கணைக்கோட்டு வாளை கமஞ்சூல் மடநாகு
துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம்
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பவ்வம் அணங்குக தோழி
மனையோள் மடமையிற் புலக்கும் 5
அனையே மகிழ்நற்கியா மாயினம் எனினே.

கேள்.. தோழி..

அவள் என்மேல் அபாண்டமாகப் பழி சுமத்துகிறாள். அவள் விவரம் இல்லாத ஒரு பெண். அவள் வீட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறவள். அவளுக்கு வெளி உலகம் தெரியவில்லை.

நான் அவள் கணவனை அபகரித்துக்கொண்டதாக அவள் நினைக்கிறாள். நான் அவள் கணவனை அதிகரிக்கவே இல்லை.

அவள் கணவன்தான் என்னைத் தேடி வந்தான்.

அவள் கணவனைத் தேடி நான் போனதே இல்லை.

கேள்… தோழி…

ஒரு ஆறு. அந்த ஆற்றில் ஒரு வாளைமீன் இருக்கிறது. அந்த வாளைமீனுக்கு அழகான இரண்டு கொம்புகள் இருக்கிறது. அது ஒரு பெண்மீன். அந்தப் பெண் மீனுக்கு நல்ல உடல்வாகு, அது சினை. அது பருவ மினுமினுப்போடு இருக்கிறது.

அந்த ஆற்றங்கரையில் ஒரு மாமரமும் இருக்கிறது. அந்த மாமரத்தின் மாம்பழங்கள் கொத்துக்கொத்தாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு மாம்பழம் அந்த ஆற்றில் விழுகிறது. அந்த மாம்பழம் ருசியானது. தண்ணீரில் விழுந்த ருசியான அந்த மாம்பழம் மிதந்துமிதந்து அழகான அந்த வாளை மீனிடம் போய்ச் சேருகிறது.

அந்த மாம்பழம் கிடைப்பதற்காக அந்த வாளை மீன் ஒரு முயற்சியும் செய்யவில்லை. ருசியான அந்த மாம்பழம் அழகான அந்த வாளை மீனிடம் தானாகவே போய்ச் சேர்ந்தது.

அவள் கணவனை என் கணவனாகப் பெறுவதற்கு நான் ஒரு முயற்சியும் செய்யவில்லை. அவள் கணவன் என்னிடம் அவனாகவே வந்து சேர்ந்தான்.

என் மேல் எந்தத் தப்பும் இல்லை.

கேள்… தோழி..

நம் ஊருக்கு வெகு தொலைவில் குன்னூர் என்று ஒரு சிறிய ஊர் இருக்கிறது. அது பழங்காலத்து ஊர். அந்தப் பழங்காலத்து ஊரில் விவசாயப் பழங்குடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஊருக்குக் கிழக்கே ஒரு பெரிய கடல் இருக்கிறது. நான் தப்புச் செய்திருந்தால் அந்தப் பெரிய கடல் என்னைக் கடலில் மூழ்கடித்துக் கொல்லும்.

மாங்குடி மருதனார்
குறுந்தொகை 164