பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது
கழுதுகண் பனிப்ப வீசும் அதன்றலைப்
புலிப்பல் தாலிப் புதல்வர்ப் புல்லி
அன்னா வென்னும் அன்னையு மன்னோ
என்மலைந் தனன்கொல் தானே தன்மலை 5
ஆரம் நாறு மார்பினன்
மாரி யானையின் வந்துநின் றனனே.

 

மழை சினந்து பெய்து கொண்டிருக்கிறது.

பகல் முழுவதும் பொழுது முகமே தெரியவில்லை.

இரவு வேகமாக வந்துவிட்டது.

இருட்டு, பேய் இருட்டாக, கன்னங்கரேர் என்று இருட்டிக்கொண்டு வருகிறது.

பேய்கள் கூட இந்தப் பேய் இருட்டில் கண்களைத் திறக்கப் பயப்படுகின்றன.

என் தாய் என் தம்பியை அவள் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு படுத்திருக்கிறாள். என் தம்பியின் மார்பில் புலிப்பல் பதித்த தங்கச் சங்கிலி அழகாகப் புரண்டுகொண்டிருக்கிறது.

மழை கொட்டு கொட்டு என்று பலமாகப் பெய்து கொண்டிருக்கிற இந்த நடுச்சாமத்தில், இந்தப்பேய் இருட்டில் என்தாய் என்னைக் கூப்பிடுகிறாள்..

“மகளே..”

நான் வீட்டில் படுத்திருக்கிறேனா என்று என் தாய் சரிபார்த்துக் கொள்கிறாள்.

இந்தப் பெரிய மழைக்காற்றில் சந்தனமணம் மிதந்து மிதந்து வந்து கொண்டிருக்கிறது.என்காதலன் என்னைச் சந்திப்பதற்கு வந்திருக்கிறான்.அவன் எங்கள் கொட்டாரத்தில் மறைந்து நின்று கொண்டிருக்கிறான்.அவன் என்னைச் சந்தித்து விட்டுத்தான் போகவேண்டும் என்று இந்தப் பெரிய மழையில் நனைந்துகொண்டு எனக்காக நின்றுகொண்டிருக்கிறான்.

என்தாய் உறங்காமல் விழித்திருக்கிறாள்.

என்னால் என்காதலனிடம் போகமுடியவில்லை.

நக்கீரனார்
குறுந்தொகை 161