உயிர்மை - June 2014
 
என்ன செய்யப் போறீங்க மிஸ்டர். மோடி?
- ஆர்.அபிலாஷ்
உலகமயமாக்கலில் சமூகம் மற்றும் கலாசாரம் மேற்கும் கிழக்கும் ஓர் ஒப்பீடு
- எச்.பீர்முஹம்மது
ஈழம்: முள்ளிவாய்க்காலுக்குப் பின் ஐந்து ஆண்டுகள்
- தீபச்செல்வன்
வாசிப்பு அனுபவங்களும் புத்தக மதிப்புரைகளும்
- ந.முருகேசபாண்டியன்
ஒரு வாரம்
- அ.முத்துலிங்கம்
மதிப்பிடமுடியாத காதல்
- எஸ்.ராமகிருஷ்ணன்
சுவை இன்பத்தின் எட்டுப் பேருரைகள்
- ஷாநவாஸ்
தனிக்கல்
- நஞ்சுண்டன்
அசைவின் மொழி
- எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
தனி நாடாக தமிழீழம்
- தீபச்செல்வன்
வார்த்தைகளின் புதர்க் காட்டில் தப்பி ஓடும் காட்டு வாத்து
- இந்திரன்
மனுஷ்ய புத்திரன் கவிதைகள்
- மனுஷ்ய புத்திரன்
என்ன மாதிரியான யுகம் இது?
- மனுஷ்ய புத்திரன்
கல்தொட்டி
- பாவண்ணன்
நீலக்கை
- அதிஷா
கடிதங்கள்
- வாசகர்கள்
பெத்தவன்
- வெளிரங்கராஜன்
சுஜாதா விருதுகள் 2014
- சுஜாதா விருதுகள் 2014
சொல்லப்படாத கதை
- இமையம்
தொலைந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிய கதைகள்
- அ.ராமசாமி
வரலாறும், வெங்காய அடுக்குகளும்
- சகஸ்
click here
வார்த்தைகளின் புதர்க் காட்டில் தப்பி ஓடும் காட்டு வாத்து
இந்திரன்

"இங்கே என்ன நடக்கிறது?" ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் கீழே விழுந்தபோது  நியூட்டன் கேட்டக் கேள்விதான் இது.  இங்கே என்ன நடக்கிறது ?” இந்தக் கேள்வி யைத்  தொடர்ந்து அவன் பயணப்பட்டதின் பலனாகத்தான் புவியீர்ப்பு விசை குறித்த மிக நல்ல தரிசனம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது.  பதில் கிடைத்திராவிட்டாலும்கூட நியூட்டனுக்குக் கிடைத்த அந்தக் கேள்வியே விலை மதிப்பற்றதுதான் இல்லையா?

அறிவியல் உலகத்துக்கு இது சரி. ஆனால் கலையு லகத்துக்குள் சஞ்சாரம் செய்வதற்கு இது சரிப்பட்டு வருமா? வரும் என்றுதான் தோன்றுகிறது. தினந்தோறும் என்னைத் தேடி வரும் கவிதைத் தொகுப்புகளைப் பிரித்துப் படிக்கிறபோதெல்லாம் இதே கேள்விதான் என்னைத் தொந்தரவு செய்கிறது.  இன்னமும் பல இலக்கியக் கூட்டங்களில் "இவர் ஒரு நல்ல கவிஞர்"  என்று ஒரு இளம் ஆணோ அல்லது இளம் பெண்ணோ என்னிடம் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள்.. என் கையில் அவர்களது கவிதைத் தொகுப்புகள்  கொடுக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. அப்படியென்றால் என்ன அர்த்தம். தொடித்தலை விழுத்தண்டூன்றினார் எனும் சங்கப் புலவரை எந்த மன அவஸ்தை அல்லது பரவச நிலை கவிதை எழுதுமாறு கட்டாயப்படுத்தியதோ , அதே மன அவஸ்தை அல்லது பரவச நிலைதான்  இன்றைய இந்த இளம் ஆண்களையும்,  பெண் களையும் கவிதையின் சிருஷ்டி அனுபவத்துக்குள் மூழ்கி முக்குளிக்குமாறு தூண்டுகிறது (நான் இங்கு குறிப்பிடுவது வேலைக்குப் போனவுடன் முதல் சம்பளத்தில் ஒரு மைனர் செயின் வாங்கிப் போட்டுக் கொள்வது போல, ஒரு மோட்டார் சைக்கிள் வாங்குவதுபோல, கவிதைத் தொகுப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி பெருமைக்கு வெளியிட்டுக் கொள் பவர்களைப் பற்றி அல்ல என்பதை நீங்கள் இங்கே கவனிக்க வேண்டும்). கவிதை படைத்தல் என்பதை ஒரு வாழ்வனுபவமாகக் கருதும் இளைய சக்திகள் இங்கே இருக்கின்றன என்கிற ஆறுதலான செய்தியைத்தான்  நான் இங்கே சொல்ல வருகிறேன்.

இன்னமும்கூட பல புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு நான் அழைக்கப்படும்போது மேடையில் அக்கவிதை குறித்து எத்தகைய விமர்சனம் வைக்கப்படுகிறது என்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் சென்று, ஆர்ப்பாட்டமான அவ்விழாக்கள் வெறும் புத்தகம் வாங்கி மொய் எழுதும் கவிதைக் கல்யாண வைபோகங்களாக  முடிந்து போவதைப் பார்த்து ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறேன். முகநூல், வலைத்தளம், மின்னிதழ்  என்று மின்னுலகில் ஏராளமான புத்தம் புது கவிதைகள் அன்றாடம் பதிவேற்றம் செய்யப்பட்டு மின்துகள் பரப்பில் மிதந்தபடி இருப்பதை சந்தர்ப்பம் கிடைக்கிறபோதெல்லாம் வாசிக்கிறேன். சில நேரங்களில் கவிதை விருதுகளுக்கான தேர்வுகளுக்காக கவிதை நூல்கள் எனது கவனமான வாசிப்பைக் கோரி வருகின்றன. நானும் கவிதை எழுதுகிற ஒருவன் என்ற வகையில் எல்லா கவிதைகளையும் விசேஷ அக்கறையுடன் வாசித்து முடிக்கிறேன். அப்போதெல்லாம் என் மனதின் அடி ஆழத்திலிருந்து மேலெழும்பி மிதந்து வருவது ஒரே ஒரு கேள்விதான்:

கவிதை & இந்த பெயரில் இன்று இங்கே என்ன நடக்கிறது?

இன்றைய நவீன தமிழ்க் கவிதை என்பது ஒற்றைப் பரிமாணம் கொண்டதல்ல என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது. பல்வேறு பின்புலங்கள் கொண்டவர்களால்,  பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு செயல் திட்டங்களோடு,  பல்வேறு மொழி நடைகளில்,  வடிவங்களில், படைக்கப்படுகிறது இன்றைய கவிதை. எனவே அது ஒரே குணாம்சம் கொண்ட அச்சுப் பிள்ளையார் போல ஒரே ஜாடையில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஒவ்வொரு கவிதைக்குள்ளும் பலகுரல்கள் கேட்கும் தன்மை என்பது அக்கவிதையை  இழை பிரித்து உட்செல்லும் உயர் கவிதை அனுபவத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இப்படி இன்றைய கவிதை என்பது பன்முக ஜாடை கொண்டது என்று நாம் பேசுகிறபோது கவிதைக்கென்ற பிரத்தியேகமான வரையறைகளை நாம் எப்படி வகுக்கப் போகிறோம் என்கிற மலைப்பு கூட நமக்கு ஏற்படுவது இயல்புதான்.

இந்த இடத்தில் பிரமிளின் வார்த்தைகள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்:

"இதுதான் அடிப்படைச் சங்கடம். ஒவ்வொரு மனமும் வேறு வேறு அநுபவங்களால் ஆனது. ஆகவே ஒரே அநுபவம் இருவேறு மனங்களுக்கு நேரும்போது அவை பிரதிபலிப்பவையும் வேறு வேறு தன்மையானதாகிறது. மௌனியின் உலகும், புதுமைப்பித்தனின் உலகும் வித்தியாசம் காட்டுவதாக இருக்க, இரண்டு வேறு வாசகர்களிலும் இந்த ஆசிரியர்கள் வேறு வேறு பிரதிபலிப்பையே தருகிறார்கள். இந்நிலையில் விமர்சகன் எதை வைத்து ஒரு படைப்பை நிறுப்பது?"

உண்மையில் யோசித்துப் பார்த்தால், தமிழ்ச் சூழலில்  கவிதை என்பது அபரிமிதமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது

(OVER-DEFINED) என்று கூட தோன்றுகிறது. அதே நேரத்தில் கவிதைகள் ஏராளமாக படைக்கப்படுகிற அளவுக்கு கவிதை பற்றிய விமர்சனங்கள் முன் வைக்கப்படாத காரணத்தால் ,  கவிதை எந்த அளவுக்கு நுட்பமாக வரையறுக்கப்பட்டிருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு வரையறுக்கப்படவில்லை

(UNDER - DEFINED) என்றும் கூட எனக்குத் தோன்றுகிறது . இது கவிதை அல்ல, அது கவிதை அல்ல என்று எதிர்மறையாகக் கவிதை குறித்த வரையறைகள் நிறைய இருப்பது புரிய வருகிறது. உதாரணமாக, ஒன்று புரியாததுபோல் உள்ளதால் இது மோசமான கவிதை என்று சொல்லப்படுகிற அதே நேரத்தில் , இது எளிதாகப் புரிகிறது என்பதால் இது கவிதையே அல்ல என்று சொல்லப்படும் நிலையும் இங்கே நிலவுகிறது. இறுக்கம், பூடகம், எதிர்மறைத் தன்மை ஆகியவை கற்பனாவாதத்தை உதறித் தள்ளிய நவீனத்துவம் உருவாக்கிய எதிர்மறை அழகியலின் கூறுகள்தான் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம். அதே நேரத்தில் , இன்றைய கவிதை என்பது அதிகாரத்துக்கு எதிரான ஒரு அத்துமீறலாகவும் இருக்கிறது என்பதால் அது தளர்வாகக் கட்டப்பட்டதாகவும், பல உடைப்புகள் கொண்டதாகவும், திறந்த முடிவுகளைக் கொண்டதாகவும் இருப்பதுகூட ஒரு புது அழகியல் கூறுதான் என்றும் தோன்றுகிறது.

கட்டடக் கலை, சிற்பம், ஓவியம், சினிமா, வீடியோ, டி.வி., இசை, தத்துவம், உளவியல், மொழியியல், மானிடவியல், வரலாற்றியல் ஆகிய அனைத்திலும் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் இடம் மாறிப் போன நிலை இன்றைய கவிதையிலும் ஏற்படத்தான் செய்யும். அப்படி ஒரு மையமழிந்த நிலை இன்றைய தமிழ்க் கவிதையில்  காணப்படுவது என்பது ஒரு தற்காலத் தன்மை சம்பந்தப்பட்டதுதான். இதனால் நமது மொழிப் பாரம்பரியத்தில் காலம் காலமாகக் கட்டப்பட்டு வந்த கவிதையின் அழகியலுக்கு சேதம் ஏதேனும் வந்து விடுமோ என்று நாம் அஞ்சுவோமானால் அது தவிர்க்க முடியாதது என்பதுதான் பதில். புதிய கவிதையியல் ஒன்று பழைய கவிதையியலை இடம் மாற்றம் செய்து விட்டது என்பது குறித்து அழுது புலம்புவதற்கு இங்கே ஏதும் இல்லை. மரம் புதிய தளிருக்கு இடம் கொடுத்து பழைய சருகை உதிர்த்தது என்று புரிந்து கொள்வதே சிறந்தது.

இன்றைய தமிழ்ச் சமூகமும் , அதன் பண்பாடும்  (அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களால் புலம்பெயர்ந்து செல்லும் தமிழ் மக்களால்-) தங்களது பூகோள மையங்களை விட்டு நகர்ந்து கொண்டே இருப்பதால் புதியதொரு கவிதை அழகியலை இன்றைய தமிழ்க் கவிதை கோரி நிற்பதில் ஆச்சரியமில்லை. எனவேதான் நேற்றைய கவிஞனின் முன்னால் வைக்கப்பட்டிராத புதிய சவால்கள் இன்றைய கவிஞனின் முன்னால் வைக்கப்பட்டு இருக்கின்றன.

எனவே இன்றைய தமிழ்க் கவிஞன் பன்முகப் பரிமாணம் கொண்டவனாகவும், ஊடிழைப் பிரதி வாசிப்பு (INTER-TEXTUAL READING) கொண்டவனாகவும், மொழியின் புதிய சாத்தியக் கூறுகளைத் துணிச்சலுடன் பரிசீலிப்பவனாகவும், மர்மப் படுத்தும் அனுபவத்தின் மறு பக்கம் தேடுபவனாகவும், கருத்தியல் கலாச்சார விளையாட்டுகளில் ஈடுபடுபவனாகவும் இருக்க வேண்டிய கட்டாயம் நேர்கிறது.

தமிழ்ச் சமூகமும் அதன் பண்பாடும் (பரவலான புலம்பெயர் வாழ்வால்) உலகம் முழுவதும் சிதறிப் போனதாக இருக்கிற ஒரே காரணத்தினாலேயே இன்றைய தமிழ்க் கவிதை ஒரு சர்வ தேச பண்பாட்டுத் தன்மையை அடைந்து விட்டதாக நினைத்து நாம் நம்மை ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.  தமிழ்க் கவிதை என்பது மட்டக்களப்பில் எழுதப்பட்டாலும், மலேசியாவில் எழுதப்பட்டாலும், நாகர்கோயிலில் எழுதப்பட்டாலும், நார் வேயில் எழுதப்பட்டாலும், பாண்டிச்சேரியில் எழுதப்பட்டாலும் பாரீசில் எழுதப்பட்டாலும், கொழும்பில் எழுதப்பட்டாலும் கனடாவில் எழுதப்பட்டாலும் , அது முற்றும் முதலுமாக தமிழ்ப் பண்பாடு எனும் சதுரத்துக்குள் முகிழ்த்த ஒரு வெளிப்பாடுதானே தவிர, அது முழுமையான ஒரு சர்வதேச பண்பாட்டு வெளிப்பாடு கொண்டதென்று நாம் சொல்ல முடியாது..

எனவேதான் இன்றைய கவிஞர்களின் கவிதைகளை நான் வாசிக்கிறபோது, அவை பொதுவான நான்கு முக்கிய கூறு களைக்  கொண்டவையாக இருப்பதைக்  கவனிக்கிறேன்.

1              அடிப்படையில் முரண்பாடுகள் கொண்டவை.

2              தீர்மானமாக வரலாற்றுப் பூர்வமானவை.

3              புற உலகைக் காட்டிலும் அக உலகைப் பற்றி அதிகம் பேசுபவை.

4              அரசியலிலிருந்து தப்பிக்க முடியாதவை.

5              இடக்கர் அடக்கர் குறித்த அக்கறையற்று மனசில் பட்டதைப்   பேசுபவை.

6              முன்னோடிக் கவிஞர்களின் அழகியல் மூட்டைகளை இன்னமும் இறக்கி வைக்க முடியாமல் தடுமாறுபவை.

நான் நினைத்துப் பார்க்கிறேன்: இன்றைக்குக் கவிதை எழுதுபவர்களில் இவர்தான் இன்றைய தமிழின் சிறந்த கவிஞர் என்று தமிழர்கள் அனைவராலும்  ஏற்றுக் கொள்ளப்படுகிற ஒரு கவிஞரையாவது நம்மால் அடையாளம் காட்ட முடியுமா? (“ தமிழ் மொழியினர்க்கு சிறந்த எழுத்தாளர் யார் என்பதைக் கண்டு பிடிக்கும் ஆற்றல் கிடையாது.” என்று அசோகமித்திரன் 1990இல் தனதுபரிசும் வாசகச் செல்வாக்கும்என்ற எனது நேர்காணலில் சொன்னது இப்போதும் அர்த்தமுள்ளதாகத்தான்  இருக்கிறதோ என்கிற சந்தேகம் வந்து விடுகிறது)அல்லது குறைந்த பட்சம் இன்றையடாப் டென்  கலாசாரம்சொல்வதின்படி இன்றைய தமிழ்க் கவிஞர்களில் தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மிகச் சிறந்த பத்து கவிஞர்களின் பட்டியல் ஒன்று இலக்கியவாதிகளின் கையிலாவது உண்டா? அல்லது ஒரு கூட்டத்தால் அல்லது குழுவினால் வீர வழிபாடு செய்யப்படும் எந்த ஒரு கவிஞரின் படைப்புலகம் பற்றியாவது  தீவிரமான, காத்திரமான, கோட்பாட்டு ரீதியான விமர்சனங்களை அந்தக் கவிஞரை வீரவழிபாடு செய்யும் காலாட்படை முன் வைத்திருக்கிறதா அல்லது குறைந்தபட்சம் கவிதையை அணுகுவதற்கான இலக்கிய விமர்சன உபகரணங்களையாவது இவர்கள் வழங்கி இருக்கிறார்களா?

கேள்விகளின் புதர்க்காட்டில் நம் கைக்கு அகப்படாமல் தப்பித்து ஓடிக் கொண்டே இருக்கிறதுஎது கவிதை ?”  என்பது குறித்த நமது புரிதல் எனும் காட்டு வாத்து.

click here

click here
click here