தழையணி அல்குல் தாங்கல் செல்லா
நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக
அம்மெல் ஆக நிறைய வீங்கிக்
கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின
யாங்கா குவள்கொல் பூங்குழை என்னும் 5
அவல நெஞ்சமொ டுசாவாக்
கவலை மாக்கட்டிப் பேதை யூரே.

 

அழகான ஒரு இளம்பெண்.

அவள் காதுகளில் ஜிமிக்கி அணிந்திருக்கிறாள். அந்த ஜிமிக்கியில் நுட்பமான வேலைப்பாடுகள் இருக்கிறது. அழகான அந்த ஜிமிக்கிகள், அழகான அந்தப் பெண்ணுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

அவளுக்குச் சிறிய இடை. அந்தச் சிறிய இடையில் கனமான பச்சை இலைப்பாவாடையை உடுத்தியிருக்கிறாள். அவள் சிறிய இடை, அந்தப் பெரிய பாவாடையைச் சுமக்க முடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அவள் சிறிய இடைக்கு மேல் பெரிய மார்பகங்கள் இருக்கிறது. அவளுடைய சிறிய இடையை அவளுடைய பெரிய மார்பகங்கள் மேலும் துன்பப்படுத்துகிறது.

இவள் ஒருத்தனைக் காதலிக்கிறாள். ஒருத்தனைக் காதலிக்கிற விவரம் இவள் பெற்றோர்களுக்குத் தெரியவில்லை. இவள் பெற்றோர்கள் விவரம் இல்லாத அப்பாவிகளாக இருக்கிறார்கள்.

இவள் காதலிக்கிற விவரம் இவள் சொந்தக்காரர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இவளை, இவள் காதலிக்கிறவனுக்கே திருமணம் செய்து வைப்பதற்கு இவள் சொந்தக்காரர்கள் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.

அந்த ஊர் மக்களிடம் உயர்ந்த பண்புகள் இல்லை. அவர்கள் மூடர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

-வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
குறுந்தொகை 159