தொல் கவின் தொலைய, தோள் நலம் சாஅய,
நல்கார் நீத்தனர் ஆயினும், நல்குவர்;
நட்டனர், வாழி! தோழி! குட்டுவன்
அகப்பா அழிய நூறி, செம்பியன்
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது 5
அலர் எழச் சென்றனர் ஆயினும் மலர் கவிழ்ந்து
மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்,
இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென,
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல்
நெடு வரை விடரகத்து இயம்பும் 10
கடு மான் புல்லிய காடு இறந்தோரே.

ஒரு பெரிய ஆண் யானை தன் இளம் காதல் மனைவியை அழைத்துக்கொண்டு அந்தப் பெரிய காட்டில் அது மகிழ்ச்சியோடு வந்து கொண்டிருக்கிறது.

ஒரு பாம்பு, அந்த ஆண் யானையைப் பிடித்துக் கொண்டது.

அந்தப் பெரிய பாம்பு அந்தப் பெரிய ஆண் யானையை விழுங்கிக் கொண்டிருக்கிறது. பெண் யானையின் கண்ணுக்கு முன்னால் இந்தத் துயரம் நடந்து கொண்டிருக்கிறது.

அந்தப் பெரிய பாம்பு வாய்க்குள், அந்தப் பெரிய ஆண் யானை படுகிற பாட்டைக் காணச் சகிக்காமல் அந்த பெண் யானை துக்கம் தாங்க முடியாமல் அழுது கொண்டிருக்கிறது.

அந்தப் பெண் யானை இரவெல்லாம் கண் உறங்காமல் அது இரவு பூராவும் அழுது கொண்டிருந்தது.

அந்தப் பெண் யானையின் அழுகைச் சத்தம் நீளமான அந்தப் பெரிய மலையிலும், பள்ளத்தாக்கிலும் மோதி அந்தப் பெண் யானையின் சோகத்தை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

மாமூலனார்
நற்றிணை 14