முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
அப்படியெல்லாம் எளிதில் மறந்துவிட முடியாது இந்திய சினிமா வரலாற்றை...!
கிராபியென் ப்ளாக்
எண்ணங்கள்
நர்சிம்
சொலவடைகளும் பழமொழிகளும் வாழ்வியல் 10
கழனியூரன்
கவிதை
வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி
எம்.ரிஷான் ஷெரீப்
தாத்தனின் நாட்குறிப்பிலிருந்து...
ஹேமா(சுவிஸ்)
பிரத்யேகக் கொலைவாள்
பாலசிவா
பாவனைகள்
ஜி.ஜே.தமிழ்ச்செல்வி
இளங்கோ கவிதைகள்
இளங்கோ
பெண் புலி!
தினேஷ் பாலா
சிறுகதை
திருட்டு
ஆத்மா
பொது
சொலவடைகளும் பழமொழிகளும் வாழ்வியல் 10
கழனியூரன்

கலைஞர்கள் கனவுகளிலும் கற்பனைகளிலும் வாழ்கிற சுகம்தான் பல கலைப்படைப்புகளையும், அமரத்துவமான இலக்கியப் படைப்புகளையும் நமக்குத்  தந்திருக்கின்றன.  

 கனவு வாழ்க்கைக்கும் நனவு வாழ்க்கைக்கும் இடையே உள்ள இடைவெளியை சிலர் மறந்துவிட்டு வாழ்வதால் உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணாஎன்ற நிலை உருவாகி விடுகிறது.  

 எதார்த்த வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களின் மனம் கனவு வாழ்க்கை வாழ்ந்தாவது தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறது. இத்தகைய கனவுலக கற்பனை வாழ்க்கையைப் பற்றியும் சில சொலவடைகள் பேசுகின்றன. முதலில் ஒரு சொலவடையைச் சொல்கிறேன். அதன் பொருள் புரிகிறதா? என்று பாருங்கள். இல்லையென்றால் கீழே நான் தரும் விளக்கத்தைப் படியுங்கள்.

 அக்காடு வாங்கப் போகிறேன்என்று அப்பக்காரன் சொன்னான். அப்படின்னா, ‘பருத்தி விதைஎன்று சொன்னாள் ஆத்தாக்காரி.  

 

 

 

 எனக்கு ஒரு பாவாடையும் சட்டையும்என்றாள் மகள். அதற்கு அப்பன், “அடிக்கடி போடாதே. அழுக்காகிவிடும். மடித்துப் பெட்டியிலே வைஎன்றான். இப்படி நீளமான சில சொலவடைகளையும் ஒரு விடுகதையைப் போல கிராமத்து மக்கள் இன்றும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  

 இந்த மாதிரி சொலவடைகளுக்கு ஒரு கதை சொல்லியின் லாவகத்துடன் கதை போல சில சம்பவங்களை விளக்க வேண்டும்.  

 ஒரு ஊர்ல ஒரு சம்சாரி இருந்தான். அவனுக்கு கஸ்டம்னா கஸ்டம். அப்படி ஒரு கஸ்டம். தினமும் வேலைக்குப் போனால்தான் கஞ்சிஎன்கிற நிலமை. இப்படிப்பட்ட அன்னாடம் காச்சிகளை அந்தக் கொத்துஎன்றும் கிராமாந்தரங்களில் சொல்றதுண்டு. கொத்துத் தானியம் மச்சில் ஏறுமாஎன்று கேட்கிறது ஒரு பழமொழி.  

 புருசக்காரன், ‘அன்னன்னைக்கு வேலை பார்த்து அன்னன்னைக்கு சாப்பிட்டா எப்படி? கொஞ்சமாவது சேமிப்பு வேண்டாமா?’ என்று நினைத்தான். எனவே வீட்டுச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு ஒரு சீட்டு நாட்டுப் போட்டு, நாமளும் நாலுபேரைப் போல ஒரு துண்டு நிலமாவது வாங்கனும்னு நினைச்சான். அதனால் அந்த ஊரிலேயே நம்பிக்கையான ஒரு ஆளிடம் சீட்டுப் போட்டான்.

 சம்பாதிக்கும் பணத்தில் பாதியை சீட்டுக்குக் கட்டி விடுவதால் சாப்பாட்டுக்கு கஸ்டமாக இருந்தது. என்றாலும் என்ன செய்ய? ‘வாயைக் கட்டி வயித்தைக் கட்டித்தானே சம்பாதிக்கனும்என்று நினைத்து மிளகாயை உப்பில் முக்கி கஞ்சியைக் குடித்துக் கொண்டு பல்லைக் கடி. நெல்லைக்கடின்னு ஒரு வருசம் சீட்டைக்கட்டி முடித்து விட்டார்கள் வெற்றிகரமாக.

 இப்போதுதான் சம்சாரிக்கு குறை சீட்டையும் இதே போல் ஈரத்துணியை இடுப்பில் கட்டிக் கொண்டு பசி, பட்டினி கிடந்தாவது கட்டி பதக்கு விதப்பாடு நன்செய் நிலத்தை வாங்கி விடலாம்என்ற நம்பிக்கை வந்தது (16 சென்ட் நிலம்)

 அந்த நம்பிக்கை அவனுக்குள் கனவுகளை வியர்த்தது. அவன் மட்டுமா நஞ்சை நிலம் வாங்கும் கனவில் மிதந்தான். அந்தக் குடும்பமே. கனவுலகிலும், கற்பனையுலகிலும் மிதக்க ஆரம்பித்தது.

ஒரநாள் ராத்திரி அப்பக்காரன் ரொம்ப சந்தோசமாக தன் மனைவி மக்களிடம், “அடுத்த வருசம் சீட்டைக் கட்டி முடித்துவிடலாம். அதன்பிறகு முழு பணமும் நம் கைக்கு வந்து விடும்.  அந்தப் பணத்தை வைத்து மேலக்காட்டில் ஆற்றுப் பாசனம் உள்ள இடமாகப் பார்த்து ஒரு காடு, கழனி வாங்க வேண்டும். மேலத்தெரு மூக்கையா பாட்டையாவிடம் சொல்லி இருக்கேன். அவரும் தோதுவான இடமா பார்த்து வாங்கித் தாரேன்னு சொல்லி இருக்கார்என்றான். உடனே அவன் மனைவி, “கழனிக்காடு வாங்கினால் முதன்முதலில் அதில் பருத்திதான் விதைக்கனும்என்று சொல்லி அவள் பங்கிற்குத் தன் கற்பனை சிறகை விரித்தாள்.

 அப்பனும் ஆத்தாளும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த மகளும் தன் பங்கிற்கு கனவு காண ஆரம்பித்தாள். அப்பா புதிதாக நீங்கள் வாங்கப் போகும் நிலத்தில் பருத்தி விதைத்தால் செடி வளர்ந்த நிறைய பருத்தி காய்க்கும். அதை நானும் அம்மாவும் எடுத்துத் தருகிறோம். நீங்கள் அதை கமிசன் கடைக்கு கொண்டு போய்  விற்று விட்டு வரும்போது எனக்கு ஒரு பட்டுப்பாவாடையும் சட்டையும் வாங்கிட்டு வாருங்கள்என்றாள்.

 கனவு வாழ்க்கை தொடர்ந்தது. அப்பக்காரன் எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலே போய் தன் மகளிடம், “மகளே, அப்பா முதன்முதலில் பருத்தி விற்ற பணத்தில் உனக்குப் பட்டுப்பாவாடையும் சட்டையும் வாங்கித் தருகிறேன். ஆனால் நீ அதை அடிக்கடி உடுத்திக் கொண்டு ஊருக்கும் அலையக் கூடாது. நீ பட்டுப்பாவாடை உடுத்தி இருப்பதைப் பார்த்து வேண்டாதவர்கள். பொறாமைப்பட்டு உன்னை கந்தட்டி (கண்திருஷ்டி)  போட்டு விடுவார்கள்என்று செல்லமாக கண்டித்தாள் அம்மாக்காரி, “ அப்படியெல்லாம் என் பிள்ளையை தெருவில் அலைய விடுவேனா? ஆசைக்கு ஒருமுறை அவள் பட்டுப்பாவாடையும், சட்டையும் போட்டபின் அதை அப்படியே அழுக்குப்படாமல் கழற்றி வாங்கி மடித்துப் பெட்டியில் வைத்து விடுவேன்என்றாள்.

 பெட்டியில் பாச்சான், பல்லி இருக்கும். மறக்காமல் பெட்டிக்குள் பாச்சான் உருண்டைவாங்கிப்போடுஎன்றான் அப்பக்காரன்.

 சரி, அப்படியே செய்கிறேன்என்றாள் ஆத்தாக்காரி. புதிதாக வாங்கப் போகிற இடத்தை எப்படி எல்லாம் அழகுபடுத்த வேண்டும் என்ற கற்பனையில் மிதந்தான் அப்பக்காரன். அந்நிலத்தில் எப்படி எப்படி வேலைகள்என்று கனவு கண்டாள் தாய்.

 இப்படியாக அந்தக் குடும்பமே, கனவிலும் கற்பனையிலும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஒரு அதிர்ச்சியான செய்தி வந்து அவர்கள் தலையில் இறங்கியது. அச்செய்தி, ‘ அவர்களின் சீட்டுக்கரஸ்வான் (சீட்டுக்காரன்) நேற்று ராத்திரி, ‘ராவோடுராவாக ஊரை விட்டே ஓடிட்டான்என்பதுதான்.

 இப்போது மீண்டும் அந்தப் பழமொழியைப் படித்துப் பாருங்கள். அதன் பொருள் எளிதாக விளங்கும்.

 கனவுகளிலும், கற்பனைகளிலும் வாழ்ந்து எதார்த்த வாழ்வில் கஸ்டங்களை அனுபவிக்கும் மனிதர்களைப் பற்றி நிறைய நாட்டார் கதைகளும் பேசுகின்றன.

 ஒரு கோழி முட்டையை வைத்துக் கொண்டு கனவு காண ஆரம்பிக்கிறார்கள் ஒரு தம்பதியர். கோழி முட்டையை அடைவைக்க, அது குஞ்சு பொறிக்க, பின் அது வளர்ந்து விடைக் கோழியாக. அது பலப்பட்டு நிறைய முட்டைகள் இட, அவைகளை அடைவைத்து நிறைய குஞ்சுகள் வர, அந்தக் குஞ்சுகளும் வளர்ந்து கோழிகளாக, பின் கோழிகளை விற்று வெள்ளாட்டங்கட்டி ஒன்று வாங்க, பின் அது வளர்ந்து மூன்று குட்டிகளை ஈன, அவைகளும் வளர்ந்து விட, ஆடுகளை விற்று பசுங்கன்று வாங்க, அது பலப்பட்டு செனை ஆக, என்று அடுக்கடுக்காக கனவு காணும் தம்பதியர்கள் கடைசியில் இப்படி வாக்குவாதம் செய்கிறார்கள்.

பசுமாடு ஈனியதும் முதன்முதலில் கறக்கும் சீம்பாலைஎங்கையாவுக்குத்தான் கொடுக்கனும்என்று பெண்டாட்டிக்காரி சொல்ல.

 இல்லை இல்லை. முதன்முதலில் சீம்பாலை எங்கையாவுக்குத்தான் கொடுக்கணும்என்று புருசக்காரன் சொல்ல...

 இருவருக்குள் சண்டை பெரிதாக மூண்டுவிட, சண்டையை விலக்குத் தீர்க்க வந்தவன், எல்லாம் சரிதான் பாலை யாருக்கு கொடுக்கலாம் என்பதைப் பிறகு தீர்மானித்துக் கொள்ளலாம். முதலில் மாடு எங்கே? என்று கேட்டான்.

அதன்பின்தான் எதார்த்தமான நனவு நிலைக்குத் திரும்பிய தம்பதியர் கோழிமுட்டையைத் தேடிப் பார்ப்பார்கள். அவர்கள் போட்ட சண்டையில் கோழி முட்டையும் உடைந்து கூழ்கூழாகி இருப்பது அப்போதுதான் அவர்களுக்குத் தெரிந்தது.

நான் மேலே சொன்ன கதையின் அடியாகப் பிறந்த பழமொழிதான் வாங்காத மாட்டுக்கும் பீச்சாத பாலுக்கும் சண்டை போட்ட மாதிரிஎன்பது.

ஒரு மண்பானையை வாங்கிக்கொண்டு, அதை விற்று ஒவ்வொரு பொருளாக வாங்குவதாக விற்பதாக கனவு கண்டு கடைசியில் யானைவாங்கியதாகவும் யானை மிதித்து பானை உடைந்ததாகவும் முடியும் கதையிலும், மனித மனத்தின் கனவுலக கற்பனைகள் பதிவாகியுள்ளது.

ப்படிக் கனவுவாழ்க்கையில் மிதப்பவர்களைப் பார்த்து, ‘இருப்பதை விட்டு விட்டு, பறக்க ஆசைப்படக்கூடாதுஎன்று எச்சரிக்கிறது இன்னொரு பழமொழி.

ஒருவன் தான் வாங்கிய கண்ணாடி பொம்மையை வைத்துக்கொண்டு, விதவிதமாக கனவு கண்டு, கற்பனையில் மிதந்து கடைசியில் கைதவறி அந்த கண்ணாடி பொம்மைய கல்லில் போட்டு உடைக்கிற அல்நாசர்கதைகளும் நாட்டுப்புறத்தில் நிறையவே உலவுகின்றன.

கனவுகளும் கற்பனைகளும் கலைப்படைப்பிற்கு அழகுகொடுக்கலாம். ஆனால் அவைகள் எதார்த்த வாழ்வில் நம் முன்னேற்றத்தைத் தடை செய்து விடுகின்றன.

நம் முன்னோர்கள் தான் வாழ்ந்து பெற்ற, அனுபவங்களில் இருந்து உருவாக்கிய இத்தகைய பழமொழிகளும், தான் அனுபவித்துக் கற்ற பாடங்களில் இருந்து உண்டாக்கிய சொலவடைகளும், மீண்டும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்கத் தூண்டுகிறது.

அத்தோடு அவர்களின் வாழ்வியல் அனுபவங்கள் மூலம் உருவாக்கிய பழமொழிகளும் சொலவடைகளும், நம் வாழ்க்கைக்கும் நல்வழி காட்டுகின்றன. அவைகள் வாழ்வியலுக்குத் தேவையான நீதிகளைச் சொல்லாமல் சொல்லுகின்றன.

 

                                                                                                                                                 (இன்னும் பேசுவேன்)

 

 

 

  

 

 

   

 

 

    

 

 

     

 

 

      

 

 

       

 

 

        

 

 

         

 

 

          

 

 

           

 

 

            

 

 

             

 

 

              

 

 

               

 

 

                

 

 

                 

 

 

                  

 

 

                   

 

 

                    

 

 

                     

 

 

                      

 

 

                       

 

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com