ஒற்றன்நாவலை நான் இரண்டாவது முறையாக படிக்கிறேன். முதலில் படித்த போதிருந்த அதே உணர்வு தான் இப்போதும்வடிவ பரிசோதனை செய்திருக்கிறார், ஆனால் அது அவ்வளவு துல்லியமாக கைவரவில்லை. “ஜெ.ஜெ: சில குறிப்புகள்நாவலில் டைரிக் குறிப்பும் துண்டுத்துண்டான மனநிலையும் வடிவம் என்றால் இதில் பயணக்குறிப்புகள். அசோகமித்திரன் அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளர்கள் தங்கி எழுதும் திட்டம் ஒன்றில் பங்கேற்ற அனுபவங்கள். ஆனால் அசோகமித்திரன் பயணக்குறிப்புகளைக் கொண்டு கதைசொல்லி நிலையற்று, மையமற்று போவதை, அதன் சுதந்திரத்தைப் பேசாமல் (அதுவே எளிது) இந்தக் குறிப்புகளின் ஊடாக ஒரு கோர்வையான கதையைச் சொல்கிறார். இந்தக் கதையை மேலோட்டை மட்டும் உருவினால் ஒண்டுக்குடித்தனங்களில் வாழும் ஜனங்களின் கதை ஒன்று வருகிறது அல்லதுவியட்நாம் வீடுபோன்ற ஒரு கதை

அடிப்படையில் ஒரு எதார்த்த கதை. பரீட்சார்த்த தொழில்நுட்பமும் எதார்த்த கதைக்கூறலும் இணைந்து ஒரு முகமற்ற வடிவத்தை இக்கதை பெற்றிருக்கிறது. “பாவம் டல்பதடோஎனும் அவரது அதிகம் பேசப்படாத நாவலும் இப்படி உதிரி உதிரியான சித்திரங்களால் முழுமைபெற்றும் முழுமைபெறாத வகை படைப்புதான்ஆனால் அசோகமித்திரனின் சிறப்பு அவர் இந்த வழக்கமான கதையை அபாரமான உளவியல் ஆழத்துடன் நேர்த்தியுடன் சொல்லுகிறார் என்பது

பல நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் ஏழெட்டு மாதங்கள் அமெரிக்காவில் சேர்ந்து தங்குகிறார்கள்; ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை, சிக்கல், ஏக்கம், குழப்பம், குடும்ப, அரசியல் பின்னணி. அவர்களும் சுலபத்தில் ஒரு குழாமாக இணைவதில்லை (எழுத்தாளன் அடிப்படையிலோ ஒட்டாத பாதரசம் தானே). இருந்தும் அவர்கள் பரஸ்பரம் கைகோர்த்து பயணிப்பதற்கான பல சந்தர்பங்கள் அமைகின்றன. இன, சாதி, மத பேதங்களைக் கடந்து மனிதன் ஒன்று தான் என அசோகமித்திரன் வலியுறுத்துகிறார்; அப்படி ஒன்றுதான் என நினைக்கும் போதும் அவன் புரிந்து கொள்ள முடியாத ஒரு சிக்கலான வஸ்துவாகவும் இருக்கிறான், எதிர்பாராமைகளால் உறவுகளுக்கு இடையே நிறைய அபத்தங்கள், முரண்கள் நிகழ்கின்றன. இதை அசோகமித்திரன் சித்தரிப்பது தான் இந்நாவலை அபாரமான படைப்பாக்குகிறது.

பேரன்பு மிக்க மனிதன் கோமாளியாகவும் இருக்கிறான்ஆப்பிரிக்க எழுத்தாளர் அபே அப்படித்தான் இருக்கிறார். அதிக விலையில் ஒரு சூட் தைத்துக் கொண்டு மாதக்கணக்கில் அதை மட்டுமே அணிகிறார், தன் நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்குவதும் அமெரிக்காவில் வெளியிடுவதுமே நோக்கம் என்கிறார், அவரது தேசத்தின் ஜனாதிபதி / ஆட்சியாளரின் குடும்பத்துடன் தனக்குள்ள செல்வாக்கை பறைசாற்றுகிறார், தன் நாட்டில் தான் ஒரு மிக பிரசித்தமான நாவலாசிரியன் என்கிறார், ஆனால் சட்டென அங்கு ஆட்சி மாற்றம் வருகிறது, அவனது நாவலை யாரும் அமெரிக்காவில் கவனிக்கவில்லை, ஒரு சக எழுத்தாளரிடம் கூட நட்பை பராமரிக்காமல் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊருக்கு கிளம்புகிறார். இடையில் ஒரு ஜப்பானிய பெண் எழுத்தாளரிடம் விருப்பத்தை காட்ட முயன்று உதாசீனிக்கப்படுகிறார், அவரிடம் கரிசனமாக இருந்த கதைசொல்லியை தவறாக புரிந்து கொண்டு அடிக்கிறார், அவரைப் பற்றி பேசும் கதைசொல்லிசிலர் ஊரில் குடும்பம், உறவு என பாதுகாப்பாக இருந்து விட்டு அமெரிக்காவின் தனிமையில் மாட்டிக் கொள்ளும் போது மனம் தடுமாறி முன்னுக்கு பின் முரணாக நடந்து கொள்கிறார்கள், அது அவர்களின் தவறல்லஎன்கிறார்.

மனிதன் தன்னை உணர்ந்து நிதானமாக இருக்கும் போதும் கோமாளியாக இருக்கிறான்சுயகட்டுப்பாடும் கரார்தன்மையும் தெளிவும்மிக்க பிராவோ அபேயின் மற்றொரு வடிவம். அவனும் அதிகம் மக்களோடு பழகுவதில்லை. நாவல் எழுதும் கலையை அவன் கதாபாத்திரங்களின் பரஸ்பர மோதலாகக் கண்டு அதை எளிமைப்படுத்த ஒரு சூத்திரத்தை வகுக்கிறான். அதையே ஒரு சார்ட்டில் பல வட்டங்களாக வரைந்து, ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு நிறம் வழங்கி, இந்த பாத்திரங்கள் வரும் இடங்களில் காட்சிகளில் என்னென்ன உணர்ச்சிகள் தோன்றும் என வரையறுக்கிறான். இந்த அறிவியல் நுட்பத்தைக் கண்டு கதைசொல்லி வியக்கிறார், பிராவோவை அவர் ஒரு மேதை எனக் கொண்டாடுகிறார், எல்லாரிடமும் அவனது புகழை கொண்டாடுகிறார் (இது போகும் போக்கைப் பார்த்தால் பிராவோ சொதப்பப் போகிறானோ என நமக்குத் தோன்றும், அப்படியே நடக்கிறது). பிராவோ அடுத்து வரும் வாரங்களை அறையில் தனியாக கழிக்கிறான், தினமும் ஒவ்வொரு மணிநேரத்தையும் நாவலை வடிக்க செலவழிக்கிறான். இதையும் கதைசொல்லி எண்ணி சிலாகிக்கிறார், ஒருநாள் பிராவோ ஒரு பெண்ணைத் தழுவி நடந்து செல்வதைப் பார்க்கும் வரையில். இப்பெண்ணுடன் தான் அவன் ஒரு மாதமாக அந்த அறையில் அடைந்து கிடக்கிறான், அவளை அவன் ஆரம்பத்தில் தன் நாவலை தட்டச்சும் நோக்கில் அழைத்து வந்ததாக (இங்கு தஸ்தாவஸ்கி நமக்கு நினைவு வருகிறார்) கதைசொல்லிக்கு தெரிய வருகிறது. பிராவோவின் மனைவி பிற்பாடு வருகிறாள். அதற்கு முந்தின இரவே அவன் அப்பெண்ணை வெளியேற்றி விடுகிறான். இந்த கூத்துகளுக்கு நடுவே அவன் தன் நாவலையும் எழுதி முடித்து விட்டான். ஆனால் இவ்வளவு அபாரமான திட்டமிடல்களுக்குப் பின்னரும் நாவல் முழுத்தோல்வியாக முடிகிறது. அது அவன் எழுதியவதிலேயே மிக மட்டமான நாவல் என அவன் மனைவி தெரிவிக்கிறாள், அதை பிராவோவும் ஏற்கிறான். தன் நாவல் ஏன் சரியாக வரவில்லை என அவனுக்குப் புரியவில்லை.

 இங்கு மற்றொரு விசயத்தையும் நான் குறிப்பிட வேண்டும்: எழுத்தனுபவத்தின் மாயவினோதப் போக்குகளை விவரிக்க முடியாது. அசோகமித்திரன் எதையும் தூலமாக காட்சிபூர்வமாக சொல்ல விழைபவர். அதனாலேயே அவர் பிராவோவின் படைப்பாக்கத் தோல்வியை காட்சிபூர்வமாக நமக்கு உணர்த்த காமத்தை கொண்டு வருகிறார். அவனுக்கு நேரும் அந்த பாலியல் விபத்தை (தட்டச்சுப்பவளுடனான கள்ள உறவு) கூடவே குறிப்பிடுகிறார். எப்படி காமத்தை முறைப்படுத்த முடியாதோ அதே போல எழுத்தையும் ஒரு சூத்திரமாக வகுத்திட முடியாது என்கிறார். அப்படி செய்ய முயலும் போது வாழ்க்கை பெரிய வேடிக்கையாகப் போய் முடிகிறது என அதை அசோகமித்திரன் பகடி பண்ணுகிறார் (அமெரிக்காவின் புனைவு எழுத்து பட்டறைப் பண்பாட்டை, அந்த எழுத்து சந்தையை அவர் இங்கு கேலி செய்கிறார் என எடுத்துக் கொள்ளலாமா?)

கருணை வடிவானவர்களும் கோமாளியாகிறார்கள்கதைசொல்லி மற்றும் ஜப்பானிய பெண் கவிஞர் கஜுகோவையும் இந்த கட்டற்ற அன்பாளர்கள் / கருணையாளர்களின் பட்டியலில் சேர்க்கலாம். கஜூகோவுக்கும் தவறானவர்களை (அபே) உதாசீனிக்கத் தெரியும்; கிட்டத்தட்ட எல்லாரையும் அரவணைத்து முத்தமிட்டு அன்பு பாராட்டத் தெரியும். அவளது ஜனநாயக முத்தங்கள் முத்தத்தையே முத்தமல்லாமல் ஆக்குகின்றன. அவள் தனது கவிதைகளை நாடகமாக, கன்னாபின்னாவென்று எந்த வடிவ ஒழுங்கோ இலக்கோ அல்ல நாடகமாக, அரங்கேற்றுகிறாள். ஒரு பாரில் பாரம்பரிய ஜப்பானிய உடையில் தோன்றி கவிதை வாசிக்கிறாள். பார்வையாளர்களாக வந்திருப்பவர்களுக்கு இரண்டு கோப்பை மது இலவசம் என்பதால் யாரும் அந்த கவிதைகள் மோசமாக உள்ளதை பொருட்படுத்தவில்லை. அவளும் கூடத் தான். அவளுக்கு அது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பதற்கான ஒரு சந்தர்ப்பம். அவள் ஒரு போலியான இலக்கியவாதி அல்ல, ஆனால் எந்த மதிப்பீடுகளையும் வைத்து வாழ்க்கையை அளந்து பார்க்காத பெண்எதுவுமே ரொம்ப முக்கியமில்லை, எதுவுமே ரொம்ப முக்கியமற்றதும் இல்லை என நினைப்பவள். இது ஒருவித கோமாளித்தனம்.

கதைசொல்லி ஆரம்பம் முதலே அனைவரிடமும் அன்பு பாராட்டுகிறவராக வருகிறார்இதை அனைவரையும் மட்டற்று நேசிக்கும் மனப்போக்கு எனக் கொள்வதா அல்லது எல்லாரிடமும் இசைவாக செல்லும் போக்கு என்பதா?

 அவருடைய வாழ்க்கையில் வந்து செல்லும் கிட்டத்தட்ட எல்லாரையும் அவர் எந்த மதிப்பீடும் இல்லாமல் தான் ஏற்கிறார். அவர் அப்படி திறந்த மனம் கொண்டவர் என்பதால் பலவிதமான ஆட்கள், கவனத்தையும் அக்கறையையும் கோரும் ஆட்கள், அவரை தொடர்ந்து நாடுகிறார்கள். கதவில்லாத ஒரு விடுதியைப் போல இருக்கிறார். அசோகமித்திரன் இதையும் பகடி பண்ணுகிறார் என்பது தான் சிறப்பு. வெண்டுரா எனும் கறுப்பர் தன் ஊரில் பிரபல கவிஞன். ஆனால் அமெரிக்காவில் தனிமையில், ஆங்கிலத்தில் பேசத் தெரியாத பரிதவிப்பில், அவன் இருக்கையில் கதைசொல்லி அவனுக்குத் துணையாகிறார். மிஸிஸிப்பி நதியில் அவர்கள் படகில் போகையில் அவன் தொடர்ந்து வைனைக் குடித்து மொத்தத்தையும் வாந்தி எடுக்க கதைசொல்லி அதை கையில் ஏந்திக் கொள்கிறார். அந்த குழுவின் வழிகாட்டியுடன் சேர்ந்து தரையை சுத்தம் பண்ணி, வெண்டுராவையும் துடைத்து விடுகிறார். அதன் பிறகு வெண்டுரா வந்து அவருக்கு நன்றி சொன்னாலும் அன்பின் மிகுதி தருகிற அபத்தமான துன்பங்களையும் அசோகமித்திரன் சுட்டிக்காட்டுகிறார்

இலாரியா எனும் அழகிய இளம்பெண்ணும் கதைசொல்லிக்கு தோழியாகிறார். அவள் பல்கலைக்கழக மாணவி. தான் வேலை செய்து சேர்த்த பணத்தைக் கொண்டு புனைவும் கலையை முறையாக கற்பதற்கு வந்திருக்கிறாள். அவள் ஒரு மெக்ஸிக்கனை காதலித்து ஏமாறுகிறாள். அந்த காதல் தோல்வி அவளை உருக்குலைக்கிறது. அவளால் தன் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. இதைச் சொல்லி அவள் கதைசொல்லியிடம் அழுகிறாள். அவர் சொல்கிறார்: “துக்கத்தை மட்டும் தனிமையில் தான் புரிய வேண்டும். துக்கத்தைப் பங்கிட்டு கொள்ளவே முடியாது.” இது நாவலில் ஒரு முக்கியமான வாக்கியம். மற்றொரு முறை அவள் தன் துக்கத்தை பகிர்ந்து கொள்ளும் போதும் கதைசொல்லி இது வெறும் மயக்கம், துக்கம் என்பது ஒரு கற்பிதம் என்கிறார். துக்கத்துக்கு நாமாக இடமளித்தால் ஒழிய அது நம்மிடம் வராது, நமது தெளிவின்மையே நம்மை திரும்பத் திரும்ப ஏமாற்றங்களை நோக்கித் தள்ளுகிறது என்கிறார். இதை நான் அசோகமித்திரன் கருத்தாக அல்ல, கதைசொல்லியின் பார்வையாகவே கொள்கிறேன். இதுவே இந்நாவலின் மையப்பார்வையாகவும் உள்ளது. இதை மேலும் விளக்குவது அவசியம்.

துக்கத்தை ஏன் பகிர்ந்து கொள்ள முடியாது?

எதை நாம் பகிர்ந்தாலும் அதன் அளவு குறைந்து விடும். உங்கள் தட்டிலுள்ள உணவை நீங்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டால் அது பாதியாகி விடும். ஆனால் உங்கள் மனத்தில் உள்ள உணர்வை என்னிடம் பகிர்ந்து கொண்டால் அது பாதியாக குறையாது. ஏனென்றால் உணவைப் போல நிஜமானது அல்ல உணர்வு. உணர்வு என்பது நாடகம் போல ஒரு நிகழ்த்தல். அதில் நாம் ஒரு பாத்திரமாக பங்கேற்கிறோம். அதற்கு ஒரு திரைக்கதையை அமைக்கிறோம். அதற்கு பார்வையாளர்களை அழைக்கிறோம். பார்வையாளர்கள் நம் துக்கத்தை அங்கீகரிக்க அங்கீகரிக்க நாம் துக்கப்படுவதும் அதிகமாகிறது. கதைசொல்லி இதனால் தான் இலாரியாவிடம் கற்பனையில் வாழாதே என அறிவுரைக்கிறார். ஆனால் அவளால் அதை உட்கொள்ள முடியவில்லை. இப்போது கதைசொல்லி எரிச்சலாகிறார். ‘ஒருவனை காதலிக்கும் முன் அவனுக்கு திருமணமாகி இருக்கிறதா என்பதை கூட விசாரித்து அறிந்து கொள்ள மாட்டாயாஎன கேட்கிறார். இலாரியா கோபத்தில் எழுந்து போய் விடுகிறாள். அதன் பிறகு அவள் அவரை சந்திப்பதில்லை

ஏன் இலாரியாவுக்கு கோபம் வருகிறது? ஏனென்றால் அந்த கணத்தில் கதைசொல்லி தனது பாத்திரத்தை மீறி அவளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்கிறார். அவளை மதிப்பிடுகிறார், அவளைப் பற்றி கருத்தை சொல்லி தான் அவளை ஒரு முட்டாளாக நினைப்பதை வெளிப்படுத்தி விடுகிறார். இது அவளை காயப்படுத்தி விடுகிறது. இப்படி கோபப்படும் இடங்களில் கதைசொல்லி அதற்கு முன்பிருந்த ஆளில் இருந்து மாறுபட்டு விடுகிறார்.

ஆரம்பத்தில் இலாரியா தன் அன்பை பகிர்ந்து கொள்ளும் முயற்சியின் அபத்தத்தையும் அசோகமித்திரன் பேசுகிறார். ஒரு அத்தியாயத்தில் அவள் கதைசொல்லியின் இடத்துக்கு வந்து அவருக்கு காலை உணவு சமைத்துத் தருகிறாள். அவளுக்குத் தெரிந்ததெல்லாம் காரமான மக்கரோனி பண்ணுவது தான். அதை சாப்பிட்டு கதைசொல்லி மிகவும் நொந்து போவார். இது இத்தாலிய உணவு அல்ல, நம்மூர் ஆந்திர சமையல் தானே என அவருக்குத் தோன்றுகிறது.

கதைசொல்லி பின்னர் இப்படி அதிகமாக கோபத்தை வெளிக்காட்டும் மற்றொரு முக்கியமான இடம் ஜிம் பார்க்கர் எனும் ஓவியனைக் காண்பதற்கு அவனது ஊருக்கு அவர் செல்லும் போது நடக்கிறது. ஜிம் அவரை அப்போது தனது காதலியின் முன்னாள் கணவனுக்கு சொந்தமான மாளிகையின் ஒரு கண்ணாடி அறையில் தங்க வைக்கிறான். அந்த அறை என்பது முன்னாள் கணவனின் குடும்பத்தினர் காலங்காலமாக முதலிரவுக்கு பயன்படுத்தும் பிரத்யேகமான அறை. அந்த அறையில் சுவர்கள் மற்றும் கூரையெங்கும் கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருக்கும். ஒருவேளை அங்கே இருவர் நிர்வாணமாக இருப்பது பல கோணங்களில் ரூபங்களில் பிரதிபலித்து ஒரு வினோதமான வியப்புணர்வை தந்திருக்கலாம். எப்படியோ, அங்கே கதைசொல்லி போய் மாட்டிக் கொண்ட பின் விளக்கை அணைத்தாலும் கூரையில் உள்ள கன்ணாடிகள் பிரதிபலித்து அவரை தூங்க விடாமல் தொந்தரவு பண்ணுகின்றன. அப்போது ஜிம் வந்து கதவைத் தட்டி ஒரு சேதியை சொல்கிறான். அந்த முன்னாள் கணவர் கதைசொல்லியை கொல்வதற்காக துப்பாக்கியுடன் வந்து கொண்டிருக்கிறான். அவன் ஏன் இவரைக் கொல்ல வேண்டும்

ஜிம்மின் காதலியிடன் இரண்டாவது காதலன் இவர் என அவரிடம் யாரோ போட்டுக் கொடுத்திருக்கிறார். அதனால் தான் வெகுண்டெழுந்து வந்திருக்கிறார். ஜிம் அவரை அலமாரிக்குள் பதுக்கி வைக்கிறான். அப்போது கதைசொல்லிக்கு அந்த முக்கியமான கேள்வி எழுகிறது: அந்த முன்னாள் கணவன் கொல்ல வேண்டுமானால் முதலில் ஜிம்மைத் தானே கொல்ல வேண்டும்? இந்த இடத்தில் அந்த முன்னாள் கணவனின் மனநிலை மிகவும் தமாஷாகவும் கழிவிரக்கம் பொருந்தியதாகவும் ஆகி விடுகிறது. அவர் நிலைமை எந்தளவுக்கு மோசம் என்றால் அவர் ஜிம்மையே ஏற்றுக் கொண்டு விட்டார். ஆனால் தன் மனைவிக்கு இரண்டாவதாக ஒரு காதலன் அமைவது அவரால் ஜீரணிக்க முடிவதற்கு அதிகமாக உள்ளது. அதனால் தான் கொலைவெறி கொள்கிறார்

இதுவே கதைசொல்லிக்கு உறவுகள் மீதுள்ள அவநம்பிக்கையின் சித்திரம்ஒவ்வொரு ஆவேசமான உறவும் இப்படியான அபத்தங்களிலே போய் முடியக் கூடும் என அவர் நினைக்கிறார். ஏனென்றால் அவருக்கு ஆவேசமான, மிகை உணர்ச்சிகளாலான உறவுகளில் நம்பிக்கை இல்லை; ஏனென்றால் இவை முழுக்க கற்பிதங்களால் பின்னப்பட்டவை என அவர் நினைக்கிறார். அதனால் தான் அவர் தன் வாழ்வுக்குள் வருகிறவர்களைப் பற்றி பின்னால் யோசித்து ஏங்குவதில்லை. தன் மனைவி, குழந்தைகளைக் கூட அவர் அதிகமாக நினைப்பதில்லை. பூண்டு, கால் புண் ஆகியவை அவருக்கு அதிகமான மன ஆற்றலை கோருகின்றன. மனிதர்கள் தன்னிடம் இருக்கும் போது மட்டுமே அவர்களிடம் நியாயமாக இணக்கமாக இருக்க நினைக்கிறார். முடிந்தளவுக்கு மகிழ்ச்சியாக இருக்க முயல்வதே வாழ்க்கை என நம்புகிறார். அவரது வரலாறு எனும் அன்றாடத்தின் வரலாறு. நினைவேக்கம், பாசம் என்பதெல்லாம் வெறும் செண்டிமெண்டுகள். முடிந்தளவுக்கு அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதே பெரிய சாதனை என நினைக்கிறார். இதையே வலியுறுத்துகிறார். அதே நேரம் வாழ்க்கை எதேச்சையாக, தர்க்க ஒழுங்கையும் மீறி, பெரும் பிரச்சனைகள், ஆபத்துக்களை கொண்டு வரும் போது அவர் தன் கட்டுப்பாட்டை இழக்கிறார். அந்த முன்னாள் கணவரின் கொலைவெறி அப்படியான ஒன்று. அதைப் பற்றி ஜிம் தீர்க்கமாக சிந்திக்காமல் தன்னை அப்படி ஒரு இக்கட்டில் மாட்டி விட்டானே என அவருக்கு கோபம் தலைக்கு ஏற அவர் அவனது கழுத்தைப் பிடித்து உலுக்குகிறார்

இந்த இருவரில் யார் அதிக நிதானமானவர்? நிச்சயமாக ஜிம் தான். கதைசொல்லி எதை போதிக்கிறாரோ அதை முழுமையாக பின்பற்றுவதில்லை. வாழ்க்கை ஒரு பிசிறற்ற சுருதியுடன் செல்ல வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் வாழ்க்கை, பகுத்தறிவை மீறின திருப்பங்களால், அவரை ஏமாற்றுகிறது. பல வேடிக்கையான அபத்தமான சந்தர்பங்களுக்கு இட்டுச் செல்கிறது. அப்போதெல்லாம் அவர் கோபத்தில் கத்துகிறார், தலையில் அடித்துக் கொள்கிறார். ஆனால் ஜிம் எந்த எதிர்பாராமைகளை சுலபத்தில் ஏற்கிறான். அவன் சின்ன சின்ன வசதிகளுடன் உல்லாசமாக வாழ்கிறான். அபத்தங்களை அபத்தங்களாகவே எதிர்கொள்கிறான். இது போன்ற மிக நுணுக்கமான இடங்கள் தாம் இந்த நாவலின் அழகுநாம் கதைசொல்லியின் நிலைப்பாடே சிறப்பு என நினைக்கும் போது அவரது பிழைகளை, அவர் விக்கித்து நிற்கும் இடங்களையும் அசோகமித்திரன் காட்டுகிறார்.

அன்பையும் பற்று பிணைப்பையும் அவர் கற்பிதமாக காண்பதாலே அவரால் அனைவராலும் ஒட்டி ஒழுக முடிகிறது; அதனாலே தான் அவரது உறவாடலில் ஒரு வறட்டுத்தனமும் வந்து விடுகிறது. வாழ்க்கை ஒரு தர்க்க ஒழுங்குக்குள் வர வேண்டும் எனும் எதிர்பார்ப்பு அவருக்குள் ஏற்படுகிறது. இதையும் அசோகமித்திரன் போகிற போக்கில் நமக்கு உணர்த்தி விடுகிறார்.

கடைசியாக நாம் இந்தஒற்றன்எனும் தலைப்பைப் பற்றியும் பேச வேண்டும். தலைப்புக்கான நியாயம் ஒரு அத்தியாயத்தில் வருகிறது. ஒற்றன் என்பது அபே தன் நாவலுக்கு வைக்கும் தலைப்பு. அதற்கு அடுத்து பிராவோ எழுதும் நாவலின் தலைப்புமகா ஒற்றன்”. ஆனால் ஏன் மொத்த நாவலுக்கும் அசோகமித்திரன் இத்தலைப்பை நல்க வேண்டும்?

 ஒற்றன் என்பவன் தான் சேர்ந்த நாட்டுக்கும் வெளி ஆள். அவன் தான் உளவு செய்யும் நாட்டிலும் அந்நியன். இருப்பை பொறுத்தமட்டில், அவன் இரண்டு நாடுகளுக்கும் வெளியே இருப்பவன்; அடையாளத்தைப் பொறுத்தமட்டில் இருநாட்டு எல்லைகளுக்கும் நடுவில் அலைபவன். இந்த நாவலில்ஒற்றன்என்பதை அசோகமித்திரன் அந்நியன் எனும் (ஆல்பர்ட் காமு தரும்) பொருளில் தான் பயன்படுத்தி இருக்கிறார் என்பேன்

நாவலின் பாத்திரங்கள் அதிகமும் மூன்றாம் உலக நாடுகளில் இருந்தும் அமெரிக்கா எனும் முதலாளித்துவ சொர்க்கத்துக்கு வருகிறார்கள், தமது சொந்த பந்தங்களை, பழகின பண்பாட்டை வெளிகளை விட்டு, வருகிறார்கள். அமெரிக்காவின் மால்கள், வாழ்க்கை முறை, நுகர்வுக்கலாச்சாரம் ஆரம்பத்தில் ஈர்த்தாலும் போகப் போக அது அவர்களை அந்நியமாக்குகிறது. நுகர்வு கலாச்சாரத்திலும் ஒரு மலிவு விலை நுகர்வு தரப்பு உள்ளதை அசோகமித்திரன் கேமார்ட் அங்காடிக் காட்சிகளில் காட்டுகிறார். மக்கள் அங்கு போய் வாங்கும் பொருட்களை பிடிக்காவிட்டால் திரும்ப அளிக்கலாம். அப்படி திரும்ப பெறப்பட்டதை அப்படியே மீண்டும் விற்பனைக்கு வைத்து விடுகிறார்கள். இப்படித் தான் வெண்டுரா தவறாக பயன்படுத்தி உடைத்த ஒரு தட்டச்சு எந்திரத்தை மீண்டும் அப்படியே சரி செய்யாமல் விற்பனைக்கு வைத்து விடுகிறார்கள். இது ஒரு முக்கியமான தத்துவப் பிரச்சனையை எழுப்புகிறதுஅந்த தட்டச்சு எந்திரம் இப்போது யாருடையது? அது காசு கொடுத்த வாங்கியவருக்கானது அல்ல, அதை அவர் திரும்ப அளித்து மற்றொன்றை பெறுகிறார் என்றால் அந்த மற்றொன்றும் யாரோ ஒருவர் திரும்ப அளித்ததாக இருக்கலாம் தானே? நுகர்வுப் பண்பாட்டில் மனிதன் தன் அடையாளத்தை இப்படியான பண்டங்களைக் கொண்டு நிறுவுகிறான். இந்த பண்டங்களே உங்களுடையது இல்லை என்றால் உங்கள் அடையாளமும் உங்களுடையது அல்லாமல் தானே ஆகிறது?

வெண்டுரா தட்டச்சு எந்திரம் வாங்குவது கூட ஒரு அபத்தமேஅவனுக்கு ஆங்கிலத்தில் எழுதத் தெரியாது. ஆக ஆங்கில தட்டச்சு எந்திரத்தை அவன் பயன்படுத்தவே முடியாது. இருந்தும் அவன் அதை வாங்கி வைத்து அதனுடன் மல்லாடுகிறான். அபே ஒரே ஒரு சூட்டை அதிக விலைகொடுத்து தைத்துக் கொண்டு அதையே துவைக்காமல் போட்டு கொண்டு பைத்தியமாக திரிகிறான். கதைசொல்லி தான் 15 டாலருக்கு சற்று முன்னர் கெமார்ட்டில் 15 டாலருக்கு வாங்கிய பேனா கடிகாரம் தன் அங்கியின் பையில் உள்ள ஓட்டைக்குள் விழுந்து உள்ளே லைனிங்கில் மாட்டிக் கொண்டது தெரியாமல் அதைத் தேடி வந்த வழியெல்லாம் அலைகிறார். பேருந்து நிலையத்திலும் சாலையிலும் பனிசகதிக்குள் கையை விட்டு தேடுகிறார். அந்த சொற்ப பணமல்ல தான் வாங்கிய பொருளை பயன்படுத்தாமலே இழந்து விட்டோமே எனும் ஏக்கம் அவரை வருத்துகிறது. கடைசியில் பொருளை கண்டடைந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். பிராவோ அடுத்த கட்டத்துக்குப் போய் எழுத்துக்கலையை ஒரு எந்திரத் துல்லியத்துடன் உருவாக்க முயல்கிறான். அது முடியாமல் போக ஒரு பெண்ணை அழைத்து வந்து அவளுடன் அறையில் முடங்கிக் கிடந்து நாவலையும் சரியாக எழுதாமல் சொதப்புகிறான்வெண்டுராவுக்கு தட்டச்சு எந்திரம், அபேசுக்கு சூட், கதைசொல்லிக்கு பேனா கடிகாரம் என்றால் இவனுக்கு பெண்நுகர்வுப் பண்பாட்டின் கூட்டுப் பாய்ச்சலை, அவசியமின்றி ஜனங்கள் தம் பதற்றத்தை, தனிமையை போக்க நுகர்வில் ஈடுபடுவதை அசோகமித்திரன் இப்படி எல்லா முனைகளிலும் இருந்து தாக்கி பகடி பண்ணுகிறார்

இப்படியான அந்நியமாதலை சார்த்தர், காமு போன்ற ஐரோப்பிய படைப்பாளிகள் தமது இருத்தலியல் நாவல்களில் கையாண்டிருக்கிறார்கள். உலகின் மிக தத்துவக் முக்கியமான கேள்வி நான் இப்போது ஏன் தற்கொலை பண்ணிக் கொள்ளக் கூடாது என்பதே என ஆல்பர்ட் காமு ஒருமுறை சொன்னார். இதன் மூலம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஒரு தேர்வு தான் என அவர் கூறினார். நீங்கள் இப்போது இதைப் படிப்பதும் ஒரு தேர்வேஇதைப் படிக்காமல் நீங்கள் வேறு என்னன்னமோ செய்திருக்கலாம். ஏன் தற்கொலை கூட பண்ணி இருக்கலாம். ஆக வாழும் ஒவ்வொரு கணமும் நாம் சாகாத கண்மும் தான். இந்த கோணத்தில் பார்த்தால் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு முயற்சியும் முக்கியம். இந்த நிலைப்பாட்டை அசோகமித்திரன் தனது பதினெட்டாவது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள், தண்ணீர் போன்ற நாவல்களில் தனித்துவமாக, முழுக்க இந்தியத்தனமான நோக்கில், கையாண்டிருப்பார்

இருத்தலியல் நெருக்கடியைஎன்ன செய்வது, இதையா அதையா தேர்வது எனும் கேள்வியைஅவரது பாத்திரங்கள் தொடர்ந்து எதிர்கொள்கிறார்கள். அப்போது அவர்கள் தமது அன்றாட வாழ்வின் நெருக்கடிகள் காரணமாய் எந்த தேர்வு வாய்ப்புகளும் இல்லாதவர்கள் ஆகிறார்கள். வறுமை அவர்களை சிக்கலான தத்துவக் கேள்விகளிடம் இருந்து காப்பாற்றுகிறது. இந்த நாவலில் அரசாங்கம் அளிக்கிற தொகையில் அவர்கள் ஏழெட்டு மாதங்கள் ஒரு வீட்டுத்தொகுப்பில் தமக்கு அளிக்கப்பட்ட இடத்தில், ஒரு மேலாளரின் பொறுப்பில், வாழ வேண்டும். அந்த பணம், அதை செலவு செய்வது, கூட பல சிக்கல்களை இந்த பங்கேற்பாளர்களுக்கு ஏற்படுத்துகிறது. இருந்தாலும் சொந்த குடும்பம், சொந்த நாடு, சொந்த பண்பாடு ஆகிய கட்டுப்பாடுகள் இல்லாதவர்களுக்கு சொந்தமாக முடிவுகளை எடுப்பது பெருஞ்சிக்கலாகிறது என அசோகமித்திரன் நமக்கு உணர்த்துகிறார். இப்படித் தான் அவர்கள் ஒற்றர்கள் ஆகிறார்கள்.