ன்றைய தினம் இளஞ்சிவப்பாக விடிந்திருக்கிறது. நாள் முழுவதும் அன்பின் ஒளி துலங்கிகொண்டே இருக்கிறது. காணும் இளைஞர்களின் முகமெல்லாம் ரோஜாப்பூவாய் சிவந்திருக்கிறது. காதலர் தினம் என்றாலே காரணம் இல்லாமல் ஒரு குறுகுறுப்பு வந்து ஒட்டிக்கொண்டு அனைவருக்கும் பட்டாம்பூச்சியின் சிறகு முளைத்து விடுகிறது. காதல் நம்மை நாமே உயிர்த்திருப்பதாக நம்பவைக்கத் தேவையாயிருக்கும் உயிர்க் காரணி. கெட்டியாகப் பற்றிக்கொண்டு படர உதவும் அடிவேர். காதல் என்பது பெருங்கனவு. காதலித்துக் கொண்டிருப்பவர்கள், காதல் தோல்வியுற்றவர்கள், காதலிக்கவே தொடங்காதவர்கள் என்ற பாகுபாடெல்லாம் அதற்கில்லை. கனவு பலிக்குமா? பலிக்காதா? என்ற ஆய்வுகளை விடுத்து அந்த அலாதியை அனுபவிப்போம். அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துகள்.

காதல் ஆரம்பத்தில் அப்படித்தான். யாரோ நம்மை மந்திரக்கட்டு இட்டு உலவவிட்டதுபோல இருக்கும். தலைகால் புரியாது. எதார்த்தங்கள் தெரியாது. எதுவுமே நிலையில் இருக்காது. தன் காதலி செல்லும் பேருந்தின் வேகத்திற்கு 10 கிமீ ஒருவனை மிதிவண்டி மிதிக்கச் செய்யும், விடுமுறை தினங்களில்கூட பள்ளி/கல்லூரி வருவதுபோல கிளம்பி, அவள் வீட்டின்முன் எதற்கென்றே தெரியாமல் தேவுடு காக்கச் செய்யும், முகவரியே தெரியாமல் அவள் சென்றிருக்கும் ஊருக்குப் பலநூறு மைல் கடந்து பயணிக்கச் செய்யும். அது அப்படித்தான். அது ஒரு ஏகாந்த அனுபவம். அதை அனுபவிக்காமல் இளமை பருவத்தைத் தாண்டியவர்களைப் பெரும்பாவம் இழைத்தவர்கள் என்பேன். இமை படபடக்க வாழ்நாள் முழுவதும் நினைவுக்கூரத் தகுந்த எத்தனையோ தருணங்களை அக்காதல் நம் இருப்பின் தடயங்களாக விட்டுச் செல்லும்.

ஒரு வயதிற்குப் பிறகு, அடிபட்டு அடிபட்டு மனம் ஒருமாதிரி பக்குவப்பட்ட பிறகு இவையெல்லாம் சாத்தியமில்லை. “இதுக்குமேல யாரையும் லவ் பண்ண எல்லாம் முடியும்னு எனக்குத் தோணலப்பா” என நிறையப் பேர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இவர்கள் நினைப்பது மேலே சொன்ன ஏகாந்த நிலையைத்தான். நன்றாக யோசிக்கையில், ஒரு பக்குவப்பட்ட காதல் என்பது பரஸ்பர அன்பும், பரஸ்பர புரிதலும், பரஸ்பர நம்பிக்கையும்தான் என்று தோன்றுகிறது. பொதுவாக காதல் என்ற பதத்தை தன்னையே ஒப்புவித்தல் என சிலர் அர்த்தப்படுத்துகிறார்கள். இதில் “முழுமையாக ஒப்புக்கொடுத்தல்” என்பது மிகச்சரியாக எதைக் குறிக்கிறது என்பதில் எனக்குச் சில சந்தேகங்கள் இருக்கின்றன. மனதயா, உடலையா, சிந்தனைகளையா அல்லது அனைத்தையுமே ஒருவரிடத்தில் ஒப்புக்கொடுத்துவிட வேண்டுமா? ஒரு பாடலை ஒருவருக்கு டெடிகேட் செய்வதுபோல நம்மையே டெடிகேட் செய்வதுதான் காதலா? அப்படி இல்லை என்றே தோன்றுகிறது.

காதல்/வாழ்க்கைத்துணை என்பது பற்றிய நிறைய பேரின் புரிதல் அந்த நிகழ்விற்குப் பின் இருவரும் தனித்தனி உயிர்கள், சுய விருப்புவெறுப்புகளோடு, தன் வாழ்வைப் பற்றி தானே முடிவெடுக்கும் சகல அதிகாரங்களோடு வாழும் தனி உயிர்கள் என்பதை விடுத்து, ஒருவரின் இருப்பு வேண்டுமாயின் மற்றொருவர் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றனர். தியாகங்களின் அளவு கூடக்கூட உலகின் ஆகச்சிறந்த காதலில் தாங்கள் திளைத்துக்கிடப்பதாக எண்ணி அகமகிழ்கின்றனர். உறவுக்குள் இருக்கவேண்டிய தனிப்பட்ட சுதந்திரத்தைக்கூட பெரும் தவறாக எண்ணி, அன்பு குறைந்துவிட்டதாக கண்ணீர் உகுக்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரை காதல் என்பது ஒருபோதும் ஒப்புக்கொடுக்க கேட்காது. காதலில் முழுமையாக ஒப்புக்கொடுக்கத் தேவையில்லை. அது நேரடியாகவோ மறைமுகமாகவோ, சமூகத்தாலும் குடும்ப அமைப்பாலும் ஒரு மனிதனுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளை அவிழ்த்துவிட வேண்டும். சுயம் உணரவைக்க வேண்டும். தனித்தனியாக தங்கள் கனவுகளுக்காக உழைப்பதற்கான உத்வேகத்தை அளிக்க வேண்டும். நாம் பறப்பதற்கான வானத்தை விரித்துவிட வேண்டும். காதலித்துக் கொண்டிருக்கும் அனைவரும் இந்தக் காதலர் தினத்தில், “உங்கள் சுயத்தை இழக்காமல்தான் இந்தக் காதலில் இருக்கிறீர்களா?” என்பதை யோசியுங்கள். ஆமென்றால் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். ஒருவேளை இல்லையென்றால், மறந்துபோன சுயத்தை அக்காதலின் வாயிலாகவே மீட்டெடுக்க முயலுங்கள்.

காதல் என்பது வாழ்நாளின் மகத்துவம். அது ஒருபோதும் யார் வரையறைக்குள்ளும் அடங்காதது. கதவடைத்துக் கொண்டு உள்ளிருக்கும் காற்றைத் தென்றலென நினைக்காதீர்கள். மனதைத் திறங்கள். காதல் வரட்டும்.