ரு மலைக் கிராமம்.

 

அந்த மலைக்கிராமத்தில் ஒரு சிறிய வீடு.

ஒரு சிறிய பெண் அந்த வீட்டுக்கு முன்னால் அவள் முற்றத்தில் உட்கார்ந்துகொண்டு பால் குடித்துக்கொண்டிருக்கிறாள்.

 

ஒரு வேங்கை மரம் அந்த முற்றத்தில் இருக்கிறது. அந்த வேங்கை மரத்தின்  தாழ்ந்த கிளையில் ஒரு குட்டிக்குரங்கு உக்காந்துக்கிட்டுருக்கு.

அந்தக் குட்டிக் குரங்கு வேங்கை மரத்தில் இருந்து இறங்கிக்  கிழே வருகிறது. இந்தக் குட்டிக்குரங்கு பால் குடித்துக்கொண்டிருக்கிறது.  அந்தச் சிறிய பெண்ணிடம் போகிறது. அந்தச் சிறிய பெண்ணிடம் இருந்த பால் கிண்ணத்தைப் பறித்துக்கொண்டு அந்தக் குட்டிக்குரங்கு ஓட்டமா ஓடிப் போய் வேங்கை மரத்தில் ஏறி உக்காந்துக்கிட்டுது,

குட்டிக் குரங்கிடம் பால் கிண்ணத்தைப் பறிகொடுத்துவிட்டு – அந்தச் சிறிய பெண் முசுமுசுன்னு அழுது கொண்டிருக்கிறாள்.

முசுமுசுன்னு அழுது கொண்டிருக்கிற அந்தச் சிறிய பெண்ணின் விரல்கள் அழகாருக்கு. அவள் வயிறு ரொம்ப அழகாருக்கு. அவள் கண்கள் ரொம்ப ரொம்ப அழகாருக்கு, அந்தச் சிறிய பெண் அவளுடைய அழகான பிஞ்சு விரல்களைக்கொண்டு அவளுடைய அழகான சின்ன வயிற்றில் ஓங்கி ஓங்கி  அடிச்சி அடிச்சி அழுதுக்கிட்டுருக்காள்.

அந்தச் சிறிய பெண் அழுது அழுது அவள் கண்கள் ரத்தமாக சிவந்திருக்கு. அவள் சின்ன வயிற்றில் ஓங்கி ஓங்கி அடிச்சி அடிச்சி அவளுடைய அழகான பிஞ்சு விரல்கள் ரத்தம் கன்றிச் சிவந்திருக்கு.

 

குடவாயில் கீரத்தனார்
நற்றிணை 379