உயிர்மை - Uyirmmai March 2010
 
சில அரசியல் ஜோதிடங்கள்
- மனுஷ்ய புத்திரன்
உணவுப் பொருள் விலையேற்றம்: இந்தியர்களின் கொடுங்கனவு
- மாயா
குஜராத் படுகொலை-எட்டாம் ஆண்டு நினைவு (பிப்ரவரி 27-மார்ச் 3, 2002), ஒரே ஒரு புகைப்படம்
- கெ.மோகன்லால், தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா
மை நேம் இஸ் கான் - ஆனால் நான் ஒரு பயங்கரவாதி அல்ல
- சாரு நிவேதிதா
சரத் பொன்சேகாவைக் கண்டு அஞ்சும் மகிந்த ராஜபக்ஷ
- இளைய அப்துல்லாஹ்
வசந்தத்தின் இடிமுழக்கம்:சத்யஜித் ரே முதல் கௌதம் கோஷ் வரை
- யமுனா ராஜேந்திரன்
வாழிய நிலனே : இளையராஜாவுக்காக சில கேள்விகள்
- சுகுமாரன்
இடைச்சொல் : நாரத ராமாயணம்-பகடியும் புனித மறுப்பும்
- எஸ்.ராமகிருஷ்ணன்
மூங்கில் இலை மேலே : வெளிமான்களும் மழைக்காடைகளும்
- சு.தியடோர் பாஸ்கரன்
போரும் வாழ்வும் : துப்பாகிகள் அலையும் இடிபாடடைந்த நகரம்
- தீபச்செல்வன்
திரும்ப முடியாத பாதைகள் : இமயம் நோக்கிய ஒரு எழுத்து யாத்திரை
- பிரபஞ்சன்
காற்றின் பதியம் : ஏரிகளிலிருந்து மேலெழும்புகின்றன சடலங்கள்
- ரவிக்குமார்
எல்லாவற்றிற்கும் பின்னே ஒரு கதை இருக்கும்
- மனுஷ்ய புத்திரன்
உனது சாயலுள்ள பெண்
- மனுஷ்ய புத்திரன்
இதற்கு முன்னும் இதற்குப் பிறகும்
- மனுஷ்ய புத்திரன்
மாம்சத்தின் வாள்
- மனுஷ்ய புத்திரன்
பணிநீக்க உத்தரவு
- மனுஷ்ய புத்திரன்
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்
- மனுஷ்ய புத்திரன்
உறையிலிடாத முத்தம்
- சுப்ரபாரதி மணியன்
சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்
- -
ஜெயந்தன் 1938-2010 - எளிய மனிதர்களை வரைந்த கலைஞன்
- பவா செல்லத்துரை
கடிதங்கள்
- -
click here
வாழிய நிலனே : இளையராஜாவுக்காக சில கேள்விகள்
சுகுமாரன்

திருமணமான பெண்ணைக் காதலிப்பது...

ஷாஜஹான் மாடம்பாட்டு தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர். எழுத்தாளர். சென்னையிலுள்ள அமெரிக்கத் தகவல் மையத்தில் கலாச்சார அதிகாரியாகச் சில காலம் பணியாற்றியவர். இப்போது துபாயில் பணியாற்றுகிறார்.

அஷீஷ் நந்தியுடன் அவர் நடத்திய நேர்காணல் ஒன்றைக் கொஞ்ச காலம் முன்பு மொழிபெயர்த்திருந்தேன். அது ‘காலச்சுவடு’ இதழில் வெளியானது.

ஷாஜஹானுடன் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது அருந்ததிராயைப் பற்றியும் குறிப்பீடு வந்தது. ‘சிறிய விஷயங்களின் கடவுளை’ (God of small things) இந்திய மொழிகளில் ஆக்க அவர் மறுப்பதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

‘மற்ற மொழிகளை விடுங்கள், தாய்மொழியான மலையாளத்தில் கூட மொழிமாற்ற அவர் அனுமதிக்கவில்லையே’ என்றார் ஷாஜஹான். கூடவே ஒரு சம்பவத்தையும் சொன்னார். அதைத் தனது சமீபத்திய நூலான ‘ஜே.என்.யூ.வில் சுவரோவியங்கள்’ என்ற நினைவுக் குறிப்புப் புத்தகத்திலும் குறிப்பிட்டிருக்கிறார்.

எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஷாஜஹானின் நண்பருமான என். கோபால கிருஷ்ணன் ‘சி.வி.கடவுளை’ மலையாளத்தில் மொழிபெயர்க்க ஒப்புக்கொண்டார். அது தொடர்பாக பதிப்பாளருக்கும் அவருக்குமிடையில் கடிதப் போக்குவரத்துகளும் நடந்தன. தன்னுடைய நாவலின் மொழிபெயர்ப்பு குறையில்லாததாக இருக்கவேண்டும் என்பது அருந்ததி ராயின் விருப்பம். பதிப்பாளருக்குத் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கடிதம் எழுதினார். ‘என்னுடைய நாவலின் மொழி பெயர்ப்பு என்னுடைய நேரடி மேற் பார்வையில் நடைபெற வேண்டும்’.

மேற்படிக் கடிதம் மொழிபெயர்ப்பாளரான கோபாலகிருஷ்ணனுக்கு அனுப்பப்பட்டது. அதை வாசித்த கோபால கிருஷ்ணன் பின்வருமாறு பதில் எழுதினார். “ஒரு கலைப் படைப்பை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குப் பெயர்ப்ப தென்பது திருமணமான பெண்ணைக் காதலிப்பதுபோல. அதை அவள் கணவனின் நேரடி மேற்பார்வையில் செய்யமுடியாது”.

இளையராஜாவுக்காக சில கேள்விகள்

1997 இல் நான் பணியாற்றிக் கொண்டிருந்த வார இதழுக்காக இளையராஜாவைப் பேட்டி காண முடிவு செய்திருந்தேன். பத்து நாட்களுக்கும் மேலாகக் குறுக்கு,நெடுக்கு, வட்டம், சதுரமான எல்லா வழிகளிலும் முயன்று அவர் சம்மதத்தைப் பெற்றிருந்தேன். ஒரு வாரம் வீட்டுப் பாடம் செய்து கேள்விகளைத் தயாரித்தேன். குறிப்பிட்ட தினம், குறிப்பிட்ட இடம், குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராகவும் செய்தேன்.

ஒரு படத்தின் பின்னணி இசையமைப்பில் ஈடுபட்டிருந்த இளையராஜாவை இடைவேளையில் சந்தித்தேன். அச்சிடப்பட்ட கேள்விகளை வாங்கிப் பார்த்தார். ‘இவ்ளோ கேள்விக்கும் பதில் சொல்லணும்னா உடனே முடியாதே. நீங்க ஒண்ணு பண்ணுங்க. நாளைக்குக் காலைல வீட்டுக்கு வாங்க. வீடு தெரியுமில்லையா?’ என்றார். உடன் வந்திருந்த சக ஊழியர் வி.கே.சுந்தர் பதில் சொன்னார், ‘தெரியும் சாமி’.

‘சரி. அப்ப காலைல பேசிக்குவோம், வாங்க’ என்று மிருதங்கத்தில் தீர்மானம் வைத்த சுருக்கில் சொல்லி விட்டு ஒலிப்பதிவுக் கூடத்துக்குத் திரும்பினார் இளையராஜா.

சுந்தரிடம் கேட்டேன். ‘நீங்க ஏன் சுந்தர் அவரை சாமிங்கிறீங்க?’

சுந்தர் சொன்னார், ‘சினிமா ஃபீல்டுல எல்லாரும் அவரை அப்படித் தாண்ணே கூப்புடறாங்க’.

‘அவர் அப்படிக் கூப்புடணும்னு சொல்றாரா?’

‘இல்லண்ணே’ என்றார் சுந்தர்.

மறுநாள் காலை தியாகராய நகரிலுள்ள இளையராஜாவின் வீட்டுக்குப் போனோம். சிறிது நேரக் காத்திருப்பில் அவருடன் பேச வாய்த்தது. ‘பேசறதுக்கு முன்னால என்ன சாப்பிடறீங்க?’ என்று விசாரித்தார். எதுவும் வேண்டியிருக்கவில்லை. பேட்டி கிடைத்தால் போதும். இது மனநிலை. காலையில் ஒன்றும் சாப்பிடாமல் ஓடி வந்தது. இது எதார்த்தம்.சௌந்தரியக் கூச்சம் காரணமாக எதுவும் வேண்டாமென்றேன் அல்லது என்றோம்.

இளையராஜா ஒரு நொடி எங்கள் முகரைகளைப் பார்த்தார். எழுந்தார். உள்ளே போனார். திரும்பி வந்து அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து வந்த பணியாளர் ஒரு தட்டில் பலகாரமும் இரண்டு கண்ணாடிக் குவளைகளில் ஆரஞ்சு பானமும் கொண்டு வந்து வைத்தார். சாப்பிட்டோம். அதுவரை காத்திருந்த இளையராஜா ஒரு கற்றைத் தாளை எடுத்துக் கொடுத்தார். “இதைப் பப்ளிஷ் பண்ணிக்கங்க” என்றார்.

தாள்களைப் புரட்டிப் பார்த்தேன். நான் கொடுத்திருந்த கேள்விகளுக்குப் பதிலாக அவரே  கேட்டு அவரே எழுதியிருந்த கேள்வி பதில்கள். மண்டை கொதித்தது. இதை நான் எதற்காகப் போட வேண்டும்?  ஒரு வாரம் மெனக்கெட்டுக் கேட்ட அவருடைய இசை, அதையொட்டிப்படித்த சில நூறு பக்கங்கள், அதைப் பற்றி யோசித்துத் தயார் செய்த கேள்விகள் - எல்லாம் வீணா?

தொண்டைக்குள் உறுத்தியது. என் முகக் கறுப்பை இளையராஜா கவனித்திருக்க வேண்டும். “ஏன்? இது போதாதா?” என்று சிரித்து கொண்டே கேட்டார். எனக்குள்ளிருந்த இசைக் காதலன் திமிறி எழுந்தான். இது அவனுடைய முறை. அவனை நிரூபித்துக் கொள்ள வேண்டிய முறை.

இசை பற்றி, இளையராஜாவின் இசை பற்றி. அப்போது வெளியாகியிருந்த மலையாளப் படம் ‘குரு’வில் இளையராஜா பயன்படுத்தியிருக்கும் நூதன சங்கீதம் பற்றி, மைய இசை என்ற அவருடைய பங்களிப்பைப் பற்றி, அவருடைய இசையால் மட்டுமே ஓடிய படங்கள் பற்றி, ரீ-ரிக்கார்டிங் என்பதைக் காட்சிக் கலையின் தவிர்க்க முடியாத கூறாக இளையராஜாதான் இந்திய சினிமாவில் நிறுவியது பற்றியெல்லாம் எனக்குள்ளிருந்த இசைப் பித்து கொட்டித் தீர்த்தது.

இளையராஜா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். தகவல் பிழையாகப் பட்டவற்றைத் திருத்தினார். சிரித்துக்கொண்டே ‘சபாஷ், நீங்க சாயங்காலம் வாங்க, பேசிடலாம்’ என்றார். தனியாவர்த்தனம் அப்போதுதான் ஒலித்து முடிந்த காற்று போல நிசப்தமாகயிருந்தது மனம்.

மாலையில் ஒலிப்பதிவுக் கூடத்தில் மறுபடியும் சந்திப்பு. உட்காரச் சொன்னார் இளையராஜா. ஒரு யாத்ரா மொழி (இயக்கம் -பிரதாப் போத்தன்) படத்தின் பின்னணி இசைப் பதிவு நடந்து கொண்டிருந்தது. ஒலிப்பதிவுக் கூடத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. படத்தின் இறுதிக்காட்சி திரையில் ஓடியது.

தகப்பனைக் கொல்லக் காத்திருந்த முறைதவறிப் பிறந்த மகன் (மோகன்லால்)அத்தனை நாட்களும் தன்னை அன்போடு அரவணைத்திருந்த பெரியவர்தான் (சிவாஜி கணேசன்)  அப்பா என்று தெரிந்து கொள்கிறான். அவருக்கும் அந்த உண்மை தெரிகிறது. ‘மகனே’ என்று அழைக்கவும் முடியாமல் தவிப்புடன் ஊரை விட்டுப் போகிறார். ரயில் ஏறிப் போகும் அவரை வழியனுப்பி வைத்துவிட்டு ரயில் மறைந்ததும், அவரைக் குத்திக் கொல்வதற்காகத் தூக்கிக்கொண்டு திரிந்த கத்தியை வீசி எறிகிறான். அவனையும் அவன் தாயையும் அதுவரைக்கும் பராமரித்து வந்த காரணவரின்  (நெடுமுடி வேணு)தோளில் சாய்ந்து நடந்து போகிறான். உச்ச கோணத்தில் அவனும் காரணவரும் நடந்து போகும் பிம்பம் உறையக் காட்சி முடிகிறது.

விளக்குகள் ஒளிர்ந்தன. இளையராஜா ஹார்மோனியம் வைத்த மேஜையில் அமர்ந்து ஸ்வரக் குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் எழுதி முடித்ததும் ‘நரசிம்மன்’ என்று குரல் கொடுத்தார். நரசிம்மன் வந்து பிரசாதம் வாங்குவதுபோல அந்தத் தாள்களை வாங்கினார். ஒவ்வொரு இசைஞராக வந்து அவரவர் வாத்தியத்தின் பகுதியை வாங்கிப் போனார்கள். எல்லா வாத்தியங்களும் ஆயத்தமாகிற கலவை ஒலி கேட்டது. இளையராஜா உத்தரவிட்டதும் இசைக் கோர்ப்புத் தொடங்கியது. கருவிகள் ஒத்தியங்கி ஒரு மையத்தை நோக்கிக் குவிந்தன. அது காட்சியில் தொற்றியது. சில நிமிடங்களுக்கு முன்பு மங்கலாக இருந்த காட்சியின் உணர்ச்சிக் கோலம் இப்போது செறிவாகப் புலன்களில் பதிந்தது.

ஒரு காட்சியை ஒலியாகப் பார்ப்பவரை என்னவென்று சொல்வது என்று அன்று யோசிக்கத் தொடங்கினேன். இன்றும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அவரைப் பொருத்து மேதை என்பது தக்கையான வார்த்தை.

“நம்ம வேலை முடிஞ்சிடுச்சு. பேட்டியை ஆரம்பிக்கலாமா?” இளையராஜாவின் கேள்வி காதருகே ரீங்கரித்தது. மௌனமாக சம்மதம் சொன்னேன். அவர் பதில் சொன்னதெல்லாம் நான் தயார் செய்த கேள்விகளுக்கு. நேர்காணல் முடிந்து விடை பெறும்போது அவரிடம் சொன்னேன்: “நீங்க பாக்கறது தான் சவுண்ட் சினிமா”. பதிலாக இளையராஜா சிரித்தார், உச்சஸ்தாயியில்.

உறை மெழுகின் மஞ்சாடிப் பொன்

அண்மையில் வெளியான கவிதைப் புத்தகங்களில் வெகுவாகப் பேசப்பட்ட  தொகுப்பு தாணு பிச்சைய்யாவின் ‘உறை மெழுகின் மஞ்சாடிப் பொன்.’ கவிதைக்குள் அதிகம் பேசப்படாத ஓர் இனத்தின் பாடுகளைச் சொல்லும் கவிதைகள் தொகுப்பில் உள்ளன. ஆசாரிகள் என்று அழைக்கப்படும் பொற்கொல்லர்களின் வாழ்வுதான் பிச்சைய்யாவின் கவிதை மையம். அந்தத் தொழிலின் அனுபவங்கள், அதனுடன் தொடர்பு கொண்ட மொழிப் பிரயோகம் , அந்த மரபுக்குள் பேசப்படும் தொல் கதைகள், நம்பிக்கைகள் எல்லாவற்றையும் கவிதைகள் கொண்டிருக்கின்றன. தொகுப்பின்  தனித்துவம் அது. முன்னுதாரணம் இல்லாததும் கூட.

சில நாட்களுக்கு முன்பு பதிப்பகப் பணியையொட்டி ஒரு தொகுப்பை வாசிக்க வேண்டியிருந்தது. ஏரலைச் சேர்ந்த கவிஞர் ஒருவரின் தொகுப்பு. அதுவும் பொற்கொல்லர்களின் வாழ்க்கையைப் பற்றியது. தாணு பிச்சைய்யாவின் தொகுப்பில் கவிதை இருந்தது. ஏரல்காரரின்  தொகுப்பில் நகைப் பட்டறைத் தூசில் தங்கத்தைத் தேடுவதுபோல அதைத் தேட வேண்டியிருந்தது. கவிதை எங்கே இருக்கும்? சாதிக்குள்ளா? சாதியைத் துறக்க முயலும் மனதுக்குள்ளா?

கைதட்டல் வாங்கும் வரிகள்

சாகித்திய அக்காதெமியும் கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ‘21 ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைச் செல் நெறிகள்’ என்ற கருத்தரங்கு சென்ற மாதம் நடைபெற்றது. கட்டுரை வாசிப்பும் கவிதை வாசிப்புமாகக் கழிந்த ஒரு தினம்.

அக்காதெமி விருது பெற்றவர்களான சிற்பி பாலசுப்ரமணியம், புவியரசு, முன்னணிக் கவிஞர்களான தமிழச்சி தங்கப்பாண்டியன், குட்டிரேவதி, உமா மகேஸ்வரி, மர கதமணி, உள்ளூர்க் கவிஞர்களான தென்பாண்டியன், சென்னிமலை தண்டபாணி ஆகியவர்களின் சாந்நியத்தில் நானும் கலந்துகொண்டேன். புகழ்பெற்ற விமர்சகர்களான தி.சு.நடராசன், இந்திரன் முதலியவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

கவிதை வாசிப்பில் சிற்பி ஒரு கவிதை வாசித்தார். அதில் கவிதை காற் பங்கு. சாதுரியம் முக்காற் பங்கு. இதை சிற்பியும் ஒப்புக்கொள்வார். அதிலிருந்த சொல்லாட்டம் ஈர்ப்பதாக இருந்தது.

‘பாரதியே!  சிங்களத் தீவினுக் கோர் பாலம் அமைப்போம் என்றாயே... அகதிகள் வருவதற்கா? ஆயுதம் அனுப்புவதற்கா?’

அன்று அதிகம் கைதட்டல் வாங்கிய வரிகள் இவைதாம்.

குட்டிகளோடு கொஞ்சநேரம்

குடியிருப்புக்கு அருகில் காலி மனைகள் கிடக்கின்றன. எங்கிருந்தோ வந்தது. கழுத்தில் பட்டையும் உரிமத் தகடும் தொங்கியதால் கௌரவமான வீட்டிலிருந்து தப்பி வந்தது என்று புலப்பட்டது. தொங்கிய வயிற்றுடன் அந்த இடத்தைப் பரிசோதனை செய்து பார்த்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு காலிமனைக்குள் அடர்ந்திருந்த புதர்களின் நடுவிலிருந்து ங்யி... ங்ஙாவ்... ங்யூவ்... என்று வெவ்வேறு சுருதிகளில் கண் விழிக்காத புதுக் குரல்கள் கேட்டன. பிஞ்சு அழுகைகளை அடக்குகிற விதத்தில் தாய் உறுமல். மனித வாடை அந்தப் பக்கமாக அடித்தால் உறுமல் தீவிரமாகும். நீண்ட குரைப்பும்  ஊளையும் விரட்டும்.

ஒரு வாரம் கழித்து மெல்லிய வவ்...வவ் என்ற குரல்கள் எல்லா வீடுகளின் முன்னாலும் அலைந்தன. மொத்தம் ஏழு குரல்கள். ஆறு செம்பட்டை. ஒன்று வெள்ளை. அம்மாவின் அதட்டல் விலகிய நேரங்களில் ஒன்றையொன்று கொஞ்சிக் கொண்டன. விரட்டி விளையாடின. கட்டட வேலை செய்ய வந்த கொத்தனார் பையன் இருந்த ஏழில் மிருக இலக்கணங்கள் முழுமையாக இருந்த ஒன்றைக் கோணிப்பையில் போட்டுக் கொண்டு போனான். அன்றிரவு முழுவதும் தாயின் சாபம் ஓயாத ஊளையாக ஒலித்து எல்லாருடைய தூக்கத்தையும் கெடுத்தது. கூடவே உடன்பிறப்பைப் பிரிந்த குட்டிகளின் இடைவிடாத கேவல்கள்.

மறுநாள் எதுவும் நடக்காதது போல தாய் உலாவப் போனது. ஆறு குட்டிகளும் வீட்டு வாசல்களில் துள்ளின. மெல்ல முன்னேறி  வந்து வாசற்படியருகில் நின்று முனகிக் காட்டின.கழற்றிப் போட்டிருந்த செருப்புகளுடன் விளையாடின. வீட்டுக்காரர்கள் விரட்டியதும் சின்ன வால்களைப் பின்னங்கால்களுக்கு நடுவில் இடுக்கிக்கொண்டு பாய்ந்து ஓடிப் புதரில் பதுங்கின. ஆளரவம் கேட்காத வேளைகளில் ஒன்றன் பின் ஒன்றாக வந்து வாசல்களில் குதித்தன.மடி கனக்க வரும் தாயை வழிமறித்து முலைக் காம்புகளைக் கவ்வித் தொங்கியபடியே இரு குட்டிகள் பசியாறின. மற்ற நான்கும் ங்ரூவ் என்று புலம்பியபடி பின்னால் ஓடின.  தாயின் நடையில் லேசான பெருமிதமும் சின்ன கர்வமும் தெரிந்தது.

குட்டிகளுக்கு இப்போது இடங்களும் வழிகளும் தெரிந்து விட்டிருந்தன.ஆட்கள் இருக்கும் பொழுதும் இல்லாத வேளையும் தெரிந்திருந்தன. பகலில் இரும்புக் கதவுகள் திறந்து கிடக்கும் எல்லா முற்றங்களிலும் நுழைந்து கொண்டாட்டம் போட்டன.

அவற்றின் கும்மாளத்தில் அலங்காரச் செடித் தொட்டிக்கள் கவிழ்ந்தன. வசிப்பிடமான புதரைச் சுத்தமாக வைத்துக்கொள்ளத் தெரிந்த குட்டிகளுக்கு வீட்டில் காலணிகள் வைக்குமிடம் ஆடம்பரக் கழிப்பறையாகத் தெரிந்தன. கடப்பைக் கல் பாவிய தரை சிறுநீர்க் குட்டைகளாயின. எல்லா வீட்டுக்காரர்களும் இரும்புக் கதவுகளைப் பகலிலும் அடைத்துப் போடத் தொடங்கினார்கள். குட்டிகள் சாமர்த்தியமாக இரும்புக் கதவுக்குக் கீழுள்ள இடை வெளியில் நுழைந்து கொட்டமடித்தன.

பொறுமையிழந்த பக்கத்து வீட்டுக்காரரும் எதிர் வீட்டுக்காரரும் அவற்றை விரட்ட வெவ்வேறு உபாயங்களைப் பின்பற்றினார்கள். கிராதிக் கதவுக்குக் கீழே கட்டைகளைப் போட்டார்கள். அதை எதிர்த்து முழக்கமிட்ட குட்டிகளை நீர் வீசி விரட்டினார்கள். அவற்றின் முன்னால் உணவுப் பதார்த்தங்களைக் காட்டக்கூடாது என்று கட்டளையிட்டார்கள். அப்படியும் குட்டிகள் வாசலில் துள்ளி ஓடின. மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்களிடம் குட்டிகளைப் பிடித்துப் போகுமாறு கேட்டுக்கொண்டார்கள். அப்போது அவர்களை வட்டமிட்டு நின்ற தாயும் குட்டிகளும் முனகின. மாநகராட்சி தற்போது விலங்குகளை அப்புறப்படுத்தும் பணியை  நிறுத்தி வைத்திருப்பதாகவும் மறு உத்தரவு வந்ததும் குட்டிகளைப்  பிடிப்பதாகவும்  உறுதி சொன்னார்கள். அண்டை வீட்டுக்காரர்கள் இருவரும் யோசித்தார்கள். பக்கத்து வீட்டுக்காரர் ஒரு யோசனை சொன்னார். ஒரு நடைக்கு இரண்டாக ஆறு குட்டிகளையும்  காரில் ஏற்றிக் கண்காணா தொலைவில் கொண்டுபோய் விட்டு விடலாம். இருவரும் அதைச் சொன்னபோது என்னைச் சந்தேகமாகப் பார்த்தது விளங்கவில்லை. அந்த ஆறு ஜீவன்களுக்கும் ரகசியமாக உணவு கொடுப்பவன் என்பதை ஒருவேளை யூகித்திருக்கலாம்.

அன்று மாலை அவசரமாகத் திறந்த கிராதிக் கதவிடுக்கில் வெள்ளைக் குட்டி கால் சிக்கிக் கதற ஆரம்பித்தது. பக்கத்து வீட்டுக்காரரின் மாமியார் அதை எடுத்து விடப் போக, வெருண்ட குட்டி அவரது வலது கை ஆட்காட்டி விரலைக் குதறியது. அவருக்கான தடுப்புச் சிகிச்சையை முன்னிட்டு குட்டிகளுக்கு ஓரிரு நாட்கள் மனிதத் தொல்லையில்லாமல் ஆனந்தக் கூத்தாடின. மூன்றாவது  நாள்  இரண்டு   குட்டிகள் காரேறிப் போயின; அடுத்த நாள் இரண்டு. கால் முறிந்த வெள்ளைக்குட்டிக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. மனித  ஜீவனைக் கடித்தது சாகாமலிருக்க வேண்டும் என்ற சலுகை. அதற்குத் துணையாக மிஞ்சிய செம்பட்டை.

தாய் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தது. இரவெல்லாம் கத்திக்கொண்டிருந்தது. விடியற்காலையில் கண்ணெட்டாத  தொலைவில் விடப்பட்ட குட்டிகளை அழைத்துக் கொண்டு வந்தது. மீண்டும் விலங்குகளின் குதூகலம்.

பின் வந்த நாட்களில் தாயைப் பார்க்கவேயில்லை. யாரிடம் முறையிடுவது என்று தெரியாத குட்டிகள் பால் நினைந்து உருகின. எல்லா இரவுகளிலும் அவற்றுக்குத் தீனி போட்டேன். அதற்கிடையில் திரும்பி வந்த இரண்டு குட்டிகள் முன்னை விடத் தூரமான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் திரும்பவே இல்லை. எஞ்சிய குட்டிகள் புதருக்குள் அற்ப சிசுக்களாகப் பதுங்கிக் கொண்டன. பகலிலும் அண்டை வீட்டுக்காரர்கள் கண்ணில் படாமல் உணவளித்தேன். பதார்த்தத்தைப் பார்த்து மூக்கை விடைத்த குட்டிகள் ஆள் நிற்பதில் எச்சரிக்கை அடைந்து விலகி நின்றன. ஆளில்லாத நேரத்தில் பயத்துடன் வந்து உணவை விழுங்கின. அந்த அநாதை விலங்குகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள எல்லா முயற்சிகளும் செய்தேன். அவற்றின் மொழியில் ங்வூம் என்று முனகினேன். த்சோ, த்சோ என்று அழைத்தேன். தோ, தோ என்று வசியம் பண்ணப் பார்த்தேன். போடுகிற தின்பண்டத்தை லாவகமாக வந்து கவ்விப் போனதைத் தவிர, ஒரு மனிதனாக என்னை மதிக்கத் தயாராகவில்லை அந்தத்  தந்திரசாலிகள்.

விஷமக் குட்டிகளின் பாராமுகம் எனக்குத் தன்மானப் பிரச்சனையாகி விட்டது. உயர்ரக பிஸ்கோத் துகளாகப் போட்டும் அவை போட்டவனைச் சீண்டவில்லை. ‘சனியன்களா’ பக்கத்தில் வந்து தொலையுங்கள். துன்புறுத்த மாட்டேன்’ என்று தமிழில் தெளிவாக செல்லமாகக் கூப்பிட்டுப் பார்த்தேன். இறைத்த பிஸ்கோத்துகளுக்கும் எனக்கும் இடையில் நின்று நான்கும் விழித்தன.

அடுத்து நிகழ்ந்த சம்பவம் உயிர் வாழ்தலின் மாபெரும் உண்மையைக் கற்பித்தது. எரிச்சல் முற்றிச் சொன்னேன். “ஏ,பட்டிகளா.... ஞான் நிங்ஙளே கொல்லானொந்நும் போகுந்நில்லா. இது தின்னிட்டுப் போய்க்கோ.” நான்கு குட்டிகளும் சமர்த்தாக பிஸ்கோத்துகளை விழுங்கின. சின்ன வால்களை இடுக்கிக் கொண்டு நன்றியுடன் குரைத்தன.

திருவனந்தபுரத்து மண்ணில் ஜனித்த குட்டிகளுக்கு தமிழில் சொன்னால் புரியாது என்பது எப்படி  எனக்கு உறைக்காமல் போயிற்று?

click here

click here
click here