அறிவியல் தொடர்: நிஜமும் நிஜத்தைப் போன்றதும்
நவீன மருத்துவத்தின் வணிகப்பசி அதன் மீது ஒரு ஆழ்ந்த கசப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனோடு அணு ஆயுத மற்றும் தீவிரவாத எதிர் போர் அழிவுகளும் சேர்ந்துகொள்ள அறிவியல் மீது தீவிரமான அவநம்பிக்கை நுண்சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களிடம் நீலம் பாரித்தது. இது அறிவியல் புனைகதைகளில் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு ஒரு படிமமாகவே மாறிவிட்டது. தமிழ் எழுத்தாளர்களில் கணிசமானோருக்கு அறிவியல் பிரக்ஞையும் கவனமும் இருக்கிறதோ இல்லையோ, மேற்சொன்ன அவநம்பிக்கை உள்ளது. வெகுஜன ஊடகங்கள் நவீன மருத்துவத்தின் மகிமைகளை பஜனை பாடுவது இதன் மற்றொரு துருவம். இந்த இரு தீவிர நிலைப்பாடுகளின் மத்தியரேகையில் அறிவியல் செய்துவரும் சாதனைகளை, பாயச முந்திரிப்பருப்பை போல் அங்கீகரிக்கத் தவறக் கூடாது. மருத்துவ அறிவியலின் சமீபத்திய மைல்கல் மரண வாயிலில் காத்திருக்கும் குழந்தைகளுக்கான ஒரு நூதன கல்லீரல் உறுப்பு-மாற்று சிகிச்சை.
உறுப்பு-மாற்று சிகிச்சை, நீண்ட கால மருந்து உட்கொள்ளல், செலவு, கவனம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஆகிய பல சிரமங்கள் மற்றும் ஆபத்து அம்சங்களை உள்ளடக்கியது. உள்ளே பொருத்தப்பட்ட வேற்று உறுப்பின் மீது நம் உடல் ஒரு தாக்குதலைத் தொடுத்தபடி இருக்கும். இதுவரை மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த உள்-தாக்குதலைச் சமாளிப்பது பற்றியே அக்கறை கொண்டுவிட்டு இப்போது சற்று மாற்றி யோசித்திருக்கிறார்கள். மருந்துகளின் உதவியின்றி தடுப்பாற்றலைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு இயல்பாகவே நோய் நொடிகளில் இருந்து மீண்டுவரும் திறன் அதிகம். புற்றுநோயில் இருந்து தப்புவது பெரியவர்களை விட அவர்களுக்கே எளிது. அமெரிக்காவின் ஜேக்சன் மெமோரியல் மருத்துவமனையில் மருத்துவர் டொமயாகி கேட்டோ ஏழு மாதங்கள் முதல் எட்டு வயதுக்கு உட்பட்டத் தீவிரமாக கல்லீரல் பழுதுபட்ட சக்கரப்படுக்கை குழந்தைகளுக்கு அபாரமான ஒரு மாற்று சிகிச்சை செய்து காப்பாற்றி உள்ளார். இக்குழந்தைகளுக்குப் புதுகல்லீரலில் ஒரு பகுதியை மட்டும் பழையதில் பொருத்தினார் கேட்டோ. இதனால் தூண்டுதல் பெற்ற பழைய கல்லீரல் சிறப்பாக வளர்ந்து மறுஅவதரித்தது. ஆரோக்கியமாக ஈரல் பழையபடி வளர்ந்து விட்டதை உறுதி செய்த பின், கேட்டோ அந்நிய உறுப்பை அழிக்க பொருமிக் கொண்டிருக்கும் தடுப்பாற்றலை அடக்கி வைக்கும் மருந்துகளை நிறுத்தினார். கட்டழித்து விட்ட தடுப்பாற்றல் செயற்கையாகப் பொருத்தப்பட்ட கல்லீரல் பகுதியைத் தடயமின்றி அழித்து விட்டது. கேட்டோ இம்முறையைப் பயன்படுத்தி எட்டுப் பேரில் ஏழு குழந்தைகளைக் காப்பாற்றினார். இக்குழந்தைகள் இனிமேல் மருந்து உட்கொள்ளவோ பின்விளைவுகள் குறித்துக் கவலைப்படவோ வேண்டாம். இம்முறை 1990-இல் அறிமுகமானாலும் இப்போதுதான் வெற்றிக்கான அறிகுறிகளைக் கண்டுள்ளது. கேட்டோவின் அறுவை சிகிச்சை அதன் ஆரம்ப நிலையில்தான் உள்ளது. இதில் ஆபத்துக்கள் பல உள்ளன. பிற அறுவை சிகிச்சைகளை விட ரெட்டிப்பு நேரம் ஆகும். அப்போது செலுத்தப்படும் மருந்துகளால் மூளை வீக்கம் ஏற்பட்டு உயிரிழக்க நேரலாம். மிகச் சிலருக்குக் கல்லீரல் மீண்டும் வளராமல் போகலாம். ஆனால் இத்தனை அபாயங்கள் தாண்டி உயிர்வாய்ப்பு இல்லாத பல குழந்தைகளை இப்போது இந்தக் கண்டுபிடிப்பு காப்பாற்றி உள்ளது. இந்திய தேசப்பிரிவினை ஒரு நடுநிலைப் பார்வை போல் இத்தகைய அறிவியல் வீழ்ச்சி, எழுச்சிகளுக்கும் ஒரு நிதான அணுகுமுறை தேவை உள்ளது. ஒரு அறுவை சிகிச்சையின் முக்கியத்துவத்தை அதன் முடிவில் தேடுவது டாக்டர் ஜோக்காக மட்டும் முடிந்துவிடும்.
abilashchandran70@gmail.com