அயிரை பரந்த அந்தண் பழனத்
தேந்தெழின் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள்
இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர்
தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநுமக் 5
கரிய மாகிய காலைப்
பெரிய தோன்றினிர் நோகோ யானே.

ஒரு ஊரணி.

அந்த ஊரணியில் தண்ணீர் கெத்துக் கெத்தென்று கெட்டிக்கிடக்கிறது.

அந்தத் தண்ணீர் தெளிந்து கிடக்கிறது. அது நல்ல தண்ணீர்.

அயிரை மீன்கள் அந்த ஊரணியில் நீச்சலடித்துக் கொண்டிருக்கிறது. ஆம்பல் பூக்கள் அந்தத் தண்ணீருக்கு மேலே அழகாகப் பூத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு இளைஞன் அந்தப் பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கிறான்.

அவனுக்குத் தண்ணீத் தாகம் எடுக்கிறது.

குடிப்பதற்கு அந்த ஊரணி நிறையாத் தண்ணீர் இருந்தும் அவன் தண்ணித் தாகத்தோடு பூ பறித்துக் கொண்டிருக்கிறான்.

நெடும் பல்லியத்தையார்
குறுந்தொகை 178