உயிர்மை - June 2014
 
என்ன செய்யப் போறீங்க மிஸ்டர். மோடி?
- ஆர்.அபிலாஷ்
உலகமயமாக்கலில் சமூகம் மற்றும் கலாசாரம் மேற்கும் கிழக்கும் ஓர் ஒப்பீடு
- எச்.பீர்முஹம்மது
ஈழம்: முள்ளிவாய்க்காலுக்குப் பின் ஐந்து ஆண்டுகள்
- தீபச்செல்வன்
வாசிப்பு அனுபவங்களும் புத்தக மதிப்புரைகளும்
- ந.முருகேசபாண்டியன்
ஒரு வாரம்
- அ.முத்துலிங்கம்
மதிப்பிடமுடியாத காதல்
- எஸ்.ராமகிருஷ்ணன்
சுவை இன்பத்தின் எட்டுப் பேருரைகள்
- ஷாநவாஸ்
தனிக்கல்
- நஞ்சுண்டன்
அசைவின் மொழி
- எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
தனி நாடாக தமிழீழம்
- தீபச்செல்வன்
வார்த்தைகளின் புதர்க் காட்டில் தப்பி ஓடும் காட்டு வாத்து
- இந்திரன்
மனுஷ்ய புத்திரன் கவிதைகள்
- மனுஷ்ய புத்திரன்
என்ன மாதிரியான யுகம் இது?
- மனுஷ்ய புத்திரன்
கல்தொட்டி
- பாவண்ணன்
நீலக்கை
- அதிஷா
கடிதங்கள்
- வாசகர்கள்
பெத்தவன்
- வெளிரங்கராஜன்
சுஜாதா விருதுகள் 2014
- சுஜாதா விருதுகள் 2014
சொல்லப்படாத கதை
- இமையம்
தொலைந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிய கதைகள்
- அ.ராமசாமி
வரலாறும், வெங்காய அடுக்குகளும்
- சகஸ்
click here
தனிக்கல்
நஞ்சுண்டன்

தீவிரத் தமிழ் இலக்கியச் சூழலில் கடந்த நாற்பதாண்டுக் காலமாக ஞானக்கூத்தனின் பல கவிதைகள் அதிகம் மேற்கோள் காட்டப்பட்டுவருகின்றன. அவற்றுள் ஒன்று:

சரிவு

சூளைச் செங்கல் குவியலிலே

தனிக்கல் ஒன்று சரிகிறது.

இக்கவிதை எழுதப்பட்ட காலத்தில் இது சார்ந்த இலக்கிய வகைமை புதுக்கவிதை என்றழைக்கப்பட்டது. ஆனால் இன்று கவிதை என்பதே புதுக்கவிதையைத்தான் குறிக்கிறது.

ஞானக்கூத்தனின் அன்று வேறு கிழமை தொகுப்பின் கவிதைகள் தமிழ் இலக்கியத்தில் - குறிப்பாகக் கவிதைப் போக்கில் - பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தின.

சி.மணி, ஞானக்கூத்தன் ஆகியோரின் கவிதைகளுக்கு முன்பு வெளியான கவிதைகள் வெளிப்படையான செய்தி/ நீதி சொல்லுவனவாக அல்லது ஏதேனும் கருத்தை வலியுறுத்துவனவாக அமைந்தன. இவர்களின் கவிதைகளை எதிர்கொண்ட வாசகர்கள்கவிதை என்ன சொல்லுகிறது?’ என்னும் கேள்வியைத் தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொண்டும் இலக்கிய நண்பர் வட்டங்களில் விவாதிக்கவும் நேர்ந்தது. இதற்கு இன்னொரு எடுத் துக்காட்டு ஞானக்கூத்தனின் பிரபலமான இன்னொரு கவிதை.

பிரச்னை

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்

தலையை எங்கே வைப்பதாம் என்று

எவனோ ஒருவன் சொன்னான்

களவு போகாமல் கையருகே வை.

அதுவரை பொதுவாகத் தமிழ்க் கவிதை ஒற்றைப் பொருளைச் சொன்னது. ஆனால்  கவிதை எதையேனும் ஒன்றைச் சொல்ல வேண்டும் என்னும் நியதியை சி.மணி, ஞானக்கூத்தன் போன்றோரின் கவிதைகள்  உடைத்தன. முக்கியமாக நீதிபோதனையை அவை தவிர்த்தன.

அக்காலத்தில் ஞானக்கூத்தனிடம் யாராவதுசரிவு கவிதையில் என்ன சொல்ல வருகிறீர்கள்?’ எனக் கேட் டிருந்தால் அவர் எதிர்வினை எப்படியிருந்திருக்கும் என யோசிப்பது சுவாரசியமாகத் தெரிகிறது. அப்படிப்பட்ட தருணத்தில்நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதான் கவிதையின் பொருள்என்றோ ஆத்மாநாமின் கடவுளைப் போலப்பேசாமல் புன்ன கைத்தோஅவர் நகர்ந்திருக்க லாம்.

இது போன்ற கவிதைகள் எதையும் சொல்லாவிட்டால், பின் எதற்காக எழுதப்பட்டு வெளியிடப்படுகின்றன என்னும் கேள்வி இயல்பாக எழுகிறது. கவிதை எழுதப்படும் நேரம் கவிஞரின் மனத்தில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பொருள் பொதிந்திருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்க வாய்ப்புண்டு. ஒருவேளை கவிஞரின் மனத்தில் அந்நேரம் குறிப்பிட்ட அர்த்தம் கவிந்திருந்தாலும், கவிதை வெளிப்பட்டு வாசகர்களைச் சென்றடையும்போது அதன் தோடு கழன்றுவிடுகிறது. தான் எழுதிய கவி தைக்குக் கவிஞரே பிறகு இன்னொரு வாசகராகும் விநோதமும் இப்படித்தான் நிகழ்கிறது. எனவே இது போன்ற கவிதைகள் வாசகரின் அனுபவத்தையும் அதை இலக்கியப் பிரதிகளுக்குள் ஊடுபரப்பி எதிர்வினை கொள்ளும் திறனையும் கோருகின்றன. இத்திறனற்ற வாசகர்கள் இவற்றைப் புரிந்து சிலாகிக்க முடியாது. மாறாக, இவற்றைஅபத்தம்எனப் புறந்தள்ள மட்டுமே இயலும்.

சரிவு, பிரச்னை போன்ற கவிதைகள் குறிப்பிட்ட பொருளைச் சுட்டி நிற்காவிட்டாலும், வாசகனுக்கு ஏதோ ஒன்றை உணர்த்தும் தன்மையைக் கொண்டுள்ளன என்பதை ஏற்கலாம். அவ்வாறான தன்மையில்லாவிட்டால் அவை கவிதையாகமாட்டா.    கவிதையின் இந்த உள் ளார்ந்த குணமும் மேலே குறிப்பிட்ட வாசகத்திறனும் ஒன்றிணையும்போது கவிதை ஏற்புடையதாகிறது (appealing). இந்த இணைவு காலம் சார்ந்தது. எனவேதான் ஒரே கவிதை குறிப்பிட்ட வாசகருக்குக் காலத்துக்குக் காலம் வெவ்வேறு பொருளைத் தருகிறது. சரிவு எனக்கும் வெவ்வேறு மனநிலைகளில், அனுபவப் பின்னணிகளில் மாறுபட்ட பொருள்களை உணர்த்தியது. மன ஆழத்தில் தேங்கியிருந்த இக்கவிதை வேறொரு இலக்கியப் பிரதியால் திடுமென மேலெழுந்து முற்றிலும் புதிய பரிமாணத்தில் தோற்றமளித்தது.

 

பௌலோ கொய்லோ பிரேசிலில் வசிக்கும், போர்த்துக்கீசிய மொழியில் எழுதும் புகழ் பெற்ற எழுத்தாளர். இவருடைய நாவல்கள் மில்லியன் கணக்கில் அமோகமாக விற்பனையாகியுள்ளன. சர்வதேச விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ள கொய் லோவின்  புத்தகங்கள் நாற்பதுக்கும் அதிகமான மொழி களுக்குப் பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய ரஸவாதி (The Alchemist), சஹீர் (The Zahir) நாவல்கள்காலச்சுவடுபதிப்புகளாகத் தமிழில் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் பௌலோ கொய்லோவின் Like the Flowing River என்னும் புத்தகத்தை வாசித்தேன். தான் கேட்ட கதைகள், தன்னோடு பகிர்ந்துகொள்ளப்பட்ட பிறரது அனுபவங்கள், சிந்தனைத் தெறிப்புகள் எனப் பலவற்றையும் அவர் இதில் பதிவுசெய்துள்ளார். இவை அரை, ஒன்று, இரண்டு பக்கங்களில் அமைந்துள்ளன. இவற்றில் ஒன்று ஜிலீமீ விவீssவீஸீரீ ஙிக்ஷீவீநீளீ. அதன் தமிழ் வடிவம் கீழ்வருமாறு.

காணாமல்போன செங்கல்

ஒருமுறை நானும் என் மனைவியும் பயணம் செய்துகொண்டிருந்தபோது, என் காரியதரிசியிடமிருந்து தொலைநகல் வந்தது.

சமையலறையைப் புதுப்பிக்கும் வேலைக்காக வாங் கப்பட்ட கண்ணாடிச் செங்கற்களில் ஒன்றைக் காண வில்லை. மூலத்திட்டத்தின் வரைபடத்தையும் காணாமல் போய்விட்ட செங்கல்லைச் சரிக்கட்டுவதற்காகக் கட்டடம் கட்டுகிறவர் தந்துள்ள வரைபடத்தையும் உங்களுக்கு அனுப்பியுள்ளேன்என அவள் தெரிவித்தி ருந்தாள்.  ஒரு பக்கம் என் மனைவி சொல்லியிருந்த செங்கற்களின் ஒத்திசைவான வரிசைகளுடன் காற் றோட்டத்திற்கான திறப்புடன்கூடிய திட்டம். மற்றொரு பக்கம், காணாமல்போய்விட்ட செங்கல்லால் எழுந்துள்ள சிக்கலைத் தீர்ப்பதற்காக வரையப்பட்ட திட்டம்.- கண்ணாடிச் சதுரங்கள் மிகக் குழப்பமான பாணியில் அமைக்கப்பட்ட, அழகியலைப் புறந்தள்ளும் உண்மையான ஜிக்ஸா புதிர். ‘பேசாமல் இன்னொரு செங்கல் வாங்கிவிடுங்கள்என்று என் மனைவி பதில் எழுதினாள்.  அவர்களும் அப்படியே செய்து, மூலத்திட்டத்தையே கடைப்பிடித்தார்கள். அன்று பிற்பகல், நடந்ததைப் பற்றி நெடுநேரம் யோசித்தேன். ஒற்றைச் செங்கல்லுக்காக நாம் எத்தனைமுறை நம் வாழ்வின் மூலத்திட்டத்தையே மாற்றுகிறோம்?

இதைப் படித்ததும் என் நினைவில் மேலெழுந்தது சரிவு கவிதை. இவ்விரு இலக்கியப் பிரதிகளில் ஒன்று கவிதை, மற்றது உரைநடை என்றாலும், இரண்டையும் இயல்பாக ஒப்பிடலாம். ஞானக்கூத்தனின் கவிதையைப் பௌலோ கொய்லோவின் பிரதியில் எவ்விதச் சிரமமும் இல்லாமல் ஊடுபரப்பலாம்.

இரண்டுமே ஒற்றைச் செங்கற்களைப் பற்றிப் பேசுகின்றன. கவிதையில் சரியும் செங்கல் தடுத்து நிறுத்தப்படுகிறதா, வேறொரு செங்கல்லைக் கொண்டு சூளையின் வடிவம் சீரமைக்கப்படுகிறதா போன்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால் இவற்றுக்கான பதில் கவிதையில் இல்லை. ஆனால் கொய்லோவின் பிரதியில் காணாமல்போய்விட்ட ஒற்றைச் செங்கல் புதிதாக வாங்கப்படும் செங்கல்லால் சரிக்கட்டப்படும் அல்லது சரிக்கட்டப்படுகிறது. இதில் சமையலறையைப் புதுப்பிப் பதற்கான மூலத்திட்டம் சிதையாமல் காக்கப்படுகிறது. தமிழ்க் கவிதையோடு அல்லது ஞானக்கூத்தனின் கவிதையோடு பரிச்சயமுள்ள வாசகனுக்கு சரிவு முதல் பிரதி. இக்கவிதை உணர்த்தும் பொருளைத் தேடும் வாசகன் எதேச்சையாகக் கொய்லோவின் இப்பிரதியைப் படிக்கும்போது, ஞானக்கூத்தனின் கவிதை இதில் விகாசம் கொள்கிறது. எனவே கொய்லோவின் பிரதி தொடர்பிரதியாகிறது. இப்படி அமைவது முற்றிலும் எதேச்சையானதே. அதே வாசகனுக்கு சரிவு இதற்கு முன்பும் பலவகையான பிரதிகளிலோ நேரடி அனுபவங்களிலோ வெவ்வேறு வகையில் விகாசம் கொண்டிருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஞானக்கூத்தன்தனிக்கல்  ஒன்று சரிவதாகக்கூறுகிறார். அதன் விளைவு என்ன என்பதை அவர் சொல்வதில்லை. ஆனால் கவிதையைப் படிப்பவருக்கு இந்தக் கேள்வி எழுகிறது. இதற்கான விடை பல பரிமாணங்களில் வெவ்வேறு விதமாக அமைகிறது. ஞானக்கூத்தன் கவிதையால் எழும் கேள்விக்கு ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தில் ஒரு  பதில் கொய்லோவின் உரைநடைப் பிரதியில் கிடைக்கிறது. ஞானக்கூத்தன் கவிதையில் தத்துவ விசாரம் இல்லை என்றாலும், கொய்லோவின் பிரதியில் தத்துவ விசாரத்துடன் கேள்விக்குப் பதில் கிடைக்கிறது.

காலம், இடம், மொழி, இனம் கடந்து ஒரு கவிதைப் பிரதி மற்றொன்றில் ஊடுபரவி நிற்பது, அக்கவிதைக்குள் உலகளாவிய தன்மை பொதிந்துள்ளதைத் துலக்கமாகக் காட்டுகிறது. சரிவு கவிதையின் காலம் கடந்து நிற்கும் தன்மையைப் பௌலோ கொய்லோவின் பிரதியை வாசித்ததால் மீண்டும் ஒருமுறை உணர நேர்ந்தது. மற்ற வாசகர்களுக்கும் இப்படிப்பட்ட அனுபவத்தை வெவ்வேறு பிரதிகள் நிச்சயம் தந்திருக்கும்.

click here

click here
click here