பாய்ஸ் படத்தில் ஹீரோ பாலியல் தொழிலாளியிடம் செல்வது போன்ற காட்சியையும், கட்டிலை ஆட்டி செக்ஸில் ஈடுபடுவது போல பக்கத்து அறையிலிருக்கும் நண்பர்களுக்கு பாவ்லா செய்த காட்சியையும் ஆபாசம் என்று சொல்லி, படத்தை மறு சென்சார் செய்யும்படி கடும் எதிர்ப்பு உருவானது. சமீபத்தில் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் காண்டம் (ஆணுறை) இருக்கா என்ற கேள்வி ஆபாசமாகப் பார்க்கப்பட்டது. இந்தப் பின்னணியில் ஒரு 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சியில் ஒரு முழுநீள நீலப் படத்தின் சிறப்புக் காட்சிகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியதைப் பார்த்துவிட்டு, தமிழகத்தில் அனைவரும் எந்த எதிர்ப்புமின்றி இன்புற்றிருக்கிறார்கள். ஆணுறுப்பின் விரைப்பைத் தூண்டக்கூடிய மாத்திரை என்ன, கர்ப்பத் தடை முன் ஜாக்கிரதை என்ன, வாய் வழி உறவு என்ன, கையால் செய்து வைக்கப்படும் மைதுனம் என்ன... கணினியில் அல்லது டி.வி.டி.யில் திருட்டுத்தனமாகப் போட்டுப் பார்க்கக்கூடிய அத்தனையும் ஒரு டி.வி. சேனலில் அனைவருக்கும் வெளிப்படையாகப் போட்டுக் காட்டிவிட்டார்கள். திருமணத்திற்கு முந்தைய பாலுறவு குறித்த கருத்துக்காகவே ஐந்தாண்டுகளாக குஷ்புவை தில்லி நீதிமன்றம் வரை அலைய வைத்து வரும் "ஆபாச" தடுப்புப் படையிடமிருந்து இந்த டி.வி. சேனலுக்கு எதிராகவும் அந்தப் செக்ஸ் படங்களைச் சிறப்பு ஆல்பமாக வெளியிட்ட பத்திரிகைக்கு எதிராகவும் ஒரு சின்ன அறிக்கைகூட வரவில்லை. பிரம்மச்சரியம் தரித்திருப்பதாகச் சொன்ன நித்யானந்தர் அந்த வீடியோவில் வைத்துக்கொண்டதுகூட திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவுதானே?
ஒரு மிக மோசமான காரியத்தைச் செய்துவிட்டதாகக் கூறி சாமியாரின் ஆசிரமத்தை அடித்து நொறுக்கியவர்கள், தீயிட்டுக் கொளுத்தியவர்கள் அப்படிப்பட்ட கண்டிக்கத்தக்க காட்சிகளை அப்படியே காட்டிய சேனல் அலுவலகத்தின் முன்பு சென்று கோஷம்கூட எழுப்பவில்லை; எழுப்பவும் முடியாது. ஏனென்றால் அதைச் செய்தவர்கள் அதிகார பீடத்திற்குப் பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள். அவர்கள் ஒன்றும் குஷ்பு போலவோ, மறைந்த எழுத்தாளர் சுஜாதா போலவோ எளிதான இலக்குகள் அல்ல. அவர்களின் சாதி இனப் பின்னணியை வைத்தும் இந்த நீலப் பட ஒளிபரப்பைச் செய்தவர்களுக்கு எதிராக அரசியல் செய்யமுடியாது. என்ன தவறு செய்கிறார்கள் என்பதைவிட யார் செய்கிறார்கள், அவர்களின் அரசியல் பின்னணி பலம் என்ன என்பதே "நீதிக்காகப்" போராடும் உத்வேகம் தீர்மானிக்கப்படுகிறது. இங்கு எல்லாவற்றிலுமே இரட்டை விதிகள் உண்டு. 100 ரூபாய் திருடிய சாதாரணமான நபரின் முகத்தை போலீசார் பலவந்தப்படுத்தி புகைப்படக் கேமராக்களுக்கு ஒப்புவிப்பார்கள். பணமும் அதிகாரமும் கொண்டவர்கள் 1,000 கோடி ரூபாய் ஏமாற்றினாலும் அவர்களை அழைத்துச் செல்லவென்று பின்வாசல் ஒன்று இருக்கும். குறைந்தபட்சம் முகத்தை மறைத்துக் கொள்வதற்கான வசதி வாய்ப்பு உருவாக்கித் தரப்படும்.
நித்யானந்தருக்குப் பிரச்சினை ஏற்பட்ட நான்கே நாட்களில் அவர் மீதான அத்தனை வழக்குகளும் கர்நாடகாவிற்கு மாற்றப்படுகின்றன. கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா நித்யானந்தரின் பக்தர் என்பதால் இனி எல்லாம் சுபமே. இது இன்னுமொரு விதியை நமக்குக் காட்டுகிறது. செல்வாக்கானவர்களுக்கு உள்ளுக்குள்ளிருந்தே குழிபறிப்பவர்களால் பிரச்சினை ஏற்பட்டாலும் நிவாரணம் உடனே கிடைக்கும். நடிகர் அஜீத்-ரஜினிக்கு எதிரான சினிமா உலகின் சர்ச்சை மூலவரின் ஒரே வார்த்தையால் அடங்கியே போனது. அப்படியானால் அஜீத் சொன்னதை ஏற்கமுடியாது என்ற வீர வசனங்கள் என்னவாகின? சரி-தவறு, நீதி-அநீதி எல்லாமே தராசில் எந்தப் பக்கம் எவ்வளவு அரசியல் பலத்தையும் பணத்தையும் வைக்கிறீர்கள் என்பதன் நிகழ்தகவு. ஆஸ்திரேலியாவில் இந்தியர்களைத் தொடர்ந்து தாக்குவதால் மும்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்த விடமாட்டோம் என்று அறிவிக்கிறார் சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே. ஓரிரு நாளில் பி.சி.சி.ஐ. தலைவரும் ஐ.பி.எல்.லின் பின்னணி சக்தியும் தேசியவாத காங்கிரசின் தலைவருமான ஷரத் பவார் தாக்கரேவைச் சந்திக்கிறார். அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவதைவிட பெரிய பிரச்சினைகள் இருப்பது தாக்கரேவுக்குப் புரிய வருகிறது. அவர் தனது எதிர்ப்பை வாபஸ் பெறுகிறார். இந்த மன மாற்றத்திற்கு தேச பக்தி காரணமா, ஐ.பி.எல்.லில் புழங்கும் பணம் காரணமா, பவாருடனான எதிர்கால அரசியல் உறவுகள் சார்ந்த கணக்குகள் காரணமா?
அந்தந்த பூகோள அரசியல் சூழலுக்குச் சாதகமான சாதி, இன, மதப் பின்புலம் கொண்டவர்கள் தவறு செய்துவிட்டுக்கூட எளிதாகத் தப்பமுடியும். மற்றவர்கள் சரியானதைக்கூட தயங்கித் தயங்கி, கல்லடி பட்டுக்கொண்டுதான் செய்யவேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த உண்மைச் சம்பவம் இது. சென்னையில் கலப்பட பெட்ரோல் தொழில் செய்து வந்த அரிமா சங்கப் புகழ் இடைநிலை சாதியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் தன் மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவான அடுத்த நாளிலிருந்தே ஆளுங்கட்சி அமைச்சருடன் விழாக்களில் காட்சி தரத் தொடங்குகிறார். கடைசி வரை அவர் கைது செய்யப்படவும் இல்லை, கலப்பட பெட்ரோல் தொழிலை அவர் இதுவரை விடவும் இல்லை. தமிழக அரசுக்கு எதிரான உண்மைகளை அம்பலப்படுத்தும் தினமணிக்கு கருத்து ரீதியாக எதிர்ப்பு வராது. அது ஒரு பிராமணப் பத்திரிகை என்ற வசதியான மறைப்புக்குள் தங்கள் அம்மணங்களைத் தமிழக அரசியல்வாதிகள் எளிதாக மறைத்துக்கொள்கிறார்கள். பிராமண எதிர்ப்பு கடைசியில், தங்கள் தவறை மறைக்க விரும்புகிறவர்கள் பயன்படுத்தும் சில்லறைத்தனமான ஆயுதமாக மாறிவிட்டதன் அருவருப்பான அடையாள அரசியலை நாம் அடிக்கடி காண வேண்டியிருக்கிறது.
இந்தியாவில் கூச்சமின்றி நடக்கிறது, ஊடகங்களின் இந்த சதை வியாபாரம். பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்ணைப் பற்றிய செய்தியில் அந்தப் பெண்ணின் உருவம் வெளியாவது முக்கியமானது. நித்யானந்தரின் முறையற்ற செக்ஸ் பற்றிய செய்தியில் அந்தக் காட்சியைக் காட்டுவது அவசியமானது. அறநெறிகளைக் காலில் போட்டு மிதிக்கும் இத்தகைய 'மதிப்பீடுகள்' ஊடகங்களுக்கு மேலும் அதிகப் பணம் சம்பாதிப்பதற்கு உதவுகிறது. ஆனால் டபிள்யூ.ஆர். வரதராஜனின் ஒழுக்க மீறலைத் திட்டிக்கொண்டு, குஷ்புவைப் பழித்துக்கொண்டு, நித்யானந்தரைச் சபித்துக்கொண்டு நாம் செய்வது என்ன? ஒரு பெண்ணின் மீது கொடூரமாக, பலவந்தமாக நிகழ்த்தப்படும் பாலியல் வன்புணர்ச்சி குறித்து இந்திய ஊடகங்கள் தரும் வர்ணனையைப் படிக்கும்போது ஆண்குறி எழுச்சி அடையாதவர்கள் எத்தனை பேர்? நித்யானந்தரை விமர்சித்தவர்களில் அந்த ரகசிய கேமராவில் பதிவான முழு வீடியோவையும் பார்க்க விரும்பாதவர்கள் எத்தனை பேர்? ஒரு நடிகையுடன் பாலுறவு வைத்துக்கொள்ள விரும்பாத திருமணமாகாதவர்கள்-திருமணமானவர்கள் எத்தனை பேர்? குஷ்புவைத் திட்டியவர்களில் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்ளாதவர்கள் எத்தனை பேர்? திருமணத்தை மீறி வெளியே உறவு வைத்துக்கொள்ளாதவர்கள், அந்த எண்ணம் இல்லாதவர்கள் எத்தனை பேர்? இவற்றையெல்லாம் நியாயப்படுத்தும் நோக்கத்தோடு இந்தக் கேள்விகளை நான் எழுப்பவில்லை. இந்தக் கேள்விகளுக்கு உண்மையான பதிலை அறிந்துகொள்ளும் போதுதான், நமது போலித்தனங்களிலிருந்து நாம் வெளியே வருவோம் என்பதால் இந்தக் கேள்விகளை எழுப்புகிறேன். இளைஞர்கள் மனதைக் கெடுப்பவன் என்று குற்றம்சாட்டப்பட்ட சாக்ரடீஸ் சொன்னதுதான் இது: எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்துங்கள்.
maya.flowerpower@gmail.com