"கூட்டணிக் கட்சிகளின் யுகம் தொடங்கிவிட்டது. இனிமேல் கூட்டணிகள் இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது." 1990களில் தீர்க்க தரிசியைப் போல் கூறினார் முன்னாள் பிரதமர் வி.பி.சிங். ராஜீவ் காந்தியின் அகால மரணத்தால் கூட்டணி யுகத்தின் வரவு சில ஆண்டுகள் தள்ளிப் போனாலும் அதன் எழுச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. ஆனால் தேர்தல் 2009 வி.பி.சிங்கின் கூற்று பொய்யாகப் போகிறதா, கூட்டணி ஆட்சி யுகம் தொடங்கிய கால் நூற்றாண்டுக்குள் அதன் ஆயுசும் முடிந்துவிடுமா என்ற கேள்விகளை எழுப்புகிறது. 202 தொகுதிகளில் வென்ற தன்னம்பிக்கையில் அல்லது அகந்தையில் காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சிகளிடம் கறாராகப் பேசுகிறது. அடுத்த முறை இந்தக் கூட்டணிக் கட்சிகளின் தொல்லை இல்லாமல் சொந்தமாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று அவர்கள் திட்டம் போட்டாலும் ஆச்சரியமில்லை. ஏனென்றால் இந்த முறை வந்திருக்கும் தேர்தல் முடிவு ஒரு முக்கியமான வரலாற்றுத் திருப்பத்தைக் குறிக்கிறது. அந்த வரலாற்றுத் திருப்பம் காங்கிரசுக்கு சாதகமானதாக இருக்கிறது; பி.ஜே.பிக்கு எதிராக இருக்கிறது.
1990களில் கூட்டணிக் கட்சி யுகத்தில், மாநிலக் கட்சிகளின் எழுச்சியுடன் வளர்ந்த பி.ஜே.பி 1991இல் தான் இருந்த நிலைக்கு 2009 இல் திரும்பியிருக்கிறது. 180 சீட்களில் கடைசியாக வென்ற அந்தக் கட்சியின் எம்.பிக்கள் எண்ணிக்கை 160 ஆகக் குறைந்திருக்கிறது. சீஸாவின் இன்னொரு பக்கத்தில் இருக்கும் காங்கிரஸ் கிட்டத்தட்ட 1991இல் இருந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. ராஜீவ் காந்தி அனுதாப அலையால்தான் 1991இல் 232 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. அதோடு ஒப்பிட்டால் எந்த அலையும் இல்லாமல் இந்த முறை 202இல் வெல்ல முடிந்திருப்பது சாதனைதான். ஆனால் இதை வைத்து மாநிலக் கட்சிகளின், கூட்டணி ஆட்சியின் யுகம் முடியப் போகிறது என்று நம்புகிறவர்கள் கொஞ்சம் அவசரப்படுகிறார்கள்.
காங்கிரசுக்கு இந்த வெற்றியை அதன் தேசிய ‘சாதனைகளும்’ தேசிய ‘தலைவர்களும்’ ராகுல் காந்தியும் பெற்றுத் தந்தார்கள் என்றால் இப்போதிருக்கும் வெற்றி அடுத்த முறை நிச்சயம் அதிகமாகும் என்று கூறலாம். ஆனால் தேர்தலில் களமிறங்காத பிரதமரைக் கொண்டிருந்த இந்தத் தேர்தலில் தேசியப் பிரச்சினைகளைவிட மாநிலப் பிரச்சினைகளே ஆக்கிரமித்திருந்தன. மிக அதிகமான மாநிலங்கள் காங்கிரசுக்கு சாதகமாக இருந்ததால் மட்டுமே இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றிருக்கிறது. அடுத்த முறை மிக அதிகமான மாநிலங்கள் வேறு கட்சிக்கு சாதகமாகத் திரும்பினால் காங்கிரசின் எண்ணிக்கை சரியும். உத்தரப் பிரதேசத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்தின் வெற்றியிலும் ராகுல் காந்தியின் தாக்கத்தைப் பார்க்க முடியவில்லை என்பது இது மாநிலங்களின் தீர்ப்பு என்பதற்கு சாட்சி. இந்தத் தேர்தல் வெற்றியில் காங்கிரசின் எந்தப் பெரிய தேசியத் தலைவருக்கும்கூட பங்கு இருப்பதாகவே தெரியவில்லை. மாறாக காங்கிரசின் மாநிலத் தலைவர்களும் மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் பல மாநிலங்களில் பா.ஜ.கவின் மீதிருந்த அதிருப்தியும் சேர்ந்துதான் காங்கிரசுக்கு இந்த வெற்றியைத் தந்திருக்கிறது.
நான்கு அரசியல் போக்குகள் இந்தத் தேர்தலில் தெரிகின்றன: அடையாள அரசியலின் எல்லைகள் வரையறுக்கப்பட்டிருக்கிறது, மக்கள் நலத் திட்டங்கள்-இலவசங்கள்-ஓட்டுக்குப் பணம் தவிர்க்க முடியாததாகியிருக்கிறது, அடிமட்ட மக்களுக்கு பலன்கள் சென்று சேரும் வகையில் சாலைகள், சட்டம் ஒழுங்கு, வேலைவாய்ப்பு போன்றவை மேம்படுத்தப்பட்டால் அதற்கு வாக்காளர்கள் தலை வணங்குவார்கள் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது, மொழி-பிரதேசம்-சமூகம் முதலிய வேறுபாடுகளைத் தாண்டி மக்களை ஈர்க்கும் தேசியத் தலைவர்கள் உருவாவது கடினம் என்பதால் தீர்மானிக்கும் சக்தியாக உருவாகியிருக்கும் மாநிலத் தலைவர்களைக் கொண்டிருப்பது ஒவ்வொரு கட்சிக்கும் அவசியம் என உணர்த்தப்பட்டிருக்கிறது.
இந்தியா முழுக்கவே மதம், மொழி, ஜாதி, இனம், சினிமா முதலிய அடையாளங்களைப் பயன்படுத்த முயன்ற ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அரசியல் தலைவருக்கும் அடி கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்து ஜெயிக்கப் பார்த்தார் ஜெயலலிதா. பிகாரில் யாதவர்கள்+தலித்துகள் ஓட்டுகளைக் கூட்டினால் வெற்றி நிச்சயம் என்ற லாலு-பாஸ்வான் மனக் கணக்குப் போட்டார்கள். சினிமா புகழ்+நம் ஜாதி ஓட்டு கிடைத்தால் இன்னொரு என்.டி.ஆர் ஆகலாம் என்று நினைத்தார் சிரஞ்சீவி. தீவிர இந்துத்துவாவை இந்தியா முழுக்க பரப்பினால் இந்துக்களின் ஓட்டுகளை அள்ளிவிடலாம், அடுத்த பிரதமர் வேட்பாளராகலாம் என நினைத்தார் மோடி. ஆனால் இவர்கள் ஒரு கணக்குப் போட மக்கள் வேறு கணக்குப் போட்டார்கள். பிகாரில் தங்கள் ஜாதிக்கு ஓட்டுப் போடுவதைவிட அங்கு சட்டம் ஒழுங்கை சரி செய்த, சாலை முதலிய வசதிகளை மேம்படுத்திய, வளர்ச்சியை வேகப்படுத்திய தற்போதைய முதல்வர் நிதீஷ் குமாரின் கட்சிக்கு ஓட்டுப் போடுவதே சிறந்தது என மக்கள் முடிவெடுத்தார்கள். மோடி இந்தியா முழுக்க இந்துத்துவாவை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்த பிறகு இதுவரை பா.ஜ.கவுக்கு ஓட்டுப் போட்டு வந்த நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள்கூட பா.ஜ.கவைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.
ஆந்திராவிலும் தமிழகத்திலும் ரத்தம் (ஜாதி), உணர்ச்சி (இலங்கைத் தமிழர் பிரச்சினை) ஆகியவற்றுக்கு பதில் இலவசங்கள், மக்கள் நலத் திட்டங்களை வைத்தே பெருவாரியான வாக்காளர்கள் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். இந்தியாவை ஆளும் அரசைத் தீர்மானிப்பதற்கான தேர்தலை அந்தந்த மாநிலங்களின் பிரச்சினைகள் அல்லது சாதனைகள் தீர்மானித்திருப்பது வாக்காளர்கள் மாநிலத்தையே தங்களின் தேசமாகக் கருதுவதை உணர்த்துகிறது. இந்திரா காந்தியைப் போன்ற அல்லது குறைந்தது வாஜ்பாயி போன்ற அனைத்து பிரதேசங்களையும் கவரக்கூடிய தேசியத் தலைவர்கள் வரும் வரை எம்.பி தேர்தலும் எம்.எல்.ஏ தேர்தலைப் போலவே வாக்காளர்களால் கவனிக்கப்படும். ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி நில பேர ஊழலில் திளைத்தாலும் மக்கள் தங்களுக்கு என்ன கிடைத்தது என்பதைப் பார்த்தே ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு பாணியில் மகளிர் சுய உதவிக் கடன், மருத்துவக் காப்பீடு போன்ற அடி மட்ட மக்கள் பலன் பெறும் திட்டங்களை நிறைவேற்றுவதால் அவரை மக்கள் தங்கள் நலனை விரும்பும் தலைவராகக் கருதுகிறார்கள். அதனால் அவர் சார்ந்த காங்கிரசின் எம்.பிக்களை ஜெயிக்க வைத்து அனுப்பியிருக்கிறார்கள்; தமிழகத்தில் தி.மு.க தலைவர் சாதித்திருப்பதைப் போலவே.
எனக்கு என்ன கிடைக்கும் அல்லது கிடைக்கிறது என்ற அடிப்படையில்தான் இந்திய மக்கள் இந்த முறை ஓட்டுப் போட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது