நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி
பால் மலி கடலின் பரந்து பட்டன்றே
ஊரே ஒலிவரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி
கலி கெழு மறுகின் விழவு அயரும்மே
கானே பூ மலர் கஞலிய பொழில் அகம்-தோறும் 5
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே
யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு
கனை இரும் கங்குலும் கண்படை இலெனே
அதனால் என்னொடு பொரும்-கொல் இ உலகம்
உலகமொடு பொரும்-கொல் என் அவலம் உறு நெஞ்சே 10

நிலவு..

பவுர்ணமை முழுநிலா பால்போல் அழகாக ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

ஊர்..

ஊரில் திருவிழா நடந்துகொண்டிருக்கிறது. திருவிழாவில் கலந்துகொண்ட மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.

காடு…

இது பூக்காலம். மரங்கள் பூத்துக்குலுங்குகின்றன. பூக்களில் தேன்குடித்த வண்டுகள் ஆணும் பெண்ணும் இணை இணையாகச் செர்ந்துகொண்டு அவகள் விசிலடித்துக்கொண்டும் மகிழ்ச்சியோடும் பறந்து திரிகிறது.

நான்..

நான் தனிமையில் இந்த நள்ளிரவில் கண் உறங்காமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

கலகம்…

இந்தப் பெரிய உலகம் என்னோடு போர் தொடுக்கிறதோ?

கலகம்..

துன்பத்தை அனுபவிக்கிற என் நெஞ்சு இந்தப் பெரிய உலகம் எதிர்த்துக் கலகம் செய்யத் தயாராகிக் கொண்டிருக்கிறதோ?

வெள்ளிவீதியார்
நற்றிணை 348