கல்லென் கானத்துக் கடமா வாட்டி
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன
செல்லல் ஐஇய உதுவெம் மூரே
ஓங்குவரை யடுக்கத்துத் தீந்தேன் கிழித்த
குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப் 5
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடை யதுவே.

ஒரு பெரிய காடு.

அது ‘ஓ’ என்று இரைச்சல் போட்டுக்கொண்டிருக்கிறது. அந்தப் பெரிய காட்டில் மூங்கில் மரங்கள் உயரமாக வளர்ந்திருந்தன. ஒரு மூங்கில்மரம் அதன் தலைக்கு மேலே இருந்த ஒரு பெரிய தேன் கூட்டைக் குத்திக்கொண்டிருந்தது. உயரமான அந்த மூங்கில் மரங்களை யானை மேய்ந்துவிட்டது. அந்த மூங்கில் மரங்கள் இப்போது குட்டையாக நின்று கொண்டிருக்கிறது.

ஒரு இளைஞன் அந்தக் காட்டில் வேட்டையாட வந்திருக்கிறான். அவன் புதர்களில் பதுங்கியிருக்கிற முயல்களைக் கலைக்கிறான். அவனுடைய வேட்டை நாய்கள் அவனோடு சேர்ந்து வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.

அந்த இளைஞனை அவன் காதலி சந்திக்கிறாள்.

காதலனிடம் அந்தப் பெண் சொல்கிறாள்…

“பொழுது அடைந்துவிட்டது.”

“உன் வேட்டை நாய்களும் உன்னோடு சேர்ந்து வேட்டையாடிக் களைத்துவிட்டன.”

“அதோ…”

“நமக்கு முன்னால் தெரிகிறது பார்… ஒருமலை, அந்த மலை உச்சியில் நடு மத்தியில் இருக்கிறது எங்கள் ஊர்.”

“இந்த இருட்டில் நீ உன் ஊருக்குப் போக வேண்டாம்.”

“நீ என்னோடு வா…”

“நீ… இன்று இரவு எங்கள் வீட்டில் தங்கு.”

குட்டுவன் கண்ணனார்
குறுந்தொகை 179