மனவெளி திறந்து-10 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்





கேள்வி: வணக்கம் டாக்டர், சுகர், பிரஷர் என உடல்நிலை பற்றி பேசுவதை போல மனநிலைப் பற்றி பேச தயக்கம் இருக்கிறது. நாம் பழகும் எல்லோரிடமும் ஒரு  equation இருக்கிறது. நம் அவர்கள் மனநிலைப் பற்றி பேசினால் அது கெட்டுவிடுமெனத் தோன்றுவதாலேயே அதைப் பேசுவதை தவிர்க்கிறோம் அது ஏன்?

நவீன். J.V, சென்னை

பதில்: ஆம் உண்மைதான். யாரையாவது நாம் சந்திக்கும்போதும் அவர்களிடம் கேட்கும் முதல் கேள்விஎப்படி இருக்கீங்க?” என்பது. அதாவது நலமாக இருக்கிறார்களா என்பதை கேட்பதன் வழியாக அவரின் நலத்தின்மீது நான் அக்கறையுடன் இருக்கிறேன் என்பதையே நாம் சொல்ல விளைகிறோம். அதேபோலநல்லா இருக்கீங்களா?” என்று நம்மைப் பார்த்து யாராவது கேட்கும்போதும் நாம் அதற்காக சந்தோஷப்படுகிறோம். அதற்குக் காரணம் நமது நலத்தின்மீது ஒருவருக்கு அக்கறை இருக்கிறது என்ற எண்ணமே நமக்கு சந்தோசமாகயிருக்கிறது. ஆனால் இங்கு நலம் என்பது உடல்நலம் என்பதாக இருக்கும்வரைதான் இந்த சந்தோசம். அதுவே ஒருவரிடம் சென்றுஉங்க மனசு நல்லா இருக்கா?” என்று கேட்டால் சட்டென்று அவருக்கு நம்மீது கோபம் வந்துவிடும். “அப்படி என்றால் பார்த்தா என்ன கிறுக்கு பிடிச்சமாதிரி இருக்கா?” என்று பதிலுக்கு அவர் நம் மீது கோபப்பட்டு விடுவார்.

நமது உடல் நலத்தைப் பற்றி அனைவரும் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாம், நமது மனதை மட்டும் யாருக்கும் தெரியாமல் மறைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறோம்.  நம் மனதை யாரும் பேசுவதையேகூட நம்மால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. மூன்று மிக முக்கியமான காரணங்களைப் பற்றி மட்டும் நான் இங்கு சொல்கிறேன்: முதலாவது, உடல் அளவிற்கான வெளிப்படைத்தன்மை மனதிற்கு இங்கு இல்லை. மனம் ரகசியமாய் பொத்தி பாதுகாக்கப்படுகிறது; மனதினைப் பற்றி ஒரு வெளிப்படையான உரையாடலை இன்னமும் இந்தச் சமூகம் தொடங்கவே இல்லை. எங்கெல்லாம் வெளிப்படைத்தன்மை இல்லையோ அங்கெல்லாம் அதைப் பற்றி ஏராளமான கட்டுக் கதைகள் இடப்படும். மனிதனைப் பற்றி இருக்கும் ஏராளமான எதிர்மறையான இந்தக் கட்டுக் கதைகள்தான் மன ஆரோக்கியத்தில் மீது. ஒரு எதிர்மறையான பிம்பத்தை நமக்குள் ஏற்படுத்தி இருக்கிறது உண்மையில் மனமும் உடலைப் போலவே ஏராளமான சிக்கல்களுக்கு உள்ளாகிறது; உடலில் ஏதாவது சிறு சங்கடம் ஏற்பட்டால்கூட நாம் அதை வெளிப்படையாக சொல்லி அதை சரி செய்துகொள்ள நினைக்கிறோம். மனதில் இப்படி சிக்கல்கள் வந்தால், அது நம் மீதான எதிர்மறையான ஒரு தோற்றத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்திவிடும் என்பதால் நாம் அதை வெளியே சொல்லாமல் நமக்குள் மறைத்துக் கொள்கிறோம்.

இரண்டாவது முக்கியமான காரணம், மனதில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தாலே நாம் அதை மனநோய் என்று நினைத்துக் கொள்கிறோம். அளவற்ற பசி, அளவற்ற தூக்கம், வலி, காய்ச்சல் போன்று உடலில் ஏராளமான சங்கடங்கள் அவ்வப்போது ஏற்படும்; அவையெல்லாம் நோயா என்ன? ஆனால் மனரீதியாக கவலை, வருத்தம், பதட்டம், பயம், குழப்பம் போன்ற சிக்கல்கள் வரும்போது அவையெல்லாம் நோயின் அறிகுறிகள் என்று நினைத்துக் கொள்கிறோம். மனநோய் மீது இந்தச் சமூகம் கொண்டிருக்கும் எதிர்மறை பார்வையின் விளைவாகவே நாம் மனதில் ஏற்படும் எந்தச் சங்கடங்களை வெளிப்படுத்தாமல் நமக்குள் வைத்துக்கொள்கிறோம்.

மூன்றாவது, மனரீதியான எழும் எல்லாப் பிரச்சனைகளையும் நாம் நமது தனிப்பட்ட பலவீனங்களாக நினைத்துக் கொள்கிறோம். ஒரு பிரச்சனை சார்ந்து மன வருத்தம் நமக்கு ஏற்பட்டால், அப்படி வருந்துவது நமது பலவீனம் என்று நினைத்துக் கொள்கிறோம். அதேபோல பதட்டப்படுவது, முடிவெடுக்க முடியாமல் தவிப்பது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவற்றையெல்லாம் நாம் நமது தனிப்பட்ட பலவீனங்கள் என்று நினைப்பதனால் தான் நாம் அதை யாரிடமும் சொல்வதற்கு தயங்குகிறோம், அதையும் மீறி யாராவது அதை சுட்டிக்காட்டினால் நாம் அவர்களின் மீது கோபப்படுகிறோம்.

மேல் சொன்ன இந்த மூன்று கருத்தாக்கங்களும் தவறானவை. உண்மையில், உடல் அளவிற்கு மனமும் வெளிப்படைத்தன்மையுடனும் அணுக வேண்டும்; நாம் இருக்கும் சூழல் சார்ந்து, சில சந்தர்ப்பங்கள் சார்ந்து நம் மனம் சோர்ந்துபோவது, பதட்டப்படுவது எல்லாம் மன நோய்கள் அல்ல. மனதில் இயல்பாகவே இதுபோன்ற சங்கடங்கள் ஏற்படும். இப்படி ஏற்படும் மனரீதியான பிரச்சனைகள் எல்லாம் மனம் என்று ஒன்று இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஏற்படும். அதனால் இவை எல்லாம் நமது தனிப்பட்ட பலவீனங்கள் இல்லை. இதிலிருந்து நாம் எப்படி வெளி வருகிறோம், இந்த மோசமான உணர்வுகளிலிருந்து நம்மையும் மற்றவர்களையும் நான் எப்படி காப்பாற்றிக்கொள்கிறேன் என்பதுதான் முக்கியம். அதற்கு நமக்கு இருக்கும் இந்த மனரீதியான பிரச்சனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது அவசியமான ஒன்று. மனதைப் பற்றி பேசாமல் மனதின்மீது இருக்கும் இந்த எதிர்மறை கட்டுமானங்களை எல்லாம் உடைக்க முடியாது. மனதோடு பேசுவது மட்டும் போதாது, மனதைப் பற்றி பேசுவதும் அவசியமான ஒன்று.

முந்தையை கேள்வி -பதில்:https://bit.ly/2JQ0szA

கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: manamkelvipathil@gmail.com


Tags:
மன அழுத்தம், equation, மனநிலை, உடல் நலம், மனந்லம், டாகடர். சிவபாலன் இளங்கோவன், மனப் பிரச்சினை