உலகம் முழுவதும் இன்று மனித உரிமை குறித்த கருத்துகள், அறிவு ஜீவிகளாலும் பல அமைப்புகளாலும் பரவலாக்கப்பெற்று வந்தாலும், பொதுவாகவே வெகு மக்களிடம் மனித உரிமைகளுக்கான விழிப்புணர்வு காணப்பெறாமலே உள்ளது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்வுகளும் செய்திகளும் உடனுக்குடனாகப் பல ஊடகங்களின் வழியாக வந்து சேர்ந்தாலும், அவை பற்றிய சரியான புரிந்துணர்வோ, கருத்துத் தாக்கமோ சட்டென்று நிகழ்ந்துவிடுவதில்லை. பல்வேறு இனக் குழுக்களுக்கு எதிராக, போர்க் கைதிகளுக்கு எதிராக, தனி மனிதர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள், அநீதிகளைச் செய்திகளாக அறிந்து 'உச்சு'க்கொட்டிவிட்டு மறந்துவிடுகிறோம். நமக்கு ஏற்படும் பல இன்னல்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முறையான சட்ட ஆலோசனைகளோ, உதவிக்கரமோ இல்லாமலேயேதான் நம் அன்றாட வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். இவற்றிற்கான நிவாரணம் என்பது மனித உரிமைகளைத் தெரிந்து கொள்ளலும் அதற்கான ஆதரவாளர்களைத் திரட்டுவதுமே ஆகும்.
'மனித உரிமைக் கங்காணி' என்னும் மாத இதழ் இப்பணியைச் செய்து வருகிறது. மதுரையிலிருந்து வெளியாகும் இவ்விதழ் முழுக்க முழுக்க நம்முடைய உரிமைகளுக்கான அறிவூட்டல் நிறைந்ததாக இருப்பது சிறப்பு. பல்வேறு பத்திரிகைகளில் வெளியான மனித உரிமைக் கட்டுரைகள், செய்திகள் ஆகியவற்றைத் தொகுத்தும்; தனிக்கட்டுரைகள், உரையாடல்கள் போன்றவற்றைச் சிறப்பாகவும் வெளிப்படுத்தும் இந்த இதழ் எல்லோராலும் வாசிக்கப்படுகையில் மனிதஉரிமை விழிப்புணர்வு நம்மிடையே பரவுவதோடு, அதிகார மற்றும் பணபலத்தால் ஒடுக்கப்படும்போது நம்முடைய உரிமைக்குரலும் சத்தமாக ஒலிக்கும்.
சிவன்