மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை
இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து
பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன
நறுந்தண் ணியளே நன்மா மேனி
புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள் 5
மணத்தலுந் தணத்தலு மிலமே
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.

ஒரு மாலைப் பொழுது.

மழை பெய்து வெறித்திருக்கிறது.

காட்டில் பிச்சிப்பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. அந்த பிச்சிப்பூ மொட்டுக்கள் நல்ல திரட்சியாக இருக்கிறது. மழையில் நனைந்து அந்த மொட்டுக்கள் ஈரமாக இருக்கிறது.

ஒரு பூ வியாபாரி அந்தப் பூ மொட்டுக்களைப் பறிக்கிறான். அவன் பனங்குருத்து ஓலையில் முடைந்த ஒரு பூக்கடை வைத்திருக்கிறான். அந்தப்பூ வியாபாரி அவன் பறித்த அந்த மொட்டுக்களையெல்லாம் பூக்கூடையில் போட்டுக்கொண்டிருக்கிறான்.பூக்கூடை நிரம்புகிறது. அவன் பூக்கூடையை மூடுகிறான். அந்தப் பூ வியாபாரி பூக்கூடையைச் சுமந்து கொண்டு பொடிநடையாய் நடந்து வீட்டுக்குப் போகிறான்.

அன்று இரவெல்லாம் மழை.

இப்பொழுதுதான் விடிந்திருக்கிறது.

இப்பொழுதுதான் மழையும் வெறித்திருக்கிறது.

அந்தப் பூ வியாபாரி அவனுடைய சிறிய வீட்டில் ஒரு ஓலைப் பாயை விரிக்கிறான். அவன் பூக்கூடையில் இருக்கிற பூக்களையெல்லாம் அந்த ஓலைப்பாயில் கொட்டுகிறான். அந்தப் பிச்சிப் பூ மொட்டுக்கள் எல்லாம் அழகாகப் பூத்திருக்கிறது. அந்த இளம் காலைப் பொழுதில் குளிர்ந்த மழைக்காற்றில் அந்தப் பிச்சிப் பூக்கள் மணமாய் மணந்து கொண்டிருக்கிறது

சிறைக்குடி ஆந்தையார்
குறுந்தொகை 168