முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
அப்படியெல்லாம் எளிதில் மறந்துவிட முடியாது இந்திய சினிமா வரலாற்றை...!
கிராபியென் ப்ளாக்
எண்ணங்கள்
நர்சிம்
சொலவடைகளும் பழமொழிகளும் வாழ்வியல் 10
கழனியூரன்
கவிதை
வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி
எம்.ரிஷான் ஷெரீப்
தாத்தனின் நாட்குறிப்பிலிருந்து...
ஹேமா(சுவிஸ்)
பிரத்யேகக் கொலைவாள்
பாலசிவா
பாவனைகள்
ஜி.ஜே.தமிழ்ச்செல்வி
இளங்கோ கவிதைகள்
இளங்கோ
பெண் புலி!
தினேஷ் பாலா
சிறுகதை
திருட்டு
ஆத்மா
பொது
எண்ணங்கள்
நர்சிம்

மிஷ்கினின் அஞ்சாதே எழுப்பிய பாதிப்பில்தான் எழுதத் துவங்கினேன் என பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்.

அப்படியான மிஷ்கினுடன் பணியாற்றிய சின்னஞ்சிறு அனுபவத்தை, எனக்கான சாபங்களுக்கிடையில் இருக்கும் சொற்ப வரங்களில் ஒன்றாகவே பார்க்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்னர் அப்பாவை ராமச்சந்திராவில் சேர்த்திருந்த்து பற்றியும் அவரின் கவலைக்கிடமான நிலையையும் எழுதி இருந்தேன்.

மிகவும் இக்கட்டான ஒரு தருணத்தில், மருத்துவர்கள் பயமுறுத்திப் போயிருந்த நொடியில் இருண்டுபோய் நீண்ட வளாகத்தில் தன்னந்தனியாய் அமர்ந்திருந்த பொழுது, அலைபேசியில் அழைத்த ஆத்மார்த்தி, ‘ஒரு வெயில் நேரம்’ தொகுப்பு குறித்து நிறைய பேச வேண்டும் என்றும், அடுத்த வரும் விமர்சனக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியுமா என்றும் கேட்டார். விரக்தியாக பேசிவிட்டு, தேதியைக் கேட்டதும், சொன்னார். விரல்கள் அனிச்சையாக எண்ண, சரியாக பத்து நாட்கள். அழுகை வந்தது. "வரக்கூடிய சூழ்நிலைல இருந்தா வர்றேன்ண்ணா" என்று சொல்லி,வைத்துவிட்டேன்.

அரை மனதோடு மதுரைக்குச் சென்று அரைநாள் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு, வீட்டிற்குக் கூடப் போகாமல் மீண்டும் பஸ் ஏறிவிட்டிருந்தேன்.

திருச்சியைத் தாண்டி வந்துகொண்டிருக்கும் பொழுது, போன். " விஷ்வா பேசுறேன், எங்க இருக்கீங்கன்னு சார் கேட்குறாரு.." என கேட்டுக்கொண்டிருக்கும்பொழுதே பின்னால் இருந்து அவரின் குரல் கேட்டது, "அவரு எங்க இருந்தாலும் நைட் வரச்சொல்லுங்க". அவ்வளவுதான். அப்பா, ஆஸ்பத்திரி எல்லாம் மறந்து மிஷ்கின் (‘சார்’ சேர்த்துக்கொள்கிறேன்!) உடன் அதற்கு முன்னர் நடந்த சந்திப்பும் பாரதியார் பாடல்கள் குறித்து அவர் பேசியவைகளும் நினைவிற்கு வந்து போயின. (அந்தச் சந்திப்பில் அவர் மனதில் இருந்த ஒரு சிறுகதையை விவரித்திருந்தார். அந்தக் கதையை அவர் எங்கு எப்படி படைப்பாக வெளிப்படுத்துவார் என ஆவலுடன் காத்திருக்கிறேன்.)

திருச்சிக்கும் சென்னைக்குமான தூரம் அவ்வளவு நீண்டது என்பதை உணர்ந்தேன் அன்று. கடக்கும் மைல்கற்களை எல்லாம் விடாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

வாள மீன், கத்தால, கன்னித்தீவு இதுபோன்ற ஏதாவது ஒரு பாட்டை எழுதச் சொன்னால், என்ன செய்வது எங்கு போவது என வார்த்தைகளை பிடித்துக்கொண்டே, இரவு பதினோரு மணிக்கு, பேனா மூடியை கழட்டி பின்னுக்குச் சொருகிக்கொண்டு அவர் அறைக்குள் நுழைந்தேன்.

கணீர் குரல், "என்ன இவ்ளோ தாடி, க்ளீன் ஷேவ் பண்ணிட்டு நாளைக்கு நைட் வந்துருங்க.. ஒரு செகண்ட் வர்ற ஒரு டாக்டர் ரோல் இருக்கு.. சும்மா ஜாலியா பண்ணுங்க".

பேனாவை அதன் இடத்தில் இருத்திவிட்டு, ராமச்சந்திராவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் பொழுது, உதறலைத் தாண்டி, "அடடே டாக்டரே வந்துட்டாரே" கேலிக்குரல்கள் தான் காதுமுழுதும்.

மிஷ்கின் எனும் மகத்தான படைப்பாளியுடன் ஒரு முறையாவது பேசிவிடும் வாய்ப்பு கிடைத்திடாதா என ஏங்கிய நாட்களைக் கடந்து அவர் அருகில் நிற்கும் வாய்ப்பு.

நடிப்பதெல்லாம் அல்வா போலத்தான் இருந்தது. ஆனால் அதன் பிறகு டப்பிங் என்றொரு அக்கப்போரு இருக்கிறது. வென அழாத குறை. ஏதோ ஒரு படத்தில் விவேக் பாத்ரூம் கண்ணாடி முன் நின்றுஇந்த தாதா வேசம் எல்லாம் தேவையாடா உனக்கு’ என அழுவாரே.. அப்படித்தான் அழுகை வந்தது, "இன்னும் கொஞ்சம் ஏத்திப்பேசுங்க, அட இறக்குங்க ஜி, ப்ச், சிங்க் ஆகல பாருங்க என அய்யய்யோக்கள்.

மயான சங்கல்ப்பம் போல் டப்பிங் சங்கல்ப்பம் செய்திருக்கிறேன்.

"நமக்க்க்குன்னு ஏந்தான் இப்பிடி ஆகுதோ" நடக்க வேண்டுமே, நடந்தது. எங்கோ லிஃப்ட்டில் இருக்கும்பொழுது (முக்கிய நபர்கள், நீண்ட இடைவெளிக்குப்பின் போன் செய்யும் அந்யத்தங்கள் எல்லாருக்கும் எப்படித்தான் நாம் லிஃப்ட்டில் நுழையப்போவது தெரியுமோ?, சரியாக அந்த நேரத்தில் அழைக்க பதிலுக்கு நம்மை கேட்டும் கேட்காமல் பதைபதைப்பில் அலற விட்டு, ஃப்ளோர் வரும்வரை பக்கத்தில் நிற்பவர்கள் நம்மை "எங்க இருந்து வர்றானுங்க,ச்சே" என்பது போல பார்க்க வைக்கிறார்களோ?)

"மிஷ்__ன் சார் ஆ__ஸ்ல இரு_து பேசு__ம்"

"ஹ…லோ, சரியா கேட்கலங்க..டவர்.."

"டைட்டில்ல பேரு போ__ணும், சொல்__ங்க"

"நர்சிம்"

"ஹ__லோ."

"ராம் குமாரா, ஓக்கேமா" டொக்.

தப்பா கேட்டாலும் ந’னவுக்கு நானாவுல தான கேட்கனும், சம்பந்தமே இல்லாம ரானாவுல கேட்குதே என பதறி,

லிஃப்ட் வெளியே துப்பியவுடன், அந்த எண்ணிக்குற்கு மீண்டும் மீண்டும் மீண்டும் அழைத்தால், பிஸியாகவே இருந்தது. யாரிடமாவது பெயர் கேட்டுக்கொண்டிருப்பார் போல என நினைத்துக்கொண்டேன்.

படம் வெளியானதும், திரையில் தோன்றுவதன் வலிமை உணர்ந்தேன். எவ்வளவு அழைப்புகள்?!.

அனைவருக்கும் நன்றிகள்.

மிஷ்கின் படங்களை சிலாகித்து எழுதுவது வழக்கம். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் குறித்து எழுத நிறைய இருக்கிறது. எழுதுவேனாயிருக்கலாம்.

***

 

 

 

நம்மோடு அணுக்கமாக இருந்தவர்கள், நம்மைவிட்டு விலகிய பின் முற்றிலும் எதிர்திசையில் நின்றிருக்கும் கோலத்தைப் பார்க்க நேரிடும் பொழுதுகளில் பழைய நினைவுகளின் மீது,படமெடுத்து ஆடும் சர்ப்பத்தின் நிழல் படிவது போன்றதொரு காட்சி விரிகிறது. பாம்பேறிய வெள்ளறிப்பிஞ்சு போல் கசக்கிறது காலம். ஆனாலும் இவை எல்லாம் உண்மையில்லை என்றே மனம் சொல்லும்.

இது குறித்து யோசிக்கும் பொழுதெல்லாம் ஒளவையார் எழுதிய இந்த குறுந்தொகைப் பாடல் வரிகள் நினைவிற்கு வந்துவிடும். பாடலின் பொருளை விடவும் பயன்படுத்திய வார்த்தைகள் அவ்வளவு வசீகரமானவை. மீமிசை என உயரத்தைக் குறிப்பதாகட்டும் இழிதரும் புனல் என பூக்களை சேர்த்துக்கொண்டுவரும் நீரைக் குறிப்பதாகட்டும், காலமாரி மாலை மாமழை என மழை குறித்த வார்த்தைகளாகட்டும், ‘ஏமம் செய்து அகன்றான்’ என போனவனைப் பற்றிய வரிகளாகட்டும் அற்புத வாசிப்பின்பம் .(ஏமம் என்றால் வாக்குறுதிதானே தவிர காமம் எல்லாம் இல்லை!) குறிப்பாக, ‘வீஇ’ என்ற வார்த்தைக்கு தமிழண்ணல் கொடுக்கும் விளக்கம் ஆச்சர்யமாக இருக்கும். அதாவது வீழ்ந்துகொண்டிருக்கும் பூ அல்லது அப்பொழுதுதான் விழுந்த பூ என்பதாக குறிப்பிடுவார்.

"இந்தா, மழையடிக்கிறதுக்குள்ள வாரேன்"’ என சத்தியம் செய்துவிட்டுப் போனவனைப் பற்றி தலைவி பாடும் குறுந்தொகைப் பாடல் அது.

பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ்

மீமிசைத் தாஅய வீஇ சுமந்துவந்து

இழிதரும் புனலும் வாரார் தோழி

மறந்தோர் மன்ற; மறவாம் நாமே

கால மாரி மாலை மாமழை

இன்னிசை உருமின முரலும்

முன்வரல் ஏமம் செய்து அகன் றோரே!

உழவர்கள் மகிழும் வண்ணம், மாலைவேளையில், இடியுடன் கூடிய கார்கால மழை பொழிகிறது. அந்த மழை நீர், மலைமீது உதிர்ந்துகிடக்கும் பூக்களையும் அடித்துக்கொண்டு அருவி போல் கொட்டுகிறது. இந்த மழைக்காலத்திற்கு முன்பே வந்துவிடுவதாக உறுதியளித்துப்போனவன் மறந்தே போய்விட்டான். ஆனாலும் நான் மறக்கவில்லை."

ஹும்ம்ம்ம்.

***

 

 

 

குமுதம் போன்ற வெகுஜன இதழில் தொடர் எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்து, இரண்டு வாரங்கள் அச்சாகி வந்தபின்னும் கனவு போன்றே இருக்கிறது. முன்னோர் செய்த புண்ணியம். அடுத்த வாரம் என்ன என்ற கேள்வியை எதிர்கொள்ளும் நொடியில் தோன்றும் உணர்வு,மீமிசை. ஒரு பெரிய தயக்கத்திற்குப் பிறகு தொடர்புகொண்டவர்களின் அன்பு, கால மாரியின் மாலை மாமழை போல் நெகிழ்த்தியது. நன்றிகள்.

***

 

 

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com