‘கோடு துவையா, கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு
வயவர் மகளிர்’ என்றிஆயின்,
குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்;
சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில்    5
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே; செல்லாது
சேந்தனை, சென்மதி நீயே- பெரு மலை
வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு,
வேங்கை முன்றில் குரவையும் கண்டே.      10

“தலைவா…”

”எங்களை வேட்டுவ வீரரின் பெண்கள் என்று நினைக்காதீரும்… எங்களை வேட்டுவ வீரரின் பெண்கள் என்று சொல்லவும் சொல்லாதீரும்… நாங்கள் வேட்டுவ வீரரின் பெண்கள் இல்லை..”

“கொம்பு ஊதி, வேட்டை நாய்களை ஏவி, காட்டுமான்களை வேட்டையாடும் வேட்டுவர் குலப் பெண்கள் இல்லை நாங்கள்…”

“குறவர் குலம் எங்கள் குலம்”

“நாங்கள் பெரிய தினைக்காட்டில் எங்கள் காவல்காரன் ஒரு பரண் கெட்டியிருக்கிறான். அது உயரமான ஒரு காவல் பரண். எங்கள் காவல்காரன் கெட்டிய அந்தப் பரண் அவன் தங்குவதற்காகக் கெட்டியது. ஆனால் அந்தப் பரணில் காட்டு மயில்கள் கூட்டமாக வந்து பயமில்லாமல் படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறது.”

“அப்பேர்ப்பட்ட நல்ல ஊராக்கும் எங்கள் ஊர்…”

“அதோ அந்த மலையில் தான் இருக்கிறது எங்கள் ஊர்…”

“நீ எங்கள் ஊருக்கு வா…”

“எங்கள் வீட்டில் கள் இருக்கிறது… நன்றாக முற்றி நன்றாக விளைந்த நல்ல கள்…”

“எங்கள் வீட்டின் முன்னால் ஒரு வேங்கை மரம் இருக்கிறது. எங்கள் வேங்கை மரத்தடியில் நாங்கள் இன்று கூத்து ஆடப் போகிறோம்…”

“நீ எங்க கூட வா…”

“முதலில் கள் குடி… எவ்வளவு கள் வேண்டுமானாலும் குடி…”

“கள் குடிச்சதுக்குப் பிறகு எங்கள் குரவைக் கூத்தைப் பார்த்து ஆனந்தப்படு… அப்புறமாக நீ மகிழ்ச்சியோடு உன் ஊருக்குப் போ…”

“இப்போது எங்களோடு வா…”

தொல் கபிலர்
நற்றிணை 276