உயிர்மை - June 2014
 
என்ன செய்யப் போறீங்க மிஸ்டர். மோடி?
- ஆர்.அபிலாஷ்
உலகமயமாக்கலில் சமூகம் மற்றும் கலாசாரம் மேற்கும் கிழக்கும் ஓர் ஒப்பீடு
- எச்.பீர்முஹம்மது
ஈழம்: முள்ளிவாய்க்காலுக்குப் பின் ஐந்து ஆண்டுகள்
- தீபச்செல்வன்
வாசிப்பு அனுபவங்களும் புத்தக மதிப்புரைகளும்
- ந.முருகேசபாண்டியன்
ஒரு வாரம்
- அ.முத்துலிங்கம்
மதிப்பிடமுடியாத காதல்
- எஸ்.ராமகிருஷ்ணன்
சுவை இன்பத்தின் எட்டுப் பேருரைகள்
- ஷாநவாஸ்
தனிக்கல்
- நஞ்சுண்டன்
அசைவின் மொழி
- எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
தனி நாடாக தமிழீழம்
- தீபச்செல்வன்
வார்த்தைகளின் புதர்க் காட்டில் தப்பி ஓடும் காட்டு வாத்து
- இந்திரன்
மனுஷ்ய புத்திரன் கவிதைகள்
- மனுஷ்ய புத்திரன்
என்ன மாதிரியான யுகம் இது?
- மனுஷ்ய புத்திரன்
கல்தொட்டி
- பாவண்ணன்
நீலக்கை
- அதிஷா
கடிதங்கள்
- வாசகர்கள்
பெத்தவன்
- வெளிரங்கராஜன்
சுஜாதா விருதுகள் 2014
- சுஜாதா விருதுகள் 2014
சொல்லப்படாத கதை
- இமையம்
தொலைந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிய கதைகள்
- அ.ராமசாமி
வரலாறும், வெங்காய அடுக்குகளும்
- சகஸ்
click here
வாசிப்பு அனுபவங்களும் புத்தக மதிப்புரைகளும்
ந.முருகேசபாண்டியன்

கோவையில் நடைபெற்ற சு.ரா.-75 இலக்கியக் கூட்டத்தில் பேசிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கியவுடன்   ஐம்பது வயதான ஒருவர் என்னுடன் பேசினார். அவர் 150 புத்தகங்கள் எழுதியிருப்பதாகக் கூறினார். நாவல், புதுக்கவிதை, கவிதை, நாடகம், வானொலி நாடகம், அறிவியல், வரலாறு எனப் பல பிரிவுகளில் புத்தகங்கள் எழுதியிருப்பதாக நூற்பட்டியலைக் காண்பித்தார். பெரும்பாலான புத்தகங்களைமணிமேகலை பதிப்பகம்பிரசுரித்திருந்தது. கையில்  அவருடைய புத்தகங்கள் ஏழெட்டு இருந்தன.. அவருடைய பெயரைக் கேள்விப்படாததுடன்  இதுவரை அவருடைய புத்தகத்தைப் பார்க்காதது நூலகர் என்ற முறையில் எனக்கு   வருத்தமளித்தது. இன்னொருபுறம் ஒரே ஆச்சரியம். சிறுபத்திரிகை சார்ந்து இயங்கும் படைப்பாளர்களின் படைப்புகள்தான் பொதுவாக என்னைப் போன்றோருக்கு முக்கியமானவையாகத் தெரிகின்றன. வெளியே பலர் பல்வேறு புத்தகங்கள் வெளியிடுகின்றனர். ஆலந்தூர் . மோகனரங்கன் அவரது நூல்களை வெளியிடத் சொந்தமாகத் தனிப் பதிப்பகம் வைத்துள்ளார். அவர் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தமிழில் வெளியாகும் ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாசகர்கள் எப்படி நினைவில் வைத்துக்கொள்வது? என்றாலும் எழுத்தாளர்கள் எல்லோருக்கும் தங்கள் புத்தகங்கள் பிரபலமடைய வேண்டுமென விரும்புகின்றனர்.  பத்திரிகைகளில் வெளியாகும் நூல் விமர்சனப்பகுதியில் தங்களுடைய புத்தகத்திற்கு மதிப்புரை இடம் பெற்றால் பலரும் மகிழ்கின்றனர். நாளிதழ்கள், சிறுபத்திரிகைகள் நூல்களை அறிமுகப்படுத்தினாலும், ஓராண்டில் வெளியாகும் புத்தகங்களில் 5% அளவிலானவைக்குக் கூட மதிப்புரை வெளியாவதில்லை என்பது கசப்பான உண்மை.

மனிதனின் அனுபவங்களின் பதிவாக விளங்கும் புத்தகம் ஒருவகையில் விநோதமானது. ஒவ்வொரு புத்தகமும் தனக்கான வாசகருக்காகக் காத்தி ருக்கின்றது. புத்தக வாசிப்பு என்பது, தன்னையே மறுவாசிப்பு செய்வது போன்றதாகும். புத்தகம் மீதான ப்ரியம் புதிய திசைவழியில் பயணிக்கத் தூண்டுகிறது. நவீன வாழ்க்கைச் சூழலில் எல்லாப் புத்தகங்களையும் அடையாளம் கண்டு வாசிப்பது இயலாதது. தேர்ந்தெடுத்து வாசிக்க வேண்டிய நிலையில் புத்தக மதிப்புரைகள் புத்தொளியைப் பாய்ச்சுகின்றன. சரியான நூலினைத் தேவைப்படும் வாசகரிடம் சேர்ப்பிக்கும் நுட்பமான பணியினை மதிப்புரைகள் செய்கின்றன.

நாளிதழ்கள், பத்திரிகைகளில் வெளியாகும் மதிப்புரைகளின் பின்புலத்தில் நுண்ணரசியல் பொதிந்துள்ளது. நல்ல புத்தகத்திற்கு நிச்சயம் மதிப்புரை வெளியாகும் என்பது ஒருவகையில் புனைவுதான்.   படைப்பாளரோ அல்லது பதிப்பாளரோ  முயற்சி செய்தால்  மதிப்புரை வெளியாகலாம். மற்றபடி தற்செயலாகச் சில புத்தகங்களுக்கு மதிப்புரை வெளியாக வாய்ப்புண்டு.  வெற்றுப் புகழ்ச்சியான  மதிப்புரையினால் மோசமான புத்தகத்தினைத் தூக்கி நிறுத்த முடியாது: அதேவேளையில் மதிப்புரை எதுவும் வெளியாகா விட்டாலும் நல்ல புத்தகம் காலவெள்ளத்தில் நிலைத்து நிற்கும். சிறந்த புத்தகம் சரியான மதிப்புரையினால் இன்னும் பரவலான கவனம் பெறும். இதுவரை சுமார் 170 க்கும் கூடுதலான புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதி யுள்ளேன். பத்து வயதில் புத்தகம் வாசிக்கத் தொடங்கிய பழக்கம் 1993-முதல் மதிப்புரை எழுதுவதாக மாறியது தற்செயலானது. ஒவ்வொரு புத்தகத்துக்கும் எனக்குமான ரகசிய உறவு, மதிப்புரை எழுதும்போது தொலைந்து போகின்றது. புத்தகம், வாசிப்பின் வழியே எனக்குள் உருவாக்கும் அனுபவம் அலாதியானது.

எண்பதுகளின் நடுவில்  திருவனந்தபுரத்தில் தங்கியி ருந்தேன். விக்ரமாதித்யனின் ஊருங்காலம் கவிதைத் தொகுப்பினை வாசித்துவிட்டு எனது கருத்தினை எழுதி நகுலனிடம் காண்பித்தேன். அவர் பொறுமையுடன் வாசித்துவிட்டு, “நீங்கள் எழுதியிருப்பது சரிதான். ஆனால் விக்ரமாதித்யன் உங்கள் நண்பராச்சே. இது வெளியானால் உங்கள் நட்பு பாதிக்கும். வேணாம் . இப்படி எழுதப்போய்த்தான் சிலருடைய நட்பு எனக்குப் போச்சுஎன்றார். அவருடைய பேச்சு என் மனதைத் தொட்டது. அந்தக் காகிதத்தினைக் கிழித்தெறிந்து விட்டேன்.

1993இல்  குற்றாலம் பதிவுகள் கூட்டத்தில் சந்தித்த நண்பர் சுரேஷ்குமார இந்திரஜித் அவருடைய மறைந்து திரியும் கிழவன் சிறுகதைத் தொகுதியைத் தந்தார். அந்நூலை வாசித்துவிட்டு எனது கருத்தினைக் கடிதமாக அவருக்கு அனுப்பினேன். சில நாட்களில் மதுரையில் நடைபெற்ற சுபமங்களா கருத்தரங்கினுக்கு வந்திருந்த ராஜமார்த்தாண்டனிடம் சுரேஷ் அக்கடிதத்தினைக் காட்டினார். அதை வாங்கி வாசித்த மார்த்தாண்டன் அதைச் சட்டைப்பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டார். பின்னர் அதுதினமணியில் பிரசுரமானது. அந்த மதிப்புரையில் இடம் பெற்றிருந்த எனது பெயர் எனக்கு விநோதமாகத் தோன்றியது. அப்புறம் மார்த்தாண்டன் தொடர்ந்து அனுப்பிய புத்தகங்களுக்கு மதிப்புரைகள் எழுதும் சூழல் ஏற்பட்டது.

காலச்சுவடுஆசிரியரான கண்ணன், ‘இலக்குஆசிரியர் தேவகாந்தன், ‘இந்தியா டுடேமுரளிதரன் போன்றோர் எனது தொடக்ககால மதிப்புரைகள் வெளி யாவதில் பின்புலமாக விளங்கினர். நூல் மதிப்புரை எழுதுவதை முன்வைத்து எனக்குப் படைப்பாளர்களுடன் ஏற்பட்ட அனுபவங்கள் சுவாரசியமானவை. இப்படி யெல்லாம் நடந்தவை வாசிப்பில் உங்களுக்கு வேடிக்கையாகத் தோன்றலாம். சுந்தர ராமசாமியின் இவை என் உரைகள் என்ற கட்டுரை நூலுக்குஇந்தியா டுடேயில் எனது மதிப்புரை வெளியானது. அம்மதிப்புரை சு.ரா.வுக்குப் பிடித்துப்போய் நூலின் இரண்டாம் பதிப்பில் இடம்பெற்றது. நண்பர் மணாவின் நூலொன்றுக்கு  நான்  எழுதிய மதிப்புரையானது  நூலின் அடுத்த பதிப்பில் அச்சாகியுள்ளது. இவை எனது எழுத்தினுக்குக் கிடைத்த அங்கீகாரங்கள்.

குற்றாலம் பதிவுகளில் என்னை  முதன்முதலாகப் பார்த்த யவனிகா ஸ்ரீராமின் இரவுகள் உறங்க அல்ல என்ற தனது கவிதை நூலினைத் தந்தார். அங்கு வந்திருந்த பலருடைய கைகளில் அந்நூல் இருந்தது. அப்பொழுது யவனிகாவின் பெயர் சிறுபத்திரிகை உலகம் அறியாதது. நண்பர் அப்பாஸ் கூட என்ன, சுண்டல் மாதிரி எல்லாருக்கும் தருகின்றார் என யவனிகாவைக் கிண்டல் செய்தார். மோசமான வடிவமைப்பில் அச்சாகியிருந்த அப்புத்தகம் என்னைக் கவரவில்லை. வீட்டிற்குப்போய் ஒரு வாரம் கழித்து வாசித்தால் இரவு என்பது உறங்க அல்ல எனக்குப் பிடித்தது. அப்புறம் அதற்கு எழுதப்பட்ட விமர்சனம்  யாதுமாகிபத்திரிகையில் பிரசுரமானது. அறிமுகம் இல்லாத யவனிகாவின் நூலுக்கு எழுதிய மதிப்புரை ஒருவகையில் அவர் தொடர்ந்து எழுதுவதற்குச் சின்ன தளம் அமைத்திருக்கலாம். இன்று அவர் எனக்கு நெருக்கமான நண்பராக இருப்பதற்கு அந்த மதிப்புரை வழி வகுத்தது என்று சொல்ல முடியும். அவரும் எனது மதிப்புரை முக்கியமானது என்று கடந்த பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்.

முன்பின் அறிமுகமற்றவரின் நூலுக்கு விமர்சனம் எழுதப்போய் நண்பர்களிடம் வசவு வாங்கியிருக்கிறேன். ஆர்.கே. என்பவர் எழுதிய உயிர்த்திரு கவிதை நூலுக்கு எழுதிய மதிப்புரை பிரசுரமானபோது விக்ரமாதித்யன், “அவன்லாம்  ஒரு ஆளுன்னு எழுதுறியேஎன்று உரி மையுடன் கோபித்துக்கொண்டார். அதற்கான காரணத்தை நானும் கேட்கவில்லை, அவரும் சொல்ல வில்லை. என்ன விஷயமாக இருக்கும் என்று இந்த விநாடியில் தோன்றுகின்றது.

நண்பர் நாஞ்சில்நாடன் எழுதிய எட்டுத்திக்கும் மதயானை நாவலுக்கு என்னால் எழுதப்பட்ட விமர்சனம்கதைசொல்லியில் வெளிவந்தது. அந்நாவலில் நாஞ்சில் நாட்டை விட்டுக் கிளம்பியவன் வட மாநிலங்களில் ஓடிக் கொண்டிருக்கின்றான். அப்பொழுது அவன் எதிர்கொள்கின்றவர்கள் எல்லோரும் நாஞ்சில் தமிழ் பேசுவார்கள். அதைப் பகடி செய்து எழுதியது நாஞ்சில்நாடனுக்கு எரிச்சலைத் தந்ததால்  எரிச்சலுடன் பதில் எழுதினார். நான் பதிலுக்கு  நாஞ்சில்நாடனே, நாஞ்சில்நாட்டை விட்டு வெளியேறுகஎன மறுப்பு எழுதியதாக ஞாபகம். சீனியரான நாஞ்சில்நாடனைப் பற்றி அப்படி எழுதியிருக்க வேண்டாம் என இப்பொழுது தோன்றுகின்றது. அந்த விமர்சனத்திற்குப் பின்னரும் நாஞ்சில்நாடன் எப்பொழுதும்போல என்னுடன் நட் பாகப் பழகுகின்றார். விமர்சனம் வேறு, தோழமை வேறு என்ற புரிதலை அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்

குழந்தைகள் ஆண்கள் பெண்கள் நாவலினை வாசித்துவிட்டு எதிர்மறை கலந்த எனது அபிப்ராயத்தினைச் சுந்தர ராமசாமிக்குக் கடிதம் எழுதினேன். அப்புறம் அவரிடம்  அந்நாவலில் செய்யப்பட வேண்டிய திருத்தங் களைப் பற்றி நேரில்  சொன்னேன். சில மாதங்கள் கழித்து அந்நாவலின் செம்மையாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பினை சு.ரா. எனக்கு அன்புடன் அனுப்பியிருந்தார். போன தலைமுறை எழுத்தாளர்களுக்குப் புலமைச் செருக்கும் தனது எழுத்துமீது நம்பிக்கையும் வலுவாக இருந்தன. இன்று சூழல் பெரிதும் மாறி விட்டது. ஒரு  கவிதை நூல் அல்லது நாவல் எழுதியுள்ள இளைஞனை எதிர்மறையாக விமர்சித்தால் வர்க்கமுரண் ஏற்பட்டு விடும்.  அப்புறம் நட்பு என்ற பேச்சினுக்கு இட மில்லை.      ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் நாவ லுக்கு வேதாளமும் விக்ரமாதித்யனும் பேசிக்கொள்வதாக நூதனமான விமர்சனம்பன்முகத்தில் வந்தது. கடுமை யான மொழியில் சோவியத் ரசியாவை முன்வைத்து விமர்சனம் எழுதப்பட்டிருந்தது. ஜெயமோகன் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் தலைகீழாகத் தொங்கும் வேதாளங்கள் இப்பொழுது திரும்பி பார்ப்பது சரியானது என்றரீதியில் பதில் அளித்திருந்தார். அவரது விவாதம் எனக்கு உற்சாகம் அளித்தது.

தமிழச்சியின் மஞ்சணத்தி கவிதைத் தொகுப்பினைச் சங்கத்திணை மரபில் பொருத்தி எழுதப்பட்ட விமர்சனம்உயிர்மையில் வெளியானது. அந்த விமர்சனத்தைப் பத்து தடவைக்கும் கூடுதலாக வாசித்துவிட்டதாகத் தமிழச்சி மகிழ்ச்சியுடன் சொன்னார். எனது மதிப்புரை அவரது படைப்பு பற்றிப் புதிய பிம்பத்தினை அவருக்குள் உருவாக்கியிருக்க வேண்டும்.

வா.மு.கோமுவின் நாயுருவி நாவலுக்குதீராநதியில் மதிப்புரை பிரசுரமானபோது, இதுபோன்ற பத்திரிகையில் எனது புத்தகத்திற்கு விமர்சனம் வருவது இதுதான் முதல் தடவை என மனம் நெகிழ்ந்து சொன்னார். ஐந்து நாவல் கள் எழுதியுள்ளவரின் நிலையே தமிழில் இப்படித்தான் உள்ளது. வெ. இறையன்புவின் அவ்வுலகம் நாவல் குறித்த  எனது மதிப்புரை மிகச் சரியாக வந்துள்ளது என அவர் என்னிடம் சொன்னார். விமர்சகரின் குரலை முக்கியமான தாகக் கருதும் மனநிலை அவருக்கு வாய்த்துள்ளது..

உயிர்மைஇதழில் புத்தக மதிப்புரைகள் நிரம்ப வெளியிட வேண்டும் என்ற விருப்பம் மனுஷ்ய புத்திரனுக்கு உண்டு. ஒருமுறை மாதந்தோறும் ஏழெட்டுப் புத்தகங்களை எனக்கு அனுப்பி, மதிப்புரைகளைஉயிர்மையில் தொடர்ந்து  பிரசுரித்தார். ஆனால் அவரது புத்தகங்களுக்கு மதிப்புரை எதுவும் இதுவரை வெளியாகவில்லை என நினைக்கிறேன். என்னவொரு நகைமுரண். புத்தக மதிப்புரை வருவதற்குப் பண்ண வேண்டிய லாபி குறித்து அறிந்துள்ளவர் அதில் அக்கறையற்று இருப்பது விநோதம்தான்.

யோசித்துப்பார்க்கையில் நெருங்கிய நண்பர்கள் பலரின் நூல்களுக்கு மதிப்புரை எழுதவில்லை என்பது எனக்குத் தெரியும். பிரபஞ்சன், கலாப்ரியா, ரவிசுப்பிரமணியன், சுதீர்செந்தில், .ராமசாமி, ,மனுஷ்ய புத்திரன், செல்மா ப்ரியதர்ஷன், பா.ஆனந்த குமார் எனப் பட்டியல் நீள்கின்றது. எவ்விதமான உறவுமற்றவர்க ளின் பல நூல்களுக்கு மதிப்புரைகள் எழுதியிருக்கும்போது, நெருக்கமானவர்களின் முக்கியமான படைப்புகள் குறித்து எழுதாதது மனதில் நெருடுகின்றது.

லட்சுமி சரவணக்குமார், எஸ்.அர்ஷியா எனப் பல படைப்பாளர்களுடன் எனக்கு  ஏற்பட்ட நட்பு நெருக்க மானதாக மாறியதற்குப் பின்புலமாகப்  புத்தக விமர்சனம் உள்ளது  என்று சொன்னால் தவறில்லை.  புத்தத்தின் வழியேதான் ஒவ்வொரு படைப்பாளரும் எனக்கு நெருக்கமான சிநேகிதர்களாக மாறுகின்றனர்.

இனிமேல் உங்களுடன் எந்த உறவும் இல்லை, பேச வேண்டாம்என்று கௌதம் சித்தார்த்தன் சில ஆண்டு களுக்கு முன்னர் நேரில் என்னிடம் சொன்னபோது எனக்கு வேடிக்கையாக இருந்தது. அவருடைய நூல்கள் எதற்கும் நான் மதிப்புரை எழுதாததுதான் காரணம் என்று அறிந்தேன்.  தினமணிநாளிதழில் சித்தார்த்தனின் பச்சைப்பறவை சிறுகதை நூலுக்கு எனது மதிப்புரை வந் துள்ளது என்று நான் சொன்னதைக் கேட்க அவருக்குச் செவிகள் இல்லை. ஒருக்கால் எனது பேச்சினைப் பொய் என்று அவர் நினைத்திருக்கலாம். எப்படியெல்லாம் இம்சைகள் வருகின்றன பார்த்தீர்களா?

அண்மையில் உற்சாகமான வேளையில், நண்பர் யவனிகாஅண்ணே, நீங்கள் கவிஞர்களுக்குத் துரோகம் பண்றீங்க. புனைகதைகாரர்கள் non-fiction ஆட்களை ரொம்ப மதிச்சு எழுதுறீங்கஎன்று ஆத்திரத்துடன் சொன்னார். அவரது பேச்சில் ஓரளவு உண்மை உள்ளது. நவீன கவிதை எழுதும் இளம் கவிஞர்கள் பற்றி  எழுத முடியாத சூழலில் சிக்கியுள்ளேன். கவிதைத் தொகுதி திருப்தியைத் தராவிட்டால் இவர் எதிர்காலத்தில் சிறந்த கவிதையை எழுதுவார் என்ற நம்பிக்கையைத் தருகின்றார் என முடியும் விமர்சனம் சரிதானா? அது போன்று உள்குத்துடன் எழுதப்பட்ட விமர்சனத்தின் அர்த்தம் புரியாமல் குதூகலத்துடன் மகிழும் கவிஞர்களைப் பார்க்கும்போது பாவமாக இருக்கின்றது. ஒரு கவிதை நூலினைப் பற்றிய விமர்சனத்தில் எதிர்மறையான தொனியில் ஐந்து இடங்களில் நாசூக்காக நான் குறிப்பிட்டிருப்பதாகச் சொன்ன ஜெயமோகன், ஒருநிலையில் அந்நூலில் இடம்பெற்றுள்ளவை கவிதை அல்ல என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொன்னார். அப்படி ஒரேயடியாக அந்த நூலினைக் காலி செய்யவில்லையே என்று சொன்னேன். பின்னர் அந்த விமர்சனத்தை வாசித்துப் பார்த்தால் அவர் சொன்னது உண்மை என்று புலப்பட்டது. ஜெயமோகனின் நுண்ணிய வாசிப்பு வியப்பைத் தந்தது.

சுதீர் செந்தில் ஏதோ ஒரு கணக்கு வழக்குக் காரணமாக ... என்பவர் எழுதியுள்ள கவிதை நூலுக்கு மதிப்புரை எழுத வேண்டுமெனத் தொடர்ந்து நெருக்கடி தந்தார். அந்த நூல் ஹாலிவுட் தயாரிப்புப் போல கவனமாகச் செய்யப்பட்டது என்பது எனக்குத் தெரியும். எனது நண்பர்கள் மூவர் மட்டுமின்றி இன்னும் இரு சீனியர் கவிஞர்களும் கை பார்த்த பிறகு அந்த நூல் வெற் றிகரமாக ரிலீஸ் செய்யப்பட்டது. வேறு வழியில்லாமல் அக்கவிதைத் தொகுதிக்கு விமர்சனம் எழுத ஒப்புக் கொண்டேன். அத்தொகுப்பு செறிவூட்டப்பட்ட சொற்களில் பளிங்கு போல இருந்தது. உள்ளே நுழைய கடவுச்சொல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவகையான சந்நதம் வந்தது போல சொற்களைக் கொட்டி மதிப்பு ரையை எழுதி முடித்தேன். சுதீர்செந்தில் வாசித்துவிட்டுஎன்ன ஒன்றும் புரியவில்லை. எப்படிஉயிர் எழுத்துஇதழில் வெளியிடுவதுஎன்று கேட்டார். “ஏன் அந்தக் கவிதைத் தொகுப்பு மட்டும் உனக்குப் புரிந்து விட்டதா?” என்று கேட்டவுடன் சுதீருக்கு ஒரே சிரிப்பு. அப்புறம் அந்த மதிப்புரைஉயிர் எழுத்தில் வெளியானது.  இது போன்ற லாபி இல்லாமல் எனக்குப் பிடித்த பல புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதியுள்ளேன்.

நவீன கவிதை பொதுவாக இருண்மை சார்ந்துள்ளது. அதற்கு எழுதப்படும் மதிப்புரைகளும் இருண்மையாக இருப்பது வேடிக்கையாக உள்ளது. கவிஞரின் கவித்துவத்தினை விளக்குவதாகவோ கவிதையினை அறிமுகப்படுத்துவதாகவோ எழுதப்பட வேண்டிய மதிப்புரை மங்கலாக இருப்பது சரிதானா? புரியாத மொழியில் குழப்பமேற்படுத்தும் வாக்கியங்கள்தான் கவி தைக்கான விமர்சனம் என்று சிலர் நம்புகின்றனர். விமர்சனம் என்பது இருளில் ஒளியைப் பாய்ச்சும் ஆற்றல் மிக்கது என்பதை மறந்து எழுதப்படும் விமர்சனங்களால் நவீன கவிதை நூல் ஒருபோதும் வாசகரைச் சென்று அடையாது. பொதுவாக வாசிப்பில் சுவாரசியம் தராத நவீனக் கவிதைகள் சலிப்பைத் தருகின்றன. பலரும் ஒரே மாதிரியில் நகலாக எழுதுவதை வாசிக்கையில் அலுப்பேற்படுகின்றது.

கவிதை எழுதுவது வேறு, கவிஞராகத் தன்னை அடையாளங்கண்டு எழுதுவது வேறு என்பதைப் பலரும் அறிவதில்லை. என்றாலும்  செல்மா பிரியதர்சன், நக்கீரன், வே.பாபு, வசுமித்ரா, நிலாரசிகன், இசை,  நேசமித்ரன்,  பொன்.வாசுதேவன், ஆத்மார்த்தி, .ராஜ லிங்கம் எனப் பலரும் கவிஞர்களாகிக் கொண்டி ருக்கின்றனர். எதிர்காலத்தில் விமர்சகர்கள் அவர்களது கவிதைகள் பற்றி எழுதவேண்டியுள்ளது.

பொதுவாக விமர்சனம்  எழுதுவது என்பது நன்றியை எதிர்பார்க்காத பணி. எத்தனையோ புத்ககங்கள் பற்றி எழுதி விட்டேன். மதிப்புரைக்காகப் புத்தகம் தரும் சில படைப்பாளர்கள் மிகவும் பவ்யமாகப் பேசுவார்கள். எனக்கு அவர்களுடைய உடல்மொழி செயற்கையாகத் தோன்றும். ஏதாவது ஒரு பத்திரிகையில் சிரமப்பட்டு மதிப்புரை வெளியானபிறகு நேரில் பார்க்கும்போது மௌனம் சாதிப்பார்கள். அவர்களுடைய மொபைல் போனும் மௌனமாகிவிடும். இதுவரை இரு விரல் எண்ணிக்கையிலானவர்கள்தான்  நான் எழுதிய விமர்சனங்கள் குறித்துப் பேசியிருப்பார்கள்.  கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஜோதிமணி என்ற இந்திராவின் சித்திரக்கூடு நாவலுக்கு மதிப்புரை எழுதியபோது தொலைபேசியிலும் கடிதத்திலும் அவர் தனது கருத்தினையும் நன்றியையும் தெரிவித்தார்.  அந்த நாவல் பாரதிராஜாவின் திரைக்கதை போல் நீண்டாலும் உறவுகளில் கசியும் வெக்கை, கசப்பு பற்றி விளக்குகின்றது என எழுதியிருந்தேன். அவருடைய எதிர்வினை நயத்தக்க நாகரிகமாக  மனதுக்கு நிறைவாக இருந்தது.

சுரேஷ்குமாரின் இரு சிறுகதை நூல்களுக்கு மதிப்புரைகள் எழுதியுள்ளேன். என்றாலும்காலச்சுவடுஇதழுக்கு அளித்த பேட்டியில் அவர் தனது சிறுகதைகள் குறித்து விமர்சனம் எதுவும் வரவில்லை எனக் கூறியுள்ளார். ஞாபக மறதி என்று சொல்வதற்கில்லை. விமர்சனம்மூலம் தனது புத்தகம் பரவலாகக் கவனம் பெறும் என்பதைத் தவிர விமர்சனம் அல்லது விமர்சகர் மீது சிலருக்கு  வேறு மதிப்பு எதுவுமில்லை.

இலக்கியக் கூட்டங்களுக்குப் போகும்போது, சிலர்  அன்புடன் தரும் புத்தகங்களை வாங்கும்போது சங்கடமாக இருக்கின்றது. பெரும்பாலான கவிஞர்கள் கைக்காசினைச் செலவழித்து அழகிய அச்சமைப்பில் கவிதை நூல்களைக் கொண்டு வருகின்றனர்.  இதில் வேடிக்கை என்னவென்றால் மரபுக் கவிதை நூல்களை என்னிடம் தந்து விமர்சனம் எழுதுமாறு சிலர் கேட்பதுதான்.

அந்த நூல்கள் பற்றி எழுத வாய்ப்பில்லை என்பது மனதை உறுத்துகின்றது.  ஏதாவது ஒரு பத்திரிகையில்  அந்தப் புத்தகம் பற்றி நாலு வரிகள் எழுதுவேன் என்ற எழுத்தாளரின் நம்பிக்கையை என்ன வென்று சொல்ல? குறைந்தபட்சம்  அந்த நூல்கள் பற்றிப் படைப்பாளருடன் மொபைலில் பேச வேண்டு மென்பதுகூடப்  பெரும்பாலும் நிகழாது.  இன்னும் சிலர் கூரியரில் தங்களுடைய புத்தகத்தினை அனுப்பிவிட்டுக் காத்திருக்கின்றனர். அத்தகைய நூல்களில் சிலவற்றுக்கு  மதிப்புரைகள் எழுதியுள்ளேன். என்றாலும் எழுதப்படாத நூல்களுக்குக் கணக்கில்லை. அது ஒருவகையில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகின்றது. படைப்பாளர் இலவு காத்த கிளியாக மாறிக் காத்திருக்கும் நிலை மோசமானது.

பின் நவீனத்துவக் காலகட்டத்தில் விமர்சகர் எனத் தனியே ஒரு பிரிவு தேவையில்லை என்பது போலச் சூழல் உருவாகியுள்ளது. எனினும் சிறுபத்திரிகை சார்ந்த சூழலில் அதிக எண்ணிக்கையிலான திறனாய்வாளர்கள் தேவைப்படுகின்றனர். இத்தகு சூழலில் புத்தக விமர்சனத் தேர்வு, மதிப்புரை எழுதுதல், பத்திரிகையில் வெளியிடுதல் என்பது நுண்ணரசியல் சார்ந்து மாறி விட்டது. காத்தி ரமான படைப்பு நிச்சயம் வாசகரைச் சென்று அடையும் என்று நம்புவது நம்பிக்கை சார்ந்த விஷயம்.

அச்சு வடிவிலான பருண்மையான புத்தக வெளியீடு இன்னும் ஐம்பது ஆண்டுகள் தாக்குப் பிடிக்கலாம். அப்புறம் மின் புத்தகம்தான் ஆளுகை செலுத்தப் போகின்றது. இன்றைய காலகட்டத்திலே தமிழ்ப் புத்தகங்கள் மின்னணு ஊடகத்தில் வெளியாகின்றன. மின்னணு ஊடகத்தில் வெளியாகும் மின் பத்திரிகைகளில் யார் வேண்டுமானாலும் புத்தக மதிப்புரை எழுதும் நிலையேற்படும்.

 தமிழகம் என்ற குறுகிய பரப்பிலிருந்து விலகி சர்வதேசரீதியில்  பலரும் புத்தகங்கள் குறித்த தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்வார்கள். அப்பொழுது இன்று புத்தக மதிப்புரைக்காக எழுத்தாளர்கள் படுகின்ற பாடுகள் இருக்க வாய்ப்பில்லை. புத்தக மதிப்புரை என்ற கருத்தியல்கூட வேறு ஒன்றாக உருமாறிவிட வாய்ப்புண்டு.

click here

click here
click here