பிரபல ஓவியர் எம்.எப்.ஹுசைன் கத்தார் நாட்டுப் பிரஜை ஆகிவிட்டார். இந்தியா தன் தாய்நாடு என்றும் தன்னை இந்தியா நிராகரித்துவிட்டது என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்தியாவில் யாருக்கும் தான் தேவையாக இருக்கவில்லை என்று அவர் கவலை தெரிவிக்கிறார். இத்தனை ஆண்டுகள் தான் வெளிநாட்டில் இருந்தபோது யாரும் அதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை என்று அவருக்குப் புகார் இருக்கிறது. தான் 45 வயது கொண்டவராக இருந்திருந்தால் கடுமையாகப் போராடியிருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். வயது ஆகிவிட்டதால் அரசாங்கங்களும் மத அமைப்புகளும் காட்டும் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வது போலவும் இளமையாக இருந்திருந்தால் அதற்கு எதிராகப் போராடியிருக்க முடியும் என்றும் அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார். இளமையாக இருந்துவிட்டால் மட்டும் அமைப்பை எதிர்த்துப் போரிட முடியுமா என்பது சந்தேகம்.
எம்.எப்.ஹுசைனை இந்தியா பல ஆண்டுகள் முன்னாலேயே நிராகரித்துவிட்டது. அவருடைய படைப்புகள் மதரீதியாகப் புண்படுத்துகின்றன என்று அவருக்கு எதிராக இயக்கம் நடத்தப்பட்டது. அவருடைய ஓவியக் கண்காட்சிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அவருடைய வாழ்வும் அச்சுறுத்தலுக்கு ஆளானது. அவர் உயிருக்குப் பயந்து ஓடினார்.
தன் படைப்புகள் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டவை அல்ல என்று திரும்பத் திரும்ப ஹுசைன் கூறுகிறார். தன் உள்ளார்ந்த படைப்பாக்கத்தின் மூலமாகத் தான் படைப்பதாக அவர் கூறிக்கொள்கிறார். ஒரு ஓவியனுடைய படைப்புகள் சர்வதேச கலை ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்கின்றன என்பது உண்மை.
ஒரு படைப்பாளி நமது நாட்டில் நிராகரிக்கப்படுவது புதிது அல்ல. ஒரு படைப்பாளியின் படைப்பு தடை செய்யப்படுவதும் புதிது அல்ல. சல்மான் ருஷ்டி எழுதிய, 'சாத்தானின் கவிதைகள்' என்ற நூல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் நிர்ப்பந்தத்திற்கு அரசு அடிபணிந்துவிட்டது என்று குற்றம் சாட்டப்பட்டது. எம்.எப்.ஹுசைனின் படைப்புகள் இந்து மதத்திற்கு அவதூறு ஏற்படுத்துவதாக இருக்கின்றன என்று இந்த மத வெறியர்கள் அவருடைய படைப்புகளை அடித்து நொறுக்கினர். அவருக்கும் ஆபத்து வந்துவிடும் என்று அவர் ஓடினார்.
நமது நாட்டில் கருத்துச் சுதந்திரம் என்பது ஒரு மாயையாகத்தான் இருக்கிறது. காங்கிரஸ் அரசுகள் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பதாக ஒரு குற்றவுணர்வு இருந்துவிடுகிறது. அதற்கு எதிராக இயங்க வேண்டும் என்ற மனநிலை சங்பரிவார் அமைப்புகளுக்கு வந்துவிடுகிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும்போதுதான் எம்.எப்.ஹுசைனுக்கு எதிரான இயக்கம் தீவிரம் அடைந்தது. அவர் நாட்டைவிட்டுப் போக வேண்டிய சூழல் உருவானது. மதம் அரசியலை மாற்றுகிறது. மன அரசியலையும் தொடர்ந்து மதம் மாற்றுகிறது. எம்.எப்.ஹுசைன் ஒரு முஸ்லிம் படைப்பாளியாகத்தான் பார்க்கப்படுகிறார். மதங்களைத் தாண்டி எந்த படைப்பாளியும் அடையாளம் காணப்படுவதில்லை.
எம்.எப்.ஹுசைனின் வெளியேற்றம் ஒரு மதச் சின்னத்தின் வெளியேற்றமாகத்தான் இருந்தது. சிறுபான்மை 'உணர்வுகளை' அவமதித்துவிட்டார் என்று எந்த ஒரு இந்துப் படைப்பாளியும் இந்தியாவிலிருந்து போக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. இது பெரும்பான்மையினரின் நாடு. எந்த ஒரு பெரும்பான்மை படைப்பாளியும் பாதுகாப்புக் கோரி யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியம் இங்கு ஏற்பட்டதில்லை. உண்மையில் வேறு நாட்டில் அடைக்கலம் அடைந்திருப்பது நமது நாட்டு சிறுபான்மை பிம்பம். ஒரு மாற்றுக் குரல் ஒரு சிறுபான்மை பிரஜையிடமிருந்து வந்தால் அது நிராகரிக்கப்படலாம் என்ற மன ஓட்டம் இந்தியப் பெரும்பான்மை உளவியலில் படிந்துபோயிருக்கிறது. பாதுகாப்பும் பாதுகாப்பு மறுப்பும் இந்த உளவியலின் பலவிதப் படிமங்களாக வெளிப்படுகின்றன. ஒரு பிரஜைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக இருந்தால் எப்படி வேண்டுமானாலும் ஏற்படுத்தலாம் என்ற சாத்தியம் நிச்சயம் இருக்கிறது. பல மட்ட பாதுகாப்பு அளிக்கும் அளவுக்கு எம்.எப்.ஹுசைன் அரசியல் முக்கியத்துவம் கொண்ட பிரஜை அல்ல. எப்போதும் தாக்குதலுக்கு ஆளாகக் காத்திருக்கும் ஒரு சாதாரண படைப்பாளி அவர். ஒரு சிறுபான்மை படைப்பாளிக்கு பாரத மாதாவையும் இந்துக் கடவுள்களையும் 'அவமானம்' செய்யும் உரிமை இல்லை. இதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். மாதுரி தீட்சித்தை வரைந்து தன் கலைத் தாகத்தை அவர் தீர்த்துக்கொண்டிருக்க வேண்டும். அறிவுஜிவி கலை ஆர்வலர்களுக்கு மகிழ்வூட்ட அவர் குதிரைகளையும் மாடுகளையும் புதிய கோணத்தில் வரைந்து தள்ளியிருக்க வேண்டும். இன்னும்கூட புதிய கலை வடிவங்களை அவர் உருவாக்கக் கூடும். ஆனால் பிறந்த நாட்டை இழந்த ஒரு படைப்பாளியாகத்தான் அவர் இருப்பார். எம்.எப்.ஹுசைன் இந்தியாவில் இல்லாமல் போனால் இந்தியாவின் மதிப்பு கு
றைந்துவிடாது. ஒரு பிரஜைக்காக எந்த நாடும் கவலைப்படுவதில்லை. அவர் நாட்டைவிட்டு வெளியே இருப்பது சங்பரிவார் அமைப்புகளுக்கு பெரும் வெற்றியாக இருந்துவிட்டிருக்காது. அது குற்றவுணர்வாகத்தான் இருந்திருக்கும். அவர் நமது நாட்டிலேயே இருந்து, தன் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டு, தன் படைப்புகளை மாற்றிப் படைத்து ஒரு சராசரி பிரஜையாகியிருக்க வேண்டும். அவரும் அதற்குத் தயாராகத்தான் இருக்கிறார். புண்படுத்தும் வகையில் தான் வரைந்த படங்களுக்காக அவர் வருத்தம் தெரிவித்துக்கொண்டார். அதுபோன்ற படைப்புகளை விற்பனையிலிருந்து திரும்பப் பெற்றுக்கொண்டார். அவர் வந்தால் பாதுகாப்பு தரப்படும் என்று மத்திய அரசு கூறியது. அவர் வர விரும்பவில்லை. அவருக்குப் பயம் தீரவில்லை. அவர் படைத்தது பெரும்பான்மை மக்களின் மன வெளியில் மறந்துபோயிருக்காது என்ற அச்சம் அவருக்கு இருக்கிறது. அந்தப் படைப்புகளை அவர் படைக்கவே இல்லை என்றும் கூறமுடியாது. அவர் மனதில் அதுபோன்ற ஒரு கரு உருவானது என்பதையே பெரும்பான்மை மனநிலையால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கான தண்டனையை அவர் காலம் எல்லாம் அனுபவிக்க வேண்டும். அவர் எங்கு வேண்டுமானாலும் தங்கிக்கொள்ளலாம். எது வேண்டுமானாலும் அவருடைய நாடாக மாறலாம். ஆனால் அவருக்கு ஏதோ ஒரு வகையில் தண்டனைதான் காத்திருக்கிறது. வந்தால் உயிர் போகலாம். இல்லாவிட்டால் மாற்று நாட்டில் வாழ்ந்து கழிக்க வேண்டும். தாய் நாட்டைத் தவறவிடுவதாக ஒரு மனநிலை கொள்ள வேண்டும். ஏதோ ஒரு போதாமை அவருக்கு வழங்கப்படும். அவருடைய இருப்புக்கு போதாமை வந்துவிடும். அவருடைய இருப்பிடத்திற்குப் போதாமை வந்துவிடும். அதனால் பாதுகாப்பு தேடவேண்டிய நிலையில் அவர் இருக்கிறார். கத்தார் நாட்டுக்கு அவர் நன்றியும் சொல்லிக்கொண்டார். கத்தார் நாடுதான் அவருடைய வாழ்வின் இருப்பை உறுதி செய்யும் என்று கூறமுடியாது. அப்படி அவர் கற்பனை செய்துகொள்ள வேண்டும்.
இந்திய நாட்டின் ஒரு முஸ்லிம் பிரஜை என்ற அடையாளத்திலிருந்து அவர் தப்பிக்க முடியாது. அதிலிருந்து தப்பிக்க நினைத்திருந்தால் அவர் மீண்டும் மீண்டும் மாட்டிக்கொள்ள நேரிடும். பெரும்பான்மை நிர்ப்பந்தம் என்பதை அவர் மனதின் ஆழத்தில் பதிய வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருந்திருந்தால் நிர்வாண பாரத மாதா உருவாக்கியிருக்க மாட்டார். முஸ்லிம் உணர்வுகளைப் புண்படுத்தும் படைப்புகளை வரைந்து அவர் கத்தார் நாட்டில் இருக்க முடியாது. ஏதோ ஒரு மதத்தின் அடையாளம் இன்றி அவரால் இருக்க முடியாது. இனி அவர் கத்தார் நாட்டின் பிரஜையாக இருந்துவிட்டுப் போவது அவருக்கும் நல்லது, இந்தியத் திருநாட்டிற்கும் நல்லது.
knijanthan@gmail.com