கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை
முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி,
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன்
திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி, 5
வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர்
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன்; வாழி- தோழி!- உலகம்
கயம் கண் அற்ற பைது அறு காலை,
பீளொடு திரங்கிய நெல்லிற்கு 10
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே.

ஒரு தினைக்காடு.

தினைக்காட்டில் தினைக் கருதுகள் நல்லா வெளைஞ்சிருக்கு.

அந்தத் தினைக்காட்டில் உயரமான ஒரு காவல் பரண் இருக்கிறது.

ஒரு பெண் அந்தப் பெரிய தினைக்காட்டைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறாள்.

ஒரு பெண் குரங்கு சத்தங்காட்டாமல் அந்தத் தினைக்காட்டுக்கு வந்து ஒளிஞ்சிக்கிட்டு உக்காந்துக்கிட்டுருக்கு. அந்தப் பெண் குரங்கு, காவல்காரப் பெண்ணுக்குத் தெரியாமல் தினைக்கருதுகளைக் களவாண்டு கொண்டிருக்கிறது. அந்தப் பெண் குரங்கு அது களவாண்ட கருதுகளை மறைத்து வைத்துக்கொண்டு ஒளிஞ்சி ஒளிஞ்சி போய் மலைமேல் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

உயரமான ஒரு வட்டப்பாறையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது அந்தப் பெண் குரங்கு. அந்தப் பெண் குரங்குக்கு நேர் எதிரில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது பெண் குரங்கின் கணவன்.

ஆண் குரங்குக்கு சாமர்த்தியம் போதாது.

ஆண் குரங்குக்கு களவாங்கத் தெரியல.

ஆண் குரங்குக்கு கருதுகளைக் கசக்கவும் தெரியாது.

ஆண் குரங்குக்கு கசக்கிய தினை அரிசியைக் கொம்மை இல்லாமலும், பொக்கு இல்லாமலும் ஊதி ஊதி சுத்தப்படுத்தவும் தெரியாது.

பெண் குரங்கு அது களவாண்ட தினைக்கருதுகளை இரண்டு கைட்டும் கசக்குகிறது. கசக்கிய தினை அரிசியை இரண்டு கையிலும் மாத்திப்போட்டு மாத்திப்போட்டு தூற்றித் தூற்றி, ஊதி ஊதி தினை அரிசியைத் தூற்றி எடுக்கிறது.

அந்தப் பெண் குரங்கு தனக்கு எதிரில் உட்கார்ந்திருக்கிற தன் கணவனுக்கு, கணவன் வாயில் தினை அரிசியை ஊட்டி விடுகிறது.

ஆண் குரங்கு இடது கடைவாயில் இருந்து வலது கடை வாய்க்கும், வலது கடை வாயில் இருந்து இடது கடை வாய்க்கும் அந்தத் தினை அரிசியை நவட்டி நவட்டி சவைத்துக் கொண்டிருக்கிறது.

நல்வேட்டனார்
நற்றிணை 22