ப்ராம் ஸ்டோக்கரின் புனைவு வழியாக மறுபிறப்பெடுத்த ட்ராகுலா, மறுபடியும் பசித்த ஓநாயாக அலைந்துகொண்டிருக்கிறான. தன் காதலி கொடுத்த தீராத அன்பு இன்னும் அவனுக்குக் கிடைக்கவில்லை. நூற்றாண்டுகளைக் கடந்தும் தீராத காதலின் தாகத்தாலும் மரணமின்மை என்னும் சாபத்தாலும் தவித்துக்கொண்டிருக்கிறான். பசியடங்காத எலியாகவோ குரல்வளை கிழிய சப்தமிடும் வௌவாலாகவோ அலைந்துகொண்டிருக்கும் அவன் இன்று அம்முவின் வீட்டை உளவு பார்த்திருக்கிறான்.

தற்கொலை செய்துகொண்டு இறந்த தன் காதலியை பிசாசுகள் முடிவற்ற பாதளத்தை நோக்கி இழுத்துக்கொண்டு சென்றதை எவ்வளவோ தடுக்க முயன்றும் ட்ராகுலாவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பேரழகியான அவளின் இதயத்தை ஆக்கிரமித்த தருணங்களைத் துயரத்துடன் நினைத்துப் பார்த்தான் அவன். உடலின்பத்தில் சேர்க்கப்படும் ‘காதல்’ என்னும் மர்ம சேர்மத்தை கொஞ்சம் மிகுதியாகவே கலந்து இன்பத்தில் இருவரும் துய்த்திருந்தார்கள். ஒருவருக்கொருவர் காதலை பரிமாறிக்கொண்டார்கள். காதல் உடலை நோக்கி பாய்ச்சப்படும் வாளல்ல. அது அதைவிடப் பயங்கரமானது. அது ஆன்மாவையும் உடலையும் தைத்து பாயக்கூடிய கழு. விருpபத்துடன் இருவருமாக அந்த மாயக் கழுவில் ஏறி அமர்ந்தார்கள். கழு ஏற ஏற அதன் வலிகள் இன்பங்களாக மாறின. காதல் தெய்வம் வீனஸ் இந்தப் பலியில் மகிழ்ந்து அவர்களை நிறைவாக ஆசீர்வதித்தது. அவள் இறந்த பிறகு எத்தனையோ பேரழகிகள் வந்து சென்றார்கள் ஆனால் காதல் என்னும் அந்த மந்திர சேர்மம் அதன்பிறகு ட்ராகுலாவுக்குச் செயலாற்றவில்லை. மற்ற பெண்கள் தங்களை ஒரு இரையாகவே ட்ராகுலாவுக்குக் கையளித்தார்கள்.

காலத்திற்கேற்ப ட்ராகுலா தன்னைத் தாயாரித்துக்கொண்டு பெண்களை வேட்டையாடினான். ஆண்களின் பார்வையில்தான் அவன் ரத்தவெறிபிடித்த காட்டேறியாக இருந்தான். பெண்களைப் பொறுத்தவரை அவன் ஒரு வேட்டையாடும் அப்ஸரஸ். காதல் தடவிய அம்புகளைப் பெண்கள் மேல் செலுத்தி அவர்களை வேட்டையாடுபவன். அவனுக்குப் பெண்களின் தனிமை தெரியும். பெண்களின் அந்தரங்கங்கள் புரியும். அவர்களின் ரகசியங்களைத் தூண்டிலிட்டு மேலே கொண்டு வந்துவிடுவான். நான்சியை முதல்முறை பார்த்தபோது அவளை வெகுநேரமாக இமைக்காமல் பார்த்துக்கொண்டு நின்றான். பதற்றமடைந்த நான்சி வேகமாக விலகி செல்ல முற்பட்டபோது அவளைத் தொடர்ந்து சென்று அச்சுறுத்தினான். நான்சி பழக்கடை ஒன்றில் நுழைந்தபோது அவளுக்கு முலாம்பழங்களைப் பரிசாக வாங்கிகொடுத்தான். தன் கணவரிடம் எவ்வளவோ முறை முலாம்பழங்கள் கேட்டு வாங்கிகொடுக்காததை இவன் எப்படி அறிந்து கொண்டான் என்று சிந்தித்திருந்த நான்சிக்கு முலாம் பழத்தை கூழாக்கி அதில் ரெட் ஒயின் கலந்து கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தான் ட்ராகுலா. அன்றிரவே நான்சி ட்ராகுலாவோடு சென்றுவிட்டாள். ஊரெங்கும் நான்சியை அவள் கணவன் தேட கல்லறை ஒன்றிலிருந்த ஓக் மரத்தினடியில் வெளிரிபோய்க் கிடந்த நான்சியைப் பிணமாக மீட்டெடுத்தனர். அவளது கழுத்திலிருந்த பற்களால் ஏற்பட்ட காயத்தைக் குறித்து யாரிடமும் பேச வேண்டாம் என நான்சியின் கணவர் கேட்டுக்கொண்டதற்கேற்ப அதை மூடி மறைத்துவிட்டார்கள்.

ரெபேக்கா அற்புதமான குரலுக்குச் சொந்தகாரி. அவள் பாடுவதைக் கேட்டால் நம் ஒவ்வொரு நரம்பினுள் மின்சாரம் பாய்வது போல் இருக்கும். அவளது குரலை பற்றி அவளுக்கும் ஒரு இறுமாப்பு இருந்தது. உடல் வனப்புடன் அவள் குரலும் அழகூட்டி அந்த ஊரில் இருந்த அத்தனை இளசுகளையும் தன் பின்னே சுத்தவிட்டிருந்தாள் ரெபேக்கா. குறித்த சமயத்தில் அந்த ஊரின் மிகப்பெரிய செல்வந்தனுக்கு அவளை மணமுடித்து வைத்தார்கள். அந்த மனிதனை ரெபேக்காவின் குரல் ஈர்க்கவில்லை. ஒரு ஏகாந்த மனநிலையில் அவள் பாடித்திளைத்திருந்த சமயம் அந்த மனிதன் அவளை வாயை மூடி இருக்க உத்தரவிட்டுச் சென்றான். மனமுடைந்த ரெபேக்கா மதுபான விடுதி ஒன்றில் தலைதொங்க உட்கார்ந்திருந்த சமயம் அவளுக்குப் பிடித்தமான பாடல் ஒன்றை முனகியவாறு அங்கு வந்த ட்ராகுலாவுடன் இணைந்து பாடினாள். பாட்டின் போதையில் இருவரும் நடனமாடினார்கள். அங்கு எதுவும் திட்டமிட்டு நடந்தேறவில்லை எல்லாம் இயல்பாக நடந்தேறின. இறுதியில் அவள் குரலில் கடவுள் தேன் தடவியிருப்பதாகச் சொன்னான். வேறெந்த அலங்கார வசிய வார்த்தைகளையும் ட்ராகுலா பயன்படுத்தவில்லை இயல்பான பாராட்டுகள் ரெபேக்காவை மயக்க போதுமானதாக இருந்தது. அன்றிலிருந்து ஒவ்வொரு இரவும் தனிமையில் ட்ராகுலாவை சந்திக்க ரெபேக்கா சென்றாள். திகட்ட திகட்ட காதல் விளையாட்டுகளில் அவர்கள் ஈடுபட்டார்கள். கூடி முகிழ்ந்திருக்கும் வேளையில் ரெபேக்காவை ஆசையாய் அணைத்து தனக்கொரு பாடல் பாட சொல்லி கேட்பான். தன்னை மறந்து ரெபேக்காவும் பாட ஆரம்பிப்பாள். மேலும் ஒரு சரச நாடகம் அங்கு அரங்கேறும். ஒரு பௌர்ணமி இரவில் ட்ராகுலாவிற்காகக் காத்துக்கொண்டிருந்த ரெபேக்கா ஒரு பெரிய வௌவால் பறந்து போவதை பார்த்தாள். அன்று ட்ராகுலா வரவே இல்லை. பித்தேறிப் போயிருந்த ரெபேக்காவை தேடி அடுத்த நாள் அவன் கணவன் வந்தபோது, அவனை நகத்தால் ஆழமாகப் பிராண்டி விரட்டினாள். இப்போதும் தனிமையில் பாடிக்கொண்டு ட்ராகுலாவை தேடி அலைந்துகொண்டிருக்கிறாள் ரெபேக்கா.

இரண்டு அல்லது மூன்று ஆண்கள் ஒன்றுகூடும் இடத்தில் தங்கள் திருமணச் சாகச வாழ்வை பகடி செய்துகொண்டு மகிழ்ந்திருப்பர். அங்கே தன் குறிப்பேட்டுடன் ரகசியமாக ட்ராகுலா அமர்ந்திருப்பான். மனைவியரின் குறைகளைப் பட்டியலிட்டு சிரிக்கும் சமயம் சர்வ சிரத்தையாக அவற்றைக் குறிப்பெடுத்து அடுத்த வேட்டைக்கான ஆயுதங்களைத் தயார் செய்வான். அப்படி அவன் எடுத்த குறிப்புகளில் சில உங்கள் பார்வைக்கு

  • தன்னுடைய மனைவி என்றாலும் அவளுக்கான அந்தரங்கங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும்
  • உளமாற அவளது செயல்களைக் கண்டுகொள்ள வேண்டும்
  • உடல் கவர்ச்சியில் உறவுகள் ஆரம்பித்தாலும் அதைக் கடந்து அவளது நன்மை தீமைகளை விரும்ப வேண்டும்
  • யாருக்காகவும் எதற்காகவும் மனைவியை விட்டுக்கொடுக்கக் கூடாது
  • அவளது குரலுக்கு மதிப்புதர வேண்டும் அவள் வெறும் சந்ததிகளை உருவாக்கும் இயந்திரமல்ல
  • உடலின்பம் மனதளவில் இருந்து துவங்க வேண்டும்
  • உறவுகள் என்றும் மர்மமானது அதுவும் ஆண் பெண் கணவன் மனைவியாவது உச்சகட்ட மர்மம் அதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவே கூடாது மாறாக அதில் தாவிக்குதித்து நீந்திக்கொண்டிருப்பது மட்டுமே சிறந்தது
  • கணவன் மனைவி வழியாகவும் மனைவி கணவன் வழியாகவும் ஒருவரையொருவர் அறிந்து கொள்கின்றனர். இதில் ஆதிக்கம் செலுத்த நினைப்பது ஆபத்தானது
  • சுதந்திரமும் காதலும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும். தனக்கு உரியது எனக் கருதும்போது சுதந்திரம் காணாமல் போகிறது சுதந்திரம் இல்லாமல் போகும்போது காதல் வற்றிவிடுகிறது

இந்தக் குறிப்புகள்படி வாழும் ஒரு தம்பதியினரைகூட ட்ராகுலா சந்தித்ததில்லை. இதில் ஏதோ ஒன்றிரண்டு வாய்த்திருக்க மீதியை பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாமல் மனிதர்கள் சேர்ந்து வாழ்ந்திருந்தார்கள். காதலிக்கும்போது கொண்டாட்டமாகத் துவங்கிய வாழ்க்கை போகப் போக முகம் சுளிக்க வைத்துவிடுகிறது. பலரும் இந்தச் சிக்கலான உறவை மருந்தென நினைத்து விழுங்கிக்கொண்டிருந்தார்கள். அதில்தான் ட்ராகுலா புகுந்து மேலும் கலகங்கள் செய்துகொண்டிருந்தான். அவனுக்கு வேண்டியதெல்லாம் காதல். தான் தன் காதலியிடம் பெற்ற அந்தப் பரிசுத்த காதல். ஒருமுறை காதல் கொண்டு வாழ்ந்துவிட்டால் ட்ராகுலாவும் மரணம் என்னும் வரத்தை பெற்று அடங்கிவிடுவான் ஆனால் அதுகிடைக்காமல் அடுத்தடுத்துப் பெண்களை வேட்டையாடிக்கொண்டிருந்தான்.

ட்ராகுலா ஒரு குறியீடு என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள். அவன் அடையமுடியாத முற்றுப்புள்ளி ஒன்றின் குறியீடு. எல்லாமும் அந்த முடிவை நோக்கி பயணிக்கின்றன ஆனால் ஒன்றின் முடிவு இன்னொன்றின் தொடக்கமாகி தொடர்ந்துக்கொண்டிருக்கின்றன. இதெல்லாம் வெறும் பிதற்றல்கள். ட்ராகுலா ஒரு கொண்டாட்டமான உயிரி (பேய் பிசாசு என்றெல்லாம் அவனை வகைபடுத்திட முடியாது). நூற்றாண்டுகள் கடந்தும் அவனுக்கு எத்தனை காதலிகள்! பெண்கள் அவனை எப்போதும் மொய்த்துக்கொண்டிருந்தார்கள். ரெட் ஒயின் போல் இளஞ்சூடான ரத்தத்தை எப்போதும் அருந்திக்கொண்டிருந்தான். எப்போதும் ஒரு மந்திரப் புன்னகை அவன் முகத்திலிருக்கும். எதையும் வெளிப்படையாகப் பேசிவிடுவான் கட்டுப்பாடுகள் எல்லாம் மனிதர்களுக்கானதுதானே? எந்த வரையறைகளுக்குள்ளும் எப்போதும் சிக்காத சுதந்திரமானவன். அவனைப் பற்றிச் சொல்லப்பட்ட கதைகள் ஏராளம். உதாரணமாகச் சிலுவைகளைக் கண்டு அவன் அஞ்சி நடுங்கிவான் என்று கூறுவார்கள். அதற்குக் காரணம் ட்ரான்ஸில்வேனியா விவசாயிகளின் ரத்ததை அவன் ஆரம்பக் காலத்தில் குடித்ததாகவும் அந்த விவசாயிகள் கிறிஸ்தவர்களாக இருந்ததால் அவர்கள் ரத்ததில் சிலுவையின் மீதான பயம் அதாவது மரியாதை இருந்ததாகவும் அது ட்ராகுலாவுக்குள் கடத்தப்பட்டபோது இனம்புரியாத சிலுவைமீதான பயம் வளர்ந்துவிட்டதாகக் கூறுவார்கள். ஆனால் அது உண்மையில்லை சிஸ்டர் ப்ரிசில்லாவை வேட்டையாட அவளுக்கு முதலில் வெள்ளிச் சிலுவை பரிசளித்து நண்பனாகி பின்னர்க் காரியம் நிறைவேற்றிக்கொண்டான். சூரிய ஒளி அவனைச் சுட்டெரித்துவிடும் என்று கூறுவார்கள் அதுவும் உண்மையல்ல கடற்கரையில் சூரிய குளியலில் இருந்த டயானவின் முதுகில் சன் க்ரீம் பூசி அவளை வழிக்குக் கொண்டு வந்த கதை இருக்கிறது. பூண்டு மணம் பிடிக்காது என்று கூறுவார்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மு வைக்கும் மிளகு ரசத்தை ட்ராகுலா குடிப்பதை நீங்கள் வாசிப்பீர்கள் – அந்த ரசத்தில் அம்மு பூண்டு தட்டிப்போட்டிருந்தாள்.

அம்மு பெர்னீனியின் சிற்பத்தைப் போல் இருந்தாள். அவள் யானை தந்தத்தின் நிறத்தில் சரி விகிதத்தில் அளவெடுத்து செய்ததுபோல் கச்சிதமாக இருந்தாள். அவள் உதடுகளைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். மேல் உதடு வெள்ளரிபழம் வெடித்துச் சற்றுத் திறந்திருப்பது போல் மேல் நோக்கி இருக்கும். அந்தச் சின்ன இடைவெளியில் உள்ளிருக்கும் மேல் வரிசை அரிசி பற்கள் அழகாகத் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும். சிரிக்கும்போது உதடுகள் பக்கவாட்டில் அழகாக மலர்ந்து சிங்கபற்களில் இருந்து சிரிப்புப் புறப்படும். கண்கள் சற்றுப் பெரிதாகத் தெரியும் அதை அப்படிக் காட்டுவது அவளது பட்டையான புருவங்கள். ஆனால் அந்தக் கண்ணிற்கென்று ஒரு போதை இருக்கும். அதைச் சொல்வது மிகக்கடினம். அம்முவுக்குத் திருமணமாகிவிட்டது. ஒரு தேர்ந்த விஞ்ஞானியை போலச் சமையலறையில் சமைத்துகொண்டிருந்தாள். கணவன் ஒரு பெரிய தொழிலதிபர். அம்முவை தங்கத்தாலும் வைரத்தாலும் அணி செய்திருந்தான். அன்று மணக்க மணக்க மிளகு ரசம் வைத்துத் தொட்டுக்கொள்ளப் பருப்பு துவையல் செய்திருந்தாள். ரசத்தில் மிதக்கும் கொத்தமல்லி இலைகள்கூட ஒரே அளவில் இருக்குமாறு நேர்த்தியாக வெட்டியிருந்தாள். அந்த வீட்டை மிளகு ரச வாசனை சூழ்ந்திருந்தது. ஆனால் கணவனோ தொலைக்காட்சிப் பெட்டிமுன் அமர்ந்து கொண்டு மண்ணைத் தின்பதுபோல் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். எதாவது சொல்வானா என்று எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள் எதுவும் சொல்லாததால் ஒரு கட்டத்தில் அவளே வாய்விட்டு கேட்டும்விட்டாள். ஆனால் வெறும் ரசம் மட்டும் வைத்ததற்காகத் திட்டுகிடைத்ததேயொழிய ரசத்திற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. பாதிச் சாப்பாட்டைத் தட்டிலே வைத்துவிட்டு வேலையின் நிமித்தம் கணவன் சென்றுவிட்டான். எரிச்சலாக இருந்தது அம்முவுக்கு. அப்போது சமையலறை ஜன்னலைத் திறந்தபோது அங்கு அழமாக ரசத்தின் மணத்தை முகர்ந்து கொண்டு ட்ராகுலா நின்றான். அம்முவின் அழகும் அவனைச் சுண்டியிழுத்தது. தனக்கு ரசம் வைக்கச் சொல்லிக்கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொண்டான் ட்ராகுலா.

கடுகு உளுந்தம் பருப்பைத் தாளிப்பதிலிருந்து ஆரம்பித்துப் பூண்டை தட்டிபோட்டால்தான் மணம் வீசும் என்ற நுணுக்கம் முதல் எவ்வளவு புளிக்கரைசல் எத்தனை தக்காளி எவ்வளவு சீரகம் எவ்வளவு மிளகு என்று சகலத்தையும் தன் காந்த குரலில் விவரித்தாள். ரசத்தைக் கொதிக்கவிடக்கூடாது அது நுரைத்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும் என்ற விவரத்தையும் அடுப்பிலிருந்து இறக்கும்போது கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவேண்டும் என்பதையும் போதித்தாள். பாடத்தின் முடிவில் ட்ராகுலாவுக்குக் கொஞ்சம் ரசமும் பருப்பு துவையலும் ருசிபார்க்க கொடுத்தாள். ருசித்துவிட்டுக் கண்கள் மலர அம்முவைப் புகழ்ந்தான். காதல் என்பது ட்ராகுலாவுக்குக் கானல் நீராகவே இருக்கிறது. அது கிடைக்காமல், அதைப்போல இருக்கும் ஏதோ ஒன்று ஏற்படுத்தும் காட்சிப்பிழையிலிருந்து மீள முடியாமல் தன் கோரைப்பற்களைத் தீட்டிக்கொண்டு அம்முவை நெருங்கினான்.