வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ, 
பழனப் பல் புள் இரிய, கழனி
வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்
தொல் கவின் தொலையினும் தொலைக! சார 5
விடேஎன்: விடுக்குவென்ஆயின், கடைஇக்
கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை
சாடிய சாந்தினை; வாடிய கோதையை;
ஆசு இல் கலம் தழீஇயற்று;
வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே! 10

ஒரு வயல்.

அந்தப் பெரிய வயல் அகலமான ஒரு வரப்பு, அகலமான அந்த வரப்பில் ஒரு மருதமரம் இருக்கிறது. அந்த மருத மரத்தில் ஏராளமான கிளைகள். அந்தக் கிளைகள் வளைந்து தாழ்வாகத் தொங்கிகொண்டிருக்கிறது.

அந்தப் பெரிய வயலில் இன்று அறுவடை. அறுவடைக்கு வந்த உழவர்கள் அந்தப் பெரிய வயலில் இறங்கியிருக்கிறார்கள்.

அந்தப் பெரிய வயலில் ஏகப்பட்ட பறவைகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன.

அந்தப் பெரிய வயலில் இறங்கிய உழவர்கள் அந்தப் பறவைகள் கலைந்து போவதற்காக முரசு கொட்டுகிறார்கள்.

முரசு சத்தம் கேட்ட பறவைகள் அந்தப் பெரிய வயலைவிட்டு பறந்துபோகிறது. வயலில் இருந்து பறந்துவந்த பறவைகள் அந்தப் பெரிய மருதமரத்தின் தாழ்ந்த கிளைகளில் உட்காருகிறது. அந்தப் பெரிய மருதமரத்தின் தாழ்ந்த கிளைகள் மேலும் வளைந்து தொங்குகிறது.

பெரிய பெரிய வயல்கள் சூழ்ந்த செழிப்பான இந்தப் பெரிய நகரத்தில் ஒரு பணக்கார வீடு. அந்தப் பணக்க்கார வீட்டின் தலைவன் ஒரு பரத்தைப் பெண் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அந்தப் பணக்கார வீட்டின் தலைவன் அந்தப் பரத்தைப் பெண்ணிடமிருந்து விலகி அவன் மனைவியிடம் வந்திருக்கிறான்.

அவன் மனைவி அவனைச் சேர்க்கமாண்டங்காள்.

கணவனிடம் அவள் சொல்கிறாள்.

“நீ ஒரு பரத்தைவீட்டில் இருந்து வந்திருக்கிறாய். அந்தப் பரத்தை அவள் மார்பில் அணிந்திருந்த சந்தனம் உன் மார்பில் இருக்கிறது. உன் பூமாலையும் கசங்கியிருக்கிறது. நீ உன் மார்பை அந்தப் பரத்தைப் பெண்ணின் மார்போடு சேர்த்து அவளை அணைத்ததால் உன் மார்பை அலங்கரித்த உன் பூமாலையும் கசங்கியிருக்கிறது.

“நீ என்னிடம் வராதே…”

“நீ என்னைத் தொடாதே…”

“நீ அவளிடமே போ…”

“நீ என்னைப் புறக்கணித்துவிட்டு ஒரு பரத்தையிடம் போனாய்.. நீ அவளிடமே சேர்ந்து வாழ். உன்னோடு சேர்ந்து வாழ எனக்கு விருப்பம் இல்லை.”

பரணர்
நற்றிணை350