முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
குஷ்புவின் ‘திருமணத்திற்கு முந்தைய செக்ஸ்’ பற்றிய கருத்திற்கு எதிராகப் போராடியவர்கள், நித்யானந்தரின் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் வீடியோவே ஒளிபரப்பப்பட்டிருக்கும்போது எங்கே போனார்கள்?
மாயா
அண்ணாச்சி விக்ரமாதித்யனுக்கு ஒரு திறந்த கடிதம்
பிரம்மராஜன்
டபிள்யு.ஆர்.வரதராஜனின் மரணத்தில் அக்கறை கொண்ட பிரஜைகள் மற்றும் பெண்ணியவாதிகளின் அறிக்கை
அ.மங்கை, வ.கீதா, கீதா ராம்சேஷன்.
பாலியல் படமெடுக்கும் ‘பயந்தாங்கொள்ளி’ இயக்குனர்
சுப்ரபாரதிமணியன்
எம்.எப்.ஹுசைன் எனும் பிரஜை
நிஜந்தன்
அவைகள் இப்போதெல்லாம் இங்கு வருவதே இல்லை....!
எஸ்.கிருஷ்ணன்ரஞ்சனா
போருக்குப் பின்னான இலங்கை
கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
ஆம் இவை ஆண்களின் பிரச்சினைகள்: நீல. பத்மநாபனின் தனி மரம்
அ.ராமசாமி
தெளிவைத் தொலைத்ததால் தொலைந்து போகும் கவிதையான நொடிகள்
கார்த்திக்
நூதன உறுப்பு-மாற்று சிகிச்சையும், டாக்டர் ஜோக்கும்
ஆர்.அபிலாஷ்
ஐ.பி.எல். அணி வரிசை : சென்னை சூப்பர் கிங்ஸ்: எதிர்பார்ப்புகளும் எதிர்பாராமையும்
- ஆர்.அபிலாஷ்
நித்யானந்தர் - சில குறிப்புகள்
மனுஷ்ய புத்திரன்
கவிதை
தனிமையைத் தேடி...
ராஜேஸ்வரி
துறவிக்காமம்
பொன்.வாசுதேவன்
நிசி அகவல்!
ப்ரவீன்
மனிதக்காட்சி சாலையின்.. பிரம்மாண்ட கதவுகளைக் கொண்டுள்ள இரவுகள்..
இளங்கோ
நானெனப்படுவது..
சுரபி
சிறுகதை
'சிதைவுகளோ'டு 'தேம்பி அழாதே பாப்பா'
எம்.ரிஷான் ஷெரீப்
புத்தகன்
உஷாதீபன்
பொது
சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்
/
என்றார் முல்லா
தமிழில் சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் சஃபி
இந்த வாரக் கருத்துப் படம்
நல்வாழ்வு
பாபுஜி
நித்யானந்தா
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்:ஆர்.அபிலாஷ்
பதிவுகள்
’உயிர்மை, காலச்சுவடு போன்ற இதழ்களைப் படைப்பாளிகள் புறக்கணிக்கவேண்டும்’-கவிஞர் விக்ரமாதித்யன் சூளுரை
பொன்.வாசுதேவன்
போருக்குப் பின்னான இலங்கை
கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

போருக்குப் பின்னான இலங்கை மிகவும் அமைதியாக இருக்குமென்றே பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயகம் மீண்டும் தழைத்து விடும். வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் மேம்பாடடையத் தொடங்கும். நீடித்து வந்த இனமுரண்கள் தணிவடையும். அவசரகாலச் சட்டம் உட்பட நாட்டில் பெரும் சுமையாகவும் இயல்பு நிலைக்குத் தடைகளாகவும் இருக்கும் பல சட்டங்கள் நீக்கப்படும். நாடு புத்துணர்ச்சியுடன் புதிய சூழலுக்குத் திரும்பும் என்றுதான் பலரும் நம்பினார்கள்.

குறிப்பாக, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சிமுறைகூட ஒழிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டென்று நம்பியவர்களும் உண்டு. இப்படி அவர்கள் நம்புவதற்கு நியாயமான காரணங்களுண்டு. நாட்டில் பயங்கரவாதம் இருப்பதால்தான் இவ்வளவு பிரச்சினைகளும் இருக்கின்றன. போர் தொடருகின்றபடியால், அதை எதிர் கொள்வதற்கே நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறை தேவைப்படுகிறதுஎன்று ஆட்சியிலிருந்தவர்கள் சொல்லி வந்தனர்.

நாட்டின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் போரும் போராட்டமுமே (பயங்கரவாத நடவடிக்கைகள் என்பதே அரசாங்கத்தின் விவரிப்பு) காரணம்’ என்று கூறப்பட்டது.

எனவே போர் முடிந்து விட்டால் நாடு இயல்பு நிலைக்குத் திரும்புவதும் நாட்டின் பெரும் பிரச்சினைகள் தீர்வுகளுக்குட்படுவதும் நிச்சயமாக நடக்கும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்ததில் என்ன தவறிருக்கமுடியும்?

வெளிப்படையான பார்வையில் இவையெல்லாம் இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்றே தோன்றும். ஆனால், எப்போதும் நடைமுறையும் யதார்த்தமும் வேறு வேறானவை. அரசியல் என்பது எப்படியானது? அது எத்தகைய வலைப்பின்னல்களையெல்லாம் கொண்டது? இந்த வலைப்பின்னலில் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? எங்கே இருந்தெல்லாம் காய்கள் நகர்த்தப்படுகின்றன? அந்தக் காய் நகர்த்தல்களில் நமது நியாயமான விருப்பங்கள், தேவைகளின் கதி என்ன? என்பதையெல்லாம் கற்றுக் கொள்வதற்கு, போருக்குப் பின்னரான இன்றைய இலங்கை நிவரத்தைச் சற்று உன்னிப்பாகப் பார்த்தால் எல்லாமே புரியும்.

02

இதற்கு முதலில் தமிழில் அரசியல் அறிவும் இராசதந்திரமும் பொறிமுறையாக வளர்ச்சியடைந்திருக்கிறதா என்ற ஒரு கேள்வியை இந்தச் சந்தர்ப்பத்தில் முன்வைத்து விட்டு அப்பால் செல்லலாம். ஏனெனில், ஈழத்திலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி... அரசியல் அறிவும் இராசதந்திரமும் பிரயோக நிலை கட்டத்திலிருக்கின்றோம்.

தமிழில் இலக்கியமும் கலைகளும் செழிப்படைந்த அளவுக்கு அரசியற் கோட்பாடுகளும் இராசதந்திரமும் வளர்ச்சியடையவில்லை என்ற கருத்து பொதுவாகச் சிலரால் கூறப்படுவதுண்டு. அதிலும் நவீனத்தமிழில் இந்த இரண்டும் மிகவும் குறைவான நிலையிலேயே இருக்கிறது என்றும் சுட்டப்படுகிறது.

ஈழத்தமிழரின் அரசியல் போராட்டமும் சரி, ஆயுதப் போராட்டமும் சரி... அதற்குக் கிடைத்த மக்கள் ஆதரவுக்கு ஏற்ப அந்தப் போராட்டம் வெற்றியடையவில்லை. பதிலாக, அது பெருந்தோல்வியையும் பின்னடைவையுமே சந்தித்திருக்கிறது. இந்த நிலையில் மேற்குறித்த இரண்டு விஷயங்களைக் குறித்தும் நாம் ஆராயவேண்டும்.

03.

முப்பது ஆண்டு காலப் போர் முடிவுக்கு வந்தபோது அது தொடர்பாகப் பலவிதமான அபிப்பிராயங்களிருந்தாலும் அது ஒரு புதிய களச் சூழலை உருவாக்கியிருந்ததைப் பொதுவாகவே எல்லோரும் ஏற்றுக் கொள்வர்.

இந்தக் களச் சூழலில் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதற்கு சிங்கள அதிகார வர்க்கம் முன்வந்திருக்குமானால் இப்பொழுது இலங்கைக்கு எதிராக உருவாகியிருக்கும் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அல்லது இந்த அழுத்தங்களின் வலு குறைவாகவே இருந்திருக்கும். ஆனால் அதைச் சிங்கள அதிகாரத் தரப்பினர் செய்வதற்கு முன்வரவில்லை.

இந்தப் பாதகமான நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு இப்பொழுது இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் மேற்குலகு நாடுகள் எல்லாமே இலங்கை மீது ஆதிக்கங்களையும் தலையீட்டையும் செய்ய முனைகின்றன.

பொதுவாகவே பல்வேறு அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்து நிமிர்ந்த செழிப்பான மரபைக் கொண்ட சிங்கள இராசதந்திரம் இந்தத் தடவையும் எப்படியோ நிமிர்ந்தே கொள்ளும். ஆனால், அதற்கிடையில் இந்த வெளிச்சக்திகளின் அழுத்தங்களால் இலங்கை மக்களின் எதிர்காலமும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் நிலையும் எப்படி அமையப் போகின்றன என்பதே இங்கே கேள்விக்குரியது.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வழங்குவதற்கான எத்தகைய முகாந்திரங்களையும் சிங்களத் தரப்பு கொண்டிருக்கவில்லை. அது இப்போதைக்குச் சாத்தியமாகுவதைப்போலவும் தெரியவில்லை. எனவே இத்தனை கால இழப்புகளுக்குப் பின்னரும் தமிழ் பேசும் மக்கள் தங்கள் உரிமைக் கோரிக்கையைக் கைவிடுவதா என்ற கேள்வி ஒரு சாராரிடம் எழுந்திருக்கிறது.

எனவே அவர்கள் மீண்டும் தமிழ் முஸ்லிம் அடையாளங்களைக் குறித்த அரசியல் முனைப்பை வலியுறுத்துகின்றனர். இதை மறுதரப்பினர் நிராகரிக்கின்றனர். அவர்களுடைய கருத்தின்படி இனிமேல் கடந்த கால அணுகுமுறைகளின்படி இந்தப் பிரச்சினையைக் கையாளமுடியாது என்கின்றனர். அதற்குப் புதிய தந்திரோபாயங்களையும் அணுகுமுறைகளையும் கைக்கொள்ள வேண்டும் என்பது இவர்களுடைய நிலைப்பாடாகும். இதேவேளை இந்த உரிமைக் கோரிக்கையை இன்னொருவகையான அணுகுமுறை மூலம் சாத்தியப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று வேறொரு சாரார் சொல்கின்றனர்.

இப்படி மூன்று அணிகள் தமிழ் பேசும் மக்கள் சார்பாகக் களத்தில் இறங்கியிருக்கின்றன. இது தேர்தல் காலம் என்பதால் இந்த அணிகளின் செயற்பாடுகள் இன்னும் தீவிர நிலையை எட்டியிருக்கிறது.

ஆனால், வெளியே நிலைமை வேறாக இருக்கிறது. இன்று அதிகரித்திருக்கும் வர்த்தகப் போட்டியில் இந்தியாவும் சீனாவும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகும் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. இந்தியா போன்ற பெரிய நாடுகளிலேயே தமது நலன்களுக்குச் சார்பான ஆட்சியாளர்கள்தான் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்று விரும்புகின்ற வல்லரசுகள் இலங்கையில் எப்படி நடந்து கொள்ளும் என்பதை இங்கே விவரிக்கத் தேவையில்லை.

இலங்கையில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான போட்டியில் சமரசங்கள், விட்டுக்கொடுப்புகள், இணைந்து செயற்படுதல்கள், வெட்டியோடுதல்கள் என்ற வகையில் மேற்குலகமும் இந்தியாவும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன. இடையறாத இந்தச் சதுரங்க விளையாட்டில் நிலைமைக்கேற்ப உபாயங்கள் கையாளப்படும்.

புலிகளைத் தோற்கடிப்பதில் பேச்சுவார்த்தைக் காலத்தில் ஒருவகை அணுகுமுறையை இந்த நாடுகள் மேற்கொண்டிருந்தன. பின்னர் போர் ஆரம்பிக்கப்பட்டவுடன் ஒரு மறைமுகக் கூட்டில் அனைத்துத் தரப்பினரும் இணைந்து புலிகளைத் தோற்கடித்தனர். அதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவியே மகிந்த ராஜபக்சே.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மகிந்த ராஜபக்சேவைத் தோற்கடிக்க வேண்டிய அவசியம் மேற்குலகத்துக்கு ஏற்பட்டது. அதனால் ஒரு எதிர்ப் போட்டியாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை மேற்குலகம் நிறுத்தியது. ஆனாலும் சரத்தினால் வெற்றி பெற முடியவில்லை. அதாவது மேற்குலகினால் வெற்றியடைய முடியவில்லை.

மகிந்த ராஜபக்சே அடிப்படையில் ஒரு தேசியவாதி என்பதால் சிங்கள இராசதந்திரத்துக்கு சிங்கள அதிகார வர்க்கத்துக்கு மிகவும் விருப்பத்துக்குரியவராக இருக்கிறார். இந்த ஆதரவுப் பலத்தின் மூலம் மகிந்த ராஜபக்சே மேற்குலகத்துக்கு சவாலான மனிதராக மேற்குலகத்தின் அதிகரித்த தலையீட்டுக்கு உடன்படாதவராகவே இருக்கிறார்.

இதேவேளை சிங்கள இராசதந்திரத்தின் கணிப்பின்படி வளர்ந்து வரும் ஆசிய மண்டலப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு ஏற்ப தன்னை இப்போதிருந்தே அதற்கு இசைவாகத் தயார்ப்படுத்துகின்றது. இதன்படி அது இந்தியா, ஜப்பான், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சார்ந்த ஒரு வித அணுகுமுறையைக் கைக்கொள்கிறது.

இதை மேற்குலகத்தினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இது மேற்குலகத்துக்கு நீண்டகால அடிப்படையில் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்று அது கருதுகிறது. இதுவே இப்போதைய பிரச்சினையாகியிருக்கிறது.

இதன்படி மேற்குலகம் மகிந்த ராஜபக்சேவை அதிகாரத்திலிருந்து விலக்குவதற்காக அல்லது அவரைப் பணிய வைப்பதற்காக இலங்கையின் மீது அதிகரித்த நெருக்கடிகளை சடுதியாக ஏற்படுத்தி வருகிறது. போர்க்காலத்தின்போது வன்னியில் உருவாகியிருந்த மனித அவலத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக மேற்குலகின் தெருக்களில் தமிழ் மக்கள் போராடியபோது அதைப் பொருட்படுத்தாத மேற்குலகம், இப்போது சடுதியாக தமிழர்களின் அரசியற் பிரச்சினைமீது அதிகரித்த கவனத்தைச் செலுத்தியிருக்கிறது இந்தப் பின்னணியில்தான்.

தமிழர்களைத் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு துருப்புச் சீட்டாக மேற்குலகம் கையாள முற்படுகிறது. அத்துடன் மகிந்த ராஜபக்சே அரசின் போர்க்குற்றங்களையும் மனித உரிமை தொடர்பான சிக்கல்களையும் அது கையில் எடுத்துள்ளது. இதற்காக அது ஐ.நா.வையும் களத்திலிறக்கியிருக்கிறது. இதன்படி ஐ.நா.வின் செயலர் திரு. பான்கி மூன் இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு ஒரு நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.

ஏற்கனவே பொருளாதாரத் தடைகளுக்கான முன்னோட்ட நிகழ்ச்சியாக வரிச்சலுகைகளை மட்டுப் படுத்தியிருக்கும் மேற்குலகம் இறுதியாக விரித்துள்ள பொறி, இந்த மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிவிப்பாகும்.

ஆனால், இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இந்தியா சும்மா இருக்குமா என்ன? அது இதற்குள் புகுந்து விளையாடுகிறது. புலம் பெயர் தமிழர்களை மேற்கு அரவணத்தால் இலங்கையிலிருக்கும் தமிழர்களைத் தான் அணைத்துக் கொள்கிறது இந்தியா. இதன்படி அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தன்வசப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக கூட்டமைப்பு நிபந்தனையில்லாமல் சரணாகதியடைந்து விட்டது என்று அந்த அமைப்பின் உறுப்பினர்களே சண்டையிட்டுக் கொண்டு வெளியேறும் அளவுக்கு நிலைமைகள் முற்றியிருந்தன. விளைவாக, ஒரு அணி மேற்கு சார்பாகவும் இன்னொரு அணி இந்தியா சார்பாகவும் களத்தில் பிரிந்து நிற்கின்றன.

ஆக, தமிழர்களை வைத்தும் அவர்களைப் பிரித்தும் இந்தியாவும் மேற்குலகும் தங்களின் நலன்களை நிறைவேற்றிக் கொள்ளப் பார்க்கின்றன. இதற்கு இனப்பிரச்சனையை அவை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

இனப்பிரச்சினை தீராத வரைக்கும் இந்த மாதிரி இடையில் இருக்கும் பிளவுகளைப் பயன்படுத்தி தங்கள் தேவைகளையும் நலன்களையும் நிறைவேற்றிக் கொள்ளும் இந்த வல்லரசுகள். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். அதுதான் இலங்கையின் இன்றைய நிலைமை.

இப்போது இலங்கைக்கு ஒரு அவசரப் பயணமாக வந்திருக்கும் முன்னாள் இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் மேற்குலகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் உருவாகியிருக்கும் நெருக்கடியில் ஒரு புதிய வகைப் பாத்திரத்தை இந்தியாவுக்குப் பெற்றுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர் முடிந்தாலும் போர் முடியாத காலத்தைப் போலவே இலங்கையில் அரசியல், பொருளாதார நிலைமைகள் இருக்கின்றன. மரண பயம், உயிரிழப்பு என்ற விஷயங்களைத் தவிர, வேறு எந்த நெருக்கடிகளிலிருந்தும் மக்கள் இன்னும் விடுதலையாக வில்லை.

அப்படி அவர்கள் அவற்றிலிருந்து விடுதலையாகக் கூடிய சூழல் இருப்பதாகவும் தெரியவில்லை. காரணம், சர்வதேச அரசியல் பொறிமுறைகளை எதிர்கொள்ளத் தக்க அரசியல் பொருளாதாரப் பலத்தை விரிவாக்கக் கூடிய ஆளுமை இலங்கையின் ஆட்சிபீடத்துக்கு வரவேண்டும. அதற்கான களச் சூழலை சிங்கள அதிகார வர்க்கம் உருவாக்க வேண்டும். ஆனால், அதற்குச் சாத்தியமேயில்லை. ஏனென்றால், சிங்கள அதிகார வர்க்கத்துக்கு எப்பொழுதும் இனவாதமே முதலீடு. அது அதை வைத்துத்தான் எப்போதும் தன்னுடைய ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்கிறது. எனவே அதை இழக்க அது விரும்பாது.

இதில் துக்ககரமான வேடிக்கை என்னவென்றால் தமிழ்த் தரப்பின் அதிகார வர்க்கமும் இந்த இனவாதத்தை வைத்தே தனது இருப்பையும் அதிகாரத்தையும் பேணுகிறது. ஆக மொத்தத்தில் சிறிதும் பெரிதுமாக எல்லா அதிகார வர்க்கங்களும் தத்தமது சக்திக்குட்பட்ட வகையில் தொழிற்படுகின்றன ஒரே அச்சில்.

போருக்கு முந்திய இலங்கை என்றோ போருக்குப் பிந்திய இலங்கை என்றோ சொல்வதால் எந்தப் பயனும் இல்லை.

00

poompoom2007@gmail.com

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com