
அரிதாகிவிட்ட உன் அண்மைகளால்
என் நாட்குறிப்புகள்
தழும்பேறிக்கொண்டிருக்கின்றன.
அடிக்கடி தொலைந்து போய் விடுவாய் எனத்தெரிந்தும்
என் வீட்டுச்சாளரங்களைத் திறந்து விடுகிறேன்.
உன்னுடனான ரகசிய தொடர்புகளைப் பத்திரமாய்
என் படுக்கையின் அடியில் பதுக்கி வைத்துள்ளேன்
என்றேனும் எழுந்து வந்து
கடிகார முள் சப்தத்துடன் என்னை ஆளமாட்டாயா என்று .
உலராத நினைவுகளின் வாசனை
என் வீட்டு செம்பருத்தி இலையின் பச்சையமாக இருக்கிறது.
உன்னிருப்பை உணர்த்தும்போது..
என்னுள் என்னைப் பார்க்கும் தருணங்கள்
நிரம்பிக்கிடக்கின்றன..
நீ என்னைப் பார்க்கும் வேளையில்..
என்னுடனான மற்றவரின் தொடர்புகள்
எல்லையை விட்டு நகர்ந்து செல்கின்றன
உன் இருத்தலைப் பொருட்டு..
இதோ இன்னும் சற்று நேரத்தில்
என் அகத்தை விட்டு
வெளியேறிவிடுவாய்...
அக்கணங்களில்
தொலைந்து போவது
நீ மட்டுமல்ல
நானும்தான்...
mailtoraji.81@gmail.com