முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
கூடன்குளம்: எந்த முடிவும் எடுக்க முடியாத கோழை அரசாங்கத்தின் சில்லறைத் தந்திரங்களும் தேசிய அளவில் வியாபிக்கும் அணு எதிர்ப்பு அலையும்
மாயா
தடை செய்யப்பட்ட எமன்களின் நாடு
எர்னஸ்டோ குவேரா
இன்னும் முடியவில்லை.........மாய மான் வேட்டை........?
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
மாற்றங்களை எதிர்ப்போம்...!
ஆர்த்தி வேந்தன்
2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (4)
ராஜ்சிவா
மாபெரும் உலக இலக்கிய நூல்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் வழங்கும் தொடர் பேருரைகள் - 2011 நவம்பர் 21 முதல் 27 வரை
-
கவிதை
ஓர் இக்ளூ அறைக்குள் பற்றியெரிதல்
பத்மஜா நாராயணன்
தேய்பிறை
ராஜா
திரும்புதல்
ஆறுமுகம் முருகேசன்..
எல்லையிழந்த வார்த்தைப் பறவைகள்
தேனு
காலமாற்றம்...
ஹேமா
விழ நேரும் தருணங்களின் விதிமுறைகள்..
இளங்கோ
எஃப் டிவி ஒளிரும் கார்காலம்
ப.தியாகு
ஒரு ரகசியம் உருவாகியது
சரவண வடிவேல்.வே
கனவின் தீவிரம்
ராசை நேத்திரன்
மர்லின் மன்றோவின் ஸ்கர்ட்
சின்னப்பயல்
காக்டெயில்
ஆத்மார்த்தி கவிதைகள்
சிறுகதை
விசுவாசம்
கார்த்திக் பாலா
மேய்ச்சல்
உஷாதீபன்
ஹைக்கூ வரிசை
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்............கொஞ்சம் ஹெல்தியாய்.......
கே.பத்மலக்ஷ்மி
மாபெரும் உலக இலக்கிய நூல்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் வழங்கும் தொடர் பேருரைகள் - 2011 நவம்பர் 21 முதல் 27 வரை
-

மாபெரும் உலக இலக்கிய நூல்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் வழங்கும் தொடர் பேருரைகள் -  2011 நவம்பர் 21 முதல் 27 வரை

உயிர்மை மற்றும் ரஷ்ய கலாச்சார மையம்/ஜெயகாந்தன் புஷ்கின் இலக்கியப் பேரவை இணைந்து வழங்கும் ஏழுநாள் இலக்கிய கொண்டாட்டம்

மாபெரும் உலக இலக்கிய நூல்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் வழங்கும் தொடர் பேருரைகள்

நாள்: நவம்பர் 21 முதல் 27 வரை

இடம்: ருஷ்ய  கலாச்சார மையம், ஆழ்வார்பேட்டை, சென்னை

நேரம்: தினமும்  மாலை 6 மணி

உலக இலக்கியப்  பேருரைகள் 

புத்தகங்களுக்கு ஒருபோதும் வயதாவதேயில்லை. அவை வாசகனின் வழியே தன்னை  வளர்த்துக் கொண்டேயிருக்கின்றன. பத்து வயதில் படித்த ஒரு  புத்தகத்தை முப்பது வயதில் படிக்கையில் அதன் அர்த்தம் முழுவதும் மாறிவிடுகிறது. ஒரு புத்தகத்தை எந்த இருவரும் ஒன்று போல புரிந்து கொள்வதேயில்லை. ஒரு புத்தகம் வாசிப்பவனின் அனுபவத்திற்கும் புரிதலுக்கும் ஏற்ப உருமாறிக் கொண்டேயிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய விந்தை.

நினைவுகளைப் பதிவு செய்யவும் மீட்டு எடுக்கவும் ஆவணப்படுத்தவும்  புத்தகத்தைத் தவிர வேறு  சிறந்த தோழமை கிடையாது. அதிலும் நூற்றாண்டுகாலமாகக் கொண்டாடப்பட்டு வரும் கிளாசிக்கல் புக்ஸ் எனப்படும் செவ்வியல் பிரதிகள் மானுட வாழ்வின் பெரும் ஆவணங்களாகவே இருக்கின்றன.

இன்று அவற்றை மறுவாசிப்பு செய்வதற்கு எளிதாக புதிது புதிதாகப்  பல பதிப்புகள் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன. ஆனால்  இன்றைய இளம் வாசகர்கள் தொலைக்காட்சிக்கும் இணையத்திற்கும் தரும் முக்கியத்துவத்தைப் புத்தகத்திற்குத் தருவதில்லை.

அதிலிருந்து விடுபட்டு உயர்வான புத்தகங்களை  மறுஅறிமுகம் செய்து வைக்கவும், உலகின் சிறந்த எழுத்தாளர்களைக் கொண்டாடவும், வாழ்வின் நுண்மைகளை இலக்கியத்தின் வழியே அறிந்து கொள்ளவுமே ஒரு வார உலக இலக்கியப் பேருரை நடைபெற உள்ளது.

இதற்காக டால்ஸ்டாயின் அன்னாகரீனினா, தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும், பாஷோவின் ஜென் கவிதைகள், ஹோமரின் இலியட், ஷேக்ஸ்பியரின் மெக்பெத், ஆயிரத்தோரு அராபிய இரவுகள், ஹெமிங்வேயின் கிழவனும் கடலும், ஆகிய  ஏழு புத்தகங்கள் குறித்த பேருரைகள் நிகழ்த்தப்பட இருக்கின்றன.

தினம் ஒரு  புத்தகம் குறித்து ஒரு மணி  நேர உரையும் அதைத்தொடர்ந்து அரைமணி நேரக் கலந்துரையாடலும்  நடைபெறும்.

உலக இலக்கியத்தை  அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் அரிய முயற்சியிது.

••

டால்ஸ்டாயின்  ‘அன்னாகரீனினா

உரை நிகழ்த்தப்படும்  நாள்

நவம்பர் 21, திங்கள்கிழமை மாலை ஆறு மணி

இலக்கிய உலகின் தனிப்பெரும் சிகரம் டால்ஸ்டாய். 1878 ஆண்டு ருஷ்ய மொழியில் வெளியான இந்த நாவல் இன்று வரை உலகின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.

  "All happy families are alike; each unhappy family is unhappy in its own way." என்ற நாவலின் துவக்க வரிதான் நாவலின் அடித்தளமும், திருமணமான பெண்ணின் அகத்தனிமையை, காதலை, மனவேதனைகளை நுட்பமாக எடுத்துச் சொன்ன நாவலிது. ருஷ்ய சமூகத்தின் ஆன்மாவைத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது என்று விமர்சகர்களால் கொண்டாடப்படும் இந்த நாவல் தமிழிலும் வெளியாகி உள்ளது. ஐந்து முறை படமாக்கப்பட்டுள்ளதோடு பலமுறை நாடகமாகவும் நடத்தப்பட்டிருக்கிறது.

•••

தஸ்தாயெவ்ஸ்கியின்குற்றமும் தண்டனையும்

உரை நிகழ்த்தப்படும் நாள்

நவம்பர் 22, செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணி

எல்லா புனைவுகளையும்  விடவும் விசித்திரமானது தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை. துயரத்தின் சாற்றை மட்டுமே  பருகி வாழ்ந்த அவரது  வாழ்வின் ஊடாகவே அவரது படைப்புகள் உருக்கொண்டிருக்கின்றன. எழுதுவதை, தவிர வேறு எந்த வழியிலும் தன்னை ஆறுதல்படுத்திக் கொள்ள முடியாத ஒரு மனிதனின் வெளிப்பாடுகள் தான் தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துக்கள்.

Crime and Punishment 1866 ஆண்டு வெளியானது. துயருற்ற ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனின் வாழ்க்கை நெருக்கடியின் ஊடாக, அவமானமும் குற்றவுணர்ச்சியும் மனிதனை எப்படி வதைக்கின்றன என்பதைக் கதைக்களமாகக் கொண்டிருக்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி. மனசாட்சிதான் மனிதனின் ஒரே தண்டனைக்கூடம். அது எந்தக் குற்றத்தையும் மன்னிப்பதுமில்லை மறப்பதுமில்லை என்ற குரல் தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல் முழுவதும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

••

பாஷோவின்  ‘ஜென் கவிதைகள்

உரை நிகழ்த்தப்படும்  நாள்

நவம்பர் 23, புதன்கிழமை மாலை ஆறு மணி

மெய்ஞானம் என்பது தண்ணீரில் மிதக்கும்  நிலவைப் போன்றது. நிலா நனைவதுமில்லை. தண்ணீர் உடைபடுவதுமில்லை  என்பதுதான் ஜென் கவிதைகள் காட்டும் வழி.

கவிதை வாசிப்பது  என்பது  நீர்நிலையை நாடிவரும்  பறவைகளை வேடிக்கை பார்ப்பதைப் போன்றது. எந்தப் பறவை எப்போது சிறகடித்து மேலே போகும். எது தரையிறங்கும் என்று தெரியாது. எவ்வழியே இப்பறவைகள் வந்தன. எதையெல்லாம் தாண்டி வந்திருக்கின்றன என்று புரியாது. எல்லாப் பறவைகளும் ஒரே வானில் பறக்கின்றன என்றாலும் எந்த இரண்டும் ஒன்று போலிருப்பதில்லை. பறவைகள் வானில் பறக்கையில் அதன் நிழல் நீரில் மிதந்து செல்கிறது என்பது போல அறிந்த, அறியாத விந்தைகள் கொண்டது கவிதை.

  ஜென்  கவிதைகளின் பிதாமகனாகக்  கொண்டாடப்படும் பாஷோவின் கவிதைகள் இயற்கையைப் பற்றிய தனித்துவமான குரலைக் கொண்டிருக்கின்றன. ஜப்பானின் இடோ காலகட்டத்தைச் சேர்ந்த மட்சுவோ பாஷோ 1644ல் பிறந்தவர் (Matsuo) அவரது கவிதைகள் வைரத்தைப்போல தனக்குள்ளாக ஒளிர்ந்து கொண்டேயிருக்கின்றன.

••

ஷேக்ஸ்பியரின்மெக்பெத்

உரை நிகழ்த்தப்படும்  நாள்

நவம்பர் 24, வியாழக்கிழமை மாலை ஆறு மணி 

நம்பிக்கைத் துரோகமும் பேராசையும் மனிதனை வீழ்ச்சியடையச் செய்துவிடும் என்பதற்கு மெக்பெத் தான் சிறந்த உதாரணம்.

எதிர்காலம்  என்னவென்று தெரியாதவரை தான் மனிதன் நிம்மதியாக இருப்பான். அது குறித்த சகல ஆரூடங்களும்  மனித மனதை ஆட்டிப்படைக்கவே  செய்கின்றன என்பதையே மெக்பெத் நாடகம் விளக்கிக் காட்டுகிறது.

1611  ஆண்டு முதன்முறையாக மேடையேறிய நாள் முதல் இன்று வரை மெக்பெத் நாடக உலகின் தலைசிறந்த பிரதியாகவே இருந்துவருகிறது. ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகப்பிரதிகளில் மெக்பெத்திற்கு தனியிடம் இருக்கிறது.

மெக்பெத்தின் அதிகார வேட்கையும், அகத்தவிப்பும் லேடி மெக்பெத்தின் குற்றவுணர்ச்சியும் நம் காலகட்டத்திற்கும் பொருத்தமானதாகவே இருக்கிறது.

மெக்பெத்தின்  கவித்துவம் சுவைக்கச் சுவைக்க  தித்திக்கக்கூடியது. ஷேக்ஸ்பியரின்  குரல் மனித ஆன்மாவை வழிநடத்தும்  தீர்க்கதரிசியின் குரலேயாகும்.

***

ஹோமரின்இலியட்

உரை நிகழ்த்தப்படும்  நாள்

நவம்பர் 25, வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணி

ஹோமர் என்பது கிரேக்கச் சொல். அந்த சொல் வழிகாட்டுபவர் என்ற பொருள் கொண்டது. ஹோமர் பார்வையற்றவர். எப்போதும் அவரை ஒருவர் வழிநடத்திக்  கூட்டி வருவார். அதனால் அந்தப் பெயர் வந்தது என்கிறார்கள். ஹோமர் பார்வையற்றவர் என்பதற்கும் நேரடியான குறிப்புகள் இல்லை. ஆனால் பொதுவில் அவர் பார்வையற்றவர் என்றே பலராலும் குறிப்பிடப்படுகிறார். இதிகாசங்கள் தன்னளவில் இயல்பும் அதீதமும் ஒன்று கலந்தவை. கடவுளும் மனிதனும் ஒன்று சேர்ந்து இயங்கும்  வெளியது.

ஹோமரின் கிரேக்க இதிகாசங்கள் வெறும் கற்பனைப் பிரதிகள் மட்டுமில்லை. மாறாக, அவை கிரேக்க சமூகத்தின் தொல் நினைவுச் சேமிப்புகள். அதில் கடவுளின் உலகமும், வரலாறும் சமூக நெருக்கடிகளும் அறமும் நீதிநெறிகளும் தனிமனித இச்சைகளும் ஒன்றுகலந்திருக்கின்றன. இதிகாசத்தை ஆழ்ந்து கற்கும் மனிதனால் மட்டுமே வாழ்வின் மகத்தான தரிசனத்தை அடையமுடியும்.

ஆயிரத்தோரு அராபிய இரவுகள்

உரை நிகழ்த்தப்படும்  நாள்

நவம்பர் 26, சனிக்கிழமை மாலை ஆறு மணி

One Thousand and One Nights எனப்படும் அராபிய இரவுகள் மாபெரும் கதைக்களஞ்சியமாகும். அரபு இலக்கியத்தின் தனிப்பெரும் செல்வமாகக் கருதப்படும் மிகப்பழமையான புத்தகமிது. இதில்தான் சிந்துபாத்தின் கடற்பயணமும் அலிபாபாவின் கதையும் அலாவுதீனின் அற்புத விளக்கும் விவரிக்கப்படுகிறது. பாக்தாத் நகரை மையமாகக் கொண்டு ஷெகரஷாத் என்ற இளம்பெண் சொன்ன 1001 கதைகளின் கானகமிது. ஒவ்வொரு கதையும் தனித்து ஒரு நாவல் எழுதப்படுமளவு முக்கியமானது. ஆயிரத்தோரு இரவுகள் என்றும் ஆயிரத்தோரு அராபிய இரவுகள் என்றும் பலவிதமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருப்பவர் ரிச்சர்ட் பர்ட்டன். இதைத் தவிர மூன்று வேறு மொழிபெயர்ப்புகளும் வெளியாகி உள்ளன.

ஹெமிங்வேயின்  ‘கிழவனும் கடலும்

உரை நிகழ்த்தப்படும்  நாள்

நவம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணி

அமெரிக்க  நாவலாசிரியரான ஹெமிங்வேயின் நோபல் பரிசு பெற்ற நாவல்  கிழவனும் கடலும். இது 1952ம் ஆண்டு வெளியானது. சாண்டியாகோ என்ற வயதான மீனவன் கடலில் மீன்பிடிக்கச் சென்று ஒரு திமிங்கலத்தை வேட்டையாடும் நீண்ட போராட்டத்தைச் சொல்லும் கதையிது.

மனிதனின்  ஆசைகள் தோற்கடிக்கப்படக்கூடும். ஆனால் மனிதனை ஒருபோதும்  தோற்கடிக்கவே முடியாது என்ற எண்ணமே இந்த நாவலின் ஆதாரக்குரல். இன்று வரை ஐம்பது லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ள இந்த நாவல் இரண்டு முறை திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

இலக்கிய உலகின் மறக்கமுடியாத கதாபாத்திரமாக  சாண்டியாகோ போற்றப்படுகிறார். நூறு பக்க அளவே உள்ள சிறிய  நாவலான கிழவனும் கடலும் மாபெரும் இதிகாசங்களுக்கு இணையானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் வாசகர்களாலும் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com