நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட,
குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர்,
பெரும்பாண் காவல் பூண்டென, ஒரு சார்,
திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப,
வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப் 5
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈர்- இமை பொருந்த,
நள்ளென் கங்குல், கள்வன் போல, 10
அகன் துறை ஊரனும் வந்தனன்-
சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே.

ஒரு பெரிய நகரம்.

அந்தப் பெரிய நகரத்தில் ஒரு பெரிய வீடு.

அந்தப் பெரிய வீட்டுக்கு முன்னால் புதுப்பந்தல் போட்டுருக்கு.

பந்தலுக்குக் கீழே அந்தப் பெரிய முற்றத்தில் குருத்து மண்ணக்கொட்டி அந்தக் குருத்து மண்ணை அழகாக விரித்து வைத்திருக்கிறார்கள்.

அந்தப் பெரிய வீட்டில் யாழ் இசைக் கலைஞர்களின் யாழ் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

நல்ல நல்ல நகைகள் அணிந்து கொண்டு நல்ல நல்ல அழகான பெண்கள் விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் பெரிய வீட்டில் ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது.

அந்தப் பெரிய வீட்டில் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது.

அந்தப் பெரிய வீட்டில் ஒரு படுக்கை அறை. அந்தப் படுக்கை அறையில் ஒரு புதிய மெத்தை. அந்த மெத்தை மேல் ஒரு மெல்லிய போர்வை விரிச்சிருக்கு. அந்த மெத்தையில் நறுமணம் வீசிக்கொண்டிருக்கிறது. அந்த மெத்தையில் பச்சக்குழந்தையைப் படுக்க வைத்திருக்கிறார்கள். அந்தப் பச்சக்குழந்தை கண்களை மூடிக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்கிறது.

குழந்தைக்குப் பக்கத்தில் வளர்ப்புத்தாய் படுத்திருக்கிறாள். தாய், குழந்தை பெத்த அசதியில் சோர்வாகப் படுத்திருக்கிறாள். குழந்தையின் அப்பா அவன் பெத்த குழந்தையைப் பார்ப்பதற்கு அவன் சொந்த வீட்டிற்குள் திருடனைப் போல் நுழைந்து கொண்டிருக்கிறான்.

குழந்தையின் அப்பன், குழந்தையின் தாயிடமிருந்து பிரிந்து போய் ஒரு பரத்தையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

கோமால் நெடுங் கோடனார்
நற்றிணை 40