கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்,
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை,
கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு,
இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப் 5
பூஉடைக் குட்டம் துழவும் துறைவன்
நல்காமையின், நசை பழுதாக,
பெருங் கையற்ற என் சிறுமை, பலர் வாய்
அம்பல் மூதூர் அலர்ந்து,
நோய் ஆகின்று; அது நோயினும் பெரிதே. 10

 

ஒரு கடல்.

ஒரு காட்டாறு அந்தப் பெரிய கடலின் வந்து விழுந்து கெடக்கு.

காட்டாத்துக்குத் தென் கரையில் ஒரு கடல் காக்கா உக்காந்துக்கிட்டுருக்கு. அது ஒரு பெண் காக்கா. அது சினையாருக்கு. தாய்மை அந்தப் பெண் காக்காவுக்கு ஒரு தனி அழகை வழங்குகிறது.

காட்டாத்துக்கு வடகரையில் ஆழமான ஒரு கிடங்கு இருக்கு. கெடங்கு நெறையாத் தண்ணி கெடக்கு. காட்டு மரங்களி ன் உதிர்ந்த பூக்கள் கிடங்குத் தண்ணீரை மூடிக்கொண்டிருக்கிறது.

ஒரு ஆண் காக்கா அந்தத் தண்ணிக் கிடங்கின் ஒரு மூலையில் உக்காந்துக்கிட்டுருக்கு. அந்த ஆண் காக்கா காலடியில் கிண்டுகிறது. கிண்டக்கிண்ட அழி புரள்கிறது. அழி கறுப்பாருக்கு. அழி நாறுது.

பொறுக்க முடியாத அழிநாத்தத்தைப் பொறுத்துக்கொண்டு ஆண் காக்கா கிண்டிக்கிட்டேருக்கு.

சினையாக இருக்கிற மனைவிக்கு சத்தான உணவு கொடுக்கிறதுக்காக அந்த ஆண் காக்கா அயிரை மீன்களைத் தேடிக்கொண்டிருக்கிறது.

முக்கில் ஆசான் நல்வெள்ளையார்
நற்றிணை 272