காதல் சென்ற நூற்றாண்டில் வகித்து வந்த பதவியினின்றும் உயர்த்தப்பட்டு வேறொன்றாகத் தற்போது உயிர்த்திருப்பதாகச் சொல்லலாம். சென்ற நூற்றாண்டில் செல்வாக்காக இருந்த பல வார்த்தைகளை நடப்பு காலம் ரத்து செய்திருக்கிறது. வெகு சில சொற்களே தப்பிப் பிழைக்கின்றன. காதல் அவற்றுள் ஒன்று யதார்த்தத்தின் மிக அருகே வந்தமர்ந்திருக்கிற இப்போதைய காதல் அதன் முந்தைய வெர்ஷன்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருப்பது கண்கூடு. காதலின் தற்போதைய புதிய ஸ்டேஷன் முந்தைய ஸ்டேஷனில் நிலவிய எல்லாக் குறைபாடுகளையும் களைந்தது. புத்தம்புதிய அனுபவவயமானது.

பழைய புனிதப் பிடிமானத்திலிருந்து காதல் விலகி இருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளைத் தேவ சத்தியங்களாகப் பற்றிக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது கசகசத்து மூச்சு முட்டக்கூடிய அன்பின் இருள் முனையிலிருந்து நகர்ந்து காற்றோட்டமான வேறொரு நல்ல இருப்பை நோக்கி வந்து சேர்ந்திருக்கிறது.

நட்பு எது காதல் எது என்பதை எல்லாம் இன்றைய பதின்ம வயதுகளின் பூர்த்தியில் இருப்பவர்களுக்குத் தெளிவான வரையறைகள் உள்ளன. சொல்ல முடியாத காதல் என்பது அனேகமாக முற்றிலுமாகக் கைவிடப்பட்ட பண்டமாக கருதப்பட வேண்டியதாகிறது. அவரவர் காதல் அவரவர் உரிமை என்கிற அளவில் காதலைச் சொல்வதற்கான அனேக வழிகள் ஒளிர்கின்றன.

காதல் உத்திரவாதப் பிடிவாத சத்திய நம்பக விசுவாச மெய்ப்பித்தல்கள் என்கிற எல்லாவற்றையும்தாண்டி தற்போது அன்பின் மிக அழகான சொல்லாக மலர்ந்திருக்கிறது. காதலைச் சொல்வதில் தொடங்கி அதனைக் கடைசித் துளிவரைக்கும் இட்டுச் செல்வதற்குரிய பல்வேறு தருணங்கள் தங்களை மலர்த்திக் கொண்டு காதலில் ஈடுபடுகிறவர்களையும் மலர்த்துகின்றன. முன்பு இப்படியான தருணங்கள் குகையின் ஆழ்பாதையில் கைகளைப் பற்றிக்கொண்டு பயந்து நடுங்கியபடியே எதிர்ப்புற ஒளிவாசலைத் தேடிச் செல்கிற கடினமாக இருந்தன. காதல் எந்தவகையிலும் அதன் பேரால் நிகழ்த்தப்படுகிற் தனி மற்றும் கூட்டு சுய மற்றும் பிற வன்செயல்களை நியாயப்படுத்தாத அதே நேரத்தில் எதிராடுகிற சமரசமற்ற நிமித்த தர்மமாகத் தன்னை நிலைநிறுத்தி இருக்கிறது.

காதல் பேசுவதற்குரிய பொருளாகவே எப்போதும் இருக்கிறது. ஒரே ஒரு காதல் ஒரு தலைக் காதல் சொல்ல முடியாத காதல் ஆகிய யாவற்றையும் பகடி செய்வதன் மூலமாக காதலின் தற்போதைய புனரமைக்கப்பட்ட புதிய ஸ்டேஷனைப் பற்றிய தகவலறிவித்தல் பிழையற நடந்தேறுகிறது. காதலை அதிகாரமாகவும் தோல்வியாகவும் சாதி ஆணவமாகவும் பார்ப்பவர்களைப் பொது சமூகமெனும் மாபெரும் ஒன்றுகூடலில் தனிமைப்படுத்துவதன் மூலம் கைவிடுவதன் மூலம் எதிர்ப்பதன் மூலம் வினவுவதன் மூலம் நிராகரிப்பதன் மூலம் எச்சரிப்பதன் மூலம் காதல் இன்னும் அடுத்தடுத்த காலங்களுக்குத்தான் ஆற்ற வேண்டிய கடப்பாடுகளை வகுத்துக் கொள்கிறது.

காதல் மனிதவயமான கடவுள்தன்மைக்கான சான்று. எப்போதைக்கும் போதுமான மாண்பு..

ஆதலினால் காதல் செய்வோம்.
வாழ்தல் இனிது