புல்லேன் மகிழ்ந, புலத்தலும் இல்லேன்,
கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன்
படை மாண் பெருங்குள மடை நீர் விட்டென,
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை
அள்ளல் அம் கழனி உள் வாய் ஓடி, 5
பகடு சேறு உதைத்த புள்ளி வெண்புறத்து
செஞ்சால் உழவர் கோல் புடை மதரி,
பைங்கால் செறுவின் அணை முதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன என்
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே. 10

ஒரு குளம்.

அது ரொம்பப் பெரிய குளம்.

அந்தப் பெரிய குளத்தில் ஒரு பெரிய வாளை மீன்.

குளத்தில் மடை திறந்ததும் அந்தப் பெரிய வாளை மீன் வாய்க்காலை அடைத்துக்கொண்டு, வாய்க்கால் தண்ணீரில் வந்து கொண்டிருக்கிறது.

நீளமான அந்தப் பெரிய வாய்க்காலில் ஒரு சிறிய முக்கு. முக்கு திரும்பியதும் ஒரு பெரிய வயல். அந்த வயலில் வாமடை திறந்திருக்கிறது. அந்தப் பெரிய வாளை மீன் அந்த வாமடை வழியாக அந்தப் பெரிய வயலில் நுழைகிறது.

வயலில் தொழி உழவு நடந்து கொண்டிருக்கிறது.

உழவு மாடுகள் பின்னத்திக் கால்களை உதறுகின்றன.

சேறு தெரிக்கிறது.
உழவர்களின் முதுகெல்லாம் சேறு. சேறு காய்ந்து காய்ந்து, உழவர்கள் முதுகு பூராவும் புள்ளி புள்ளியாருக்கு.

அந்தப் பெரிய வாளைமீன் அந்தப் பெரிய வயலில் சேற்றில் படுத்துக்கொண்டு புரண்டு கொண்டும் துள்ளிக்கொண்டும் ஓடி ஓடி விளையாடிக்கொண்டிருக்கிறது.

உழவர்கள் அந்தப் பெரிய வாளை மீனைத் தார்க்குச்சியால் அடித்தும் தார் முள்ளால் குத்தியும் அவர்கள் அந்த வாளை மீனிடம் விளையாடுகிறார்கள்.

அந்தப் பெரிய வயலில் இரண்டு பெரிய வரப்புகள் ஒன்று சேருகிறஒரு மூலையில் அந்தப் பெரிய வாளை மீன் படுத்திருக்கிறது. அந்தப் பெரிய வாளை மீனால் அந்தப் பெரிய வரப்புக்களைத் தாண்டிப் போக முடியவில்லை.

அந்தப் பெரிய வாளை மீன் அந்தப் பெரிய வயலில் அந்த மூலையில் படுத்துக்கொண்டு அது அங்கேயே துள்ளிக்கொண்டும் புரண்டுக் கொண்டும் சகதியில் விளையாடிக்கொண்டிருக்கிறது.

நக்கீரர்
நற்றினை 340