதே ஓவியத்தை விலைக்கு வாங்கிவந்து தருகிறார். அதன்பிறகே வர்ஜில் மனசமாதானம் அடைகிறார். அந்த அளவு வெறித்தனமாக ஓவியங்களை ரசிப்பவர் விர்ஜில்.

விர்ஜிலின் இன்னொரு நண்பன் ராபர்ட். இவன் ஒரு இளம் மெக்கானிக்.  எந்தப் பொருளையும் பிரித்துப் போட்டு எளிதாக ரிப்பேர் செய்துவிடக்கூடியவன். அவனுக்கு ஒரு காதலி. அவர்கள் உல்லாசமாக சுற்று கிறார்கள். விர்ஜில் எதை மனதிற்குள் விரும்புகிறாரோ அதன் புறவடிவம் போலவே அவர்களின் காதலிருக்கிறது. ஒருநாள் விர்ஜிலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் பேசும் க்ளேயர் இப்பெட்ஸன்  என்ற இளம்பெண் தனது  வீட்டில் உள்ள பழங்காலப் பொருட்களை மதிப்பிடுவதற்கு அவரால் உதவி செய்ய முடியுமா எனக்கேட்கிறாள். ஒத்துக்கொள்ள மறுக்கும் விர்ஜிலிடம் மன்றாடுகிறாள்.

அவளது அழுகைக்கு இரங்கி அவளது வீட்டிற்குப் போகிறார். அங்கே அவரை வரவேற்க யாருமில்லை. ஆத்திரத்துடன் திரும்பி வருகிறார். மறுநாள் அதே பெண் அவரை போனில் அழைத்து திடீரென தனக்கு ஒரு விபத்து ஏற்பட்ட காரணத்தால் சொன்ன நேரத்திற்கு வரமுடியவில்லை. மறுமுறை அவர் வரவேண்டும் என்று மன்னிப்பு கேட்டு கெஞ்சுகிறாள்.

விர்ஜில் அவளைத்தேடி பழைய மேன்சன் ஒன்றிற்குப் போகிறார். அவர் போவதை அருகாமையில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து குள்ளமான ஒரு பெண் பார்த் துக் கொண்டிருக்கிறாள். அவள் ஏதோ ஒரு கணக்கைச் சொல்லிக் கொண்டேயிருக்கிறாள். அது என்னவென்று படத்தின் முடிவில் தெரிய வரும்போது திகைப்பாக இருக்கிறது.

க்ளேயர் வீட்டின் வேலைக்காரன் அவரை அழைத்துக் கொண்டு போய் சுற்றிக்காட்டுகிறான். வீட்டிலிருந்த கலைப்பொருட்களைக் கண்டு மயங்கிவிடும் விர்ஜில் அவற்றை சொற்பவிலைக்கு வாங்கிவிடலாம் என மனதிற்குள் திட்டமிடுகிறார். நிலவறையில் உள்ள பொருட்களை மதிப்பிடச் சென்றபோது அங்கே ஒரு இயந்திரத்தின் பல்சக்கரங்களைக் கண்டு எடுக்கிறார். அதன் வடிவம் விநோதமாக இருக்கவே, அதைத் தனது பாக்கெட்டில் போட்டு எடுத்துவந்து நண்பன் ராபர்ட்டி டம் தந்து பரிசோதனை செய்ய சொல்கிறார்.

இயந்திரத்தை சுத்தம் செய்யும் ராபர்ட் அதில் வாகென்ஸ்சன் என்ற பெயர் இருப்பதைக் கண்டறிகிறான். உடனே ஒல்ட்மேன் அது பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வாகென்ஸ்சன்  உருவாக்கிய மாய யந்திரம். அதுதான் உலகின் முதல் ரோபோ. அந்த விந்தையான இயந்திரம் நாம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தரக்கூடியது என அதிசயிக்கிறார்.

அவர்களுக்குக் கிடைத்துள்ளது இயந்திரத்தின் ஒருபகுதி மட்டுமே. மிச்சபகுதிகள் கிடைத்தால் அந்த ரோபோவை மீண்டும் உருவாக்கிவிடலாம் என்கிறான் ராபர்ட். இதனால் ஆர்வமான ஒல்ட்மேன் அந்த வீட்டிலிருந்து இயந்திரத்தின் மற்ற உதிரி உறுப்புகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டுவர முயற்சிக்க துவங்குகிறார். ஆனால் இளம் பெண் க்ளேயர் தடுமாற்ற மான மனநிலை கொண்டவளாக இருக்கிறாள். திடீரென அவள் இனிமேல் விர்ஜில் பொருட்களை மதிப்பிட வேண்டாம் என துரத்திவிடுகிறாள்.

இதனால் ஆத்திரமாகி வெளியேறிவிடும் விர்ஜில் அந்த வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்பதைக் கண்டறிய அருகாமை உணவு விடுதிக்குள் மறைந்து நின்று கண்காணிக்கிறார். மறுநாள் க்ளேயரிடமிருந்து மீண்டும் போன் வருகிறது. அவள் மன்னிப்பு கேட்கிறாள். மறு முறை கலைப்பொருட்களை மதிப்பிட வருமாறு அழைக்கிறாள்.  அழைப்பை ஏற்று அந்த வீட்டிற்குப் போகிறார்.

அப்போதுதான் ஒரு உண்மையைக் கண்டுபிடிக்கிறார்.க்ளேயர், agoraphobia நோயால் அவதிப்படுபவள். அதாவது வெளியே வந்தால் திடீரென தனக்கு ஏதோ நடந்துவிடும் என்ற பயம். அதனால் வெளியுலகிற்கே வரமாட்டாள். வீட்டின் சுவருக்குள் ஒரு ரகசிய அறை அமைத்து அதற்குள் வசிக்கிறாள். கிட்டத்தட்ட அவள் ஒரு ஓவியத்திலிருக்கும்  பெண் போலவே அவருக்குத் தோன்றுகிறாள்.

இதை அறிந்து கொண்ட விர்ஜில் தான் கற்பனையாக ஆராதனை செய்து வந்த ஓவியப்பெண்களில் ஒருத்தி திடீரென தன்னோடு உரையாடுவது போல உணர ஆரம் பிக்கிறார். அவள் மீது ஈர்ப்பு கொண்டு அலங்காரப் பூக்கள் கொண்ட சுவரின் முன்னால் உட்கார்ந்தபடியே அவளுடன் பேசுகிறார்.

ஒருமுறையாவது அவளைப் பார்த்துவிட வேண்டும் என விரும்பி வீட்டின் தூணிற்குப் பின்புறம் ஒளிந்து கொண்டு அவளைக் கண்காணிக்கிறார். ரகசிய அறையில் இருந்து க்ளேயர் வெளியே வரும்போது பார்த்துவிடுகிறார். க்ளேயர் அழகான இளம்பெண். மெலிந்த உடல் அமைப்பு கொண்டிருக்கிறாள். அவள் மீது அவருக்கு இனம் புரியாத காதல் உருவாக ஆரம்பிக்கிறது.

எப்படி விர்ஜில் தனிமையில் வசிக்கிறாரோ, அதன் இன்னொரு நிலைதான் க்ளேயர் தனியே வசிப்பது. க்ளேயர் போலவே விர்ஜிலுக்கும் ஒரு பயமிருக்கிறது. அதுதான் எதையாவது பொருளைத் தொட்டால் வியாதி வந்துவிடும் என எப்போதும் கையுறைகளை அணிந்து கொண்டிருக்கிறார். இந்த ஒற்றுமை அவர்களை ஒன்று சேர்க்கிறது. விர்ஜில் தனது காதலை வெளிப்படுத்த தவிக்க துவங்குகிறார்.

அவளை எப்படி தன்வசமாக்குவது என்பதைப் பற்றி மெக்கானிக் ராபர்ட்டின் ஆலோசனைகளைக் கேட் கிறார். அவனது ஆலோசனைகளின்படி அவளுக்கு அழ கான உடைகள் வாங்கி தருகிறார். ஒப்பனை பொருட்கள் வாங்கி வந்து பரிசளிக்கிறார். மலர்கொத்து தருகிறார். கேண்டில் லைட் டின்னர் ஏற்பாடு செய்கிறார். அவள் மெல்ல விர்ஜில் மீது காதல் கொள்ளத் துவங்குகிறாள்.

ஊசலாட்டமான மனநிலை கொண்டவள் என்பதால் திடீர் திடீரென அவள் விர்ஜிலை விட்டு ஒதுங்கி மறைந்துவிடுகிறாள். காதலின் துயரோடு அவளைத் தேடி அலைகிறார் விர்ஜில். முடிவில் வீட்டின் நிலவறையில் ஒளிந்துகிடந்த அவளை மீட்கிறார்.

இதற்கிடையில் ஒருநாள் யாரோ முகம் தெரியாதவர்கள் ஓல்ட்மேனைத் தாக்கி காயப்படுத்திவிட வீதியில் விழுந்து துடிக்கும் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறாள் க்ளேயர். அவர்களின் நட்பு வலுக்கத் துவங்குகிறது. இரு வரும் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். உறக்க மில்லாமல் அவளது உடலை ஆராதனை செய்து கொண் டிருக்கிறார் விர்ஜில். அந்த இரவு அவரால் மறக்கமுடியாதது.

இனி க்ளேயரைத் திருமணம் செய்துகொண்டு ஏலவிற்பனையில் இருந்து ஒதுங்கிவிட முடிவு செய்யும் விர்ஜில் இதற்காக  வெளியூர் பயணம் மேற்கொள்கிறார். பயணத்திலிருந்து திரும்பிய அவருக்கு தனது சேமிப்பில் இருந்த அத்தனை ஓவியங்களும் கொள்ளை யிடப்பட்டிருப்பது தெரியவருகிறது.

தான் காதலின் பெயரால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து உடைந்து போய்விடும் விர்ஜில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். தன்னைத் திட்டமிட்டு எப்படி ஏமாற்றினார்கள் என்பதை அவர் கண்டறிகிறார். விர்ஜிலின் பலவீனம் பெண் என்பதை அறிந்து கொண்டு கலைப்பொருள் சேகரிப்பது போல அவரை ஏமாற்றிக் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நொந்து போகிறார்.

படத்தின் முடிவில் பாரீஸில் உள்ள நைட் அண்ட் டே என்ற பழைய கடிகாரங்கள் நிரம்பிய உணவகத்தில் திரும்பவும் தனது காதலி தன்னைத் தேடி வரக்கூடும் என்ற நம்பிக்கையில் விர்ஜில் காத்துக்கிடப்பதோடு படம் நிறைவுபெறுகிறது. காலம் முடிவில்லாமல் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. மனிதர்கள் காத்துக் கொண்டே யிருக்கிறார்கள் என்பதன் குறியீடு  போலவே அந்தக் கடைசிக்காட்சி உள்ளது.

விர்ஜிலாக அற்புதமாக நடித்திருப்பவர் ஜாஃப்ரி ரஷ்.. விர்ஜில் ஓல்ட்மேனின் கதைக்கும் இயந்திரம் சிறுகச்சிறுக உயிர்பெறுவதற்கும் நிறைய சம்பந்தம் உண்டு. ஒருவகையில் அந்த இயந்திரம் விர்ஜில்தான். சிதறிக்கிடந்த அவரது ஆசைகள் ஒன்று சேர்க்கப்படுகின்றன. முற்றுப்பெறாத யந்திரம் ஏமாற்றம் தருவதாக அமைகிறது. குசாபேயின் படங்களில் தனிமையை உணரும் மனிதர்கள் அதிலிருந்து மீள்வதற்காகக் கலையை நாடுகிறார்கள் என்பது பலமுறை நினைவூட்டப்படுகிறது. 1900 படத்தில் வரும் இசைக்கலைஞன் இதன் சிறந்த உதாரணம். அதே நேரம் போலிகள் நிஜத்தின் இடத்தைப் பிடிக்க முயற்சிக்கின்றன என்ற விமர்சனக்குரலும் அவரிடம் திரும்பத் திரும்ப எதிரொலிக்கின்றன.

இப்படத்தில் விர்ஜில் ஒரு இடத்தில் ஓவியங்களை நகல் எடுத்து, ஒரிஜினல் போல வரைபவன் எங்காவது ஒரு இடத்தில் தனது அடையாளத்தைக் கட்டாயம் விட்டுவைத்திருப்பான். அது அவனது பலவீனம். முழுமையான நகல் என்ற ஒன்று கலைக்கு ஒரு போதும் கிடையாது என்பார். அது உண்மை.  நகல் எடுப்பவனும்  தனது அடையாளத்தைப் பதிக்கவே ஆசைப்படுகிறான். சிறந்த நகல் எடுப்பவர்கள் தோற்றுப்போன கலைஞர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஓவியங்கள் என்பது ஆசையின் வெளிவடிவங்கள். அவை வெறும் சித்திரங்களில்லை. அதன்பின்னே சொல்லப்படாத கதைகள் இருக்கின்றன.  குறிப்பாக, மாடலாக இருந்த பெண்ணிற்கும் ஓவியனுக்குமான காதல் ரகசியமானது.  ஓவியத்தின் வழியே அந்தப் பெண் நிரந்தரமானவள் ஆகிவிடுகிறாள். கலை ஒரு பெண்ணை நித்யமாக்கிவிடுகிறது என்பதை விர்ஜில் உணர்ந்து கொண்டிருக்கிறார். அதன் வெளிப்பாடே அவர் ஓவியங்களை சேகரிப்பது.

க்ளேயர் ஒரு தூண்டில் போல விர்ஜிலைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகிறாள். அது தான் படத்தின் வசீ கரம். அவரே விரும்பி அந்த வலையில் சிக்குகிறார். விலகி விலகிப்போவதன் வழியே ஒரு ஆணை நெருங்கி வரச்செய்ய முடியும் என்ற எளிய விளையாட்டே அவரை வீழ்த்துகிறது. உணர்ச்சிகளோடு விளையாடினால் ஒரு மனிதனை எளிதில் வீழ்த்திவிட முடியும் என்பதற்கு விர்ஜில் ஒரு உதாரணம்.

விர்ஜில் என்ற பெயர் ஒரு குறியீடு. கலைமரபின் தொடர்ச்சி என்பது போல, விர்ஜில் புகழ்பெற்ற லத்தீன் மரபுக்கவிஞர்.  இப்படத்தின் மிக முக்கியமான கதாபாத் திரம் உணவு விடுதியில் உள்ள குள்ளமான பெண். அவள் ஒரு கணித மேதை. சாலையில் கடந்து செல்லும் மனிதர்களின் நடவடிக்கைகளை அவள் எண்ணிக் கொண்டேயிருக்கிறாள். அன்றாடச் செயல்கள் அத்தனை யும் பட்டியலிடுகிறாள். அவளின் வழியேதான் தான் ஏமாற்றப்பட்ட கதையை விர்ஜில் தெரிந்து கொள்கிறார். Fabio Zamarion னின் ஒளிப்பதிவு புகழ்பெற்ற ஓவி யங்களின் நிறத்தேர்வை அடிப்படையாகக் கொண்டது. படம் முழுவதும் வண்ணங்களும்,ஒளியும் அபாரமாகக் கையாளப்பட்டுள்ளது. கையில் பிரஷ் இருக்கிறது. தனக்கு ஓவியம் வரையத்தெரியும் என்பதால் ஒரு கலை ஞன் உருவாகிவிட முடியாது. அவனுக்குள் ஒரு “inner mystery” வேண்டும் என்று விர்ஜில் ஒரு இடத்தில் கூறுகிறார். அந்த மர்மம் கொண்ட கலைஞனாகவே குசாபே எப்போதுமிருக்கிறார். அதுவே அவர் திரைப் படங்களை சிறந்த கலைப்படைப்பாக மாற்றுகிறது.

writerramki@gmail.com

click here

click here
click here