தீராத பாதைகள்-13

கட்டுரைக்குத் தலைப்பு வைப்பது எனக்கு மிகச் சிரமமானக் காரியம். என்றாவது கச்சிதமாகத் தலைப்புகள் அமைந்துவிடும் பல நேரங்களில் இந்தப் பதிவுகளுக்குத் தலைப்பிடுவது மனுஷ்ய புத்திரன்தான். இந்தப் பதிவும் அப்படித்தான். இதற்கு என்ன தலைப்பு வைக்கவிருக்கிறார் என்று நானும் ஆவலாய் பார்த்திருக்கிறேன். என்ன காரணம் என்றால் இப்போது என்னுடைய பெயரைப் பற்றி எழுதியாக வேண்டும். வளன் என்னுடைய புனைப்பெயரா என்று கேட்கிறார்கள். இல்லை. என்னுடைய பெயரைப் பற்றி எழுதுவதால் இதை நார்சிஸ பதிவு என்று நினைக்க வேண்டாம்.

எனக்கு ஏன் இந்த மாதிரி ஒரு பெயரைக் கொடுத்தீர்கள் என்று சமீபத்தில்கூட என் அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். என் பெயரை நான் போகும் அத்தனை இடங்களிலும் உச்சரிக்கத் தெரியாமல் கொத்துக்கறிப் போடுவார்கள். அதனால்தான் என் முழுப்பெயரை எங்கேயும் சொல்வதில்லை. தென்மாவட்டங்களில் இந்தப் பெயர் கொண்ட பலரைச் சந்தித்திருக்கிறேன் ஆனால் மற்ற இடங்களில் இந்தப் பெயரை மிக அபூர்வமாகப் பார்க்கிறார்கள். என் அப்பாதான் இந்தப் பெயரை எனக்குக் கொடுத்தது. அவர் ஒரு தமிழாசிரியர். அவருடைய பேராசிரியர் நினைவாக எனக்கு இந்த நாமத்தைச் சூட்டினார். தமிழ்நாட்டிலேயே இந்தப் பெயரைக் கொத்துக்கறி போடுகிறார்கள் என்றால் அமெரிக்க நண்பர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? என் முழுப் பெயரையும் ஆங்கிலத்தில் எழுதினால் பத்து எழுத்துகள் வரும். அதன் பிறகு என் அப்பா பெயரைக் கடைசிப் பெயராகக் கொண்டிருப்பதால் அது ஒரு பதினைந்து எழுத்து. அவ்வப்போது என் முழுப் பெயரையும் எங்காவது எழுத வேண்டி வந்தால் அவ்வளவு அயற்சியாக இருக்கும். என் அமெரிக்க நண்பர்களுக்கு ஒவ்வொருமுறையும் பாடம் சொல்லிக்கொடுப்பது போலச் சொல்லிக்கொடுத்தாலும் சுருக்கப்பட்ட ‘வளன்’ என்ற பெயரை இன்னும் சுருக்கி ‘வ்வல்’ என்றுதான் அழைப்பார்கள்.

ஒருமுறை இங்கிருந்த முதியோர் இல்லம் ஒன்றில் மூதாட்டி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். வழக்கம் போல் என் பெயர் அறிமுகத்தின்போது மூதாட்டிக் குழம்பிய முகத்துடன் இன்னொரு முறைச் சொல்லுங்கள் என்றாள். சொன்னேன். கொஞ்சம் சத்தமாகப் புரியும்படி சொல்லச் சொன்னார்கள். சொன்னேன். இன்னும் ஒரே ஒருமுறை சொல்லுங்கள் என்று கெஞ்சலாகக் கேட்டார்கள். இப்போதும் மிக நிதானமாகச் சொன்னேன். கொஞ்சம் சிரித்துக்கொண்டே தனக்கு என் பெயரை எழுத்துக்கூட்டிக் காட்டும்படி கேட்டுக்கொண்டார்கள். இந்தமுறை நான் கொஞ்சம் பொறுமை இழந்திருந்தேன். இருந்தாலும் சொன்னேன். V. A. L. A. N. இப்போதும் அவர்களுக்குப் புரியவில்லை என்பதை உணர்ந்து என்னை ‘ஜோ’ என்று கூப்பிடுங்கள் என்று சொன்னேன். என் பெயரின் ஆங்கில அர்த்தம் அதுதான் – ‘ஜோ’ என்பது ‘ஜோசப்’ என்னும் பெயரின் சுருக்கம். இந்த ஜோசப் என்ற பெயருக்குப் பின்னால் நிறையக் கதைகள் இருக்கிறது. ஆனால் யார் இந்தப் பெயரைத் தமிழில் ‘வளன்’ என்று மொழிப்பெயர்த்தார் என்பதைப் பார்க்க வேண்டும்.

இத்தாலியிலிருந்து வந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற இயேசு சபை துறவி நம் தமிழ்நாட்டில் 1711 முதல் 1747 வரை பணிபுரிந்தார். அந்தச் சமயத்தில் தன் பெயரை தைரியநாதர் என்று மாற்றிக்கொண்டார். பின் தமிழ்ப் பற்றால் அதை மாற்றி வீரமாமுனிவர் என்று வைத்துக்கொண்டார். தமிழுக்கு நிறையத் தொண்டாற்றியிருக்கிறார். இவர் எழுதியதுதான் பரமார்த்த குரு கதைகள். இன்று அதை ஆய்வு ரீதியில் பார்த்தால் நிறையக் குறைகள் இருக்கிறது ஆனால் கதை என்கிற வகையில் வாசித்தால் நன்றாகத்தான் இருக்கின்றன. தமிழ் மொழியின் வரி வடிவத்திற்கும் நிறைய மாற்றங்களை இவர் செய்திருக்கிறார். இவருடைய மிக முக்கியமான படைப்பு ‘தேம்பாவணி’. நம்மில் பலர் பள்ளிப் பருவத்தில் செய்யுள் பகுதியில் படித்திருப்போம். அப்போதெல்லாம் ஒரு மதிப்பெண் பகுதியில் இந்தக் கேள்வி இடம்பெற்றிருக்கும்: தேம்பாவணியின் பாட்டுடைத்தலைவன் யார்? பதில் வளன். யோசேப்பு என்னும் பெயரைத் தமிழ் மொழியில் வழங்கும்போது சூசை என்று சொல்லி வந்தார்கள். அது ஒரு காரணப் பெயர். ஜோசப் அல்லது சூசை அல்லது யோசேப்பு அல்லது யூசுப் என்ற பெயரின் பொருள் ‘கடவுள் சேர்த்துத் தருகிறார்’ என்பதாகும். அதனால் வீரமாமுனிவர் தேவைக்கு மீறி இருப்பது வளமை என்னும் பொருள் கொள்ளும்படி வளங்களைக் கொண்டு வருபவன் வளன் என்று பெயரிடுகிறார்.

தேம்பாவணி என்ற பெயரைக் கேட்டாலே இனிப்பாக இருக்கிறது. அதில் பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதுவும் அதில் உள்ள கற்பனை நயம் எனக்கு மிகவும் பிடிக்கும். உதாரணத்திற்கு ஒரு பாடல். மரியாள் கர்பவதியாக இருக்கிறாள். அப்போது ஜோசப் மரியாளைப் பார்த்துக் கேட்பதாக அமைந்தது பின்வரும் பாடல்:

களிப்பனோ, அழுவனோ, கனியத் தான் எனை

விளிப்பனோ, சுளிப்பனோ, விழைந்த வாள் முகம்

ஒளிப்பனோ, தழுவிய உவப்பின் முத்தமும்

அளிப்பனோ, உலகு எலாம் அளித்த நாதனே?

படித்தால் உங்களுக்கே அர்த்தம் புரியும். இருந்தாலும் நான் புரிந்துகொள்வதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். மரியாளின் வயிற்றில் இருப்பது இறை மைந்தன் என்று தெரிந்துக் கேட்கிறார், கடவுள் இப்போது குழந்தையாகப் பிறக்கப் போகும் அதிசயம் நிகழப்போகிறது. அப்படி இந்த உலகைப் படைத்தவன் குழந்தையாகப் பிறக்கும்போது எப்படியெல்லாம் நடந்து கொள்வான்? மகிழ்வாக இருப்பானா? அழுவானா? என்னைத் தன் மழலை மொழியில் கூப்பிடுவானா? என்னுடன் ஒளிந்து விளையாடுவானா? என்னை இறுக்கி முத்தமிடுவானா? என்று மரியாளிடம் கேட்கிறார். ஒரு ஆண், தந்தையாகும்போது இந்த எல்லா எதிர்பார்ப்பும் இருக்கும்தானே? அதுவும் எவ்வளவு அழகான ஓசை இன்பத்துடன் இந்தப் பாடல் வந்திருக்கிறது என்று கவனியுங்கள். இதில் என்ன கற்பனை என்கிறீர்களா? விவிலியத்தில் இந்த ஜோசப் ஒருமுறைகூடப் பேசியதில்லை. அவர்களுக்குள் இப்படி ஒரு உரையாடல் நடந்திருக்கலாம் என்பதுதான் இங்கே அழகு.

விவிலியத்தில் இயேசுவின் வளர்ப்புத்தந்தை ஜோசப் மட்டுமல்லாமல் இன்னொரு ஜோசப்பும் இருக்கிறார். அவர் பழைய ஏற்பாட்டில் வரும் ஜோசப். எனக்குப் புதிய ஏற்பாட்டில் வரும் ஜோசப்பைவிட, பழைய ஏற்பாட்டில் வரும் ஜோசப்பைதான் மிகவும் பிடிக்கும். அந்த ஜோசப் கனவுகளின் மன்னன் என்று அறியப்பட்டான். அதாவது அந்தக் காலத்தில் கனவுகள் கடவுளிடமிருந்து வரும் செய்திகள் என்று நம்பப்பட்டது. எனவே கனவுகளுக்கு விளக்கம் தேடிக்கொண்டிருப்பார்கள். ஜோசப் இயல்பிலே கனவுகளின் விளக்கத்தை அறிந்தவனாகவும் கனவு காண்பவனாகவும் இருந்தான்.

இப்படிக் கொஞ்சம் அதீத திறமை இருந்ததால் தனது சகோதரர்களால் ஒதுக்கப்படுகிறான். ஒருநாள் ஜோசப்பை கொன்றுவிடச் சகோதரர்கள் திட்டமிடுகிறார்கள். ஆனால் மனதை மாற்றிக்கொண்டு எகிப்துக்குச் செல்லும் வியாபாரிகளிடம் இவனை அடிமையாக விற்றுவிடுகிறார்கள். இந்தக் கதை முழுவதும் பைபிளில் இருக்கிறது முடிந்தவர்கள் படித்துப் பாருங்கள். ஒரு சாகசக் கதைக்கு நிகராக இருக்கும். சரி இன்னும் கொஞ்சம் சொல்கிறேன். அடிமையாக இருந்த ஜோசப்பை பாரவோனின் (எகிப்திய மன்னன்) அலுவலகப் பணியாளர் போத்திபார் விலைக்கு வாங்கிப் போகிறான். ஜோசப்பின் திறமையைக் கண்ட போத்திபார் அங்குள்ள அடிமைகளின் அலுவலராக ஜோசப்பை நியமிக்கிறார். அப்போது போத்திபாரின் மனைவி ஜோசப்பின் மீது மையல் கொள்கிறாள். ஜோசப் இணங்க மறுக்கிறான். அதனால் பொய்ச் சொல்லி இவனைச் சிறையில் அடைக்க வைக்கிறாள். மரணத்திற்குக் காத்திருந்த ஜோசப் அங்குள்ளவர்களின் கனவுக்கு விளக்கம் தருகிறான். அதில் ஒருவன் விடுதலையாகி மன்னனிடம் செல்கிறான். அப்போது மன்னனுக்கு ஒரு கனவு வருகிறது யாரும் அந்தக் கனவுக்குச் சரியான விளக்கம் தராததால் விடுதலையாகிச் சென்ற அந்தப் பணியாள் மூலம் ஜோசப்பின் அறிமுகம் கிடைக்கிறது. ஜோசப் விடுதலையாகி பாரவோன் முன் வருகிறான். இப்போது மன்னன் தன் கனவைக் கூறாமல் ஜோசப்பை சோதிக்கும் நோக்கத்தில் கனவையும் கனவின் விளக்கத்தையும் நீயே சொல் என்கிறான். ஜோசப்பும் கனவைச் சொல்கிறான். அதாவது மன்னனின் கனவில் ஏழு கொழுத்த காளைகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அதை நைல் நதியிலிருந்து வந்த வேறொரு ஏழு நோஞ்சான் காளைகள் சாப்பிட்டுவிட்டன. அதேபோல முற்றிய ஏழு கோதுமைக் கதிர்களை வாடிப்போன ஏழு கோதுமைக் கதிர்கள் அழித்துவிடுகின்றன. இந்தக் கனவைச் சொல்லிவிட்டு, கனவுக்கான விளக்கத்தையும் ஜோசப் கூறினான். வளமான ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஏழு ஆண்டுகள் கொடியப் பஞ்சம் வருமென்று கூறுகிறான்.

இந்த விளக்கத்தால் மகிழ்ந்த அரசன் ஜோசப்பை தனக்கு அடுத்தப் பொறுப்பில் வைக்கிறான். வரப்போகும் பஞ்சத்தையும் சமாளிக்கச் சொல்கிறான். அதன்படி ஏழு ஆண்டுகளின் வளமையைப் பெரிய பெரிய களஞ்சியங்கள் கட்டி சேகரித்தான் ஜோசப். அதனால் அடுத்த ஏழு ஆண்டுகள் நீடித்த பஞ்சத்தை எகிப்து சமாளித்தது. ஜோசப் ஒருவேளை எகிப்துக்கு வராமல் போயிருந்தால் பஞ்சத்தால் எகிப்து வீழ்ந்திருக்கும். வளமையை எகிப்துக்குக் கொண்டு சென்றதால் தமிழில் ‘வளன்’ என்று அழைக்கிறோம். புதிய ஏற்பாட்டில் வரும் ஜோசப்பும் கனவுகள் காண்பவர்தான். ஒருவேளை அவர் தன் மனைவி மரியாளை சந்தேகப்பட்டிருந்தால் இந்த உலகிற்கு இயேசு வந்திருக்கமாட்டார். இந்த உலகிற்கு அந்தத் தெய்வத்தை – உண்மையான வளமையைக் கொணர்ந்ததால் இவரையும் வளன் என்கிறோம்.

அருணாசலப் பிரதேசத்தில் அதி என்றொரு இனம் இருக்கிறார்கள். அவர்கள் பெயர் வைக்கும்போது அந்தப் பெயர் அந்தக் குழந்தையை நேரடியாகப் பாதிக்கும் என்று நம்புகிறார்கள். அதைப்பற்றித் தனியாக எழுத வேண்டும் ஆனால் எனக்கு இந்தப் பெயர் வைத்ததால் எனக்கும் ஒருசில நேரங்களில் அதிசயக் கனவுகள் வரும். அது தற்செயலானதுதான் என்றாலும் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. சரி எது எப்படியோ. சமீபத்தில் கண்ட கனவுகளைச் சொல்கிறேன். தொடர்ந்து உயிர்மை மின்னிதழில் கட்டுரைகள் எழுதும்போது இந்த இலக்கியவாதிகள் கனவுகளில் வர ஆரம்பித்தார்கள். ச்சே! என்ன ஒரு பயங்கரம் என்று நள்ளிரவுகளில் விழித்துக்கொள்வேன். மேற்கொண்டு தூக்கம் பிடிக்கப் பலமணி நேரங்கள் ஆகும். ஒருநாள் இரண்டுநாள் என்றால் பரவாயில்லை. தொடர்ந்து வந்ததால் படுக்கப் போகும் முன் சிறப்புப் பிரார்த்தனைகள் செய்துவிட்டுத் தூங்கப் போவேன். அப்படியும் கனவுகள் வர ஆரம்பித்தன. இது உண்மையில் ஒரு கெட்ட சகுனம்தான் இல்லையா?  ஒரு ராக் ஸ்டார் எழுத்தாளரும் நானும் எதைப்பற்றியோ விவாதித்துக்கொண்டு நடந்துகொண்டிருந்த போது கயோட்டி (coyote) ஒன்று எங்களைத் துரத்த ஆரம்பிக்கிறது. கயோட்டிக்குத் தமிழில் என்ன சொல்வது? பார்ப்பதற்கு ஓநாய் மாதிரி இருக்கும். ஓநாய், கயோட்டி சரியாக இனம் பிரிக்க தெரியவில்லை.   கொஞ்ச நேரத்தில் அந்த ஒரு கயோட்டி பல நூறு கயோட்டிகளாக மாறித் துரத்த ஆரம்பிக்கிறது.

மனுஷ்ய புத்திரன் எழுதும் கவிதைகளை வாசித்துவிட்டுத் தூங்கச் சென்றால் கேட்கவே வேண்டாம். அன்று பயங்கரக் கனவுகள் வரும். ஒருமுறை நண்பர் ஒருவர் மனுஷ் தன் கனவுகளைப் பின் தொடர்வதாக எழுதியிருந்தார். அது உண்மைதான். அவரின் கவிதைகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

விதி நம்மைப்பிரிக்க

ஒவ்வொரு நாளும்

ஒரு புயலை அனுப்புகிறது

அந்தக் காற்றில் நீ

ஒரு இறகைப்போல

அத்தனை இணக்கமாய் பறந்து செல்கிறாய்

 

நானோ பேய்க்காற்றில் ஒரு மரமாய்

மண்ணை இறுகப்பிடித்துக்கொண்டு

தலைவிரித்தாடி அத்தனை இலையையும்

உதிர்த்தபடி நிற்கிறேன்

 

காலம் நம்மை துண்டிக்க

எத்தனை காட்டாறுகளை பெருகச் செய்கிறது

அத்தனை சம்மதமாய்

அதில் ஒரு மலர்போல நீ மிதந்து செல்கிறாய்

 

நானோ மறுகரையில் கண்ணீரோடு

வாழ்நாளெல்லாம்

அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறேன்

 

8.4.2020

இரவு 10.42

 

ன் இந்தக் கவிதையைப் படித்தபின் மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. ஒருவிதமான கொந்தளிப்புடனே மனமிருந்தது. பல துர்கனவுகள் தூக்கத்தைக் கெடுத்தன. அடுத்த கொஞ்ச நாளில் ஒரு விபத்துச் செய்தி எனக்கு வந்தது. எனக்கோ இந்தக் கவிதையில் சொல்லப்பட்டிருப்பது போன்ற கையறுநிலை. எதுவுமே செய்ய முடியவில்லை. விபத்து நடந்தது இந்த கவிதை எழுதப்பட்ட நாள். எனக்கு செய்தி வந்தது ஒரு வாரத்திற்கு பிறகு. மர்மக்கதைகளில் வருவது போன்ற சம்பவமாக தோன்றியது. இந்தக் கவிதைகள் எந்த ரசவாதத்தால் உருவானது என்பதை ஆராய வேண்டும். இன்னொரு கனவும் வந்தது. அதில் மனுஷ்ய புத்திரனை ஒரு விமான நிலையத்தில் சந்திக்கிறேன். இதுவரை என்னை அவருக்குத் தெரியாது என்பதால் என்னை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறேன். அவருடைய கண்கள் வாடியிருக்கின்றன. பேசி முடித்ததும் பசிக்கிறது சிக்கன் பக்கோடா சாப்பிடலாமா என்று கேட்கிறார். அவருக்குச் சிக்கன் பக்கோடா பிடிக்கும் என எங்கோ படித்த ஞாபகம். சரி என்று சிக்கன் பக்கோடா தேடிச் செல்கிறேன். திடீரென விழித்துக்கொண்டேன். அப்போது பின் வரும் பதிவை மனுஷ்ய புத்திரன் ஃபேஸ் புக்கில் எழுதியிருந்தார்: “பனங்கிழங்கு சாப்பிடணும்போல இந்த அர்த்தராத்திரியில் அப்படி ஒரு வேட்கை. இப்படித் தினமும் கிட்டாத ஒன்றை நினைத்து ஏங்குவது வழக்கமாகிவிட்டது.” அதிர்ந்துபோனேன். எப்படியிருக்கிறது பார்த்தீர்களா! இன்னொரு கவிதையும் என் தூக்கத்தைக் கெடுத்தது. தேவதச்சன் எழுதியது:

துவைத்துக் கொண்டிருந்தேன்

காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்

அடுத்த துணி எடுத்தேன்

காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்

உண்மையில் கனவுகள் வராத தூக்கத்திற்காக ஆசைப்படுகிறேன். கனவுகள் உண்மையில் வேதனையைத்தான் கொணர்கின்றன. எல்லாவற்றிற்கும் வளன் என்ற இந்தப் பெயர்தான் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. பெயரை மாற்றினால் கனவுகள் வருவது நிற்குமா?

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
  2. இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
  3. கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
  4. ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
  5. பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
  6. "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
  7. வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
  8. Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
  9. இசை நாடகங்களும் படங்களும் – வளன்
  10. கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
  11. அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
  12. கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
  13. பெண்களுடனான உரையாடல்- வளன்
  14. புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
  15. ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
  16. மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
  17. Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
  18. Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
  19. தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
  20. இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
  21. வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
  22. ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
  23. மூன்று இசை தேவதைகள் - வளன்
  24. 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்