வாதிடப் பழகுதல்

இரண்டு குழந்தைகளும் மாடிப்படிக்கட்டின் கைப்பிடிச்சுவரில் சறுக்கியபடியே பேசிக்கொண்டிருந்தார்கள். பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள். வழக்கம்போல ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையில் வாதம் தொடங்கியது.

“போடி, எங்கப்பா நெனச்சாருன்னா டயனோசரையே வேட்டையாடுவாரு,” என்றான் சிறுவன்.  கிராமத்தில் அவன் அப்பத்தா வீட்டின் ஹாலை யானைத் தந்தங்கள் அலங்கரித்திருந்தன. விடுமுறைக்கு அவன் அங்கே செல்லும்போதெல்லாம் அவன் தாத்தாவின் தாத்தா வேட்டைக்குச் சென்று மிருகங்களைக் கொன்று குவித்ததைப் பற்றிக் கதைகதையாகச் சொல்வாள் அப்பத்தா.

“நாங்க வேட்டைப் பரம்பரை” என்று முகத்தை உயர்த்திச் சொன்னான்.

“எங்கப்பாவும்தான்” என்று பதில் சொன்னாள் சிறுமி.  “நான் கேட்டா பறிச்சிட்டு வந்து தருவாரு”

“என்னத்தத் தருவாரு?”

“மேலே நெலா, நட்சத்திரம் எல்லாத்தையும் பறிச்சிட்டு வந்து தருவாரு”

“தந்து?”

“அத நான் பூக்கட்டி வச்சிப்பேன்” என்றாள் வீம்பாகச் சிறுமி.

“நட்சத்திரத்த எப்டிறீ பூக்கட்டி வச்சிப்பே?” சிரித்தான் சிறுவன்.

“அதெல்லாம் கட்டி வச்சிக்கலாம்டா” என்றாள் சிறுமி. “அதெல்லாம் கட்டி வச்சிக்கலாம்டா” என்று அவளை மாதிரியே பேசி அழகுகாட்டினான் சிறுவன். ”போடா” என்று அழுகைக்குத் தயாரான முகத்தோடு தன் வீட்டுக்குள் ஓடிப் போனாள் சிறுமி.  “என்னோட அப்பா டயனோசரை விடப் பெரீய டயனோசரை அடிச்சி இழுத்துட்டு வருவாரு. அதோட பல்லுங்கள நான் பூக்கட்டி வச்சிப்பேன்” என பதில் சொல்லியிருக்க வேண்டுமென்று சிறுமிக்குத் தோன்றியது. அப்படித் தனக்குச் சொல்லத் தோன்றாததை எண்ணி அவளுக்கு அழுகையாய் வந்தது.

நகர்ந்து செல்

இங்கே பார், இப்படிச் சொல்வதற்காகக் கோபித்துக்கொள்ளாதே. உனக்கான இடம் இதுவல்ல. உனக்கான இடம் எதுவென்று உனக்குத் தெரியாது எனப் பொய் சொல்லாதே. எதற்காக  இவர்களுக்கிடையில் வந்து நிற்கிறாய்? பார், அந்தப் பெண்தான் சிரிக்கும்போது_என்னமாய் மின்னுகிறாள், சரம் சரமாய் கொன்றைப்பூ கொட்டிவைத்தாற் போல. அவனும்தான் எத்தனை அமர்க்களமாய் இருக்கிறான்? உயரத்தில் ஆறடிக்கு ஒரு சின்னத்தட்டுதான் குறைச்சல்.  டயர் போன்ற திண்மையான மார்பு. உனக்குத்தான் அது தெரியுமே.

நினைவிருக்கட்டும், நீ இங்கே வெகு நேரமாக நின்றுகொண்டிருக்கிறாய். அந்தப் பெண்ணின் உடல் சற்று நடுங்குகிறது. அவளது கன்றுக்குட்டி உடலை வருத்தாத  குளிர்சாதனத் தொழில்நுட்பம் இன்னும் இந்த நாட்டில் புழக்கத்துக்கு வரவில்லை என்று கொஞ்சுகிறான் அவன். தன் வலது கரத்தை அவள் இடது கரத்தின் மீது புதுக் காதலின் அழுத்தத்தோடு வைக்கிறான். அவள் அவன் தோளின்மீது சாய்ந்து கிறங்குகிறாள்.

அவர்கள் இருவரும் அந்த இடத்தில் குளிர்சாதனம் சரியாக வேலை செய்யவில்லை என்று  ஒரே நேரத்தில்  எண்ணிக்கொள்கிறார்கள்.  இருவருக்கு இடையில் இறந்துபோன ஒருவர் குளிர்க்காற்றாய் நிற்கும்போது இருவரில் ஒருவருக்கு அது ஒத்துக்கொள்வதில்லை.

பாட்டிலான்

அவனைப் பாட்டிலான் என்றுதான் அந்த ஊரில் அழைப்பார்கள். அவன் ஒரு பாட்டிலில் வசித்து வந்தான்.  டாஸ்மாக் சரக்கு பாட்டிலெல்லாம் இல்லை. இது நிஜமான கண்ணாடி பாட்டில். இளம் ஊதா நிறத்தில் ஒரு மனிதன் வசிக்க இடமிருக்கும் பாட்டில். அதன் உள்ளிருந்து பார்த்தால் வானம், வெயில், நாய், பூனை, மனிதன், அவன் ஆடை, தலைமுடி எல்லாமே இளம் ஊதாவாகத்தான் தெரியும் எனத் தோன்ற வைக்கும் பாட்டில் அது.

அவன் அந்த ஊருக்கு எப்போது எங்கிருந்து வந்தான் என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை அவன் ஊருக்கு முதலில் வந்தபோது அவனைப் பார்த்தவர்கள் அந்த விசாரணையையெல்லாம் செய்திருக்கலாமோ என்னவோ. ஆனால் எப்போதோ அவன் இந்த ஊரில் ஒருவனாகிவிட்டிருந்தான். ஊரில் நேற்று பிறந்து இன்று பேசத் தொடங்கிய குழந்தைகூட பாட்டிலானை ஊர்க்காரனாகவே கருதியது.

அந்த பாட்டிலின் அடிப்பகுதி உட்காரக் கொள்ள ஓரளவு வசதியாக இருக்கும். பாட்டிலின் கழுத்து பொதுவாக எல்லா பாட்டில்களின் கழுத்துகளும் வடிவமைக்கப்பட்டிருப்பதைப் போலக் குறுகி இருக்கும். அவன் எப்படி அந்த பாட்டிலுக்குள் போயிருக்க முடியும், அல்லது அவனை முதலில் உட்கார, நிற்கவைத்து அதன் பின் அந்த பாட்டில் செய்யப்பட்டதா போன்ற கேள்விகள் அவ்வப்போது அந்த ஊரில் சிலருக்கு  வராமல் இல்லை. ஆனால் அவர்களது அன்றாடப்பாடே பெரிதாக இருந்ததால் அவர்கள் மனதில் அதைப் பற்றிய கவலைகள் மேலெழும்பி பாட்டில் பற்றிய கேள்விகளைப் பின்தள்ளிவிடும். பாட்டில் ஆராய்ச்சியைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிடுவார்கள்.

ஆக மொத்தத்தில் அந்த ஊர்க்காரர்களுக்கு பாட்டிலான் நன்கு பழகிவிட்டிருந்தான். அவனுக்கு அவர்கள் பழகிவிட்டிருந்தார்களா என்பதுதான் கடைசிவரை தெரியவில்லை.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , 'காதலனின் மனைவி’
  2. உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்,கொசு: பெருந்தேவி
  3. கண்ணிலே என்ன உண்டு?-உன்னைப் போல் ஒருவன் :பெருந்தேவி
  4. குறுங்கதை:ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - பெருந்தேவி
  5. குறுங்கதைகள்: புதுமைப்பித்தனுக்குச் சிலை- பெருந்தேவி
  6. சிறுகதை: அழகு - பெருந்தேவி
  7. சிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி
  8. குறுங்கதை: ஆசிர்வாதம்- பெருந்தேவி
  9. குறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி
  10. பயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி
  11. போகாதே-பெருந்தேவி
  12. விடாக்கண்டன் கொடாக்கண்டன்-பெருந்தேவி
  13. ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?- பெருந்தேவி
  14. படுக்கையறைகளின் கதை- பெருந்தேவி
  15. ஜானுவும் ராமும்- பெருந்தேவி
  16. நரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி
  17. துச்சலை- பெருந்தேவி
  18. கதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி
  19. 'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி
  20. அத்தனை நீண்ட கனவு  (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி
  21. பெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’
  22. சிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி
  23. பெருந்தேவியின் எட்டுக் குறுங்கதைகள்