மிழர் என்றொரு இனம் உண்டு தனியே அவருக்கு ஒரு குணம் உண்டு என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு முறை சொல்லும்போது முதல் முறை சொல்வது போன்ற உத்வேகத்தை இது தருகிறது.

தமிழர்கள் மட்டுமல்ல எல்லா மொழியினரும் தங்களுடைய மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆயிரம் கோழிகளுக்கு நடுவே ஒரு வாத்தை விட்டால்கூட அந்த வாத்து கடைசி வரையில் வாத்து மொழியில்தான் பேசிக்கொண்டே இருக்கிறது.

கோழிக்கு இருக்கும் மதிப்பு, மரியாதை, கெளரவம் பொதுவாக வாத்துக்கு இருப்பதில்லை தமிழர்களின் சமையல் அறையில்.

எவ்வளவு மோசமான கோழியாக இருந்தாலும் அது கோழி என்றே சொல்லப்படுகிறது. எவ்வளவு உயர்ந்த வாத்தும் வாத்து என்றே அறியப்படுகிறது.

ஒரு வாத்து தப்பித் தவறி கோழி மொழியில் இலக்கியம் படைத்தால் கோழிகளை எப்போதும் குறைசொல்லிக் கொண்டேதான் இருக்கும்.

மனிதர்களைப் பற்றிப் பேசும்போது சுவாரஸ்யம் போய்விடுகிறது. மனிதர்கள் எந்த மொழியில் காசு புரளும் என்று யோசிக்கக்கூடிய நல்லவர்கள். கோழி மொழியில்தான் காசு புரளும் என்று ஆடு நினைத்தால் அதைத் தன் குட்டிகளுக்கு மட்டும் ரகசியமாகச் சொல்லும்.

அதே ஆடு மேடைக்கு வரும்போது ஆட்டுவித்தார் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா என்றுதான் கேட்கும்.

ஆடு உணர்ச்சிவசப்படும். அது எப்படி உணர்ச்சிவசப்படும் என்று ஆட்டுக்கே தெரியாது.

சாப்பிடப்படுவதற்காக என்றே கடவுளால் படைக்கப்படும் உயிர்களுக்கே இவ்வளவு இது இருந்தால் சாப்பிடுவதற்காக என்றே படைக்கப்படும் மனிதர்களுக்கு எவ்வளவு இது இருக்கும்?

ஒருவேளை நாளைக்குக் காலையில் மொழியும் கடவுளும் இல்லை என்று அறிவிக்கப்பட்டால் மனிதர்கள் என்ன செய்வார்கள்? அதிலும் அதை அரசாங்கமே அறிவித்துவிட்டால்?

கட்டை தூக்கி வாழ்வோம் உம்போல் கொட்டை தூக்கி வாழ மாட்டோம் என்று நம் இடங்களில் ஒரு வழக்கு உண்டு. ஆடு சொன்னதா மனிதன் சொன்னதா? நினைவில்லை.

கொட்டை தூக்குவது தெரியாமல் இருக்காது. கொட்டை இருக்கிறதா இல்லையா என்று சரியாகப் பார்க்காமல்கூடத் தூக்கும் ஆடுகள் உண்டு. பிறகு கொட்டை தூக்கினார் என்று எப்படிச் சொல்கிறார்கள்?

ஆய்வுக்கு ஒரு தலைப்பாக எடுத்துக்கொண்டு புதிய முனைவர்கள் உருவாகக் கடவது.

கட்டை தூக்குவது சற்று எளிது.

சாலை ஓரத்தில் லாரியை நிறுத்த வேண்டும். சிறுகாடு. உள்ளே ஒற்றைவழி. ஆறுபோல் நீரோடும் அகன்ற கால்வாய். அதில் ஒரு மரமே பாலமாகப் படுத்திருக்கும். நடக்கும்போது கொஞ்சம் அதிரும். கொஞ்சம் ஆடும். அதில் நடந்து செல்லும்போதே கட்டை கொஞ்சம் பதறும். கட்டையைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு அந்தப் பாலத்தில் நடந்து வந்தவன் எவனும் தவறி விழுவதில்லை. இரும்பு என்றால் இருவர் சுமந்து வர வேண்டும். கால் இடறும் வாய்ப்பு உண்டு. சில சமயங்களில் மரப்பாலம் திரும்ப விரும்பும்.

அது வறுமையின் உச்சம்.

தமிழ் பேசுபவன் மட்டும்தான் கட்டைத் தூக்குவான் என்று இல்லை.

எந்த மொழியும் கட்டை தூக்கும் தாழ்ந்த வாழ்க்கையையும் கொடுக்கலாம். கொட்டை தூக்கும் உயர்ந்த வாழ்க்கையையும் கொடுக்கலாம்.

அதே ஆற்றில் கைகளை அலம்பிவிட்டுச் சட்டையில் ஒட்டிய சேற்றைத் தட்டிவிட்டபடி நடந்து வருபவனின் தாய்மொழி சேறா ஆறா?

கொட்டை தூக்குவதை இழிவாக எண்ணாதீர்கள். அந்த நல்ல வாழ்க்கைக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

(இன்னொரு ஐம்பது பக்கத்துக்கு நீங்களே ஏதாவது எழுதி, படித்துக் கொள்ளுங்கள்).

முந்தைய தொடர்: https://bit.ly/2VRNYJY